Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

27. புத்தி வந்தது

மெஞ்ஞானபுரம் என்ற ஊரில் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அன்பரசன். பெயர்தான் அப்படியே தவிர குணம், பேச்சு, செயல் எல்லாம் அதற்கு எதிர்தான்.

அவனிடம் நிறையப் பணம் இருந்தது. வீடு, நிலம், பசு எல்லாமிருந்தன. அவனுக்குச் சமீபத்தில்தான் திருமணமாகியிருந்தது. அவன் மனைவி பொன்னி தலைப் பிரசவத்துக்குச் சென்றிருந்தாள். அவன் தங்கைக்கு அவன் அப்பா இருக்கிற பொழுதே திருமணம் ஆகிவிட்டதால் கவலையற்றிருந்தான். அவன் அப்பா, அவள் திருமணத்துக்காக வாங்கி யிருந்த கடன் மட்டும் இன்னும் தீர்க்கப்படா மலிருந்தது.

அன்பரசனுக்கு எல்லாரையும் கேலி செய்வதும், கிண்டல் செய்வதும்தான் பொழுதுபோக்கு. பிறர் மனம் புண்படும்படி பேசுவதில் அன்பரசனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மற்றவர்களின் துன்பங்கள் அவரவர்களுடைய மதியினால்தான் வருகின்றனவே தவிர விதியினால் வருவதில்லை என்றும் அதற்கு விளக்கம் கூறுவான்.

அவன் இப்படி எல்லாம் இருப்பது ஊரார் மனதைப் புண்படுத்தியது. பிறரது துன்பங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாமல் அவர்களது துன்பம் பார்த்து அன்பரசன் சிரித்துக் கேலி பேசுவது ஊராருக்கு அவன் மீது எரிச்சலைக் கொடுத்தது.

ஊர்ப் பெரியவர் ஒருநாள் அவனை அழைத்தார். “என்ன பெரியவரே?'' என்று கேட்டுக் கொண்டே அவர் எதிரே வந்து நின்றான் அன்பரசன்.

"அன்பரசா! நீ மற்றவர்களின் கஷ்டங்களையும், துக்கங்களையும் அலட்சியமாக நினைக்கிறாய். இதன் காரணமாக அவர்கள் மனம் புண்படும்படி பேசுவதே உனக்குப் பொழுது போக்காகிவிட்டது. ஆனால், இதே மாதிரிச் சூழ்நிலை உனக்கு வந்தால்தான் கஷ்டம் நஷ்டம் என்பது என்னவென்று உனக்குப் புரியும். ஏழைகளையும், எளியவர்களையும், துக்கப்படுகிறவர்களையும் குத்திக் காட்டுவதும், மனம் புண்படப் பேசுவதும் தவறு. உனக்கு அடுக்கடுக்காகத் துன்பம் வந்தால்தான் உனக்குப் புரியும்!" என்றார்.

'யோவ் தாத்தா! எனக்காவது கஷ்டமாவது நஷ்டமாவது வருகிறதாவது...'' என்று அலட்சிய மாகச் சொல்லிவிட்டுச் சென்று விட்டான் அன்பரசன்.

தனக்கு எந்தவிதக் கஷ்டமும் வர எந்தவிதமான முகாந்தரமுமில்லை என்றெண்ணித் தனக்குத் தானே சந்தோஷப்பட்டுக் கொண்டு அன்பரசன் வீட்டி லிருந்த பொழுது பின்னாலிருந்த மாட்டுத் தொழுவத்திலிருந்து பசுவின் குரல் கேட்டது. அதன் ஓலம் அது துன்பப்படுவதை உணர்த்திற்று. அது கன்று ஈனும் காலம். அந்த நேரம் நெருங்கிவிட்டதால் அது பிரசவ வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டி ருந்தது. அது கஷ்டப்படுவதையும், துடிப்பதையும் கண்ட அன்பரசன் மாட்டு வைத்தியரை அழைத்து வர வீட்டைவிட்டு ஓடினான்.

அப்போது வானம் திடீரென்று கறுத்து இடி மின்னலுடன் பயங்கரமாக மழை பெய்யத் தொடங்கிற்று. கண்ணைப் பறிக்கும் மின்னல்கள் நெருப்புக் கொடிபோல வெட்டின. காது செவிடாகும் படி இடி இடித்தது. உலகத்தை அழித்து விடுவது போல மழை கொட்டிற்று. 'ஐயோ இதென்ன விபரீதம்!' என்று அன்பரசன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவனெதிரேயே, அவன் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே பயங்கர இடி ஒன்று இடித்து அவன் வீட்டின் மீது விழுந்துவிட்டது.

அன்பரசன் தன் வீடு கருகிப்போய் விட்டதைக் கண்டு 'ஓ' வென அழுதான். வீட்டிலுள்ள நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பணம், துணிமணிகள், பண்ட பாத்திரங்கள் எல்லாம் போய்விட்டன. பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பசுவும் அது ஈன்ற கன்றும்கூட இறந்து போய்விட்டன. என்ன கொடுமை!

