Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

சோணாசலம் வீட்டில் திருடர்கள்

ஊரில் திருட்டு பயம் அதிகமாக இருந்தது. சோணாசலம் ரொம்ப ஜாக்கிரதையானவர். தினமும் புறக்கடைக்கதவைத் தாளிடும் முன் தோட்டக்கை நன்றாக ஆராய்வார். வேலை அதிகம் ஆனதால் ஒரு மாதமாய் தோட்டத்துக்குத் தண்ணீரே பாய்ச்சவில்லை. நாளைக்குப் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணியவர் திடுக்கிட்டார். முருங்கை மரத்துக்குப் பின்னால் மூச்சுவிடும் சத்தம் கேட்டது. பாம்பாயிருக்குமோ என்று லாந்தர் விளக்கைத் தூக்கிப் பிடித்தார். கறுப்புப் போர்வைக்குள் ஓர் ஆள். சட்டென்று லாந்தரை இறக்கினார்.

திருடன் கட்டாயம் ஆயுதம் வைத்திருப்பான். அவசரப்பட்டு ஆபத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. துல்லியமாக ஆராய்ந்தபோது மேலும் இருவர் பலாமரத்தின் கீழும் அவரைப்பந்தலின் மறைவிலும் தென்பட்டனர்.

கதவருகே நின்று, "அடியே, குந்தளா! இங்கே வா. களவாணி போன வாரம் உங்க அம்மங்கா வீட்டுக்கு வந்திருக்கான். முந்தா நாள் உங்க அத்தங்கா வீட்டிலே சுருட்டியிருக்கான். நம்ம வீட்டுக்கு என்னிக்கு விஜயம் பண்றாங்களோ! அதனாலே நீ பெரிய மரப் பெட்டியிலே நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், பவுன் காசுகள் எல்லாத்தையும் போட்டுப் பூட்டி வை. நாம ரெண்டு பேருமா அதைக் கிணத்துக்குள்ளே இறக்கிடலாம். திருட்டுப்பயம் போனதும் எடுத்துக்க லாம். என்ன சொல்றே?” என்றார்.

"ரொம்ப அழகாயிருக்கு! ரகசியமா செய்ய வேண்டிய காரியத்துக்கு இப்படியா கத்துவார்கள்! ராத்திரி நேரம். திருடனுங்க ஒளிஞ்சிட்டிருக்கலா மில்லையா?" என்று தோள்பட்டையில் முகத்தை இடித்துக்கொண்டாள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியும். நாம செய்கிற காரியம் யாருக்கும் தெரியாது. முதல்லே எல்லா ஜன்னலையும் சாத்து" என்றபடி அவளையும் தள்ளிக் கொண்டு உள்ளே போனார்.

அவள் முணுமுணுத்தபடி ஜன்னல் கதவுகளை யெல்லாம் சாத்திக் கொக்கியிட்டாள். திருடர்களுக்குப் படுகுஷி. 'நமக்கு வேலை ரொம்ப சுலபமாகிவிட்டது! கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போய், கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைத் தேடி... எதுவுமே அவசியமில்லாமப் போச்சு. லாந்தரைத் தூக்கிப் பார்த்ததும் 'பக்'குனு ஆயிடுச்சு. அதையே கண்டுபிடிக்க முடியலை! இவனெல்லாம்...'' என்றான் ஒருவன்.

முருங்கை மரத்தின் பின்னாலிருந்தவன் கிணத்தின்  ஆழத்துலே தண்ணி கிடக்கு. நீ கிணத்துலே இறங்கி தண்ணியைச் சேந்து. நாங்க இரண்டு பேரும் மாறி மாறி கயிறு விடறோம். ஒரு மணி நேரத்துலே வற்றடிச் சுடலாம். பெட்டியிலே கெட்டியா கயிற்றைக் கட்டிவிடு. இரண்டு பேருமா இழுக்கறோம்” என்றான்.

