Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

41. இப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் அனைவரும் பதவி, பணம், புகழ் ஆகியவற்றக்கு அலைபவர்களாகவே உள்ளனர்!

மக்கள் நலம் கருதுபவர் ஆயிரத்தில் ஒருவர் இருப்பாரா என்பது ஐயமே!

இக்காலத்திற்கேற்ப, பார்ப்பனர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையானால், எதிர்காலம் அவர்களுக்கு அழிவை நோக்கியதாகவே இருக்கும்.

பாரதிய சனதாவின் ஆதரவுடன் தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பொழுதே. கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியதாகவே அதன் நிலை இருந்தது. அத்துவானியும், வாச்சுபேயும் பச்சைப் பார்ப்பனர்கள்! இந்தி - சமசுக்கிருத வெறியர்கள்! இராசாசி, மொரார்சி தேசாய் இருவரையும்விட நச்சுத் தன்மை மாறாத பார்ப்பனிய வெளிப்பாடுகள்! அவர்களுக்கு அரசியலைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ, இந்தியாவைப் பற்றியோ, அல்லது இங்குள்ள பல்வேறின மக்களைப் பற்றியோ, துளியும் கவலையில்லை. அவர்களின் ஒட்டுமொத்தக் கவலை யெல்லாம், இந்தியாவில் வேரூன்றிய ஆரியத் தன்மையும் பார்ப்பனியத்தின் மத இன மேலாளுமைகளும் கொஞ்சமும் மாறிவிடக் கூடாது; ஆரியத் தலைமைக்குச் சரிவு வந்துவிடக் கூடாது என்பதுதான்.

அண்மையில் பாரதீய சனதாவின், அதன் தலைவர்களான அத்துவானி, வாச்சுபேயி இவர்களின் நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் தலைவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியையும் அறக்கேடான(தர்மசங்கடமான்) ஒரு நிலையையும் உண்டாக்கியுள்ளன. தேசிய முன்னணி ஆட்சியின் தலைவர் வி.பி. சிங், அந் நடவடிக்கைகளால் பெரிதும் கலக்கத்திற்கு உள்ளாகிப் போனார்.

மண்டல் குழுவின் அறிக்கைச் செயல்படுத்தம் பற்றி வி.பி. சிங் எடுத்த துணிவான முடிவால், இந்தியாவில் பார்ப்பனியம் பெரும் ஆட்டங்கண்டு போய் உள்ளது. பாபர் மசூதி - இராமர் கோயில் சிக்கல் என்பது வெளிக்கு அவர்கள் கூறுகின்ற காரணமாக இருந்தாலும், இந்த நாட்டில் காலம் காலமாக, அஃதாவ்து ஆரிய வல்லாளுமைக்குப் பின், தன்மூப்பாக அதிகாரக் கொண்டையத்தில் ஏறி நின்று மக்களை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைத்து, இந்நாட்டிலுள்ள அனைத்து நலன்களையும் தாங்களே ஆண்டு துகர்ந்து (அநுபவித்து) வந்த நிலைக்கு எங்கே ஒரு வீழ்ச்சி ஏற்பட்டு விடுமோ என்ற நிலையில், இந்நாட்டின் மண்ணின் உரிமை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகார, ஆட்சி வாய்ப்பு ஏற்படப் போகிறதே என்னும் பொறாமைத் தீயால் புழுங்குகிறார்களே, இங்குள்ள பார்ப்பன மக்கள் - அந்த நிலைதான் உண்மையான அவர்களின் எழுச்சிக்கு அடிப்படையானது.

அவர்களின் இராமர் பிறந்த நிலஇராம ஜன்ம பூமி கோரிக்கை வம்படித்தனமானது; உண்மையில்லாதது; பொய் - புரட்டானது; ஞாயமற்றது; முரட்டுத்தனமானது: மூடத்தனமானது: இனவெறி சான்றது; சூழ்ச்சியானது வன்முறைத் தனமானது. இன்னோர் இனத்தை இகழக் கூடியது; இன அழிவை உள்ளடக்கியது; இராமனுக்கு இந்து என்னும் சொல்லுக்கும் முடிச்சுப் போட்டு, இல்லாத கற்பனைக் கதையை உண்மை என்று மெய்ப்பிக்கும் புரட்டுத் தனமானது.

