Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

30. கடவுளைக் காண முடியும்

ஜம்புநாதன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். கற்றோர்கள் அவனை மதித்தனர். செல்வம் அவனிடம் திரண்டிருந்தது. அதனால் பெருந்தனக்காரர்கள் அவனை மதித்தனர். ஏழை எளியவர்களுக்கு நிறையப் பொருளுதவி செய்தான் அவன். அதனால் வாழ்க்கையின் அடிமட்டத்தினரும் அவனை மதித்தனர்.

ஆனாலும் ஜம்புநாதனின் மனதில் ஒரு குறை இருந்தது. அது கடவுளை நேருக்கு நேராகச் சந்திக்காமலிருக்கிறோமே என்கிற மனக்குறைதான். கடவுளை நேருக்கு நேராகத் தரிசிக்க என்ன வழி இருக்கிறது என யோசித்தான். அவனது கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. கடவுளைக் காண வேண்டு மென்கிற ஆசை நாளுக்கு நாள் வெறியாகவே மாறிவிட்டது.

ஒருநாள் ஜம்புநாதன் தன் ஊர் எல்லையருகே உள்ள அடர்ந்த ஒரு காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு புதரின் அருகே தாடியும் மீசையுமாக ஒரு மகான் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவரிடம் கேட்டால் கடவுளை நேருக்கு நேர் காண ஒரு மார்க்கத்தைக் காட்டுவாரென எண்ணிய ஜம்புநாதன் அவர் காலடியில் விழுந்து வணங்கித் தன் விருப்பத்தைக் கூறினான்.

"தம்பி.... நீ தெய்வத்தைக் காண வேண்டுமென்று மனதார நினைக்கிறாய். மனதார நினைக்கிற எந்தக் காரியமும் நினைக்கிறபடியே நடக்கும். கவலைப் படாதே!" என்றார்.

''சுவாமி!... நான் கடவுளைக் காண்பது எப்படி? சொல்லுங்கள்!'' என்று கேட்டான் ஜம்புநாதன்.

"தம்பி! இறைவனைப் பார்க்க நமக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. ஆனால், நாம்தான் இறைவனைப் பார்ப்பதில்லை!'' என்றார் மகான்.

''சுவாமி!... நான் இறைவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்குமோ, சுவாமி?" என்று ஆர்வமாகக் கேட்டான் ஜம்புநாதன்.

“நிச்சயமாகக் கிடைக்கும். நீ நாளையே கடவுளைச் சந்திப்பாய். நாளைக் காலையில் எழுந்து குளித்து முழுகிப் பரிசுத்தமாக வெளியே புறப்படு!... உன் கால் போன போக்கிலே நடந்து கொண்டே இரு! கடவுளை எப்படியும் சந்திக்க வேண்டுமென்கிற எண்ணத்தை மட்டும் மனதைவிட்டு ஒரு போதும் அகற்றாதே! நாளை மாலைக்குள் நீ நிச்சயம் கடவுளைச் சந்திப்பாய்!'' என்றார் மகான்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முழுகித் தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டான், ஜம்பு நாதன். கடவுளைச் சந்திக்கப் போகும் முயற்சியில் பகல் முழுவதும் அலைய வேண்டியிருக்குமாதலால் உடல் களைத்துப் போகாதிருக்க அவ்வப்போது உண்ண உணவுப் பொருட்கள், பழங்கள், தேன் ஆகியவைகளைக் கட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டான். வெகு தூரம் நடந்த பிறகு ஒரு கிராமத்தை அடைந்தான் அவன்.

சிறிய குடிசை வாசல் ஒன்றில் ஒரு சின்னக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் அழகு ஜம்புநாதனை வசீகரித்தது. குழந்தையைக் கொஞ்சாது செல்ல அவன் கால்கள் மறுத்தன. நின்று குழந்தையின் பால் வடியும் முகத்தில் ஒளிவிட்ட,தெய்வீக அழகைக் கண்டு ரசித்தான். அது அவனைப் பார்த்து மாயப் புன்னகை புரிந்தது.

