சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்..
உலகில், மனிதன் மற்ற உயிரினங்களை விடச் சிறந்தவனாக கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான்.
மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக்கொண்டு வருகிறான். ஆனால், இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிக மிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.
இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு, கோயில்-குளம் கட்டிக் கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்ட வெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் கப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ, அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தர வேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.
அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது; உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் சுகம் ஏற்படும் என்று கருதி பொறுத்துக் கொள்ளுகிறான். அதுதான் அறிவின் தன்மை.
நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவதுபோல் காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன் போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?
ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம், சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான்-பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.
உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி; அதை நல்ல முறையில் பயன்படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டால்தான் அறிவு வெள்ளாமை கருகிப் போயிற்று. முன்னோர் சொல்லிப் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல, அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.
---------------------
நம் நாட்டைப் பாரத தேசம் என்று சொல்வது ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை.
மனிதனுக்கு மனிதன் பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது..
எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு அதன் பயனை அளவாகக் கொண்டதேயொழிய அதை ஆக்கியவனையோ, தெய்வீகத் தன்மையையோ இலக்கண அளவையோ, அளவாகக் கொண்டது அல்ல.