கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.
உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும்.
நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்தோம். பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற்கேற்றார்போல் மாற்றி ஓடச் செய்கிறோம். அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச் செய்யாமல், மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஒன்று கண்டுபிடித்து [சிறிய உணவு] அதைக்கொண்டே மனிதனை இயக்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.
மக்கள் பிறப்புக் கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழமுடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்குமேல் பெறமாட்டார்கள்.
- ஆண், பெண் உறவுக்கும்-பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.