அதனருகில் சென்று அதைத் தூக்கிக் கொஞ்சி னான். மழலை பேசி அவனை மகிழ்வித்தது குழந்தை. அதற்குச் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் போலிருந்தது ஜம்புநாதனுக்கு. அவனிடம்தான் தேன் இருந்ததே! அதை எடுத்துக் குழந்தையின் நாவில் தடவினான். தேன் இனிப்பாக இருந்ததால் குழந்தை தேனை விரும்பி ருசித்துச் சாப்பிட்டது. அவ்வளவு தேனையும் குழந்தை சாப்பிடக் கொடுத்தான் ஜம்புநாதன். அவ்வளவையும் குடித்துவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தது குழந்தை. பிறகு தளிர் நடை நடந்து குடிசைக்குள் போய்விட்டது.

ஜம்புநாதனின் மனதில் ஒரு பரவச நிலை உண்டாயிற்று. அந்தப் பேரானந்தத்தை அனுபவித்த வாறே மேலே நடக்கத் தொடங்கினான் அவன்.

ஒரு வயல் வெளியில் நான்கைந்து வெள்ளாடுகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு அழகான குட்டிகளும் இருந்தன. பெரிய ஆடுகள் பாறைகளின் மீதேறித் தாவிக் குதிப்பது போல் அந்த இரண்டு குட்டி ஆடுகளும் தாவிக் குதித்தன. ஒரு குட்டி ஆடு கால் நழுவிக் கீழே ஒரு பாறையில் விழுந்துவிட்டது. அதன் கால்களில் ஒன்று முறிந்துவிட்டது. குட்டியாடு வலி பொறுக்க முடியாமல், 'மே... மே' என்று கத்தித் துடிதுடித்தது.

அதைப் பார்த்து பதறிப்போன ஜம்புநாதன் ஓடிச சென்று அடிபட்ட ஆட்டுக்குட்டியைத் தூக்கினான். இரத்தத்தைத் துடைத்தான். தான் அறிந்திருந்த பச்சிலைகளைப் பறித்துக் காயத்தின் மீது சாறு பிழிந்து தன் அங்கவஸ்திரத்தைக் கிழித்துக் கட்டுப் போட்டான். மேலும் பச்சிலைச் சாற்றைப் பிழிந்து கொண்டே இருந்தான்.

ஆட்டுக் குட்டிக்கு வலியின் உபாதை குறைய ஆரம்பித்தது. மெதுவாக எழுந்தது. லேசாக அடிபட்ட காலை ஊன்றி மற்ற மூன்று கால்களின் உதவியோடு நடக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அடிபட்ட காலையும் ஊன்றிக் கொண்டு அது நடக்க ஆரம்பித்து விட்டது.

ஒரு சின்னஞ்சிறிய உயிரின் வேதனையைப் போக்கத் தன்னால் இயன்ற உதவியைச் செய்த திருப்தியுடன் மேலே நடக்கத் தொடங்கினான் ஜம்புநாதன்.

சிறிய குக்கிராமம் வழியாகச் சென்றான் ஜம்பு நாதன். ஒரு குடிசைக்குள்ளிருந்து பெண்களும் ஆண்களும் கூக்குரலிடும் ஓசை வரவே குடிசை யினுள் சென்று பார்த்தான்.

உள்ளே படுக்கையில் ஒரு சிறுவன் இறந்தவனைப் போலக் கிடந்தான். நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தவன் என்பது அவனைப் பார்த்தாலே தெரிந்தது. என்னவென்று விசாரித்தான் ஜம்புநாதன். ஒருவன் அந்தப் பையன் இறந்து விட்டதாகச் சொன்னான்.

ஜம்புநாதன் அந்தச் சிறுவனின் நாடியைப் பிடித்துப் பார்த்தான். நாடித் துடிப்பு பலகீனமாக இருந்ததே தவிர அச்சிறுவன் இறக்கவில்லை . தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளைக் கொண்டு சிறுவனின் நாடித் துடிப்பைச் சீர்படுத்தினான். பிறகு சுக்கு மிளகு பொடித்துப் போட்டு கஷாயம் வைக்கச் சொல்லி, கொண்டு வந்து பையனின் வாயில் ஊற்றினான்.

