தொழிலதிபர் தண்டபாணிக்கு உதவியாக ஒரு அந்தரங்கச் செயலாளர் தேவையாக இருந்தது. தண்டபாணி தன் மானேஜரைக் கூப்பிட்டுத் தன் தேவையைக் கூறினார்.
“நல்லா படித்த, முப்பது வயதிற்குட்பட்ட ஒரு ஆள் எனக்கு வேண்டும். அவன் நேர்மையானவனாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் என் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்தத் தகுதியுடைய ஒருவரை எனக்குச் செயலாளராக நியமிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு,'' என்று மானேஜருக்கு உத்தரவு போட்டார் தண்டபாணி.
மானேஜர் அடுத்த அரை மணி நேரத்தில் செய்தித் தாள் ஒன்றுக்கு விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்தார். மறுநாளே செய்தித் தாளில் விளம்பரம் வெளிவந்தது. அதைப் பார்த்துவிட்டு ஏராளமான இளைஞர்கள் அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பங்களை அலசி, ஆராய்ந்து தகுதி வாய்ந்த இருபத்தைந்து பேரைத் தேர்வுக்கு அனுப்பினார் மானேஜர்.
வந்திருந்த நபர்களில் மூன்று பேர் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்களாகத் தெரிந்தனர். இப்போதுதான் மானேஜருக்குச் சிறிய குழப்பம் ஏற்பட்டது. மூன்று பேரில் இருவர் பெண்கள்; ஒருவர் ஆண். சிறிது நேர யோசனைக்குப் பிறகு மூன்று பேரையும் தனித்தனியாக வரவழைத்துப் பேசினார் மானேஜர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆயிரம் ரூபாய் கொடுத்து குறிப்பிட்ட வேலைகளைச் செய்து முடித்து வருமாறு கூறினார். கொடுக்கப்பட்ட வேலையை முடித்துக் கொண்டு முதலில் திரும்பியது விமலா என்ற பெண். கொடுத்த பணத்தில் என்ன என்ன செலவுகள் செய்யப்பட்டன என்ற விபரங்களோடு மீதிப் பணத்தை மானேஜரிடம் திருப்பிக் கொடுத்தாள். எல்லா இடங்களுக்கும் ஆட்டோவிலேயே சென்று வந்திருந்தாள் விமலா.
அடுத்ததாக வந்தது கார்த்திக் என்ற இளைஞன்; அவனும் செலவுகளுக்கான விவரத்தை ஒரு பேப்பரில் எழுதி மானேஜரிடம் கொடுத்தான். மீதமுள்ள பணத்தையும் கொடுத்தான். அவனுடைய செலவுகளைப் படித்துப் பார்த்தார் மானேஜர்.
அனாவசியச் செலவுகள் அதிகம் இருந்தன. செலவு செய்ததைவிட ஐந்து, பத்து அங்கங்கே அதிகமாகக் கூட்டி எழுதியிருந்தான் கார்த்திக்.
கடைசியாக வந்து சேர்ந்தாள் நித்யா. செலவு களுக்கான விபரத்தோடு மீதிப் பணத்தை மானேஜரிடம் கொடுத்தாள். “ஏம்மா இவ்வளவு லேட்?" என்று நித்யாவிடம் கேட்டார் மானேஜர்.
"பஸ் கிடைக்கத் தாமதமாகிவிட்டது." என்று பதில் சொன்னாள் நித்யா.
"உன் கையிலதான் நிறையப் பணம் இருக்கிறதே! பேசாமல் ஆட்டோவில் வந்திருக்கலாமே!' என்று விடாமல் கேட்டார் மானேஜர்.
“நீங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வர வேண்டும் என்று சொல்லியிருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி ஆட்டோவில் வந்திருப்பேன். நீங்கள் அவசரமான வேலை என்று சொல்லாததால் அநாவசியமாகப் பணத்தைச் செலவு செய்ய விரும்பவில்லை,'' என்று தான் நினைத்ததைக் கூறினாள் நித்யா.
மூன்று பேரையும், ஒரு வாரத்துக்குள் தகவல் அனுப்புவதாகச் சொல்லிப் போகச் செய்தார் மானேஜர். இந்த மூவரில் இப்போது அவருக்குப் பொருத்தமாகத் தெரிந்தவர்கள் விமலாவும், நித்யாவும் மட்டுமே! அவர்கள் இருவரும் செய்த செலவை அப்படியே எழுதியிருந்தனர். அந்த நேர்மை கார்த்திக்கிடம் இல்லை என்பதை மானேஜர் தெரிந்து கொண்டுவிட்டார்.
