Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

29. எந்தத் தொழிலும் உயர்ந்ததுதான்

சரவணன் சின்னஞ்சிறு பையன். அவன் ஒரு பள்ளிக்கூடத்தில் நான்காவது படித்துக் கொண்டிருந் தான். அவ்வூரில் அவன் தந்தையின் தொழில் சுமாராகத்தான் நடந்து கொண்டிருந்தது. அதனால் குடும்பம் மிகவும் கஷ்டமாக நடந்து கொண்டிருந்தது. எப்பாடுபட்டாவது சரவணனைப் படிக்க வைத்து ஏதாவது ஒரு ஆபீஸில் பேண்டும் சட்டையும் போட்டு வேலை செய்வதைக் கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான் அவன் அப்பா முனியன்.

இப்பொழுது வேலை செய்கிற இடத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் மக்கள் நெருக்கமுள்ள ஒரு நகரத்துக்குக் குடும்பத்தோடு சென்று தொழில் செய்து பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்த முனியன் அருகிலிருந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.

சரவணன் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்ததனாலும் நிறைய மதிப்பெண்களைப் பரீட்சைகளில் வாங்கி இருந்ததாலும் நகரத்திலுள்ள பள்ளியில் சுலபமாக இடம் கிடைத்துவிட்டது. சரவணனும் அப்பள்ளியில் கெட்டிக்கார, நன்கு படிக்கின்ற மாணவன் என்று பெயரெடுக்க வேண்டும் என்கிற ஆசையில் எல்லா மாணவர்களிடமும் சகஜமாகப் பழக விரும்பினான்

ஆனால் மற்ற மாணவர்களோ அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக் கொண்டார்களே தவிர, தங்களுடன் சரவணனைச் சேர்த்துக் கொள்ள வில்லை . தான் புதிய மாணவன் என்பதால் அவர்கள் தன்னோடு பேச, பழகக் கூச்சப்படுகிறார்களோ என எண்ணிய சரவணன் இன்னும் சிறிது நாட்களில் எல்லாரும் தன்னுடன் நன்றாகப் பழகி நண்பர்களாகி விடுவார்கள் என எண்ணினான்.

ஆனால், அவன் எண்ணியபடி நடக்கவில்லை . மற்ற மாணவர்கள் முதல் நாளைப் போலவே அவனை விட்டு விலகி இருந்தார்கள். அது சரவணனின் பிஞ்சு மனதை நோக வைத்தது. தான் மட்டும் தனித்து விடப்பட்டது போல மனம் வருந்தினான்.

அன்று ஒரு பையனைப் பள்ளியில் சேர்க்க ஒருவர் காரில் வந்திருந்தார். அவர் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்திருந்ததோடு விரல்களில் தங்க, வைர மோதிரங்கள் அணிந்திருந்தார். தங்க பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். சட்டைப் பையில் ரூபாய் நோட்டுகள் தெரிந்தன.

அவரோடு வந்த பையன் சிவப்பாக அழகாக இருந்தான். கறுப்பு நிற பேண்டும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்து, எண்ணெய் தடவித் தலை சீவியிருந்தான். சிரித்த முகமாக இருந்தான்.

அவனைப் பார்த்தான் சரவணன். இவனாவது என்னிடம் பழகுவானா என்று அவன் மனம் எண்ணியது. அவன் அருகில் சென்று அவனைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. தன்னிடம் அந்தப் பையன் பேசுவானோ மாட்டானோ என்ற சந்தேகம் உண்டாயிற்று சரவணனுக்கு.

அந்தப் பையனோ சரவணனைப் பார்க்காது, மற்றப் பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பையனைப் பள்ளியில் சேர்த்ததும் தலைமை யாசிரியருக்குப் பெரிய கும்பிடு ஒன்று போட்டு விட்டுப் போய்விட்டார் அவன் அப்பா.

அந்தப் பையன், சரவணனை... மற்றப் பையன் களை எல்லாம் ஒரு முறை பார்த்தான். பிறகு சரவணனிடம் சொல்லாமல் மற்றப் பையன்களிடம் சென்று சேர்ந்து கொண்டான். அவனிடம் மற்ற மாணவர்கள் ஏதோ கூறினார்கள். அதைக் கேட்ட அப்பையன் சரவணனைப் புழுப் பூச்சிகளைப் பார்ப்பது போல அலட்சியமாகப் பார்த்தான். அப்படி அவன் தன்னைக் கேவலமாகவும் அலட்சியமாகவும் பார்ப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் மனதுக்குள் குமைந்தான் சரவணன்.

மதியம் சாப்பாட்டு நேரம், எல்லா மாணவர்களும் சாப்பிட்டுவிட்டு மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தன்னை எல்லாரும் அலட்சியம் செய்து ஏன் ஒதுக்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளா விட்டால் சரவணனின் தலை வெடித்துவிடும் போலிருந்தது.

அவர்களை நோக்கிச் சென்றான். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பது சரவணனின் காதில் விழுந்தது.

"உன் அப்பா எங்கேடா வேலை பார்க்கிறார்கள்?''

'பேங்குல."

"எங்கப்பா ரயில்வேயிலே.''

“எங்கப்பா எங்கே வேலை பார்க்கிறார் தெரியுமா, எல்.ஐ.சியில."

"எங்கப்பா காஸ் கம்பெனி வைத்திருக்கிறார்.''

''எங்கப்பா வைத்திருக்கிற கடைதான் இந்த ஊரிலேயே பெரிசு.''

சொல்லி வைத்த மாதிரி எல்லா மாணவர்களும் சரவணனைத் திரும்பிப் பார்த்தனர்.

