Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

26. நரி செய்த தந்திரம்

எலிக்குப் பகை பூனை, பூனைக்குப் பகை நாய். இப்படி ஒவ்வொரு பிராணிக்கும் ஏதாவது ஒரு பகை உண்டு. அது போல் காட்டில் வாழ்கிற விலங்கு களுக்கும் உண்டு. அதுவும் ஓரினத்திலேயே ஒன்றுக் கொன்று ஆகாது.

காட்டில் வசிக்கிற பிராணி நரி. அது எவ்வளவோ தந்திரமானதுதான். நேரம் காலத்துக்குத் தக்கபடி நடந்து கொள்கிற நடைமுறை விஷயங்கள் தெரிந்ததுதான். ஆனாலும் அதன் சாமர்த்தியம் ஒரு ஓநாயிடம் செல்லவில்லை .

தன் கோரப் பற்களையும், கூரிய நகங்களையும் காட்டி, உறுமி, அடிக்கடி அந்த நரியை ஓநாய் பயமுறுத்தித் தன் காரியங்களைச் சாதித்துக் கொண்டிருந்தது. நோஞ்சான் நரியும் ஓநாய் தன்னைக் கொன்று விடுமோ என்ற பயத்தில் ஓநாய் தலையாலிட்ட வேலைகளைக் காலால் செய்து வந்தது.

நரி தன்னைக் கண்டு பயப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஓநாய், அதை இஷ்டம் போல வேலை வாங்கியது. புதரில் சொகுசாகத்தான் படுத்துக்கொண்டு நரியை விரட்டு விரட்டென்று விரட்டித் தான் சாப்பிட ஆகாரம் கொண்டுவரச் சொன்னது. நரி தான் சாப்பிடாமல் முயல், காட்டுக் கோழி, பன்றி ஆகியவைகளை வேட்டையாடிக் கொண்டு வந்து ஓநாய்க்குச் சாப்பிடக் கொடுத்தது.

முயல், காட்டுக்கோழி, பன்றி ஆகியவைகளை எல்லாம் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஓநாய்க்கு அலுத்து விட்டது. புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் போலிருந்தது அதற்கு நரியை அழைத்தது ஓநாய். நரி பயந்து வாலைப் பின் கால்களுக்கிடையே விட்டுக்கொண்டு வந்து நின்றது.

“நரியே, இதோ பார்... எனக்கு இந்த காட்டுக் கோழி, பன்றி, குழி முயல் எல்லாம் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்குச் செத்துவிட்டது. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. இன்று நான் இதுவரை சாப்பிடாத ஏதாவது பிராணியைக் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் என் கூரான பற்களால் உன்னைக் கிழிகிழி என்று கிழித்துக் கொன்றுவிடுவேன்!" என்று சொன்ன ஓநாய் தன் வாயைத் திறந்து, சிவப்பான சொர சொரப்பான நாக்கையும் கூரான மஞ்சள் பற்களையும் காட்டிற்று.

நரி நடுநடுங்கிப் போய், “கொண்டு வாரேன், அண்ணே !'' என்று சொல்லிவிட்டு ஓடிற்று.

வழியெல்லாம் நரிக்கு இந்த ஓநாயிடம் இப்படிப் பயந்து பயந்து, தினம் செத்துச் செத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இதற்கு விடிவே கிடையாதா? என்று வருத்தமாக இருந்தது. இந்த துன்பம் தீர்க்க வேறு யாரும் வர மாட்டார்கள். நாம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் எண்ணிற்று அது. என்ன உபாயத்தைக் கையாளலாமென்று அது யோசித்துக் கொண்டே சென்றது.

அப்பொழுது ஒரு ஆட்டுக் கூட்டத்தைப் பார்த்தது நரி. நிறைய ஆடுகள் இருந்தன. அவைகளில் ஒரு ஆடு கொழுகொழு என்றிருந்தது. ஆட்டை மேய்க்கும் இடையன் எங்கிருக்கிறான் என்று பார்த்தது நரி. அவன் இருப்பதே தெரியவில்லை .

அதுதான் சமயமென்று பதுங்கிப் பதுங்கி ஆட்டுக் கூட்டத்தில் சென்றது நரி. புல் மேய்ந்து கொண்டிருந்த அந்த 'கொழுகொழு' ஆட்டை அது சப்தம் போடாத வண்ணம் குரல் வளையைப் பிடித்துத் 'தரதர' வென இழுத்துக் கொண்டு வந்து ஆட்டைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஓநாய் முன்பு போட்டது.

ஓநாய் ஆட்டின் இரத்தத்தை ருசி பார்த்தது. அது மிகவும் சுவையாக இருந்தது. பிறகு, தன் கூரான பற்களால் ஆட்டின் தோலை வெகு நேரம் கஷ்டப் பட்டு உரித்தது. அப்புறம் அதன் இறைச்சியைச் சாப்பிட்டது. இரத்தத்தைவிட ஆட்டின் இறைச்சி மிகவும் ருசியாக இருக்கவே ஓநாய்க்குச் சந்தோஷமும், திருப்தியும் உண்டாயிற்று.

“நரியே! இது என்ன?" என்று கேட்டது ஓநாய்.

“ஆடு!" என்றது நரி.

''மிகவும் சுவையாக இருக்கிறது. இன்னமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் தோல் உரிப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது,'' என்றது ஓநாய்.

நரி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தது ஓநாய்

'நரி! என்ன யோசனை செய்கிறாய்?'' என்று கேட்டது அது.