விமலா, நித்யா இந்த இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்பது அடுத்த கேள்வி. மானேஜர் யோசித்தார். பியூன் ரங்கசாமியைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார். ரங்கசாமியும் சரியென்று தலையை ஆட்டிவிட்டு வெளியே சென்றான்.
மறுநாள் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தாள் விமலா. அப்போது அவள் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். அவசரமாகக் கதவைத் திறந்தாள் விமலா. பியூன் ரங்கசாமி நின்றிருந்தான். ''அம்மா! உங்க பெயர் விமலாதானே!'' என்று கேட்டான் ரங்கசாமி.
''ஆமாம்! நான் விமலாதான். உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், சட்டென்று நினைவு வரவில்லை ,'' என்று இழுத்தாள் விமலா.
"நான் ரங்கசாமி! நேற்று நீங்கள் ஒரு கம்பெனியில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தீர்கள், இல்லையா? அங்கிருந்துதான் வருகிறேன். மானேஜர் என்னை அனுப்பி வைத்தார்,'' என்றான் ரங்கசாமி.
"இப்போது உங்களை நினைவுக்கு வந்துவிட்டது. எனக்கு அங்கு வேலை கிடைத்து விட்டதா?'' என்று ஆவலுடன் கேட்டாள் விமலா.
''அம்மா! உங்களுக்கு வேலை கிடைத்த மாதிரிதான். ஆனால் ஒரு பிரச்னை. நீங்களும், நித்யா என்ற இன்னொரு பெண்ணும் அதே பதவிக்குப் போட்டி போடுகிறீர்கள். நீங்கள் இருவருமே திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். யாரைத் தேர்ந் தெடுப்பது என்று தெரியாமல் மானேஜர் திகைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்...'' என்று இழுத்தான் ரங்கசாமி.
"அதனால் நான் என்ன செய்ய வேண்டும்? சீக்கிரம் சொல்," என்று அவசரப்பட்டாள் விமலா.
''சொல்லவே தயக்கமாக இருக்கிறது. மானேஜ ருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் வேலை உங்களுக்குத்தான் கிடைக்கும்,'' என்று சொல்லி முடித்துவிட்டான் ரங்கசாமி.
"இதே மாதிரி அந்த நித்யாவிடமும் போய்க் கேட்டீர்களா?" என்று திருப்பிக் கேட்டாள் விமலா.
"இல்லம்மா! முதலில் உங்களிடம்தான் வருகிறேன். நீங்க சம்மதித்துவிட்டால் அவர்களிடம் போக மாட்டேன். ஏதோ உங்களை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது!' என்று கூறினான் ரங்கசாமி.
"ஓ அப்படியா! நான் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலை நிச்சயம் எனக்குத் தானே?'' என்று திருப்பித் திருப்பிக் கேட்டாள் விமலா. ரங்கசாமியின் பதில் அவளுக்குத் திருப்தி அளித்தது. மறுநாள் பணத்தோடு மானேஜரைப் பார்க்க வருவதாகச் சொல்லி அனுப்பினாள்.
விமலாவிடம் விடைபெற்றுக் கொண்ட ரங்கசாமி நேராக நித்யாவின் வீட்டுக்குச் சென்றான். விமலாவிடம் சொன்னதையே நித்யாவிடம் சொன்னான்.
“சார்! தயவு செய்து நீங்கள் போகலாம். என் தகுதிக்கும் திறமைக்கும் மதிப்புக் கொடுத்து இந்த வேலை எனக்குக் கொடுக்கப்பட்டால் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். பணம் கொடுத்து வேலையை விலைக்கு வாங்கும் குறுக்கு வழி எனக்கு ஒத்துவராது. உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று ரங்கசாமியின் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றுவிட்டாள் நித்யா.
அடுத்த இரண்டாவது நாளில் நித்யாவுக்கு வேலையில் வந்து சேருவதற்கான உத்தரவு தபாலில் வந்தது. ஒன்றும் புரியாமல் கிளம்பிச் சென்று மானேஜரைப் பார்த்துத் திகைத்து நின்றாள். மானேஜர் புன்னகை செய்தார்.
"நித்யா! உங்கள் நேர்மையைச் சோதிக்க பியூன் ரங்கசாமியை உங்கள் வீட்டுக்கு அனுப்பிப் பொய் சொல்லச் சொன்னேன். என்னைத் தவறாக நினைத்து விடாதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்து கொள்ளவே அப்படி ஒரு நாடகமாடினேன். நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்!'' என்று நித்யாவுக்கு விபரத்தைச் சொல்லி வாழ்த்தினார் மானேஜர்.
தான் எதிர்பார்த்த மாதிரியே தனக்கு ஒரு உதவியாளர் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார் தொழிலதிபர் தண்டபாணி.