"டேய்! இவன் அப்பா என்ன வேலை செய்கிறாரு தெரியுமா? காலணி தைக்கிறாரு!'' என்றான் ஒரு பையன்.

அதைக் கேட்டு எல்லாப் பையன்களும் “கொல்'' லென்று சிரித்தார்கள். மிகவும் அவமானமாகப் போய்விட்டது சரவணனுக்கு. தன்னை இவர்கள் எல்லாம் ஒதுக்கி வைத்ததன் காரணம் அவனுக்கு இப்போது புரிந்தது. சே! என்ன பையன்கள். அப்பா பார்க்கிற வேலையை வைத்துப் பிள்ளையை மதிக்கிறார்களே என்று சரவணன் எண்ணினாலும், 'என் அப்பாவும் ஒரு ஆபீசில் வேலை செய்கிறவராக இருந்திருக்கக் கூடாதா?' என்று எண்ணி எண்ணி வருந்தினான்.

வீட்டில் சாப்பிடாமலிருந்தான்.

“சரவணா! என்னமோ போலிருக்கியே, ஏன்?'' என்று கேட்டான் முனியன்.

"ஒண்ணுமில்லேப்பா!'' என்றான் சரவணன்.

பள்ளியில் யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா, சரவணா ?''

"இல்லேப்பா!'' என்றான் சரவணன். ஆனாலும் அவன் மனம் 'நீ ஏனப்பா ஒரு ஆபீசராகப் போகலே?' என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.

மறுநாள் பள்ளிக்குப் போனான் சரவணன். எல்லா மாணவர்களும் எப்போதும் போல ஓரங்கட்டி விட்டார்கள் அவனை. பள்ளியிலே இருக்கவே பிடிக்கவில்லை சரவணனுக்கு. ஏன்தான் இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தோமோ என்று தோன்றிற்று அவனுக்கு.

பள்ளிக் கூடத்தை விட்டு வெளியில் வந்து நடந்தான் சரவணன். கத்திரி வெயில். தார்ரோடு உருகிக் கொதித்துக் கொண்டிருந்தது.

ஒரு மரத்தடியில் உட்கார்ந்து காலணிகள் தைத்துக் கொண்டிருக்கும் தன் அப்பாவைப் பார்த்தான் சரவணன். தன்னை மற்ற மாணவர்கள் கேவலமாகப் பேசக் காரணம் இவர் செய்யும் தொழிலல்லவா?

"தம்பி!'' என்று அவனை யாரோ கூப்பிட்டார்கள்.

யாரென்று பார்த்தான் சரவணன்.

அன்று புதுப் பையனைப் பள்ளியில் சேர்க்க வைர மோதிரங்கள் அணிந்து வந்தாரே அவர். அன்று அப்பையன் தன் அப்பா என்ன வேலை செய்வதாகச் சொன்னான்? ஆ... ஆமாம்!... சினிமா டைரக்டர்.... புகழ் பெற்ற சினிமா டைரக்டர்... அவர் ஏன் காரில் வராமல் நடந்து வருகிறார். கையில் என்ன அறுந்து போன செருப்பு?

சரவணன் படிக்கிற பள்ளியின் பெயரைச் சொல்லி "தம்பி! நீ அங்கே தானே படிக்கிறே?" என்று கேட்டார் அவர்.

ஆமாம் என்று சொல்வதற்குள் தன் அப்பாவும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய புகழ் வாய்ந்தவராக இல்லையே என்ற ஏக்கம் சரவணனின் கண்களில் கண்ணீரை நிரப்பிவிட்டது.

"ஏன் தம்பி அழுவறே?'' என்று கேட்டார் அவர் பரிவாக.

உடனே தன் மனதிலுள்ள ஏக்கத்தை 'மடமட' வெனக் கொட்டித் தீர்த்துவிட்டான் சரவணன். அவன் கண்களைத் துடைத்தார் அவர்.

தம்பி... இன்று என் கார் பழுதாகிவிட்டதால் நான் நடந்து வரும்படியாகிவிட்டது. இச்சமயம் பார்த்து என் செருப்பும் அறுந்து விட்டது. அதோ அம்மரத்தடி யிலிருக்கும் தொழிலாளி இதைத் தைத்துக் கொடுத்தால் மட்டுமே அனல் பறக்கும் இவ் வெயிலில் நடந்து செல்ல முடியும்.

''எவ்வளவு புகழ் எனக்கு இருந்தென்ன? அது இந்த உலகத்துக்குச் சிறிதும் பயன்படாத புகழ் பிறருக்குப் பயன்படாத புகழையும் அந்தஸ்தையும் பெற்றிருக்கும் எங்களை விட உலகில் ஒவ்வொரு வருக்கும் பயன்படுகிற உன் அப்பா போன்றவர்கள் சிறந்தவர்களல்லவா? அப்படிப்பட்ட சிறந்த அப்பாவைப் பெற்றிருக்கும் நீ அதற்காகப் பெருமைப்படாமல் சிறுமைப்பட்டு மனத்துன்பம் அடையலாமா?.... என் போன்றவர்கள் உன் அப்பாவுக்குத் தேவையில்லை. ஆனால், உன் அப்பாவைப் போன்றவர்கள் எங்களுக்கு மிக மிகத் தேவை!" என்றார் அவர்.

தன் அப்பாவைப் பார்க்க இப்பொழுது சரவணனுக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மறுநாள் தன் சக மாணவர்கள் தன்னை மதிக்கா விட்டாலும் போகட்டும். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். நன்கு படித்து இந்த மண்டைக் கனம் பிடித்த மாணவர்களைவிட உயர்ந்து காட்டலாம் என்ற உறுதி பூண்டான் சரவணன்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.