ஒரு ஊரில் ஒரு முடிதிருத்தும் கலைஞன் இருந்தான். அவன் பெயர் தாணு. அவன், தொழிலைக் கவனிக்காமல், சோம்பேறியாக இருந்தான். ஒரு பழைய முகம் பார்க்கும் கண்ணாடியையும், ஒரு உடைந்த சீப்பையும் வைத்துக் கொண்டு, விளையாடுவதுதான், அவன் செய்யும் ஒரே வேலை.
இதைப் பார்த்துவிட்டு, அவனுடைய அம்மா கண்டித்தாள், திட்டினாள். ஆனால், இவன் சோம்பேறித் தனத்திலிருந்து விடுபடுவதாக இல்லை. பொறுக்க முடியாமல் ஒருநாள் துடைப்பத்தால் ஓங்கி, ஓங்கி அவனை அடித்து விட்டாள். அவனுக்கு அவமானமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி விட்டான். போகும்போது மறக்காமல் பழைய முகம் பார்க்கும் கண்ணாடியையும், உடைந்த சீப்பையும் தன்னுடன் எடுத்துக் கொண்டான்.
நிறையச் சம்பாதித்துப் பெரிய பணக்காரனாக ஆன பிறகே, வீடு திரும்புவது என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.
நடந்து நடந்து கால் வலித்தது. களைப்பாக இருந்தது. வந்த இடம் அடர்ந்த காடு போல் இருந்தது. உட்கார்ந்தான்.
அப்பொழுது, திடீரென்று ஒரு பயங்கர ராட்சதன் தோன்றிக் கைகளையும் கால்களையும் அகற்றிப் பயங்கர ஆவேசத்துடன் நடனம் ஆடினான். இதைப் பார்த்த அந்தத் தாணுவுக்கு முதலில் பயமாக இருந்தது. கஷ்டப்பட்டுப் பயத்தை மறைத்துக் கொண்டு, தைரியத்தை வரவழைத்தான். அவனும் அதே போல் நடனமாடினான்.
"ஏன் இப்படிப் பயங்கர ஆவேசத்துடன் நடனம் ஆடுகிறாய்?'' என்று அந்த ராட்சதனைப் பார்த்துக் கேட்டான், தாணு.
"உன்னிடமிருந்து இந்தக் கேள்வியைத்தான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
உன்னைப் பார்த்தவுடன் எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. உன்னைக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தவே நடனம் ஆடுகிறேன்!" என்றான் அந்த ராட்சதன். அவனே தொடர்ந்து பேசினான். “நீயும் எதற்கு என் போலவே நடனமாடுகிறாய்?"
ராட்சதனின் கேள்விக்குத் தாணு பதில் சொன்னான். "உன்னைப் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோஷம் வந்து விட்டது. பக்கத்து நாட்டு ராஜகுமாரனுக்கு உடம்பு சரியாக இல்லை. நூற்று ஒன்று ராட்சதகர்களின் இதயங்களைக் கசக்கிப் பிழிந்து இரத்தம் எடுத்து அதிலிருந்து மருந்து தயாரித்துத்தான் ராஜகுமாரனைக் குணப்படுத்த முடியும் என்று அரண்மனை வைத்தியர் சொல்லிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அரசன், 'எவனொருவன் 101 ராட்சதர்களின் இதயங்களைக் கொண்டு வருகிறானோ, அவனுக்கு என் நாட்டில் பாதியைப் பரிசாகக் கொடுக்கிறேன்!' என்று பறையறிவித்தார். இதைப் பற்றித் தெரிந்து கொண்ட நான் இதுவரை நூறு ராட்சதர்களின் இதயங்களைச் சேர்த்துவிட்டேன்! நீ நூற்று ஒன்றாவது ராட்சதன். உன் இதயத்தையும் பறித்துக் கொண்டுவிட்டேன். இனி அரசனிடம் போக வேண்டியதுதான். 101 இதயங் களையும் கொடுத்துவிட்டுப் பாதி ராஜ்யத்தைப் பரிசாக வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். எனது சந்தோஷத்திற்கும் நடனத்திற்கும் இப்பொழுது காரணம் புரிகிறதா?" என்றான் தாணு.