உண்மையாகப் பார்க்கப் போனால் இராமன் சத்திரியன்; பிராமணன் அல்லன். மேலும் அவன் ஆரிய எதிர்ப்பாளன்; அவனுடைய தந்தை தசரதனோ ஆரிய எதிரி இராமனின் மாமனாராகிய சனகனோ ஆரிய எதிர்ப்பியக்கத்தின் தலைவன்; தமிழ்முனிவர்களின் மெய்ப்பொருள் நூல்களாகிய உபநிடதங்களின் தந்தை. இத்தனை உண்மைகளையும் மறைத்துத் தங்களுக்குச் சார்பு படுத்தித் தங்களை உயர்த்திக் கொண்டனர். ஆரியப் பார்ப்பனர்கள்! ஆரிய எதிர்ப்பாளனாகிய இராமனைத் தங்களின் இனக் காப்பாளனாகவும், தமிழ் முனிவர்களின் மெய்ப்பொருள் நூல்களாகிய உபநிடதங்களைத் தங்களின் வேத நூல்களின் இறுதிப் பகுதிகளாகவும் ஆக்கி, அன்றைய தமிழின அரசர்களையும் மக்களையும் ஏமாற்றி, ஒரு பெரிய அறிவு நல வரலாற்றையே அடிப்படையாக அமைத்துக்கொண்டனர்.

எப்படித் தமிழ்ச் சொற்களையெல்லாம் சமசுக்கிருதப் படுத்தினார்களோ, எப்படித் தமிழ்க் கலைகளை இயல், இசை, நாடகங்களை எல்லாம் ஆரியக் கலைகளாக உருமாற்றிப் பெயர் மாற்றி ஆரியப்படுத்தினார்களோ, அப்படியே பெருந் தமிழ்த் தெய்வங்களான சிவன், திருமால் ஆகியவற்றையும், திணை நிலத் தெய்வங்களான முருகன் (சேயோன்), கண்ணன்(மாயோன்)- (இவ்விடத்தில் ஓர் உண்மையை உணர்தல் வேண்டும். கண்ணன் வேறு; திருமால் வேறு. திருமால் இறைவியாகிய பெண் தெய்வம் ஆணாகி வந்த வழக்கும். கண்ணன் (கிருஷ்ணன்) இடையர் குல அரசன். இவனும் தமிழனே. பாண்டிய குலத்தவன், யமுனை ஆற்றங்கரைக்குக் குடியேறிய பாண்டிய குலத்தினனாகிய சூரசேனனின் பெயரன். இவ்வளவில் இது போதும், மேலே விளக்கின் பெருகும்) - வேந்தன் (இவன் வேறு; ஆரிய இந்திரன் வேறு) வருணன் (இவன் வேறு; ஆரிய வருண பகவான் வேறு) இவன் தமிழரின் கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தலுக்குத் தலைவன்; ஆரிய வர்ணபகவான் புயலுக்கும், கடலுக்கும் அதிகாரி), காளி (மண்), மாரி (மழை) - ஆகிய தெய்வங்களும் ஆரியப்படுத்தப் பட்டார்கள். ஆரியர்களின் வேதமதமே இந்துமதம். (இத் தெய்வ வரலாறுகளையெல்லாம் எம் திருக்குறள் மெய்ப்பொருளுரை நூலில் மிக விரிவாக எழுதுவோம்).

இக்கால் இந்திய ஆரியப் பார்ப்பனர்கள் இந்துமத அடிப்படைகள் தகரத் தொடங்கியவுடன், அவற்றை மேலும் வலுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் செய்கின்ற முயற்சிகளே பாபர் மசூதி - இராமன் பிறப்பு நிலப் போராட்டம் முதலியவை. ஆனால், இவற்றினும் மேலாக அவர்களைத் தாக்கக் கூவடிய விளைவுகளை உண்டாக்குபவை மண்டல் குழு பரிந்துரைகள். எனவேதான் அவற்றை இதுவரை யிருந்த பார்ப்பனிய அரசு செயல்படுத்த முன்வரவில்லை. வி.பி. சிங் தாம் அதைத் துணிந்து செயல்படுத்த முன்வந்தார்.