சற்று முன் உணர்வற்று உயிரற்ற சடலம் போலக் கிடந்த சிறுவன் நன்றாக அசைந்து கண் திறந்து எல்லாரையும் பார்த்துச் சிரித்தான். தான் கொண்டு வந்த பழங்களை அச் சிறுவனுக்குக் கொடுத்தான் ஜம்புநாதன்.

இறந்து விட்டதாகத் தாங்கள் முடிவு செய்துவிட்ட பையனை உயிர் பிழைக்கச் செய்துவிட்ட ஜம்பு நாதனை எல்லாரும் போற்றிப் புகழ்ந்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.

மீண்டும் நடக்கத் தொடங்கினான் ஜம்புநாதன். அப்பொழுது பகல் உச்சியாகிவிட்டது. ஏதாவது சாப்பிட்டால்தான் மேலும் நடக்க முடியுமென்று தோன்றிற்று ஜம்புநாதனுக்கு. ஒரு நதிக்கரையில் கைகால் கழுவி உண்ணலாம் என்றெண்ணி அருகிலிருந்த ஒரு மண்டபத்தை அடைந்தான் அவன்.

அங்கே இரண்டு வயோதிகர்கள் பசியால் துடிதுடித்தபடி முனகிக்கொண்டு படுத்திருந்தார்கள். அவர்களைப் பார்க்கப் பரிதாபமாகவும், இரக்கமாக வும் இருந்தது. ஜம்புநாதன் அவர்களை மெல்லத் தூக்கி உட்கார வைத்தான். தண்ணீர் எடுத்து வந்தான். கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்துத் தன் கையாலேயே சோற்றை எடுத்து உருட்டி உருட்டி அவர்களுக்கு ஊட்டினான். சாப்பிடச் சாப்பிட அவர்கள் தெம்பும், பலமும் அடைந்து ஜம்புநாதனை மனதார வாயார வாழ்த்தினார்கள். பசியால் துடித்த இருவரின் பசி போக்கிய பெருமித உணர்வே ஜம்புநாதனின் பசியைத் தணித்துவிட்டது.

மாலை நெருங்கவே தன் ஊர் திரும்பினான் ஜம்புநாதன். மகான் சொன்னபடி தான் கடவுளைச் சந்திக்கவில்லையே என்ற வருத்தம் உண்டாயிற்று ஜம்புநாதனுக்கு.

வழியில் மகான் வந்தார். "தம்பி...! கடவுளை இன்று நீ பலமுறை சந்தித்து விட்டாயே!" என்றார் அவர்.

“கடவுளை நான் சந்திக்கவே இல்லையே!" என்று ஏக்கத்தோடு சொன்னான் ஜம்புநாதன்.

மகான் கூறினார்... 'தம்பி! காலையில் கடவுளைச் சின்னஞ்சிறு குழந்தை வடிவில் கண்டாய். நீ சிகிச்சை செய்த ஆட்டுக் குட்டியின் வடிவில் கடவுளைக் கண்டாய். அடுத்து உயிர் போகும் சிறுவனாகக் கடவுள் உன் முன் தோன்றினார். கடைசியில் பசியால் வாடிய வயோதிகர்களாகக் கடவுள் கண்முன் நின்றார். நீ எவ்வளவு பெரிய பாக்கியசாலி.''

கடவுளின் உண்மையான உருவத் தோற்றத்தின் அடிப்படை உண்மை 'பளிச்' சென ஜம்பு நாதனின் மனக் கண்களுக்குத் தெரிந்தது.

"கடவுளைக் கண்டு விட்டேன்! கடவுளைக் கண்டு விட்டேன்!'' என்று மகிழ்ச்சியில் கூவினான் ஜம்பு நாதன்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.