வேடல் என்ற ஊரில் பணக்காரக் கருமி ஒருவன் இருந்தான். அவன் பெயர் நஞ்சப்பன். பெயருக்கு ஏற்றாற்போலவே அவன் மனசு நஞ்சு போன்றுதான் இருந்தது.
அவனிடம் ஏராளமான பணம் குவிந்து கிடந்தது. தவிர வியாபாரத்தின் மூலமும் அவனுக்குப் பணம் பெருகியது. ஆனால் ஒரு காசுகூட அவன் தான தர்மம் செய்யமாட்டான். உதவி என்று யாராவது வந்து கேட்டால் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி விரட்டி விடுவான்.
அவனுக்கு நாளாக நாளாகப் பெருங் கவலை ஒன்று வந்தது. தன்னிடம் குவிந்து கிடக்கும் பணத்தை எங்கு பத்திரப்படுத்தி வைப்பது என்பதுதான் அந்தக் கவலை. ஊரில் திருடர் பயம் வேறு அதிகமாக இருந்தது. ஆகவே பணத்தைப் பீரோவிலும், இரும்புப் பெட்டியிலும் வைப்பது பாதுகாப்பற்றது என்று எண்ணி, வீட்டுத் தோட்டத்தில் ஓரிடத்தில் பத்திரமாகப் புதைத்து வைத்து விடலாம் என்ற முடிவிற்கு வந்தான்.
அதன்படி யாரும் பார்க்காத வேளையில், தோட்டத்தின் ஓரிடத்தில் குழி தோண்டி அதில் பணப்பையைப் போட்டுப் புதைத்து வைத்தான். அதன் பிறகுதான் பணத்தைப் பற்றிய பயம் அவனுக்கு அகன்றது. கவலையும் நீங்கியது.
ஒரு நாள் இரவு தோட்டத்துப் பக்கம் யாரோ நடமாடுவது போன்ற ஓசை கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான் நஞ்சப்பன். அவசரமாக 'டார்ச்' விளக்கை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு ஓடினான். டார்ச் ஒளியை எங்கும் பாய்ச்சினான். யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. எவ்வித சப்தமும் கேட்கவில்லை.
உண்மையில் தோட்டத்துப் பகுதியில் யாருமே நடமாடவில்லை. அவன் பணத்தை அங்கே புதைத்து வைத்ததால், அதை எடுக்கத்தான் யாரோ நடமாடுவது போல் அவனுக்குப் பிரமையாகத் தோன்றியது.
சிறிது நேரம் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தான். பணம் புதைபட்டிருந்த இடத்திற்கு வந்து 'டார்ச்' ஒளியைத் தரையில் அடித்தான். நல்ல வேளை. அந்த இடத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆகவே, நிம்மதியுடன் வீட்டிற்குள் வந்து படுத்தான்.
விடிந்ததும் அவனுக்கு மறுபடி சந்தேகம் எழுந்தது. ஒருவேளை குழியைத் தோண்டி யாராவது பணப் பையை எடுத்துவிட்டு, எடுத்தது தெரியாமல் மறுபடி மூடி வைத்து விட்டார்களோ என்று நினைத்தான். உடனே, அவன் மனது 'பகீர்' என்று அடித்தது.
எழுந்து தோட்டத்திற்கு ஓடினான். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு குழியை அவசர அவசரமாகப் பார்த்தான். உள்ளே-
பணப்பை மிகவும் பத்திரமாக இருந்தது.
அப்பொழுதுதான் அவனுக்கு நிம்மதி மூச்சே வந்தது.
நாளாக நாளாக அவனுக்கு அந்தப் பணத்தைப் பற்றியே எண்ணமாக இருந்ததால் அவனால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை . ஒரு வாய் திருப்தியாய்ச் சாப்பிட முடியவில்லை. எந்த ஒரு காரியத்திலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை . இதனால், அவன் உடல் மெலிந்தது. முகத்தில் நீளமாகத் தாடி வளர்ந்தது. எப்பொழுதும் கவலை தோய்ந்த முகத்துடனேயே காணப்பட்டான். யாருடனும் பேசுவதற்குகூடப் பயந்தான். யாராவது வந்து பேசினால் மிரண்டு ஓடினான்.
அந்த ஊர்க்காரர்களுக்கு அவனது செயல் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இவர்களது பேச்சு ஒரு திருடனுக்கு எட்டியது. அவனுக்கு ரொம்ப நாட்களாகவே நஞ்சப்பனின் மீது ஒரு கண் இருந்தது. இப்போது ஊரார் பேச்சு வேறு அவனை நோக்கித் திரும்பி விட்டதால், அவனைக் கண்காணிக்க முடிவு செய்தான் திருடன். ஆகவே, நஞ்சப்பனுக்குத் தெரியாமல் அவனை நிழல்போல் தொடர்ந்து கண்காணித்தான்.
ஒருநாள் மாலை வேளையில் நஞ்சப்பன் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே தோட்டத்தின் ஓரிடத்தில் குழி பறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டான் திருடன்.
நஞ்சப்பன் குழிக்குள் பார்ப்பதையும், அவன் முகம் மலர்வதையும் கவனித்த திருடன், அந்தக் குழிக்குள் விலை மதிப்பற்ற ஏதோ பொருட்களை ஒளித்து வைத்திருக்கிறான் என்று நினைத்தான்.
அன்று இரவு ஊர் உறங்கியபின், நஞ்சப்பனின் கோட்டத்திற்கு வந்த திருடன் ஓசைப் படாமல் குழியைத் தோண்டிப் பணப் பையை எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் நழுவி ஓடிவிட்டான்.
காலையில் தோட்டத்திற்கு வந்த நஞ்சப்பன், குழி தோண்டப்பட்டிருப்பதையும், 'அதிலிருந்த பணப்பை காணாமல் போயிருப்பதையும் கண்டு 'லபோதிபோ' என்று அடித்துக் கொண்டு அலறினான்.
அவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் கூடிவிட்டார்கள்.
அவனது மொத்தப் பணமும் திருடு போய்விட்டது என்பதை அறிந்த அவர்கள், அவன் நிலைக்காகப் பரிதாபப்பட்டார்கள்.
அவர்களில் ஒரு அனுபவஸ்தர், "நஞ்சப்பா! பணம் போனது பற்றி நீ ஏன் இவ்வளவு கலங்குகிறாய்? இதுநாள்வரை அந்தப் பணத்தால் யாருக்கு என்ன பயன்? ஏன்... உனக்குத்தான் என்ன பயனாக இருந்தது? யாருக்குமே உதவாத அந்தப் பணம் உன்னிடம் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் போவதும் ஒன்றுதான். குழியை மூடிவிட்டு, யாரோ ஒரு முகம் தெரியாத திருடனுக்காவது அந்தப் பணம் பயன்பட்டதே என்று நினைத்து இருபதப் படு. இனிமேலாவது திருந்து,'' என்றார்.
நஞ்சப்பன் அந்த வினாடியே புது மனிதனாகி விட்டான்.
பிறர்க்கு உதவும் மனப்பான்மையோடும், இரக்க சிந்தனையுடனும் இருந்தால், நமக்கு இழப்பு என்பது எதுவுமில்லை. இதை இக்கதையின் மூலம் புரிந்து கொண்டீர்கள்தானே?