Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

நதியில் கிடந்த பொற்காசுகள்!

அவந்திதேசத்தரசன் வேட்டையாடிவிட்டு நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். ஏழு வயதுக் சிறுவன் ஒருவன் அவன் முன் தன் இரு கைகளையும் பரப்பி “நிதானமாகப் போங்கள். எங்கள் நகரத்தை அழித்துவிடாதீர்கள்!" என்றான்.

அந்தச் சிறுவன் அணிந்திருந்தது கந்தலாடை. கழைக்கூத்தாடி என்று பார்த்தவுடனே புரிந்தது. ஆனால் 'முகத்தில் எத்தனை புத்திசாலித்தனம்' என வியந்தான் மன்னன்.

“தங்கள் நகரத்தை நான் பார்க்கலாமா?” என்று பணிவுடன் கேட்டான் வேந்தன்.

“வாருங்கள்'' என்று அழைத்துச் சென்று ஆற்று மணலில் தான் வரைந்த கோடுகளைக் காட்டினான சிறுவன்.

அவந்தி நகரத்தின் அமைப்பை வெகு நோத யாக வரைந்திருந்தது கண்டு ஆச்சரியப்பட்ட கொற்றவன்.

“யார் இதை வரைந்தது?” என அரசன் கேட்க, "இவன்தான்” என்று கூட விளையாடிய சிறுவர்கள், தீபகனைக் காட்டினர். அவன்தான் அரசரைத் தடுத்து நிறுத்தியவன்.

“இது அவந்தி நகரமல்லவா? உனக்கெப்படி சொந்தமாகும்?” என்று கேட்டான் மன்னன்.

"அரசே! அந்தத் தவளை, நண்டு இதெல்லாம் என்ன நினைக்கும்? இது நமது இடம் என்று! அதோ அந்தப் புற்றைக் கலைத்தால் ஏராளமான எறும்புகள்! அப்போ இந்த நகரம் யாருக்குச் சொந்தம்?"

பையனின் எதிர்க்கேள்வி அரசனைத் திக்கு முக்காட வைத்தது. "அதுசரி, நகரத்துக்கு எத்தனை முறை போயிருக்கிறாய்?" என்று கேட்டான்.

“நேற்றுதான் போனேன். எந்த இடத்தில் கூத்து நடத்தினால் கூட்டம் சேரும் என்று ஊரைச் சுற்றிப் பார்த்தோம்” என்றான்.

“ஒரு தடவை பார்த்ததற்கா ஊரை வரைந் திருக்கிறாய்?” வேந்தன் பிரமிப்போடு கேட்க, “பின்னே, எத்தனை தடவை பார்ப்பாங்களாம்?" என்று அலட்சிய மாகச் சொன்னான் தீபகன்.

இவன் பட்டை தீட்டப்படாத வைரம் என அரசன் உணர்ந்தான். மேலும் அவனைச் சோதிக்க  முடிவெடுத்தான்.

“தீபகா! இந்த மணலைக் கயிறாக்கிக் கொண்டு வா என் குதிரையைக் கட்ட வேண்டும்" என்றான் மன்னன்.

“மாதிரிக்கு ஒரு முழம் கயிறு கொடுத்தனுப் பங்கள். ஏனென்றால் தரம் குறையக்கூடாதல்லவா?'' என்று பதிலளித்தான் தீபகன். "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?" என்று தீபகன் கேட்க, “சரி, கேள்!" என்றான் மன்னன்.

சட்டென்று குனிந்து ஒரு கைப்பிடி மணலை எடுத்து “இது எத்தனை மணல்?" என்று கேட்டான்.

'மணலை எப்படி அளவிட முடியும்? சிறுவனிடம் மடங்கிவிட்டோமே' என்ற தயக்கத்துடன், “மணலை எண்ண முடியுமா?” என்றான்.

"ஏன் அளவிட முடியாது? ஒரு கைப்பிடி அளவு" என்றான் சிறுவன். அரசனோடு வேட்டைக்கு ஒரு நாயும் வந்திருந்தது.

அதைக் காட்டி “தீபகா! இது உக்கிரமாக சண்டை போட வேண்டும். ஆனால், எந்தப் பிராணியும் மனித னும் எதிரே இருக்கக்கூடாது. முடியுமா? என்று கேட்டான்.

