ஏகாந்தபுர மன்னர் வினோதர். அவரிடம் எல்லா நற்குணங்களும் இருந்தன. ஒரு கெட்ட குணமும் இருந்தது. அவருக்கே அது கெட்டகுணம் என்று தெரிந் தாலும் அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை! அப்படி என்ன குணம் என்கிறீர்களா?
அபூர்வமான பொருள்களைச் சேகரிப்பது! காசு கொடுத்து வாங்கி, அன்பளிப்பாகக் கிடைப்பதைச் சேகரித்தால் தப்பில்லை! ஆனால், திருடியாவது சேகரிக்க வேண்டுமென்று நினைப்பது குற்றமல்லவா!
மந்திரி விசித்திரர் இந்த விஷயத்தில் ராஜாவுக்கு ஆதரவாயிருந்தார். ஒருமுறை மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக் களைத்து ஒரு முனிவரின் ஆசிரமத் துக்கு இளைப்பாற வந்தார்கள். ரிஷி அவர்களுக்குப் பாலும் பழங்களும் கொடுத்து உபசரித்தார்.
முனிவரின் பேரன் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தான். அவனுக்காகப் பல நாள் சிரமப்பட்டு அழகிய வெள்ளிக்கிளிகள் செய்து கொடுத்திருந்தார் ரிழி.
அந்தக் கிளிகள் ஒரு குட்டி ஊஞ்சலில் அமர்ந்திருந்தன. அதன் வேலைப்பாடு வேந்தன் மனதைக் கவர்ந்தது.
“உங்கள் பேரனா?" என்றபடி குழந்தையின் அருகில் சென்ற மன்னர் அந்தக் கிளைகளை லாகவமாக எடுத்து மந்திரியிடம் கொடுக்க, மந்திரி அதை மடியில் மறைத்துக்கொண்டார்.
ஆனால், இதை முனிவர் பார்த்துவிட்டார்.
நாடே சொந்தமாயிருக்கிற ராஜா ஒரு குழந்தை யின் விளையாட்டுச், சாமானைத் திருடுவதா? பேரன் எழுந்தால் பிடிவாதம் பிடித்து அழுவானே என்கிற கவலை ஒரு பக்கம்.
'மன்னரைத் 'திருடன்' என்று சொன்னால் தண்டனை கிடைக்கும். அதோடு மக்கள் அரசரை மதிக்க, மாட்டார்கள். நல்ல அரசரை நாடு இழக்க நான் காரணமாகக்கூடாது' - இப்படியெல்லாம் யோசித்தார் முனிவர்.
அதே சமயம் முனிவர் குடிலுக்கு மன்னர் வந்த விஷயம் தெரிந்து காட்டுவாசிகள் அவரைக் காண வந்தனர். அனைவரிடமும் அன்போடு நலம் விசாரித்தார் அரசர்.
அப்போது ரிஷி “ரொம்ப நாளா வித்தை செய்து காண்பியுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தீர்களே!
இன்றைக்கு நமது மதிப்பிற்குரிய மன்னரும் அமைச்சரும் காண சில வித்தைகள் செய்து காண்பிக்கிறேன்” என்றவர் ஓர் ஓலையைக் குடுவையாக்கி அதில் நீரை ஊற்றினார். நீர் துளியும் சிந்தாததோடு ஓலையைப் பிரித்ததும் நீர் காணாமல் போயிருந்தது.
அடுத்து மணலைக் கையிலெடுத்து ஏதோ முணுமுணுத்துக் கையைப் பிரித்தார். மணல் சர்க்கரை யாகி இருந்தது. பலத்த கைதட்டல்.
பூனையைப் பிடித்து கூடையைப் போட்டு மூடி மந்திரம் சொல்லித் திறந்தால், முயல் துள்ளிக் குதித்து ஓடியது! மன்னரும் மந்திரியும் மெய்மறந்து வித்தை களில் லயித்திருந்தனர்.
“அன்பர்களே, மன்னர் வேட்டையாட வந்தவர். என் பேரனுக்கு வெகுமதி எதுவும் கொண்டுவர வில்லையே என்ற வேதனை அவர் கண்களில் தெரிகிறது'' என்றவர்.
"ஓம், ஹ்ரீம், ஹ்ரோம் கார்த்தவீர்யார்ஜுனாய ஹும்!" என்று சில மந்திரங்களை உரக்க உச்சரித்தார். பிறகு,
"மாகாளி! மந்திரியோட மடியிலே ஒரு அற்புத கிளி பொம்மையைக் கொண்டுவந்து போடு" என்றார்.
ஜனங்கள் ஆவலோடு மந்திரியின் மடியைப் பார்க்க, வேறுவழியில்லாமல் ஊஞ்சல்கிளிகளை வெளியில் எடுத்தார் அமைச்சர்.
இதற்குள் முனிவரின் பேரன் எழுந்துவிட, அவன் கெயில் பொம்மையைக் கொடுத்து அரசர் விடை பெற்றுக் கொண்டார்.
அன்றிலிருந்து திருடும் பழக்கத்தை அரசர் விட்டு பிட்டார். மானத்தைக் காப்பாற்றிய ரிஷிக்கு மனமார நன்றி சொன்னார். முனிவரின் சாதுர்யத்தை எண்ணி வியந்தார் அமைச்சர்.