ஆட்சியாளர்கள் அடிக்கடி ஆட்சி மாறுவார்களானால், ஆளப்படுகின்ற மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன்கள் முறைப்படி கிடைக்கப் பெறா. ஆட்சியில் அமர்ந்துவிட்டவர்கள், எப்பொழுதும் தம் பதவிகளுக்கு இடையூறு நேர்ந்துவிடுமோ என்னும் அச்சத்துடன் விழிப்பாக இருந்துகொண்டு இருப்பார்களாகையால், ஆட்சி முறைகளில் மிகுந்த கவனத்தைச் செலுத்தாமல், அவ்வத்துறைகளின் நெறிகளையும் (Rules), முறைகளையும் (Regulations) கற்று அறிந்து கொள்ளாமல், எப்பொழுதும் அதிகாரிகளையே நம்பியும் சார்ந்தும் இருப்பார்கள்: அவர்கள் சொல்வதையே கேட்பார்கள், ஆட்சியில் ஒரே கட்சியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆட்சிக் காலமான ஐந்தாண்டுகளும் தொடர்ந்து இருப்பார்களானால், படிப்படியாக அதிகாரிகளின் பிடிப்புகளிலிருந்து தாங்கள் விலகி நேரடியாகவே தங்களின் துறை நலன்களையும் ஆளுமைகளையும் அவர்களால் கவனிக்க முடியும், ஆனால், இடையிடையே வேறு வேறு அரசியல் காரணங்களுக்காகத் தாங்கள் மாறுதல்களுக்கு உள்ளாக்கப் பெறுவார்களானால், அதிகாரிகளின் தொடர்பின்றி அவர்கள் தம் விருப்பமாக இயங்கும்படி தங்களை எப்பொழுதுமே தகுதிப்படுத்திக் கொள்ள முடியாது,

தேசிய முன்னணி அரசு கவிழ்க்கப்பெற்று, சந்திரசேகரர். சனதா தளம் சோ) என்னும் புதிய குழுவை உருவாக்கி, இந்நாட்டின் அரசியல் இரண்டகர் இராசீவ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பது, பதவிப் பித்தர்களுக்கும், அதிகார வெறியர்களுக்கும், சூழ்ச்சிக்காரர்களுக்குகம், கட்சி மாறிகளுக்கும், அரசியல் கொள்ளையர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு ஓர் ஆட்சியால் கிடைக்க வேண்டிய ஆட்சி நலன்கள் அறவே கெடுமன்றோ ? மேலும் அரசியல் போட்டிகள், விளம்பர வணிகப் போட்டிகளாக மாறிவருகின்ற பொழுது, மக்கள் தங்கள் நலன்களை இழப்பதுடன், தாங்கள் அரசியல் சூதாட்டக்காரர்களின் கைகளில் சிக்கிப் பகடைக் காய்களாக உருட்டப்படுகிறார்கள். இந்நிலை தொடருமானால், மக்களிடை குடியரசு உணர்வே அற்றுப் போய்விடும். தவறான குடியரசு கொடுங் கோலான முடியரசைவிட மிகக் கொடுமையானது. இந்த வகையில், இப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் அனைவருமே பதவி, பணம், புகழ் ஆகியவற்றுக்காக அலைபவர்களாகவே உள்ளனர். மக்கள் நலம் கருதுபவர் ஆயிரத்தில் ஒருவர் இருப்பாரா என்பது ஜயமே!

