Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பேசும் குதிரை

சுபாஷுக்கு வேட்டையாடுவதென்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அதிகாலை சோற்றைக் கட்டிக் கொண்டு காட்டுக்குப் போனான்.

திடீரென தூரத்தில் புலியின் உறுமல் கேட்டது. சரசரவென்று அருகிலுள்ள மரத்தில் ஏறினான் சுபாஷ். வசதியான கிளைகளின் சங்கமத்தில் அமர்ந்தான். புலி ஒரு மனிதனைத் துரத்திக்கொண்டு வந்தது. குதிகால் பிடரியில் பட ஓடிவந்த அந்த மனிதனின் நிலைசுபாஷின் மனதை இளக்கியது.

புலி பாய்வதற்காக தாமதித்த நொடியில் வில்லில் பூட்டியிருந்த பாணத்தை விடுவித்தான். சரியான இடத்தில் பாய்ந்த அம்பு, புலியைச் சாய்த்தது. புலியின் மரண ஓலம் ஓடிவந்த மனிதனைத் திரும்பி அம் பெய்தவனைத் தேட வைத்தது.

“மிக்க நன்றி, தம்பி" என்று கண்களில் நீர் கசிய கைகுவித்தான். மரத்திலிருந்து குதித்தான் சுபாஷ். "தம்பி! சூரியன் அஸ்தமனமாயிடுச்சே... எப்படி வீட்டுக்குப் போவீங்க? எங்கூட எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, ராத்திரிக்குத் தங்கிட்டு காலையிலே உங்க வீட்டுக்குப் போகலாம்" என்றான் ஓடிவந்தவன்.

சுபாஷுக்கும் மறுத்துப் பேச வழி இல்லாததால் புதியவனைப் பின்தொடர்ந்தான். வீடு வந்ததும் “தம்பி. என் பேர் ரத்னம். குதிரை வியாபாரம் பார்க்கறேன்" என்றவன், பின்பக்கமிருந்த குதிரைக் கொட்டடிக்கு அழைத்துச் சென்று காண்பித்தான். ஆயிரக்கணக்கான குதிரைகள் நின்றிருந்தன.

"கல்யாணி! என்ன பாக்கிறே? தம்பிக்கு ரொம்ப நல்ல மனது. என்னைப் புலி சம்காரம் பண்ணாமக் காப்பாத்திட்டான்" என்று அருகிலிருந்த குதிரையிடம் சொன்னான்.

பிறகு உள்ளே அழைத்துச் சென்று உணவு கொடுத்து, படுக்கையும் தயாரித்தான்.

“நிம்மதியாய் உறங்கு" என்று தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றான். நாள் முழுவதும் காட்டில் திரிந்த தால் சுபாஷ் காலையில் வெகு நேரம் தூங்கினான். விழித்ததும் ரத்னத்தைத் தேடினான். ஒருவேளை குதிரைலாயத்தில் இருப்பானோ என்று அங்கு சென் றான். ஒவ்வொரு குதிரையும் பார்க்க அழகாக இருந்தது. பார்த்துக்கொண்டே வரும்போது ஒரு வெள்ளைக் குதிரை, நெற்றியில் திலகம்போல அரக்கு நிறம் கொண்டது,

"இரக்கமனமுள்ளவனே! ரத்னம் உனக்கு ஒரு குதிரையைப் பரிசளிக்கப் போவதாகக் காலையில் கூறினார். நீ என்னைக் கேள். அதனால் நீ சாதனை யாளனாவாய்" என்றது.

சுபாஷ் பிரமித்திருந்தான் - குதிரை பேசுகிறதே என்று! "தம்பி! இங்கிருக்கிறீயா? வா, குளிச்சு சாப் பிட்டுக் கிளம்பலாம். அப்பா, அம்மா தேடுவாங்கல்லே! எனக்கு உயிர்தானம் கொடுத்த உனக்கு ஒரு குதிரையை வெகுமதியாய் தரப்போறேன். எது வேண்டும், சொல்லு” என்றான்.

