கோமளபுரம் என்ற நாட்டைச் சிம்மதேவன் என்ற மன்னன் ஆண்டான். அவன் மிகவும் பேராசை பிடித்தவன். தனது நாட்டிற்கு அருகிலிருக்கும் சிறுசிறு நாடுகளைப் போரிட்டு வென்று அந்நாடுகளின் விலை மதிப்பற்ற செல்வங்களை யெல்லாம் கொள்ளையடித்து, தனது பெட்டகத்தில் சேமித்து வைத்தான்.
தனது நாட்டு மக்கள் மீது அதிகமான வரிவிதித்து கொடுமைப் படுத்தி வரி வசூல் செய்தான். வரி செலுத்த இயலாத ஏழை எளியவர்களைச் சிறையில் தள்ளினான்.
நாளுக்கு நாள் அவனது பேராசை அதிகமாக, பலரது வெறுப்புக்கும் அவன் ஆளானான்.
தலைமை அமைச்சர் நம்பிகூட அவனது பேராசையைக் கண்டு மனம் வெதும்பினார். ஆனால், அவரால் வாய் திறந்து எதுவும் பேச முடியவில்லை. யோசனை என்ற பெயரில் எது சொன்னாலும்கூடத் தன்னையும் சிறையில் தள்ள விடுவானோ என்ற பயம்தான் அவரது மவுனத் திற்குக் காரணம்.
ஒரு நாள் -
மன்னனது வரிக் கொடுமை தாங்க முடியாத மக்கள் அனைவரும் நம்பி என்ற அறிஞரிடம் வந்து அழுது முறையிட்டார்கள். அந்தப் பேராசை பிடித்த கொடுங்கோல் மன்னனிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டார்கள்.
நம்பியோ, “மனிதனால் திருத்தக் கூடிய அளவிற்கு மன்னன் இல்லை. அவனை ஆண்டவன்தான் திருத்த வேண்டும். அவனது பேராசையினாலேயே அவனுக்கு அழிவு ஏற்படும் என்று நான் நினைக் கிறேன். எல்லாரும் பொறுமையாக இருங்கள். தினமும் இறைவனிடம் முறையிடுங்கள். விரைவில் வழி பிறக்கும்!'' என்று சமாதானம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஒரு நாள் -
பேராசைப் போதை தலைக்கேறிய நிலையில், தனது இஷ்ட தெய்வத்திடம் சென்று வணங்கினான் சிம்மதேவன்.
“இறைவா! இந்த உலகத்தில் உள்ள அரசர்களிடம் இருக்கும் மொத்தச் செல்வங்களை விட, அதிகச் செல்வம் எனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். உலகத்தில் என்னை மிஞ்சிய செல்வம் வேறு யாரிடமும் இருக்கக் கூடாது. அத்தகைய செல்வந்தனாக என்னை ஆக்கி அருள்புரி!'' என்று வேண்டினான்.
தினமும் அவனது வேண்டுதல் தொடர்ந்தது.
ஒருநாள் வேண்டுதலின் போது இறைவன் அவன் கண் முன்னே தோன்றி, "பக்தா! உன் பக்தியை மெச்சினேன். உனக்கு என்ன வேண்டுமோ, கேள்' என்றார்.
"இறைவா! நான் தொட்டதெல்லாம் சுத்தத் தங்கமாக மாற வேண்டும். அந்த வரம்தான் எனக்கு வேண்டும்!" என்றான் சிம்மதேவன்.
"அப்படியே ஆகட்டும்!" என்று சொல்லி விட்டு இறைவன் மறைந்துவிட்டார்.
சிம்மதேவன் கோயிலைவிட்டு வெளியேறினான். தனது குதிரை மீது ஏறினான். அதைத் தனது கையால் தட்டி விரட்டினான்.
அவ்வளவுதான்! அவன் கைப்பட்ட மறுவினாடியே அவன் குதிரை அப்படியே தங்கமாக மாறியது.
சிம்ம தேவனுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. தனது வேண்டுதலும், ஆசையும் பலித்துவிட்டன என்று நினைத்துப் பெரிதாகச் சிரித்தான்,
தன் அரண்மனைக்கு வந்து அதன் தூண்கள் ஒவ்வொன்றையும் தொட்டான். அவை அனைத்தும் தங்கமாக மாறின.
இதைக் கண்ணுற்ற ராணி ஜலதேவி பொதும் பிரமித்துப் போனாள். அவளது பிரமிப்பைக் கண்ட சிம்மதேவன், "ராணி! இந்த உலகத்தில் என்னைவிடப் பொருள் படைத்தவன் வேறு யாரும் இருக்க முடியாது!" என்று தற்பெருமையுடன் கூறினான்.
பிறகு இருவரும் உணவுக் கூடத்திற்குச் சாப்பிடச் சென்றார்கள்.
பணிப் பெண் உணவு பரிமாறினாள்.
சிம்மதேவனுக்கோ ஒரே பசி. ஆகவே ஆவலோடு உணவைத் தொட்டான். அடுத்த வினாடி அந்த உணவு தங்கமாக மாறியது.
சிம்மதேவன் திகைத்தான். உடனே, “அரசே! நீங்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடுகிறது. ஆகவே சற்று நிதானமாக இருங்கள். எதையாவது தொடுவதற்கு முன் யோசியுங்கள். இப்பொழுது நான் உங்களுக்கு உணவு ஊட்டிவிடுகிறேன்!'' என்று சொன்ன ராணி ஜலதேவி, சிம்மதேவனுக்கு உணவை ஊட்டி விட்டாள்.
சிம்மதேவனின் வயிறு நிறைந்துவிட்டது.
“போதும் ராணி" என்று சொன்னவன் தன்னையும் அறியாமல் ராணி ஜலதேவியின் உணவு வைத்திருந்த கையைத் தொட்டான்.
அடுத்த வினாடி-
ராணி ஜலதேவி அப்படியே தங்கமாக மாறி விட்டாள்.
சிம்மதேவன் பெரும் பீதியடைந்தான்.
"ஐயோ! நான் என்ன செய்வேன்! என் பேராசையால் என் அன்பிற்குரிய மனைவியையும் என் கையாலேயே உயிரற்ற சடலமாக்கிவிட்டேன். நான் நினைத்துத் தொடுவது மட்டுமே தங்கமாக மாறவேண்டும் என்று இறைவனிடம் கேட்காமல் போனேனே... கடவுளே... இப்போது நான் என்ன செய்வேன்!'' என்று அரற்றியபடி தன் தலையில் அடித்துக் கொண்டான்.
அடுத்த வினாடி.
அவனும் தங்கமாக மாறிவிட்டான்.
அடுத்து கோமளபுரம் நாடு நல்ல விமோசனம் பெற்றது.
பேராசையானது அழிவிற்குத்தான் வழி வகுக்கும்.