Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

17. பொறாமை பொல்லாதது!

கோவிந்தபுரம் என்ற ஊரில் ஒரு அரசினர் பள்ளிக்கூடம் இருந்தது. அதில் சந்தானம் என்ற மாணவன் ஒருவனும் படித்தான்.

அவன் மிகவும் கெட்டிக்கார மாணவன். படிப்பில் மட்டுமல்லாமல், ஒழுக்கத்திலும் அவன் சிறந்த மாணவனாக இருந்தான். கடவுள் பக்தி நிறைந்தவன். பெரியோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மிகவும் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வான். அவனுடன் பயிலும் அத்தனை மாணவர்களுடனும் மிகவும் சினேகிதமாகப் பழகுவான். பாடம் சரியாகப் புரியாத மாணவர்களுக்குத் தன்னால் இயன்றவரை சொல்லித் தருவான். மொத்தத்தில் சந்தானத்தை 'நல்ல பிள்ளை' என்று பாராட்டாதவர்கள் இல்லை.

சந்தானம் அங்கு பத்தாம் வகுப்புப் படித்தான். அது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள ஒரு அரசினர் பள்ளி. அந்தப் பள்ளி வளாகத்தில் ஒரு விடுதியும் இருந்தது. விளையாட்டு மைதானமும், மரங்கள் நிறைந்த தோட்டங்களும் இருந்தன.

மாணவர்கள் காலையிலும், மாலையிலும் அந்த மைதானத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற வற்றில் ஈடுபடுவார்கள். தோட்ட வேலைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுக் காய்கறிகள் பயிரிடுவார்கள்.

இவ்வாறு கல்வி கற்பதுடன், உடல் உழைப்பை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் அது ஒரு நல்ல கல்வி நிலையமாக விளங்கியது.

சந்தானம் ஏழை மாணவன் என்பதால் அந்த விடுதியில் தங்கித்தான் படித்து வந்தான். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அரசாங்கமே உதவித் தொகை வழங்கி வந்ததால், மாணவர்கள் எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் நன்க படித்தனர். அதோடு விடுதி மாணவர்கள் அக்க பேரும் நல்ல அன்புடனும், ஒற்றுமையுடனும் இருந்தனர்.

ஒரு சமயம், விடுதி வார்டனுக்கு உதவியாக, விடுதியை நடத்துவதற்காக, மாணவர் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். ஆண்டு தோறும் இது போன்று நடக்கும்.

மாணவர்களே தங்களுள் ஒருவரை மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தேர்தலில் போட்டியிடுமாறு சந்தானத்தை மற்ற மாணவர்கள் வற்புறுத்தினார்கள். சந்தானத்திற்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்றாலும், மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்கத் தேர்தலில் நிற்கச் சம்மதித்தான்.

சந்தானத்திற்கு மேலும் மேலும் பெருமையும், புகழும் கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டான் முரளி என்ற மாணவன். அவன் சந்தானத்தின் பெருமையையும், புகழையும் குறைத்து அவனை அவமானப் படுத்த நினைத்தான். இதனால் சந்தானத்தை எதிர்த்து மாணவ தலைவர் தோதல் அவனும் போட்டியிட முடிவு செய்தான். சந்தானத்தை எதிர்த்து நின்று வெல்ல முடியாது என்று எத்தனையோ மாணவர்கள் அவனை எச்சரித்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி அவன் தேர்தலில் நின்றான்.

முரளி, சந்தானத்தைவிட, வயதில் சற்று மூத்தவன். உருவத்திலும் சற்றுப் பெரியவன். இந்தத் தகுதிக் காவது தான் ஜெயித்து விடுவோம் என்று நம்பினான். ஆனால் அவன் நன்றாகப் படிக்காதவன் என்பதாலும், மோசமான குணம் கொண்டவன் என்பதாலும், மற்ற மாணவர்களின் அன்பும், நெருக்கமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தலில் அவனுக்கு எந்த மாணவனும் வாக்களிக்கவில்லை. அவன் தோல்வி அடைந்தான். மாணவர்கள் பலரும் அவனைக் கேலியும், கிண்டலும் செய்யவே, சந்தானத்தின் மீது அவனுக்கு இருந்த ஆத்திரமும், கோபமும் பல மடங்கு பெருகியது. சந்தானத்தை எப்படியும் அவமானப் படுத்தியே ஆக வேண்டும் என்ற உறுதியான நிலைக்கு வந்து விட்டான்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

விடுதி மாணவர்கள் எல்லாரும் காலையில் விளையாடப் போயிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானம் வரை போய்விட்டு யாருக்கும் தெரியாமல் சட்டென்று அங்கிருந்து கிளம்பி விடுதி அறைக்கு வந்தான் முரளி.