"என் இதயத்தை நீ எப்போது பறித்தாய்? எங்கே அதைக் காட்டு, பார்க்கிறேன்," என்றான் ராட்சதன்.
"இதோ பார்!'' என்று உடைந்த கண்ணாடியை ராட்சதனின் முகத்திற்கு நேரே காட்டினான். அதில் தெரிந்த தனது முகத்தைப் பார்த்தவுடன், ராட்சத னுக்குப் பயம் வந்துவிட்டது. இதுவரை, ராட்சதன் தனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லை. 'ஐயோ இந்தப் பாவி இதயத்தைப் பறித்து விட்டானே!' என்று ராட்சதன் அலறி அழுதான்.
“என்னைவிட்டு விடு, என்னை விட்டு விடு, என் இதயத்தைக் கொடுத்து விடு!'' என்று கெஞ்சிக் கேட்டான், ராட்சதன்.
அந்தக் கண்ணாடியை 'டபக்' கென்று பைக்குள் போட்டுக் கொண்டு விட்டான் தாணு. “தயவு செய்து என் இதயத்தைக் கொடுத்துவிட்டு வேறு ராட்சதனைத் தேடிப் போ. உனக்கு நிறையப் பொற்காசுகள் தருகிறேன்!" என்றான் ராட்சதன்.
"பொற்காசுகளா? உன்னிடமா? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? நான் ஏமாற மாட்டேன். உன் இதயம் பையில் பத்திரமாக இருக்கிறது!" என்றான் தாணு.
"சத்தியமாக உன்னை ஏமாற்றவில்லை. இதோ, இந்த மரத்தின் அடியில் ஏழு பானைகளில் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. இவைகளை நானே தோண்டி எடுத்துத் தருகிறேன். என் இதயத்தைக் கொடுத்துவிடு. என்னையும் விட்டுவிடு!'' என்றான் ராட்சதன்.
தலையாட்டினான் தாணு.
ராட்சதன், மரத்திற்கு அடியில் புதைத்து வைத்திருந்த பானைகளைத் தோண்டி எடுத்துக் காட்டினான். ஏழு பானைகள் நிறையப் பொற்காசுகள்.
தாணு சொன்னான், “இதெல்லாம் சரி. இந்த ஏழு பானை பொற்காசுகளையும் நான் எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்வது?"
“கவலைப் படாதே, நானே சுமந்து வந்து கொடுக்கிறேன். ஆனால் நீ என் இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். என்னையும் விட்டுவிட வேண்டும்!" என்றான் ராட்சதன்.
தாணு வழிகாட்ட, ராட்சதன் ஏழு பானைகளையும் தூக்கிக் கொண்டு வந்தான். தாணு ராட்சதனைப் பார்த்து, "என் வீட்டு எதிரில் இருக்கும் வயலில் களை எடுத்து விட்டு வா, உன் இதயத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்,'' என்றான்.
தங்கக் காசுகளை எடுத்து ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டான் தாணு.
வயலில் மிகவும் கவனத்துடன் களை பிடுங்கிக் கொண்டிருந்தான், ராட்சதன். அப்பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் இன்னொரு ராட்சதன் வந்து, “நீ, ஏன் களை பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.
"அதை ஏன் கேட்கிறாய். ஒரு வழிப்போக்கன் என் இதயத்தைப் பறித்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று சொல்லுகிறான். நூறு ராட்சதர்களின் இதயங்களை ஏற்கெனவே பறித்து வைத்துக் கொண்டிருக்கிறான். என்னுடையது நூற்று ஒன்றாவது இதயம். இவைகளைக் கொண்டு போய் அரண்மனை வைத்தியரிடம் கொடுத்து, ராஜகுமாரனுக்கு மருந்து தயாரிக்கச் சொல்லப் போகிறானாம். இந்த ராட்சத இதயங்களுக்குப் பரிசாகப் பாதி ராஜ்யத்தை அரசனிடமிருந்து வாங்கிக் கொள்ளப் போகிறானாம். என்னை விட்டு விடச் சொல்லிக் கேட்டேன். இதயத்தையும் திருப்பி தரச் சொன்னேன். களைபிடுங்கித் தரச் சொன்னான். பிறகு இதயத்துடன் அனுப்பி விடுவதாகச் சொன்னான்," என்றான்.