அன்பரசன் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதான்.

அப்போது ஒருவன் ஓடி வந்து அன்பரசனின் மனைவிக்குப் பிரசவ காலம் நெருங்கிவிட்ட தென்றும் பிரசவம் சிக்கலாக இருக்குமென்றும், அதனால் அன்பரசனின் மனைவி பொன்னியின் உயிருக்கு ஆபத்து நேரிடலாமென்று மருத்துவர் கூறுவதாக வந்து சொன்னான்.

அன்பரசன் வீடு வாசலை இழந்து, கன்று காலிகளை இழந்து தவிப்பது போதாதென்று மனைவியின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிந்ததும் பதறியடித்துக் கொண்டு மாமனார் வீட்டிற்கு ஓடினான்.

அவனெதிரே அவன் வயலில் வேலை செய்யும் குடியானவர்கள் சிலர் ஓடி வந்தனர். தலைதெறிக்க ஓடும் அன்பரசனை அவர்கள் நிறுத்தி, ''ஐயா! நம் வயலில் வேலை செய்யும் குப்பனை நல்ல பாம்பு தீண்டிவிட்டது. அவன் இறந்து போய்விட்டான். அவன் உடலை உங்கள் வயலிலிருந்து அவன் வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் ஈமச்சடங்கு செய்யவும் ஏற்பாடு செய்யுங்கள்,'' என்றார்கள்.

'ஐயோ, இதென்ன கஷ்டம்? நான் இப்போது பட்டுக் கொண்டிருக்கிற கஷ்டங்கள் போதாதா? நல்ல உழைப்பாளியை இழந்து விட்டேனே! பயிர் முற்றி அறுவடை செய்ய ஆள் வேண்டுமே. குப்பனைப் போல இன்னொருவன் கிடைக்கமாட்டானே!' என்று அன்பரசன் வருந்திக் கொண்டிருந்த பொழுது

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடியே வந்த இன்னொருவன் அன்பரசனை நோக்கி, "ஐயா! மழை வெள்ளத்தில் உங்கள் வயல் மூழ்கிக் கொண்டிருக் கிறது. பயிர் எல்லாம் நாசம்!' என்றான்.

'ஐயோ! நான் என்ன செய்வேன்... பட்ட காலிலேயே படும்' என்பது போல எனக்கு அடுக் கடுக்கான கஷ்டங்களும், துன்பங்களும் வந்து கொண்டிருக்கின்றனவே!'' என்று அன்பரசன் தலையிலடித்து அழுதான்.

அப்போது அரசாங்க அதிகாரி வந்து நெடு நாட்களாக நிலுவையிலிருக்கும் நிலவரியை இப்பொழுது கட்டினால் தானாயிற்று என்று விடாப் படியாக அன்பரசனைப் பிடித்துக் கொண்டான்.

அன்பரசனின் தங்கையின் கல்யாணத்துக்கு அவன் அப்பா வாங்கியிருந்த கடனைப் பிள்ளையான அவன் அசலும் வட்டியுமாக உடனே தீர்த்துவிட வேண்டுமென்று வட்டிக்காரன் வந்து அன்பரசனை நெருக்கினான்.

அன்பரசன் ஒன்றின் மேல் ஒன்றாக வரும் துன்பங்களைத் தாங்க வொண்ணாதவனாய் அப்படியே மயக்கம் போட்டு விழுந்தான்.

ஊர்ப் பெரியவர் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து விட்டார். கண் விழித்தான் அன்பரசன் நடந்ததை எல்லாம் சொல்லிப் புலம்பி அழுதான். மனம் வருந்தினான்.

ஊர்ப் பெரியவர், "அன்பரசா! மழையில் உன் வீடு இடிந்தது, பசுவும், கன்றும் இறந்தது மட்டுமே உண்மை ! மற்றவை எல்லாம் நானும் மற்றவர்களும் நீ மனம் திருந்த வேண்டும் என்பதற்காகச் சொன்ன பொய்களே! துன்பமும், துயரமும் எப்படி எல்லாம் மனிதனுக்கு ஏற்படும் என்பதை உனக்கு உணர்த்த நாங்கள் மதியினால் செய்ததுதான். ஆனால் விதி உன் வீட்டையும், மாட்டையும் எப்படிப் பிரித்து விட்டது பார்த்தாயா? இனி எவரையும் இகழாதே!" என்றார்.

"ஐயா! என் தவறை நான் உணர்ந்துவிட்டேன். இனி எவர் மனமும் புண்படும்படி பேசவோ, கேலி செய்யவோ மாட்டேன்!'' என்று புது மனிதனாக மாறிய அன்பரசன் தன் தவறுகளை உணர்ந்து கூறினான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.