மாணவர்களுக்குத் தனித்தனி அறைகள் அங்கு கிடையாது. ஒரு பெரிய கூடத்தில் வரிசையாகப் பெட்டிகளை வைத்து எல்லா மாணவர்களும் தங்கிக் கொள்ள வேண்டும். இப்படித்தான் விடுதி மாணவர்கள் அனைவரும் தங்கிக் கொண்டிருந்தார்கள்.

முரளி சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை பார்த்து விட்டுக் கூடத்திற்குள் நுழைந்தான். வரிசையாக வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பெட்டிகளைப் பார்த்தான். அவற்றில் முத்து என்ற மாணவனின் சூட்கேஸ் அவன் கண்களில் பட்டது. அந்த சூட்கேஸ் போல்தான் அவனும் வைத்திருந்தான். ஆகவே, தனது பெட்டிச் சாவியைக் கொண்டு முத்துவின் சூட்கேசைத் திறந்தான். உள்ளே ஒரு தகர டப்பா இருந்தது. அதைத் திறந்தான். உள்ளே இனிப்புப் பதார்த்தங்கள் நிறைய இருந்தன. முந்தின நாள் மாலை, முத்துவின் தாயார் முத்துவைப் பார்க்க வந்தபோது இந்த இனிப்பு டப்பாவைக் கொடுத்து விட்டுச் சென்றிருந்ததை அவனும் பார்த்திருந்தான்.

இனிப்புகள் கமகமவென்று நல்ல வாசனையாக இருந்தன. இதனால் முரளியின் நாக்கில் எச்சில் ஊறியது. மேலும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்த இனிப்புகளை எடுத்துத் தின்ன ஆரம்பித்தான். விரைவில் டப்பாவில் இருந்த பாதி இனிப்புகளைக் காலி செய்து விட்டான். பிறகு அந்த டப்பாவை எடுத்துக் கொண்டு முத்துவின் சூட்கேசை மறுபடி சாவியால் பூட்டினான். எழுந்து டப்பாவுடன் சந்தானத்தின் பெட்டி அருகே சென்றான். சந்தானத்திடம் பிறருக்குத் தேவைப்படும்படி எந்த உயர்ந்த பொருளும் கிடையாது. அவனது தகரப் பெட்டியில் சில உடைகள், நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே இருந்ததால், அவனது பெட்டிக்குப் பூட்டு தேவைப்படாமல் இருந்தது. ஆகவே, அவனது பெட்டி எப்பொழுதும் சும்மாவே மூடி வைக்கப் பட்டிருக்கும். அந்தப் பெட்டியைத் திறந்து இனிப்பு டப்பாவை அதில் வைத்துப் பெட்டியை மூடினான். பிறகு கூடத்தை விட்டு வெளியேறி மைதானத்தின் பக்கம் போனான்.

விளையாடி முடிந்த பின் கூடத்துக்கு எல்லா மாணவர்களும் திரும்பி விட்டார்கள். முத்து தனது பெட்டியைத் திறந்தான். அதில் தனது இனிப்பு டப்பாவைக் காணாமல் திடுக்கிட்டான்.

''ஐயோ! என் ஸ்வீட் டப்பாவை யாரோ எடுத்துட்டாங்களே!" என்று கூப்பாடு போட்டான்.

மாணவ தலைவரான சந்தானம் சத்தம் கேட்டு ஓடி வந்தான். தனது இனிப்பு டப்பாவைக் காணவில்லை யென்று அவனிடம் புகார் செய்தான் முத்து. உடனே அனைவரின் பெட்டிகளையும் சோதனை செய்ய முடிவு செய்தான் சந்தானம். அதன்படி அவரவர் தங்களது பெட்டியைத் திறந்து காண்பிக்க, சந்தானம் அத்தனையையும் சோதனை செய்தான்.

