Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

24. சுய அறிவு வேண்டும்

ரங்காபுரம் என்ற கிராமத்தில் வீராச்சாமி என்ற அண்ணனும், கந்தசாமி என்ற தம்பியும் ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள்.

வீராச்சாமி மணியம் வேலை பார்த்து வந்தான். கந்தசாமி விவசாயம் பார்த்து வந்தான்.

வீராச்சாமிக்கு முனியப்பன் என்ற விரோதி ஒருவன் இருந்தான். அவன் வீராச்சாமியை ஏதாவது ஒரு விதத்தில் பழி தீர்க்க வேண்டும், என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான்.

ஒருநாள், ஒரு திட்டத்துடன் தம்பி கந்தசாமியிடம் வந்தான்.

“கந்தசாமி! இவ்வளவு வளர்ந்த பிறகும், சிறிதும் பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறாயே! வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் இந்த வயலில் உழுது பயிரிட்டு மாடாக உழைத்துப் போடுகிறாய். அதைச் சிறிதுகூட வியர்வை சிந்தாமல் அனுபவித்துக் கொண்டு திண்ணையில் சுகமாக வாழ்க்கையை நடத்தி வருகிறாரே, உன் அண்ணன் வீராச்சாமி. இது என்னப்பா நியாயம்? நீ கஷ்டப்பட, உன் அண்ணன் சுகத்தை அனுபவிப்பது இன்னும் உனக்குப் புரியவில்லையா? மணியம் வேலைக்கு வீராச்சாமிதான் தகுதியுள்ளவரா? நீ இல்லையா?" என்று தூபம் போட்டான் முனியப்பன்.

"ஏன் இல்லை, முனியப்பா! மணியம் வேலை பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது. எனக்கும், ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அண்ணனிடம் எதிர்த்துப் பேச எனக்குத் தைரியம் இல்லாததால் இந்த விவசாயத்திலேயே ஈடுபட்டுக கொண்டு வருகிறேன்,'' என்றான் கந்தசாமி.

''உனக்கு மணியம் வேலை பார்க்கும் ஆசை இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. இதோ பார் கந்தசாமி! நீ அந்த மணியம் வேலையை அண்ணனிடம் போய் எப்படிக் கேட்பது என்றுதானே யோசிக்கிறாய்! நான் உனக்கு ஒரு வழி சொல்கிறேன். மிகவும் வேகமாக நீ வீராச்சாமியிடம் போய் நின்று, மிகுந்த கோபத்துடன் அவரின் இரு கன்னத்திலும் பளார், பளார் என்று அறைய வேண்டும். பிறகு மணியம் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, நீ போய் விவசாயத்தைப் பார் என்று கடுமையாகப் பேசு. உடனே வீராச்சாமி மணியம் வேலையை ஒப்படைத்துவிட்டு விவசாயம் செய்யப் போய் விடுவார். நீ வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்," என்றான் முனியப்பன்.

"சரி! அப்படியே செய்கிறேன்!" என்று சொன்ன கந்தசாமி மிகவும் வேகமாக வீட்டிற்கு வந்தான்.

அப்பொழுது கிராமவாசி ஒருவன் வீராச்சாமி முன் நின்று, ''ஐயா! என் தாய் இறந்து விட்டாள். நான் அனாதையாகிவிட்டேன்!" என்று சொல்லி அழுது கொண்டிருந்தான்.

"அழாதே, அப்பா! உன் தாய் மிகவும் நல்லவள். அவள் உனக்கு மட்டும் தாயல்ல. இந்தக் கிராமத்தில் இருப்போருக்கெல்லாம் தாயாக இருந்தாள்!'' என்று அவனுக்கு ஆறுதல் கூறிய வீராச்சாமி அவனிடம் நூறு ரூபாய் கொடுத்து ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்குமாறு சொல்லி அனுப்பினான்.

அந்தக் கிராமவாசி சென்றதும், வேகமாகப் போன கந்தசாமி, அண்ணன் வீராச்சாமியின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான்.

“டேய் கந்தசாமி! என்னை ஏண்டா இப்படி அடிக்கிறாய்?" என்று கேட்டான் வீராச்சாமி.