"ஒன்றுமில்லை! தோலுரித்த ஆடுகளை எங்கோ நிறையப் பார்த்த ஞாபகம்! அதுதான் எங்கே பார்த்தேன் என்று யோசிக்கிறேன்!'' என்று சொன்ன நரி கண்களை மூடி முகவாய்க் கட்டையைத் தடவியது.

''நன்றாக யோசனை பண்ணிச் சொல், நரி! ஆட்டின் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது!'' என்றது ஓநாய்.

வெகு நேரம் யோசனை செய்வது போலப் பாசாங்கு செய்துவிட்டு நரி, “ஓநாயே! அருகில் ஒரு இறைச்சிக் கடை இருக்கிறது. அங்கு மறுநாள் விற்பனைக்கு முதல் நாளே ஆடுகளை வெட்டி, தோல் உரித்து இறைச்சியை மட்டும் தயாராக வைத்திருப் பார்கள். இரவில் கடை மூடிக் கிடந்தாலும் உள்ளே நுழைய ஒரு சந்து இருக்கிறது. அதன் வழியாக நாம் உள்ளே போய்விட்டால் இறைச்சியைத் தோலுரிக்கிற சிரமமில்லாமல் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம்!" என்றது நரி.

அப்பொழுதே ஓநாயின் நாக்கில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விட்டது. "நரியே! இப்பொழுதே போகலாமா? எனக்கு இந்த ஆட்டைச் சாப்பிட்டது போதவில்லை . பசி இன்னமும் அதிகமாக இருக்கிறது!" என்றது அது.

“இரவு ஆகட்டும். இப்போது ஆட்கள் இருப் பார்கள்!" என்றது நரி.

இரவு எப்பொழுது வருமென்று காத்துக் கொண்டி ருந்தது ஓநாய். விநாடிக்கு விநாடி அதற்குப் பசி ஏறிக் கொண்டே இருந்தது. இரவு வந்தது. உடனே நரியிடம் போகலாமா என்று கேட்டது ஓநாய்.

“சரி, வா!" என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றது நரி.

இரண்டும் கசாப்புக் கடைக்குச் சென்றன. கசாப்புக் கடைக்காரன் கடையை அடைத்துவிட்டு வெளியில் படுத்திருந்தான். கடைக்குக் காவலாக அருகில் ஒரு பெரிய குண்டாந்தடி இருந்தது.

கடை அருகே வரும் பொழுதே இறைச்சியின் வாசனை, ஓநாயைக் குதூகலமடையச் செய்து விட்டது. நரி கெட்டிக்கார நரி என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

நரி கடையைச் சுற்றிச் சுற்றி வந்து உள்ளே செல்ல ஒரு சந்து இருந்ததே, அது எங்கே என்று பார்த்தது. கடைசியில் அந்தச் சந்து தென்பட்டது. நரி அதனுள் நுழைந்து கொண்டே, ''நான் முதலில் கடையினுள் செல்கிறேன். நீ பின்னாடியே வா!'' என்று சொல்லி விட்டுச் சந்தினுள் நுழைந்து இறைச்சிக் கடைக்குள் சென்றது.

ஆட்டிறைச்சி நிறையச் சாப்பிட வேண்டுமென்கிற ஆசையில் ஓநாய் கஷ்டப்பட்டுக் கொண்டு அந்தச் சந்தினுள் வளைந்து நெளிந்து கடைக்குள் போய்விட்டது. அங்கே தோலுரிக்கப்பட்ட ஆட்டின் இறைச்சி நிறைய இருப்பதைப் பார்த்தது ஓநாய். சந்தோஷமுண்டாயிற்று அதற்கு. “நரியே! உனக்குப் பல கோடி நன்றி!'' என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தது. இஷ்டத்துக்குச் சாப்பிட்டது. தன்னைப் போலச் சாப்பிடாமல் நரி சும்மா இருப்பதைப் பார்த்தது ஓநாய்.

“நரியே! நீயும் சாப்பிடுவதுதானே!" என்றது ஓநாய்.

"இன்று நான் விரதம்....! நீ வயிறு நிறையச் சாப்பிடு. இங்கெல்லாம் அடிக்கடி வர முடியாது!” என்றது நரி.

ஓநாய் வயிறு முட்ட முட்டச் சாப்பிட்டது. அதன் வயிறு பெருத்துவிட்டது இருபுறமும். ஆயினும், இந்த சந்தர்ப்பம் எங்கே மீண்டும் கிடைக்கப் போகிறது என்பது போல மேலும் மேலும் சாப்பிட்டது ஓநாய்.

"நேரமாகிவிட்டது....! வா, போகலாம்!" என்ற நரி சந்தினுள் நுழைந்து கடைக்கு வெளியில் வந்தது.

பின்னாடியே வந்த ஓநாய், நிறையச் சாப்பிட்டு வயிறு பெருத்து விட்டதால், சந்தினுள் நுழைந்து வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டு விழித்தது.

அது தவிப்பதைப் பார்த்த நரி ஊளையிட ஆரம்பித்தது.

ஊளையின் சப்தத்தைக் கேட்டு அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான் கசாப்புக் கடைக்காரன். கையில் குண்டாந்தடியை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். அவன் வருவதைப் பார்த்துவிட்டு ஓடிவிட்டது நரி.

சந்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஓநாயைப் பார்த்துவிட்டான் கடைக்காரன். அது தன் கடை இறைச்சியை எல்லாம் சாப்பிட்டுவிட்டு வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைத்த அவன் குண்டாந்தடியினால் ஓநாயை 'அடி அடி' என்றடித்துக் கொன்றுவிட்டான்.

ஓநாயின் தொல்லையிலிருந்து விடுபட்ட நரி சுகமாக இருக்க ஆரம்பித்தது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.