உமா ரொம்ப பிடிவாதக்காரி. எட்டாம் வகுப்புப் படித்தாலும் வீட்டில் பெற்றோர் சொற்படி நடக்க வேண்டும் என அவளுக்குத் தெரியவில்லை. பாட்டியையும், தாத்தாவையும் 'கிழவி, கிழவன்' என்றெல்லாம் சொல்லி ஏளனம் செய்வாள்.
"பெரியவர்களை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் உனக்குத்தான் கெடுதல் வரும்!" என்று அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை. அதிகம் மிரட்டினால் அழுவாள். ''சாப்பிட வரல்லே போ!'' என்று குப்புறப்படுத்துக் கொண்டு அடம்பிடிப்பாள்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உமாவுக்கு நல்ல புத்தி சொல்லிப் பார்த்தார்கள். அப்போதும் அவள் திருந்தவில்லை .
''உமாவுக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டீர்கள்!'' என்று உறவினர் களின் ஏசலுக்கு ஆளாக நேர்ந்தது.
பள்ளியிலும் அவளுக்குக் கெட்ட பேர். சக மாணவிகளுடன் நட்புறவோடு பழகத் தெரிவ தில்லை .
அவளை எப்படித் திருத்துவது என்று தெரியாமல் அவளது அம்மாவும், அப்பாவும் கலங்கிப் போயிருந்தார்கள். ஒரே மகள் என்பதால் வந்த வினை அது,
கோயம்புத்தூரிலிருந்து அவளுடைய அத்தை சென்னைக்கு விடுமுறைக்கு வந்திருந்தார். ஒரு வாரம் உமா வீட்டில் தங்கியிருந்தாள். உமாவைப் பற்றி அவளும் புரிந்து கொண்டாள்.
"குழந்தையை இப்படி வளர்க்கக் கூடாது. ஒரு மாதம் என்னுடன் அனுப்பி வையுங்கள். தாய் தந்தை இல்லாத என் நாத்தனார் மகள் என்னுடன்தான் இருக்கிறாள். அப்பா, அம்மாவின் அருமை தெரியாமல் எவ்வளவு பவ்யமாக அவள் நடந்து கொண்டு என்னோடு இருக்கிறாள் என்பதை அங்கு வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்,'' என கோவை அத்தை, உமாவின் பெற்றோரிடம் சொல்ல அரை மனதுடன் அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அத்தையுடன் ஊருக்குப் போகச் சம்மதிக்க வேண்டுமே உமா. அந்தப் பொறுப்பையும் அத்தையே ஏற்றுக் கொண்டாள்,
"இந்தாம்மா உமா, எனக்கு ஒரு மாதம் லீவு விட்டிருக்கிறார்கள். சென்னையில் வெய்யில் அதிகம். என்னுடன் கோயம்புத்தூருக்கு வா. அங்கே ஊரையெல்லாம் சுற்றிக் காட்டுகிறேன். சர்க்கஸ், சினிமா எல்லாம் காட்டுகிறேன். உனக்குத் துணையாக ரமா இருக்கிறாள்,'' என பவ்யமாக எடுத்துக் கூறி உமாவைத் தன்னுடன் வரச் சம்மதிக்க வைத்து விட்டாள்.
ஞாயிற்றுக் கிழமை காலை உமா தன் அத்தையுடன் கோவை எக்ஸ்பிரசில் பயணமானாள்; அம்மா, அப்பாவைப் பிரிந்து அவள் எங்கேயும் இதுவரை போனதில்லை. அதனால் அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.
'சீ! அசடு! எதுக்கு அழறே? உனக்கு அம்மா , அப்பாவைப் பார்க்கணும் போல இருந்தால் என்னிடம் சொல்லு. அவங்களுக்கு லெட்டர் போடறேன். அவங்க உடனே வந்திருவாங்க,'' என அத்தை உமாவின் கண்ணீரைத் தனது புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டாள்.
ரயில் புறப்பட்டதும் உமா தன் பெற்றோரை மறந்து இயற்கையின் எழிலை ரசிக்கலானாள்.
பத்து நாட்களாகிவிட்டன. புதிய இடமாற்றம், புதிய சூழ்நிலை, புதிய நட்புகள் எல்லாமாகச் சேர்ந்து உமாவிற்குப் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
பெரியவர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற நியதியைச் சிறுமி ரமாவைப் பார்த்துப் புரிந்து கொண்டாள்
அடம் பிடிப்பது தவறு என்பதைத் தன் அத்தை வீட்டு அடுத்த போர்ஷன் சரண்யாவைப் பார்த்துப் புரிந்து கொண்டாள்
சரண்யா ஒரு நாள் அடம் பிடித்தபோது அவளுடைய அம்மா பிரம்பால் அடிப்பதைப் பார்த்து, 'நம் அம்மா எவ்வளவு நல்லவள். ஒருநாள்கூட என்னை இப்படி அடித்ததில்லையே! என நினைத்து அம்மாவே தேவலாம் என்கிற முடிவுக்கு வந்தாள்.
மற்றக் குழந்தைகளோடு எப்படி நட்புறவோடு பழக வேண்டும் என்பதை உமா புரிந்து கொள்ள அத்தை பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தாள்.
ஒரு மாதம் கழித்து உமாவை அவளுடைய அப்பா வந்து அழைத்துச் சென்றார். சென்னை வந்த உமா முற்றிலும் குணத்தால் மாறுபட்டிருந்தாள்.
"நம்ம உமாவா இப்படி!'' என அவளுடைய அம்மாவும், அப்பாவும் ஆச்சரியப்படும்படி அவள் அனைவரிடமும் மரியாதையாகவும், சகஜமாகவும் பேசிப் பழகினாள்.
"அத்தை உனக்கு என்ன மாதிரி புத்தி சொல்லிக் கொடுத்தாள்?'' என்று அம்மா கேட்ட கேள்விக்கு உமாவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை . ஆனால், கோவையிலிருந்து அவளது அத்தை எழுதிய கடிதத்தில் பதில் தெரிய வந்தது. அதில் குழந்தையை அடித்துத் திருத்துவதை விட அணைத்துத் திருத்துவது சுலபம். அதைத்தான் நான் செய்தேன். பறவையைப் போலச் சுதந்திரமாக அவளைப் பல குழந்தைகளிடம் பழக விட்டேன். அவளுடைய மன மாற்றத்திற்கு இடமாற்றமும் ஒரு காரணமாகும். எப்படியோ பிடிவாதக்காரி உமா, சமர்த்து உமாவாக மாறிவிட்டாள்.