Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பெரியார்

எனக்குப் பிறகு யார் என்று கேட்கிறார்கள். ஏசுவுக்குப் பிறகு அவருடைய பைபிள்தான். நபிக்குப் பிறகு. அவருடைய குரான்தான். அதுபோல, எனக்குப் பிறகு, என் எழுத்து, என் நூற்கள் இவைகள்தான்.— (1-1-1963)

என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக்களைப்போல் சரிசமமாக வாழ வேண்டும், அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்குத்தான்..

ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன:

(1) அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். (2) அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்படவேண்டும்.

(3) அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் நமது பெரியாராவர். —டி. கே. சி. (20-7-1928)

நாத்திகன் என்றால் ஆராய்பவன், தர்க்கம் செய்பவன் என்று பொருள்..

ஆத்திகன் என்றால் முட்டாள் ஆராய்ச்சித் தன்மை அற்றவன் என்று பொருள்..

நான் மனிதனே!

நான் சாதாரணமானவன்; என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத்தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

”நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்’’ என்று – வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை.

நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டல் தள்ளிவிடுங்கள்.

ஒருவனுடைய எந்தக் கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

நான் யார்?

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது – எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் – உடல்நிலையில் இளைத்துப் போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற யோசனையைவிட எப்படி அதிகமான யோசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்கவேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

 

 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.