Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

24. வாடகை மாட்டுக்கா? மாட்டின் நிழலுக்கா?

ஒரு சமயம் பரமார்த்த குருவும் - சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். ஆனால், குருவிற்கு வயதாகி விட்டதால் பால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று எண்ணிய சீடர்கள அவர் பயணம் செய்வதற்கு மட்டும் ஒரு பொதியை (காளை மாட்டை) வாடகைக்கு அமர்த்தினர்.

மாட்டுக்காரன் கேட்ட தினக் கூலியாக மாட்டு வாடகை ஐந்து காசுகள் தருவதாக ஒப்புக் கொண்டு, அதன்படி பரமார்த்த குருவை மாட்டின் மேல் அமர வைத்து சீடர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது கோடைக் காலமாதலால் வெயில் வெகு கடுமையாக இருந்தது.

அவர்களின் பயணத்தின் போது வழியில் ஒரு மணற்பரப்பான மரங்கள் எதுவும் இல்லாத வெட்ட வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியாக இருந்தமையால் வெயிலும் தாங்க முடியாத வெப்பமாக இருந்தது. -வெப்பத்தின் கடுமையை தாங்க முடியாத பரமார்த்த குருவுக்கு நாக்கு வரண்டு தாகம் அதிகமாகி கண்கள் பஞ்சடைந்து மயக்கமடைந்து கீழே விழுகின்ற நிலையை அடைந்தார்.

அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சீடர்கள், குருவை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்து கீழே மணல் சுடாதபடி துணிகளை பரப்பி மாட்டின் நிழலிலேயே படுக்க வைத்தனர்.

குருவின் மயக்கத்தை தெளிவிக்க சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் குருவுக்கு மயக்கம் தெளிந்ததும் பழையபடி மாட்டின் மேல் உட்காரவைத்துப்பயணத்தை தொடர்ந்தனர்.

வெட்டவெளியைக் கடந்ததும் ஒரு இடத்தில் தங்கி உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அதன் பின்னர் பயணத்தை மேற்கொண்டு ஒர் ஊரை சென்றடைந்தனர். அவர்கள் அவ்வூரை சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டமையால், அவ்வூரிலேயே தங்கி மறுநாள் காலை பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

இதனை அறிந்த அவ்வூர் மக்கள், பண்ணையாரிடம் தக்க குருவும் - சீடர்களும் வந்திருக்கும் செய்தியை விக்கனர். பண்ணையார், தங்கியுள்ள அவர்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

சாப்பாடு முடிந்த பின்பு, சீடர்கள் மாட்டின் சொந்தக் காரனுக்கு அன்றைய மாட்டு வாடகையாக ஐந்து காசுகளைக் கொடுத்தனர்.

மாட்டுக்காரன் அவர்கள் கொடுத்த ஐந்து காசுகளை வாங்க மறுத்தான்.

"மாட்டின் மேல் சவாரி செய்வதற்காக ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் குரு ஓய்வெடுத்தற்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் வாடகையாகத் தந்தால் தான் வாங்குவேன்" என்றான் மாட்டுக்குச் சொந்தக்காரன்.

"இது என்ன அநியாயமாக இருக்கிறதே, மாட்டைத் தான் வாடகைக்கு எடுத்தோம். அதெப்படி மாட்டின் நிழலுக்கு வாடகைக் கொடுக்க முடியும். ஆதலின் மாட்டின் வாடகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றனர்.

இவர்களுடைய காரசார விவாதத்திற்குப் பிறகு இந்த விஷயம் அந்த ஊர் பண்ணையாரிடம் சென்றது.

பண்ணையார் மாட்டுக்காரனை அழைத்து, ஞஐயா, தாங்கள் பேசியபடியே ஒருநாள் வாடகை ஐந்து காசுகள் அதன்படி பெற்றுக் கொள்வது தான் நியாயம்" என்றார்.

அதற்கு மாட்டுக்காரன், "ஐயா நான் ஐந்து காசு பேசியது மாட்டின் மேல் சவாரி செய்வதற்கு மட்டும்தான். ஆனால் மாட்டின் நிழலில் தங்குவதற்காக அல்ல. ஆகையால், மாட்டின் வாடகை ஐந்து காசுகளும், நிழலுக்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் தரவேண்டும்" என்று மீண்டும் பிடிவாதம் செய்தான்.

"இது மிகவும் அநியாயமாக இருக்கிறது?" என்றார் பண்ணையார்.

"இது ஒன்றும் அநியாயம் இல்லை. நியாயமாகத் தான் கேட்கிறேன்" என்றான் மாட்டுக்காரன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர்.

தீர்வே இல்லாமல் இந்தப் பிரச்சனை நீண்டு செல்வதால், மாட்டுக்காரனையும், குருவையும் சீடர்களையும் நோக்கி, "நான் ஒரு தீர்ப்பு சொல்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் கட்டுப்படுவீர்களா?" என்றார் பண்ணையார்.

அதற்கு மாட்டுக்காரனும், குருவும், சீடர்களும் கட்டுப்படுவதாக ஒட்டு மொத்தமாக கூறினார்கள்.

‘இதற்கு இதுதான் மிகச் சிறந்த தீர்ப்பாகும்' என்று மனதில் நினைத்து கொண்டு பண்ணையார் மாட்டின் சொந்தக்காரனை தன் அருகில் அழைத்து, "மாட்டின் மீது குரு ஏறி வந்தற்காக வாடகை ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் தங்கியதற்காக மூன்று காசுகளின் நிழலையும் பெற்றுக்கொள்" என்றார்.

மாட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான் எவ்வளவு யோசனை செய்தும் இதன் முடிவு தெரியவில்லை.

"இப்போது இரவு நேரம். காலையில் தான் நிழலுக்கான பணத்தைப் பார்க்க முடியும்" என்று கூறி மறுநாள் காலை சூரியன் உதயமானதும் மாட்டுக்காரனை அருகில் அழைத்து மாட்டின் நிழலுக்கான மூன்று காசுகளை வெயிலில் பிடித்தார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.