தீபகன் ஓடிப்போய் தங்கள் கூடாரத்திலிருந்து ஒரு பெரிய கண்ணாடியைக் கொணர்ந்து நாயின் முன் வைத்தான். நாய் முதலில் உறுமியது. கண்ணாடியில் அதன் செய்கை பிரதிபலிக்க அதன் ஆத்திரம் அதிக மாகி ஆக்ரோஷத்தோடு கண்ணாடியுடன் மோதியது.

இதற்குள் விஷயம் தெரிந்து கழைக்கூத்தாடிகள் கும்பல் கூடிவிட்டது. மன்னன் தீபகனின் ஆற்றலை மனதுக்குள் மெச்சிக்கொண்டான்.

“தீபகா! இதோ இந்தப் பாறையை மண்டபமாக்கி இதன்கீழ் ஒரு சிம்மாசனம் அமைக்க வேண்டும். இன்றைக்கு நான்காம் நாளுக்குள் இதை நிறை வேற்றாவிடில் இந்த இடத்தைக் காலிபண்ணிவிட வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்துவிட்டு அரசன் போய்விட்டான்.

“நான் என்ன கண்ணன் சாமியா! மலையைக் குடையா உயர்த்த?" என்று தீபகனின் தந்தை கவலைப் பட்டார். "பாறையைச் செதுக்கி மண்டபமாக்க நாமென்ன சிற்பியா?” என்று எரிச்சலோடு சொன்னான் தீபகனின் தமையன்.

அப்போது தீபகன் “அப்பா, அண்ணா , நாம் பாறையைத் தொடவே வேண்டாம். பாறை கீழே தோண்டுவோம். மேலே பாறை மண்டபமாக இருக் கட்டும்” என்றான்.

“சரியான யோசனை!'' என்று எல்லோரும் ஆனந்தக் கூத்தாடினர். உடனே ஆளுக்கொரு மண் வெட்டி, கடப்பாரையுடன் செயலில் இறங்கினர்.

மூன்றே நாளில் குகைமண்டபம் உருவாகி விட்டது. ராஜா வந்து பார்த்து ஆச்சரியப்பட்டான். கீபகனுக்குப் பல பரிசுகள் கொடுத்தான்.

“தீபகா! மழைக்காலத்தில் மழை பெய்து ஊரெல்லாம் வெள்ளமாகி, குடிசைகள் அழிந்துவிடு கின்றன. மக்கள் அவதிப்படுகிறார்கள். வெயில் காலத்தில் நதி வற்றி தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறது. இதை எப்படித்தீர்க்கலாம்?" என்றான் அரசன்.

தீபகன் ஒரு நாள் அவகாசம் கேட்டான். நதியைப் போய்ப் பார்த்தான். பெரிய பெரிய பாறைகள் ஆற்றில் கிடந்தன. அரசனால் உயர்த்தப்பட்ட மண்சுவர்கள் இடிந்து கிடந்தன.

தீபகன் அரசனிடம் வந்து "மன்னா ! ஒரு பை நிறையப் பொற்காசுகள் தர வேண்டும். ஏன், எதற்கு என்று கேட்கக்கூடாது. இந்த ஆண்டு வெள்ளமோ, பஞ்சமோ வந்தால் அதற்கு நான் தண்டனை ஏற்கிறேன்” என்றான்.

தீபகனின் பெற்றோர் பயந்தனர். அரசன் தீபகனுக்கு ஒரு பை நிறையப் பொற்காசுகளை அளித் தான். தீபகன் தன் தோழர்களைச் சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு பாறைக்கடியிலும் பொற்காசுகளை மறைத்து வைத்தான். நதி நெடுக இப்படிப் பொற்காசு கள் ஒளித்து வைக்கப்பட்டன.

பிறகு திபகன் சொன்னது போல் அரசன் பறையரிவித்தான்.  பொற்காசுகள் ஆயிரக்துக்கும் மேல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. கண்டெடுப்பவர்களுக்குப் பொற்காசுகள் சொந்தம். ஆனால், பாறையை நகர்த்தி அதை எடுப்பவர்கள் பாறையைக் கரையில் தள்ளாவிடில் பொற்காசுகள் பறி முதல் செய்யப்படும். காசுகளுக்காகச் சண்டை வரு மானால் சண்டையிட்டவர்களுக்குக் காசு உரிமை யாகாது."

அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தும் இளைஞர் கள் குவிந்தனர். நடுவிலிருந்த பாறைகள் ஆற்றின் இருமருங்கிலும் வரிசையாக அரண்போல் நின்றன. சந்துகளில் சிறு பாறைக் கற்களை வைத்து அதிகாரிகள் அடைத்தனர். நதியில் தூர்வார உத்தரவிட்டான் அரசன்.

முன்னூறு பொற்காசுகளில் அற்புதமான கல் லணை கட்டப்பட்டது. அந்த ஆண்டு அதிகப் படியான மழை பெய்தும் வெள்ளம் ஊருக்குள் புகவில்லை! வெயில் காலத்தில் தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்படவில்லை ! தீபகனுக்கு அரசர் கல்விப்பயிற்சி அளித்தார். உரிய வயது வந்ததும் தனது பிரதம அமைச்சராகவும் ஆக்கிக்கொண்டார். புத்திக்கூர்மை வறுமையைத்துரத்தி, புகழை அளித்துவிட்டது.

அச்சுதனும் பிச்சுமணியும் இணை பிரியா நண்பர்கள்.

அப்போது நாட்டில் மழையில்லாமல் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஊர் பெரியதனக்காரர் நாடகங் கள் போட்டுக்கொண்டிருந்தார். "ஏதோ நம்மா லானது! கலைஞர்கள் பசியையாவது தீர்ப்போம். அதோடு ஜனங்களும் கவலையை மறந்து கொஞ்ச நேரமாவது இருக்கட்டும்” என்று ஜம்பமாகப் பேசினார்.

முதல் நாள் 'நல்லதங்காள்' நாடகம் நடந்தது. ஊர் முழுவதும் நாடகக்கொட்டகையில்தான் இருந்தது.

அச்சுவும் பிச்சுவும் இது கண்டு கொதித்தனர். பணக்காரருக்குப் பாடம் புகட்டத் தீர்மானித்தனர். கையிலிருந்த பணத்தைப் போட்டு அரிசி நொய் வாங்கிக் கூழ் தயாரித்தனர். கூழ்மணம் கூத்துக் கொட்டகையிலிருந்தவர்களை ஈர்த்தது.

"தெரிஞ்ச கதைதானே!" என்று ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.

“உள்ளே போய் மாரியாத்தா கோயில் பூசாரியைக் கூட்டிட்டு வாங்க. ஆத்தாளுக்கு நைவேத்தியம் பண்ணினதும் எல்லாம் உங்களுக்குத்தான்! வரிசை யிலே வந்து வாங்கிட்டுப் போங்க" என்றான் அச்சுதன்.

கொட்டகைக்கு உள்ளே ஓடிய சிலர் பூசாரியைத் தேடிப்பிடித்து காதில் செய்தியை ஓதினர். அவ்வளவு தான்! பூசாரி மட்டுமா வந்தார்? விஷயம் காட்டுத் தீயெனப் பரவ கிட்டத்தட்டக் கொட்டகையே காலியாகிவிட்டிருந்தது!

நல்லதங்காள் அழுது கொண்டே குழந்தை களைக் கிணற்றில் போட வேண்டிய காட்சி! குழந்தை கள் ஏழு பேரும் மேடையைவிட்டுக் கீழே குதித்தனர்.

“எங்கேடா போறீங்க?" நல்லதங்காள் வேட மிட்டவர் பரபரப்பாகக் கேட்டார்.

“பசிக்குதுங்க! கஞ்சியைக் குடிச்சிட்டு வந்துட றோம். அப்புறம் கிணத்திலே போடலாம்” என்று கடைசியாக ஓடிய சிறுவன் பதில் சொன்னான். பெரியதனக்காரர் ஆக்ரோஷத்தோடு அச்சு - பிச்சுவின் முன்னால் போய் நின்றார்.

"என்னைப் பகைச்சுக்கிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எதுக்குடா கஞ்சி காச்சறீங்க?'' என்று கோபத்தோடு கேட்டார்.

"ஐயா, கோவிச்சுக்கப்படாது. ஆத்தா உங்க கனவுலே வந்து ‘நாடகம் போடு, மழை பெய்யும்'னு சொன்னமாதிரி எங்க சொப்பனத்திலே வந்து அவரு நாடகம் போடுறார். நீங்க கூழ் ஊத்துங்க'ன்னாங்க! அதான்...'' என்று தலையைச் சொறிந்தான் அச்சு.