சந்தானம் தன் பெட்டியைத் திறந்து காட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது திறந்தான். உடனே திடுக்கிட்டான். அவனது பெட்டிக்குள் முத்துவின் இனிப்பு டப்பா இருப்பதை எல்லாரும் பார்த்தார்கள்.

"ஆ! இதோ இருக்கு என் டப்பா!'' என்று கத்தினான் முத்து.

அதை எடுத்துக் கொண்டு, "ஸ்வீட்டுக்கு ஆசைப்பட்டு, ஆள் இல்லாத நேரமா பார்த்து என் பெட்டியை திறந்து சந்தானம்தான் எடுத்திருக்கான்!'' என்று மறுபடி கத்தினான் முத்து.

"ஐயோ! நானில்லை முத்து!" என்று பதறினான் சந்தானம். டப்பாவைத் திறந்து பார்த்த முத்து, ''ஐயையோ! அரை டப்பா ஸ்வீட்டைக் காலி பண்ணிட்டானே!" என்று அழுது கூக்குரலிட்டான்.

இப்பொழுது மற்ற மாணவர்களும் முத்துவுடன் சேர்ந்து கொண்டு சந்தானத்தைத் 'திருடன்' என்றார்கள்.

'இந்தத் திருட்டுப் பயலைப் போய் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுத்தீங்களடா. இப்போ அனுபவிங்க!" என்றான் முரளி.

“முரளி! வீணா என் மேலே அபாண்டம் சுமத்தாதே. நான் திருடனில்லை . எனக்கு அந்தப் பழக்கமும் இல்லை. தயவு செஞ்சு எல்லாரும் நம்புங்க!" என்று கலங்கிய கண்களுடன் கூறினான் சந்தானம்.

"நீ திருடலேன்னா முத்துவோட ஸ்வீட் டப்பா உன் பெட்டிக்குள்ளே எப்படிப் போச்சு?" என்று கேட்டான் முரளி.

''எனக்குத் தெரியலை!" என்றான் சந்தானம்.

"முதல்லே உன்னை ஹாஸ்டலை விட்டு வெளியேத்தணும். அப்பத்தான் எங்க பொருளை யெல்லாம் நாங்க காப்பாத்த முடியும்! என்றான் முரளி.

''ஆமாம்! இவனை வெளியேற்றத்தான் வேணும்!" என்று அத்தனை மாணவர்களும் முழங்கினார்கள்.

தன்னை நன்கு புரிந்து கொண்டவர்களே தனக்கு எதிரிகளாகி விட்டதை உணர்ந்த சந்தானம் மிகவும் துடித்துப் போனான். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடுதான் யாரோ இதைச் செய்திருக்கிறார்கள் என்று நினைத்தான். உடனே விடுதி வார்டனிடம் சென்று நடந்த விஷயங்களைச் சொன்னான்.

வார்டனுக்குச் சந்தானத்தைப் பற்றி நன்கு தெரியும். பள்ளிக்கூடத்திலும் விடுதியிலும் அவனுக்கு இருக்கும் பெயரும், புகழும் அவர் நன்கு அறிந்தவர். அந்தப் பெயரைக் கெடுக்கவே யாரோ திட்டமிட்டு அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டியிருக்க வேண்டுமென்று நினைத்தார்.

உடனே கூடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். எல்லா மாணவர்களிடமும் விசாரித்தார்.

“முத்து! நீ ஸ்வீட் டப்பாவைக் கடைசியா எப்போ பார்த்தே?" என்று கேட்டார் வார்டன்.

“விளையாடப் போறதுக்கு முன்னாலே சார்!" "சரி! உன் ஸ்வீட் டப்பாவைச் சந்தானந்தான் திருடினாங்கிறதை நீ நம்பறியா?" என்று கேட்டார் வார்டன்.