மூவரும் இப்படி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தபோது உள்ளே சோணாசலம் பெரிய மரப்பெட்டியைக் காலிபண்ணி அதற்குள் ஓட்டை, உடைசல் அலுமினியப் பாத்திரங்கள், துருப்பிடித்த இரும்புச்சாமான்கள் எல்லாவற்றையும் போட்டு நிரப்பி பெட்டியைப் பூட்டினார்.

குந்தளா பேசவாயைத் திறந்தபோது, “உஷ்” என்று வாயில் விரலை வைத்து எச்சரித்தார். கணவனும் மனைவியுமாகப் பெட்டியைத் தூக்கமாட்டாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் தொப்பென்று போட்டதை மூன்று திருடர்களும் பார்த்து, “அட, அசடே” என ஏளனமாக நினைத்தனர்.

சோணாசலம் உள்ளே போனதும் கறுப்பு ஆடை அணிந்து முகத்திலே கரியைப் பூசிக்கொண்டு மண் வெட்டி சகிதம் வாசல்கதவை மெதுவாகத் திறந்து, சுற்றிக்கொண்டு கொல்லைப்புறம் சென்றார். கள்வர்கள் நீர் இறைக்க ஆயத்தமானார்கள். கள்வர்கள் வியர்க்க விறுவிறுக்க இறைத்த நீர் தேங்காதபடி மரங்களுக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்தார் சோணாசலம்.

“தண்ணி ஊறிக்கிட்டே இருக்குடா" என்று உள்ளேயிருந்தவன் குரல் கொடுத்தான்.

"போதும். விடியப் போகுது. பெட்டி தெரியுதா?" எரிச்சலோடு கேட்டான் வெளியிலிருந்த ஒருவன்.

“தெரியுது'' - உள்ளேயிருந்து பதில் வந்தது.

"இந்தா! கயிறு, பெட்டியை நாலா பக்கமும் இறுக்கமாக் கட்டு" என்று கயிற்றை வீசினான் மற்றொருவன்.

"ஆச்சா! சீக்கிரம்" என்று துரிதப்படுத்த, “ஜாக்கிரதையா இழுங்கடா! விட்டுட்டீங்கன்னா இங்கேயே சமாதிதான்" என்று கிணற்றுக்குள்ளிருந் தவன் எச்சரித்தான்.

"நிதானமா இழுங்கடா! எதுக்கு அவசரப் படணும்னு வரைமுறை இல்லையா? 'டங்'குனு இடிச்சதுலே கண்ணெல்லாம் காரை” என்றான் உள்ளே யிருந்தவன் எரிச்சலோடு.

“நீ ஏன் மேலே பார்க்கறே? குனிஞ்சுக்க... சே, பாத்திரங்க வேறே லொடலொடங்குது'' என்று அலுத்துக்கொண்டான் மேலே நின்றவன். "தண்ணி இறைச்சு இறைச்சு கையெல்லாம் புண்ணாயிருக்குடா என்றான் மற்றவன்.

"ரொம்பப் பேசாதீங்கடா! உள்ளே உள்ளவன் முழிச்சுக்கப் போறான்" என உஷார்ப்படுத்தினான் கிணற்றுள் இருந்தவன்.

ஒருவழியாக பெட்டி மேலே வந்தது. அதை இறக்கிக் கயிற்றை வீச, கிணற்றுக்குள் இறங்கியவ னும் வெளியே வந்தான். "இங்கேயே பூட்டை உடைச்சுப் பார்க்கலாமாடா?" என்று அவன் ஆவலாகக் கேட்டான்.

“பூட்டு ரொம்ப விலை உசந்தது! நான் சாவி போட்டுத் திறந்துக்கறேன்.

ரொம்ப நன்றி ஒரு மாசத்துக்கு தோட்டம் காயாது இனிமே அடுத்த மாசம் வந்தால் போதும் என்று சோணாசலம் கூற மூவரும் திடுக்கிட்டு குதிகால் பிடரியில் பட ஓட்டம் எடுத்தனர்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.