சுயநினைவுக்கு வந்த சுபாஷ் “இது வேண்டும் என்று பேசிய குதிரையைக் காட்ட, "நல்ல தேர்வு. அதையே தருகிறேன்" என்றபடி முகமன் கூறி அனுப்பி

சுபாஷுக்கு அந்த யோசனை படித்துப் போகவே மாளவம், கூர்ஜரம் என்று பயணப்பட்டான். குதிரை கேட்பவரின் வினாக்களுக்கு புத்திசாலித்தனமாக பதில் கூறியது. இதைக் கேள்விப்பட்ட ஒரு சிற்றரசர் அதை விலைக்குக் கொடுக்கும்படிக் கேட்டார்.

"நாளை முடிவு சொல்கிறேன்" என்று அவரை அனுப்பிய சுபாஷ், இருப்பிடம் வந்ததும் குதிரை யிடம் “உன்னைப் பிரிய என்னால் ஆகாது. இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிவிடுவோம், வா" என்றழைத்தான்.

"எஜமானே! நாமென்ன கள்ளர்களா, ஊரைவிட்டு ஓட? என்னைக் குதிரைகளின் தலைவனாக்கு. உனது கிழட்டுக்குதிரைகளையும், நோயுற்ற பரிகளையும் ஆரோக்கியமாக, இளமையாக மாற்றுகிறேன் என்று அரசனிடம் சொல்லுங்க” என்றது குதிரை.

"அதெப்படி முடியும்? பொய் சொன்னால் தண்டனை கிடைக்கும்” என்றான் சுபாஷ்.

“உண்மையாகத்தான் கூறுகிறேன். நான் தும்மிய நீர்த்துளி தெளித்தால் குதிரைகளின் நோய்கள் குணமாகும். வயோதிக அஸ்வங்கள் வாலிபமாகிவிடும் என்றது குதிரை.

"அட, அப்படியா? இன்னும் என்னவெல்லாம் அபூர்வசக்திகள் வைத்திருக்கிறாய்?" என்று ஆச்சரிய பட்டான் சுபாஷ்.

போகப் போக தெரிந்து கொள்ளலாம் நிம்மதியாய் தூங்கு என்றது குதிரை. மறுநாள் மன்னர் வந்தார். சுபாஷ் சொன்னதைக் கேட்டதும் வியந்தார். குதிரை லாயத்துக்குக் கொண்டுபோய் வெள்ளைக் குதிரையைத் தும்மச் சொன்னான் சுபாஷ். என்ன அற்புதம்! கிழட்டுக்குதிரைகள் இளமை பெற்றன. நோய் நீங்கிய குதிரைகள் கம்பீரமாகக் கனைத்தன.

சுபாஷை குதிரைகளின் தலைவனாக்கினார் வேந்தர். பழைய தலைவனுக்கு சுபாஷின் மேல் எரிச்சலாக வந்தது.

"அரசே! உங்களது பட்டத்துக்குதிரையை சுபாஷின் குதிரை கண்டுபிடிக்கும் ஆற்றலுடையது. பல போர்களில் வெற்றியைத் தேடித்தந்த ராசியான குதிரையாயிற்றே! அதன்மீது எத்தனை பிரியம் வைத்திருந்தீர்கள்?" என்றெல்லாம் தூபமிட்டான்.

அரசரும் சுபாஷை அழைத்து பட்டத்துக் குதிரையைத் தேடிப்பிடிக்கும்படிக் கட்டளையிட்டார். சுபாஷ் கவலையோடு லாயத்துக்குப் போனான்.

காரணத்தைக் கேட்ட குதிரை, “இவ்வளவுதானா? அருகிலுள்ள சைந்தமலையில் ஒரு நதி ஓடுகிறது. அங்கு செல்வோம். நான் கனைப்பேன். நதியிலிருந்து ஒரு பரி வரும். அதை நிராகரித்து விடு. மறுபடி பாடுவேன். அடுத்து இன்னொரு குதிரை வரும். அதையும் ஒதுக்கிவிடு. மூன்றாவதாக 'அஸ்வாதிசயமே வா' என்றழைப்பேன். பட்டத்துக்குதிரை வரும். அதற்குக் கடிவாளமிட்டு என்னோடு இணைத்துவிடு. என் சக்தி அதன் தேகத்துக்குள் பரவும்.