"நான் வெயிலிலும், மழையிலும் பாடுபட்டு உழைக்க வேண்டியது. நீ இங்கு சுகமாக அமர்ந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பது. என்னை என்ன முட்டாள் என்று நினைத்தாயா? இதோ பார்! இன்றிலிருந்து நான்தான் இங்கு மணியம் வேலை பார்க்கப் போகிறேன். நீ வயலில் போய் உழ வேண்டும், தெரிந்ததா?'' என்று கோபமாகப் பேசினான் கந்தசாமி.

தம்பி கந்தசாமியின் இந்தத் திடீர் மனமாற்றத் திற்குக் காரணம் வீராச்சாமிக்கு உடனே புரிந்தது. தனக்கு வேண்டாத யாரோதான் இவனுக்கு இப்படிச் சொல்லி இருக்க வேண்டும். இவனும், சிறிதுகூட யோசிக்காமல் தனது தகுதிக்கு மீறி ஆசைப்படு கிறான். இவனுக்குச் சொன்னால் புரியாது. பட்டுத் திருந்தட்டும் என்று நினைத்த வீராச்சாமி, மணியம் வேலையில் சிறிதளவுகூட அனுபவம் இல்லாத அவன் எப்படி மணியம் வேலை பார்க்கப் போகிறான் என்பதை அறியும் பொருட்டு வயலுக்குச் செல்வது போல் சென்று, ஒரு இடத்தில் மறைந்து கொண்டு கந்தசாமியை நோட்டமிட்டான்.

கந்தசாமி, தன் அண்ணன் வீராச்சாமியைப் போல் அழகாக உடுத்தி, திண்ணையில் வந்து அமர்ந்தான். அப்பொழுது ராணுவத்திலிருந்து விடுமுறையில் வந்திருந்த ஒரு ராணுவ வீரன் கந்தசாமியிடம் வந்து, "என் மனைவி இறந்துவிட்டாள். அவள் பிரிவால் நான் வாடுகிறேன்!" என்று கூறி அழுதான்.

அதைக் கேட்ட கந்தசாமிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுக்குப் பொறுமையும் இல்லை. இப்படி ஊர் நடப்பைத் தீர்ப்பதா மணியம் வேலை என்ற சலிப்பு வேறு ஏற்பட்டது. எரிச்சலுடன் கந்தசாமி.

"அதுக்கு நான் என்னப்பா செய்யறது? வேறு பெண்ணை உடனே திருமணம் செய்து கொள்ளேன். இதெல்லாம் ஊர் மணியம் செய்ய முடியுமா? போ போ!" என்றான்.

உடனே, கந்தசாமியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விழுந்தது.

''ஏண்டா அயோக்கியப் பயலே! என்ன தைரியம் உனக்கு. என் மனைவியை இழந்து இன்னும் ஒரு நாள்கூட ஆகவில்லை ! அதற்குள் தரக்குறைவாகப் பேசிவிட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கத்திய ராணுவ வீரன் கந்தசாமியை அடி அடியென்று அடித்து உதைத்தான்.

அடியை வாங்கிக் கொண்ட கந்தசாமிக்கு, இந்த அடி உதை ஏன் விழுந்தது என்று புரியவில்லை . அண்ணன் வீராச்சாமி போலவேதான், அவனும், மணியம் வேலை செய்தான். பின் ஏன் அடிவாங்கி னோம் என்று புரியாமல் புலம்பினான் கந்தசாமி.

அவனுக்குச் சரியான பாடம் கிடைத்துவிட்டது என்பதை உணர்ந்த வீராச்சாமி ஓடி வந்து ராணுவ வீரனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனை அனுப்பி வைத்தான்.

பிறகு கந்தசாமியிடம் சொன்னான்.

"தம்பி! மணியம் வேலை நீ நினைப்பது போல, எளிதல்ல என்று உனக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!'' என்றான் அவனை அரவணைத்து.

கந்தசாமி, தன் முட்டாள் தனத்தை உணர்ந்து, வீராச்சாமியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

மறுநாளே, அவன் வயலுக்குக் கிளம்ப, வீராச்சாமி மணியமாக வீட்டுத் திண்ணைமேல் அமர்ந்தான்.

பிறர் சொல் கேட்டுத் தனது சுய அறிவையும் மீறி, பதவி, பெயர், புகழ், சொத்து, சுகம் இவற்றிற்கு ஆசைப்பட்டால் இந்தக் கந்தசாமிக்குக் கிடைத்த துன்பமே நமக்கும் கிடைக்கும். ஆகவே நாம் சுய அறிவுடன் சிந்திக்கப் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை நடத்த வேண்டும்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.