பண்ணையாரால் எதுவும் பேசமுடியவில்லை. கூழை அவரே முன்னின்று அம்மனுக்கு நிவேதனம் செய்து மக்களுக்கு ஊற்றினார்.

அப்புறம் என்ன? ஊர் பெரிய மனிதர்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கூழ்வார்க்க, நாட்டில் பசிப்பிணி தீர்ந்தது. அச்சு-பிச்சு நிலைமைக்குக் கூழ் வார்த்தால் நாமும் கஞ்சி காய்ச்சுவதா என்று பெரிய தனக்காரர் அன்னதானமே செய்தார்!

ஒரு பெரிய செல்வந்தர் வீட்டுத் திருமணம். அதற்கு அச்சுவும் பிச்சுவும் சென்றிருந்தனர். ஏகப்பட்ட இனிப்புகளோடு விருந்து தடபுடலாயிருந்தது. எத்தனை தடவை சாப்பிட்டாலும் எதை எடுத்துச் சென்றாலும் ஏனென்று கேட்பாரில்லை!

இதனால் விருந்து மண்டபத்துக்கு வெளியே பசியோடு பலர் காத்திருந்தனர். அச்சுவும் பிச்சுவும் வாயிற்கதவருகே நின்று பலரை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

ஒருவன் தான் சாப்பிட்டு முடித்ததும் அடுத்த பந்தியில் அமர்ந்து பட்சணங்கள், பழங்கள், வறுவல் இவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தான் அச்சுதன். அவன் ஜாடைகாட்ட பிச்சு அருகில் வைக்கப்பட்டிருந்த குவளை நீரைப் பைக்குள் ஊற்றினான்.

விருந்தினன் சினத்துடன் “ஏன் இப்படி, செய் தாய்?" எனக் கத்த “பைக்கு விக்கிக்கொள்ளாதா? ஜீரணம் ஆகட்டுமே என்று தண்ணீர் கொடுத்தால் அது தப்பா?” என்றான் பிச்சு.

கூடியிருந்தவர் நகைக்க, அவமானத்துடன் பையை அப்படியே போட்டுவிட்டு ஓடினான் விருந்தாளி.

அதிலிருந்து பையில் எடுத்துச்செல்வதை எல் லோரும் கைவிட்டனர்.

மணப்பாறை மாட்டுச்சந்தை. ஓர் அப்பாவி மாட்டோடு நின்றுகொண்டிருந்தான். அச்சு அவனிடம் சென்று “மாடு விற்க வந்தாயா?" என்று கேட்க, அவன் 'ஆமாம்' எனும்படித் தலையசைத்தான்.

“பேசாம நின்னா மாடு விக்குமா? எல்லோரும் மாடு வாங்கின பிற்பாடு உன்மாடு எப்படி நல்ல விலைக்குப் போகும். சுடச்சுட விற்கவேண்டாமோ? என்றான்.

பிறகு, "அருமையான காராம் பசு! இதனுடைய தாய்வழிப்பாட்டி தான் காமதேனு. கொட்டிலில் இருந்தாலே செல்வம் கொழிக்கும் ராசியானது!

இதனுடைய பாலுக்கு மருத்துவகுணம் உண்டு. வேளைக்கு ஒருகுடம் பால் கறக்கும்” என்று அச்சுவும் பிச்சுவும் குரல் கொடுக்க, அது எல்லோர் கவனத்தை யும் கவர்ந்தது. கூட்டம் கூடியது. வியாபாரிகள் மாட்டை வாங்கப் போட்டியிட்டனர்.

அப்பாவி “அடேயப்பா! இதுக்கு இத்தனை மவுசா? மாட்டை நான் யாருக்கும் விற்கிறதாயில்லை! எங்க பாட்டியை முட்டி படுத்தபடுக்கையா இருக்கிற தாலே அப்பா கோபப்பட்டு சந்தைக்குக் கொண்டு போன்னுட்டாரு! காமதேனுவோட பேத்தின்னு அப்பாவுக்குத் தெரியாது போல! நான் போய் சொன்னா புரிஞ்சுக்குவார்! அரைப்படி பால்தான் அப்பா கறப் பாரு! ஒருகுடம் பால் கறக்கும்னு தெரியாமப் போச்சே! என்றபடி மாட்டை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போனான்.

அச்சுவும் பிச்சும் பிரமித்து நின்றனர்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.