Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

19. பரமார்த்தரின் பக்தி

பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.

பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்து பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை

"குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே.... அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே!" என்றான் மண்டு .

“நல்லது! அப்படியே செய்வோம்” என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.

"தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!" என்றான், மூடன்.

அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.

உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல 'கட கட' என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.

நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கித் 'தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி, அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி, எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.

"மட்டியே! அவசரப்படுகிறாயே!" என்று திட்டினார் பரமார்த்தர்.

மறுபடியும் எல்லோரும் மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.

அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. அற்புதம், அற்புதம்" என்று குரு மகிழ்ந்தார்.

அப்போது மடையன் மட்டும் அலறினான்.

"என்ன? என்ன?” என்று பதறினார் குரு.

"குளிர்கிறதே" என்றான் மடையன்.

"அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்” என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.

குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.

அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.

அதற்குள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி கே ஏறி வந்து, “குருவே... நான் கீழே இறங்கிப் போனேன். அந்த இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான் இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று மூச்சுவாங்கக் கூறினான்.

"அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!" என்றபரமார்த்தர், "எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்” என்றபடி இறங்கினார்.

எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.

அப்போது அங்கே சில காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், "மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!" என்று கோபத்துடன் திட்டினார்.

வீரர்கள், குரு காட்டிய திசையில் ஓடினார்கள் பரமார்த்தரும், சீடர்களும் “திருடன்! திருடன்! விடாதே, பிடி!" என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.

அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.

ராஜ வீதியில் ஒரே கலவரம், கூக்குரல்கள். அப்போது மூடன், “அதோ... அதோ... பிடியுங்கள்” என்று கத்தினான்.

பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, “அரசே! மந்திரியே! நீங்களா?!" என்று வியந்தனர்.

"எல்லோரும் அரசர் காலில் விழுந்து, "எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்” என்று நடுங்கியபடி கூறினர்.

பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. 'அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே' என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.

உடனே அரசர், "பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலே யே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியை பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படை இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார்.

மக்களும், “பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க!" என்ற முழக்கமிட்டனர்.

குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.