"சார்! அவன் திருடியதை.  நான் பார்க்கலை. ஆனா, என் டப்பா அவன் பெட்டிக்குள்ளே இருந்திச்சே!'' என்றான் முத்து.

"இருந்தா அவனைத் திருடன்னு சொல்லிடறதா. யாராவது அவனைப் பிடிக்காத காரணத்தாலே அவனை அவமானப் படுத்தனும்னு நினைச்சு, உன் பெட்டியிலே இருந்து ஸ்வீட் டப்பாவை எடுத்து அவன் பெட்டிக்குள்ளே வச்சிருக்கலாமில்லையா?" என்று கேட்டார் வார்டன்.

மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

"அப்படி எண்ணம் இங்க யாருக்குமே இல்லை. சந்தானம் ஸ்வீட்டை விரும்பிச் சாப்பிடறதை, நான் பல தடவை பார்த்திருக்கேன். நேத்து முத்துவோட அம்மா இந்த ஸ்வீட் டப்பாவை அவன்கிட்டே குடுத்தபோது சந்தானம் இந்த டப்பாவையே குறுகுறுன்னு பார்த்ததை நானே கவனிச்சேன். அதனாலே அவன்தான் இதைத் திருடினான்ங்கிறதை நான் மறுக்கவே முடியாது. இப்படித் திருட்டுப் பயலை எல்லாம் ஹாஸ்டல்லே வச்சிருக்கவே கூடாது!'' என்றான் முரளி.

வார்டனுக்கு அவனது பேச்சிலிருந்து ஒரு உண்மை பளிச்சென்று புரிந்தது.

மாணவ தலைவர் தேர்தலில் சந்தானத்தோடு போட்டியிட்டுத் தோற்றுப் போனதால் உண்டான அவமானத்தால், சந்தானத்தை அவமானப்படுத்த அவன் செய்த செயலாக இருக்கும் என்று நினைத்தார். இந்த உண்மையை அவன் வாயிலிருந்து எப்படி வரவழைப்பது என்று யோசித்தார்.

"இதோ பாருங்க! இந்தத் திருட்டைச் செஞ்சது யாருன்னு ரொம்ப எளிதா கண்டுபிடிச்சுடலாம். இப்போ நீங்களா சொல்லிட்டா நல்லது. இல்லே போலீசுக்கும் டாக்டருக்கும் போன் பண்ணுவேன். அவங்க வந்து உங்க எல்லோரோட இரத்தத்தையும் எடுத்து டெஸ்ட் பண்ணுவாங்க. யாரோட இரத்தத் திலே சர்க்கரைச் சத்து அதிகமா இருக்கோ அவனே ஸ்வீட்டைத் தின்ன திருடன்னு கண்டுபிடிப்பாங்க. அப்பறம் அவனை இழுத்துக்கிட்டுப் போயி ஜெயில்லே அடைப்பாங்க. என்ன சொல்றீங்களா... இல்லே இப்பவே போயி போன் பண்ணவா?" என்று எழப் போனார் வார்டன்.

முரளிக்குப் 'பகீர்' என்றது. ஸ்வீட் சாப்பிட்ட அவனே உடலில் சர்க்கரைச் சத்து அதிகமாகும் என்று அவனுக்குத் தெரிந்ததுமே அவன் முகம் வெளுத்து, உடல் முழுக்க வியர்த்துக் கொட்டியது. சட்டென்று அவன் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வர, அந்த இடத்திலேயே வாந்தி எடுத்தான். அதில் செரிக்காத இனிப்புப் பண்டங்கள் கிடப்பதை வார்டன் முதல் மாணவர் வரை எல்லாரும் பார்த்தார்கள்.

இறுதியில் அந்தக் குற்றத்தைத் தான்தான் செய்தது என்பதை ஒத்துக் கொண்டான் முரளி.

மாணவர்கள் எல்லாரும் சந்தானத்தைப் பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தார்கள்.

"முரளி! சந்தானத்துகிட்டே மன்னிப்புக் கேளு தவிர, இந்த மாதிரி தப்பையெல்லாம் இனிமேலும் செய்ய மாட்டேன்னு எல்லா மாணவர்கள்கிட்டேயும் சொல்லு!" என்றார் வார்டன்.

முரளி எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.