மந்திரவாதியால் ஏவப்பட்ட ஒரு கருடன் அதை வருணலோகத்தில் அடைத்து வைத்திருக்கிறது. குதிரை வெளிப்பட்டதும் கருடன் நம்மைத் துரத்தும். மன்னரிடம் நிறைய சாளக்கிராமங்களை வாங்கி வைத்துக்கொள். கருடன் நெருங்கும் போதெல்லாம் ஒரு சாளக்கிராமத்தை வீசு. சாளக்கிராமம் பெருமாளின் வடிவம். திருமாலின் வாகனமான கருடனின் கோபம் அதைக் கண்டதும் அடங்கும். மறுபடி விரட்டும்போது மீண்டும் சாளக்கிராமத்தை வீசு. நகர் எல்லையை மிதித்து விட்டால் கருடன் துரத்தாது திரும்பிச் சென்று விடும்” என்று விவரமாகச் சொன்னது.

அதே போலச் செய்து பட்டத்துக்குதிரையை மீட்டு வந்தான் சுபாஷ். அரசர் கொடுத்த மரியாதையும் வெகுமதிகளும் மீண்டும் தலைமைக் காளரியைப் பொறாமைப்பட வைத்தது.

“அரசே! தாங்கள் தொலைந்து போன ராஜ குமாரியைக் கேட்பீர்களென சுபாஷ் நினைத்தானாம்! தாங்களோ அல்பமாகக் குதிரையைக் கேட்டு விட்டீர்களாம்! கர்வத்தோடு பீற்றிக்கொள்கிறான் என்று கோள் மூட்டினான்.

அரசர் சுபாஷை அழைத்து பட்டத்துக் குதிரையை தேடி கண்டுபிடிக்க உத்தரவிட்டார். மறுபடியும் தன் அன்புக் குதிரையிடம் புலம்பினான் சுபாஷ்.

“கவலைப்படாதே! நாளை மறுநாள் சந்திர கிரகணம். கிரகணவேளையில் நான் ஆற்றில் முழுகு வேன். வெளியே வரும் போது ராஜகுமாரி இருப்பாள். நீ கரையில் நின்றபடி வருண ஜபம் செய்து கொண்டிரு” என்றது பரி.

மூன்று நாட்களுக்கு குதிரைக்கும் தனக்கும் உணவு எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சுபாஷ். சந்திர கிரகணத்தன்று நீரில் குதிரை இறங்குவதைக் கண்ட சுபாஷ் கண்ணீர் பெருக்கினான். 'எல்லாம் நல்லபடி யாக வேண்டுமே! இப்படியே ஓடிவிடலாம் என்றாலும் இந்த அதிகப்பிரசங்கி கேட்கமாட்டேனென்கிறதே' என்று வருந்தினான்.

கிரகணம் விட்டு பூரணசந்திரன் ஆகாயத்தில் பிரகாசமானதும் நதி நீரிலிருந்து ஓர் அழகிய மங்கை வெளி வந்தாள்.

"அன்பரே! நான்தான் உங்கள் பரிசான குதிரை. என்னைக் கடத்திச் சென்ற மந்திரவாதி எனக்குச் சில அபூர்வசக்திகளை அளித்திருந்தான். அவனுக்கு நான் இணங்காததால் என்னைப் பரியாக்கிவிட்டான். ஒரு நாள் அவனை ஏமாற்றி நான் ஓடிப் போய்க் குதிரைக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன். ஓடிப்போவது கஷ்டங்களுக்கு நிவாரணமல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். கருணை மனம் கொண்ட உங்கள் பின் வந்தேன். பட்டத்துக்குதிரையைக் கவர்ந்து வந்து ஒளித்து வைத்ததை நான் அறிவேன். அதுதான் மந்திரவாதி இறந்ததையும் நான் மீண்டும் பெண் ணாகும் வழியையும் சொல்லிக் கொடுத்தது. நீங்கள்தான் குதிரை பாஷை அறியாதவராயிற்றே! பழைய தலைவனால் பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாயிற்று. சந்திரகிரகணமும் வந்தது. வாருங்கள் ஊர் செல்லலாம்” என்றாள்.

நாடு திரும்பி தந்தையிடம் நடந்தையெல்லாம் சொன்ன ராஜகுமாரி, சுபாஷை மணந்துகொண்டாள்!

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.