இதைக் கேட்டவுடன், அந்த இன்னொரு ராட்சதன், பயங்கரமாகச் சிரித்தான். இந்தச் சிரிப்பைக் கேட்டவுடன், களை பிடுங்கிக் கொண்டிருந்த ராட்சதனுக்கு மேலும் பயம் வந்துவிட்டது.
"நீ ஒரு சரியான முட்டாள் ராட்சதன், உன்னை அந்த வழிப்போக்கன் நன்றாக ஏமாற்றியிருக்கிறான். இதயத்தையாவது.... பறிப்பதாவது! இது என்ன பெரிய வேடிக்கையாக இருக்கிறது."
"வேடிக்கையுமில்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவன் என்னிடமே அதை எடுத்துக் காட்டினான். பிறகு பையில் எடுத்து வைத்துக் கொண்டு விட்டான். அதையும் நான் பார்த்தேன்!' இத்தனையும் சொல்லிவிட்டு, ஏழு பானை நிறைய பொற்காசுகள் கொடுத்ததை மட்டும் மறைத்து விட்டான்.
''சரி! அந்த வழிப்போக்கனின் வீட்டையாவது காட்டு!"
''அதோ, தெரிகிறதே வேப்பமரம்... அதற்குப் பக்கத்தில் உள்ள வீடுதான்.''
புதிதாகக் கிடைத்த தங்கக் காசுகளைக் கொண்டு நிறைய மீன்கள் வாங்கி வந்தான் தாணு. ஊர் ஜனங்களை அழைத்து விருந்து தர ஏற்பாடு செய்தான். மீன் பொரியலின் வாசனையை மோப்பம் பிடித்த ஒரு பூனை, ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து. ஒரு துண்டு மீனை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது. இதைப் பார்த்துவிட்ட, தாணுவின் மனைவிக்கு எக்கசக்கமாகக் கோபம் வந்தது. ஒரு கூர் தீட்டிய அரிவாளுடன் ஜன்னலுக்குப் பக்கத்தில் யாருக்கும் தெரியாத மாதிரி ஒளிந்து கொண்டாள்
இந்த நேரம் பார்த்து, வீடு விசாரித்த அந்த மற்றொரு ராட்சதன் ஜன்னலுக்குள் தலையை நுழைத்து எட்டிப் பார்த்தான். தாணுவின் மனைவி, அரிவாளால் ஓங்கி ஒரு போடு போட்டாள். ராட்சதனின் மூக்கு அறுந்து விட்டது. வலி பொறுக்க மாட்டாமல், ராட்சதன் வேகமாக ஓடிவிட்டான். களையெடுத்துக் கொண்டிருக்கும் அந்த ராட்சதனின் முன், அறுந்த மூக்குடன் போய் நிற்பதற்கு வெட்கமாக இருந்தது. எனவே நேரே காட்டுக்குள் ஓடிப்போய் விட்டான்.
இதற்குள் வயலில் களை எடுத்து முடித்திருந்த ராட்சதன், தாணுவின் வீட்டிற்கருகில் வந்து குரல் கொடுத்தான்.
"களை எடுத்து முடித்து விட்டேன். என் இதயத்தைக் கொடுத்து அனுப்பிவிடு!" என்றான்.
உடனே தாணு, ''உன் இதயத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன். இதோ பார்," என்று கண்ணாடியைக் காட்டினான். அது பாதரசம் தடவப்பட்ட பக்கம். அதில் தன் முகம் தெரியாததால் ராட்சதன் மகிழ்ச்சியுடன் குதித்துக் கொண்டு காட்டுக்குள் ஓடிப் போனான்.
பழைய கண்ணாடியை வைத்துக்கொண்டு, நிறையச் சம்பாதித்துவிட்ட தாணு, தனதுமனைவி, மக்களுடன் நீண்ட நாள் சந்தோஷமாக வாழ்ந்தான்.
வாழ்க்கையில் முன்னேற, உடைந்த கண்ணாடியே போதும். ஆனால், அதைக் கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.