Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

28. திறமைசாலியின் முன் அரசன் சாமானியனே!

தேவப்ரயாகை என்கிற அழகிய ஊரில் விஸ்வநாத பண்டிதர் என்பவர் வாழ்ந்தார்.

அவர் ஒரு அறிஞர். கலை, இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நாட்டு மக்களிடம் மிகுந்த அன்பு வைத்திருப்பவர். நன்றாகக் கவிதை புனைபவர்.

எல்லாவற்றையும்விட அருமையான கலை ஒன்றை அவர் ஐயம் திரிபறக் கற்றிருந்தார்.

கைரேகை சாஸ்திரம் என்கிற அபூர்வமான விஷயம்தான் அது!

ஒருவர் கையைப் பார்த்தால் போதும். நடந்து முடிந்த காலம், நடக்கின்ற காலம், நடக்கப்போகின்ற காலம் மூன்றையுமே மிகத் தெளிவாக எடுத்துக் கூறிவிடுவார்.

அவர் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியிருந்தது.

வண்டி கட்டிக் கொண்டு, அவரைத் தேடி மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. அவர் வீட்டு வாசலில் திருவிழா போல ஜனங்கள் மொய்த்தார்கள்,

அவர் நினைத்திருந்தால் நகரத்திற்கே போய்ப் பெரிய மாளிகையை விலைக்கு வாங்கி, ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவர் ஆசைப்பட்டிருந்தால் தங்க, வைரங்களை அடுக்கிக் குபேரனாய்க் கோலோச்சியிருக்கலாம். ஆனால், அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராயிருந்தார்.

தன் கிராமத்தை விட்டோ , தன் எளிமையான ஓட்டு வீட்டைவிட்டோ வெளிவர அவர் தயாராயில்லை .

ஜோசியம் பார்ப்பார். பலாபலன்களை எடுத்துச் சொல்வார். அவர்கள் கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்வார். அது சிறிதா, பெரிதா என்றே பார்க்க மாட்டார்.

அவருடைய இந்த அதிசயக் குணங்களினாலும் அருமையான கலையினாலும் மக்கள் அவரைத் தெய்வம் போலவே மதித்துப் பழகி வந்தனர்.

அந்த நாட்டு மன்னன் தேவதத்தன்.

அவன் செவிகளுக்கு விஸ்வநாத பண்டிதரின் புகழ் வந்து சேர்ந்தது.

அவன் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனான்.

“இப்படி ஒரு அறிஞர் என் நாட்டில் இருக்கிறாரா? உடனடியாக அவரை நான் பார்த்தாக வேண்டும். அமைச்சரே! நீங்களே நேரில் போய் அழைத்து வாருங்கள்!'' என்று கட்டளையிட்டான்.

அமைச்சர் குழாம் கிளம்பியது.

பரிவாரங்களுடன் போய், அவர் கிராமத்தை அடைந்து வீட்டு வாசலில் நின்றது.

அமைச்சரைக் கண்டதும் குழுமியிருந்த மக்கள் விலகி வழிவிட, அவர் மிடுக்காக உள்ளே போனார்.

''வாருங்கள்... தாங்கள் யாரோ?'' எப்போதும் போல அன்பான குரலில் பண்டிதர் வரவேற்றார்.

"இந்நாட்டு மன்னர் என்னை அனுப்பியுள்ளார்... நான் வான சாஸ்திரத் துறை அமைச்சர். அரசர் உங்களைக் காண மிகவும் ஆவலாய் இருக்கிறார்... உடனே கிளம்பி என்னுடன் வரவேண்டும் நீங்கள்...''  என்றார் அமைச்சர்.

பண்டிதர் புன்னகைத்தார்.

"அமைச்சரே! என்னைக் காண வேண்டுமென்றால், அரசனாய் இருந்தாலும் சரி, இங்கேதான் வர வேண்டும்...'' |

"அதென்ன அப்படி சொல்கிறீர்கள்...?'' என்றார் அமைச்சர் கோபத்துடன்.

"அமைச்சரே! விஸ்வநாத பண்டிதர் என்கிற தனி மனிதன் மிகவும் சாதாரணமானவன். அவனிடம் இருக்கும் கலையே அசாதாரணமானது... மிகுந்த சக்தி வாய்ந்தது. நீங்கள் என்னைத் தேடிக்கொண்டா வந்தீர்கள்? என்னிடமுள்ள கலையை அல்லவா தேடி வந்திருக்கிறீர்கள்? ஆகையால், அந்தக் கலைக்கு மதிப்புத் தருகிறவர்களுக்கே இங்கே முதலிடம் கொடுக்கப்படும்... உங்கள் மன்னவரும் இந்தக் கலையை மதிப்பவராயிருந்தால் தாராளமாய் இங்கே வந்து பார்க்கட்டுமே.''

"என்ன? அப்படியா சொன்னார்?" மன்னர் முகம் சிவக்க, கோபமாய்க் கத்தினார்.

ஆனால், உடனே சமாதானம் அடைந்தார் மன்னர்!

''சரி, சரி. அவர் வழியே போய்ப் பார்ப்போம். உடனே ரதம் தயாராகட்டும்...'' என்று கிளம்பி விட்டார்.

பரிவாரங்களுடன், மன்னர் கிராமத்தை அடைந்து பண்டிதரின் வீட்டின் முன் இறங்கினார்.

“வாருங்கள் மன்னரே...! வாருங்கள்...' பண்டிதர் முகம் மலர வரவேற்றார். உட்காருங்கள் என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டிவிட்டுத் தானும் அமர்ந்தார்.

''ம்..... பாருங்கள்.... பார்த்து , பலனைச் சொல்லுங்கள். மிகச் சரியாகக் கணித்துச் சொல்ல வேண்டும். இல்லையென்றால், நான் தரக்க தண்டனையை அனுபவிக்க வேண்டும்,'' என்றார் மன்னர்.

புன்னகையுடன், ''எங்கே கையைக் காட்டுங்கள்,'' என்றார் பண்டிதர்.

மன்னர் கையை நீட்டினார்.

அவர் பார்த்தார். பார்வையைக் கூர்மை ஆக்கினார். அவர் முகம் கொஞ்சமாய் மாறிற்று.

“என்ன பண்டிதரே! என்ன விஷயம்?"

"இந்தக் கையில்...'' அவர் தயங்கினார்.

“சொல்லுங்கள்... என்ன?"

அவர் நிமிர்ந்தார்.

“இந்தக் கை அரசாள்கிற கையே அல்ல... அரச குடும்பத்தினரிடம் கை நீட்டிச் சம்பளம் வாங்கும் கை. மாதா மாதம் வருமானம் பெற்று வாழ்க்கை நடத்துகிற குடும்பஸ்தன் கை.''

மன்னர் அவரை உற்று நோக்கினார்.

நின்று கொண்டிருந்த படை வீரர்களிடமிருந்து, ஒருவன் முன்னேறி வந்தான். தன் மாறுவேடத்தைக் களைந்தான்.

அவன்தான் உண்மையான மன்னன்!

தன் படைவீரர்களில் ஒருவனுக்குத் தன்னைப் போல வேடமிட்டு நடிக்க வைத்திருந்தான் - பண்டிதரின் புலமையை அறிய!

மிகச் சரியாய்க் கணித்துக் கூறிய பண்டிதரின் கால்களில் விழுந்து வணங்கினார் மன்னர்!

பண்டிதர் வழக்கம்போலப் புன்னகைத்து அவரை ஆசீர்வதித்து எழுப்பினார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.