ராஜவர்மனுக்கு ஏழு புத்திரிகள். இந்த ஏழு பேரும் தன் மீது எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் என அறிய ஆசைப்பட்டார் அரசர். அதனால் அந்தப் புரத்திற்குப் போனார்.
"குழந்தைகளே! என் மீது உங்களுக்குப் பிரியம் இருக்கிறதா?' எனக் கேட்டார்.
"என்னப்பா இப்படிக் கேட்டு விட்டீர்கள்! எங்களுக்கு உங்கள் மீது பிரியம் இல்லாமல் போகுமா?" என்று ஏழு பேரும் குரல் கொடுத்தனர்.
“இப்படிச் சொன்னால் போதாது. யார் யாருக்கு என் மீது எத்தனை பிரியம் இருக்கிறது, அது எந்த மாதிரிப் பிரியம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்," என்றார்.
“தாராளமாகக் கேளுங்கள்,'' என்றனர், அனை வரும்.
"அமுதா! இங்கே வா! நீ எந்த அளவு என்னை நேசிக்கிறாய்?'' என்று கேட்டார்.
''அப்பா! ஜாங்கிரி என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அந்த அளவு பிரியம் உங்கள் மீதும் உள்ளது,'' என்றாள் அமுதா.
இந்தக் கேள்வியை ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டே வந்தார்.
"லட்டு மாதிரி இருக்குப்பா." - சுகன்யா.
"குலோப்ஜாமூன் மாதிரி இருக்குப்பா" அனுசுயா.
“மைசூர்ப்பாகு மாதிரி இருக்குப்பா." - வேணி.
“அல்வா மாதிரி இருக்குப்பா.”- சுவர்ணலதா.
“பாதுஷா மாதிரி இருக்கப்பா." -வினிதா.
ஏழாவது பெண் லதா மட்டும் வித்தியாசமாகச் சொன்னாள்; “உப்பு மாதிரி இருக்குப்பா!" என்றாள்.
இதைக் கேட்டதும் வந்ததே கோபம் ராஜாவுக்கு.
"ஏண்டீ கழுதை, எல்லாரும் இனிப்பு மாதிரி பிரியம் என்மீது இருக்குனு சொல்றாங்க. நீ மட்டும் உப்பு மாதிரி இருக்குன்னா சொல்றே! நீ இப்பவே வீட்டைவிட்டுப் போயிடு!''
லதாவைத் தரதரவெனக் கையைப் பிடித்து இழுத்துக் குதிரை மீது ஏற்றி, காவலாளியை அழைத்து, “இவளை ஊருக்கு வெளியே யாரும் நடமாடாத இடத்தில் விட்டுவிட்டு வா. என்னை உப்போடு ஒப்பிட்டாள். அதை உணரும் வரை அங்கேயே இருக்கட்டும்!'' என்றார்.
லதா திகைத்தாள், அழுதாள், கதறினாள்.
மன்னர் மனம் இளகவில்லை . சகோதரிகள் ஆறு பேரும் அப்பா செயலைத் தடுக்கவில்லை.
லதா அழைத்துச் செல்லப்பட்டு நடுக்காட்டில் விடப்பட்டாள்.)
ஒரு இளவரசர் அந்த வழியே போனவர், லதா அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். குதிரையை விட்டு இறங்கி வந்து, ''ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டார். இளவரசி நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னாள்.
"மன்னர் மகளா நீ! அழாதே! என்னுடன் வா, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றார் அந்த மன்மதபுரி இளவரசர்.
இளவரசி லதாவும் இளவரசருடன் சென்றாள்.
சில வருடங்களுக்குப் பிறகு, காட்டில் வேட்டை யாடப் போனார் இளவரசர். அங்கே ஒரு பேரரசரும் வேட்டையாட வந்தார். இளவரசர் அவரைத் தன் அரண்மனைக்கு வந்து விருந்து சாப்பிட அழைத்தார். பேரரசருக்குக் களைப்பும், பசியும் மேலிடச் சிற்றரசரின் அன்புக்குப் பணிந்து அவருடன் வந்தார்.
''லதா! ஒரு பேரரசரை நமது விருந்தினராக அழைத்து வந்திருக்கிறேன். விருந்து ஏற்பாடு செய்!'' என்று கூறிவிட்டு இளவரசர் பேரரசருக்கு அரண்மனைப் பூங்காவைச் சுற்றிக் காட்டப் புறப்பட்டார்.
வந்திருப்பது தன் தந்தைதான் எனத் தெரிந்து கொண்ட லதா லட்டு, அல்வா, மைசூர் பாகு, ஜிலேபி, குலோப் ஜாமூன் இப்படி இனிப்புகளுடன், உப்பிட்ட கீரைக் கூட்டும் சமையல் செய்யச் சொன்னாள். பிறகு அவற்றைத் தானே பரிமாறினாள். முக்காடு அணிந்து பரிமாறியதால் ராஜாவிற்கு அவளைத் தன் மகள் என அடையாளம் தெரியவில்லை.
பசியோடு இருந்த அவருக்கு முதலில் இனிப்பு வகைகளைப் பரிமாறினாள். பசி அடங்கவில்லை . கடைசியில் உப்பிட்ட கீரைக் கூட்டு பரிமாறிய போது, “அப்பாடா! வயிறு நிரம்பிற்று!" என்றார் அரசர்.
அப்போது முக்காடை எடுத்துவிட்டு, "அப்பா! என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். இப்போது இனிப்பு பசியைப் போக்கிற்றா? இல்லை.. கடைசியில் பரிமாறிய உப்பிட்ட கீரை சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்ததா?" எனக் கேட்டாள்.
மன்னர் தலை நிமிர்ந்து இதுவரை பரிமாறியது தனது கடைசி மகள் லதா என்பதைத் தெரிந்து கொண்டு, "நீ உப்பு மாதிரி இருக்கு என்றதன் பொருள் இப்போது புரிகிறதம்மா! என்னை மன்னித்து விடு! என்றார்.