இற்றை நிலையில், இந்தியாவில், அரசியல் நிலையிலும் சரி, ஆளுமை அதிகார நிலைகளிலும் சரி, பார்ப்பனர்களே மேலோங்கி யிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆட்சியும் அதிகாரமும் எப்பொழுதுமே அவர்கள் கைகளில் உள்ளபடியே அவர்கள் இயங்குவார்கள். இதற்கென அவர்கள் பொருளியல் நிலையில் முதலாளிகளுடன் இணைந்து நிற்கிறார்கள். மதநிலையில் இந்துக்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள். எனவே, இந்திய அரசியலில் யார் தலைமையிடத்துக்கு வந்தாலும் அவர்களை இந்த மூன்று வலிவான கருவிகளைக் கொண்டே வீழ்த்திவிடுகிறார்கள். யாரைக் கொண்டு வீழ்த்துவது என்பது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. யாரை வீழ்த்துவது என்பது பற்றித்தான் அவர்கள் கவலை கொள்வதெல்லாம். அவர்களிடம் என்றுமே மாறாத இச் சாணக்கிய நிலை மிகக் கொடியது. பார்ப்பனர்கள், தாமே வாழ வேண்டும் என்னும் தாந்தின்னி நிலையினின்று மாறி, இக் காலத்திற் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையானால், எதிர்காலம் அவர்களுக்கு அழிவை நோக்கியதாகவே இருக்கும். ஏனெனில் மாந்தவியல் உரிமை வளர்ச்சி மிக்கோங்கித் தழைத்து வளர்ந்து வரும் காலம் இது.

இனி, வி.பி. சிங்கைத் தலைகுப்புற வீழ்த்திவிட்டு, அரசியல் கரவடர்களின் துணையுடன், குழப்ப ஆட்சி அமைத்துள்ள சந்திரசேகரர் போலும் மக்கள்நலம் கருதுவதாகக் கூறிக் கொள்ளும் சமநிலை உணர்வாளர்கள். தங்களுக்கு எதிரிகளாக உள்ளளவர்கள் யார் என்பதைச் சரியாக அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் இந்துமதப் பார்ப்பனிய வெறியர்களாக உள்ள அத்துவானியும் வாச்சுபேயும் வி.பி. சிங்கை முன்பு விரும்பியவர்கள்தாம்! அவர் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தவர்கள்தாம்! பின், ஏன் அவர்கள் ஆதரவைப் பின்வாங்கிக் கொண்டார்கள் என்பதைச் சந்திரசேகரர் அறியாதவரல்லர் ஆட்சி நலத்தைவிட மக்கள் நலத்தைவிட, பார்ப்பனிய நலந்தான் பார்ப்பனர்களுக்கு முகாமையானது. அரசியலில் பார்ப்பனிய ஆளுமைக்கும். மதத்தில் இந்துமதத்திற்கும், மொழியில் சமசுக்கிருதத்திற்குகம் அல்லது இந்திக்கும், எங்கு எங்கு தாழ்ச்சி ஏற்படுகின்றதோ, எவர் எவர் தாழ்ச்சி செய்கின்றார்களோ அங்கெங்கு, அவரவரை வீழ்த்திப் பார்ப்பனியத்தையும் இந்துமதத்தையும் நிலைநாட்டுவதுதான் பார்ப்பனர்களின் நோக்கம், குறிக்கோள், வாழ்க்கை எல்லாம்!

எனவே, சந்திரசேகரானாலும் சரி, தேவிலால் ஆனாலும் சரி, வேறு எந்த முலாயம் சிங் யாதவ் ஆனாலும் சரி, பார்ப்பனியத்திற்கு ஆக்கம் தருவதானால் இந்திய ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க வைக்கப் பெறுவார்கள். இல்லெனில் எவ்வாறேனும் வீழ்த்தப்பெறுவார்கள். இதுதான் இந்திய அரசியல்! இதுதான் இந்து மதம்! இதுதான் பார்ப்பனியம். இதனைச் சந்திரசேகரர் விரைவில் விளங்கிக் கொள்ளும் நேரம் வரும். எனவே ஆட்சி மாற்றமும் வழக்கம் போல் விரைவில் இருக்கும்!

- தமிழ்நிலம், இதழ் எண் : 141-142 1990

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.