ஓர் ஏழைக் குடும்பத்தினர் தினமும் போதிசத்து வரைப் பிரார்த்தனை செய்வர். "புத்தபகவானே! எங்கள் தரித்திரத்தைத் தீர்த்து வையுங்கள்" என வாய்விட்டு வேண்டுவர்.
புத்தர் அவர்களுக்கிறங்கி ஒரு தங்கவாத்தாக வந்தார். அந்த வாத்தின் இறகுகளெல்லாம் தங்க மயமாக இருந்தன.
பொழுதுபுலருமுன் இவர்கள் வீட்டு முற்றத்தில் ஒரு தங்க இறகை உதிர்த்தது வாத்து. அதைக் கண்டு மகிழ்ந்தவர்கள் அதை விற்று குடும்பத்தை நடத்தினர். அந்தப் பொருள் தீரும் சமயம் மற்றொரு இறகை உதிர்த்தது தங்கவாத்து.
எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறதென்று யாருக்கும் தெரியவில்லை . ஒரு நாள் அந்தக் குடும்பத் தின் தலைவன் குடும்பத்தினரிடம் "அந்த வாத்து வராமலே போய்விட்டால் நம் கதி என்னவாகும் என்று யோசித்தீர்களா? அடுத்த முறை அது வரும்போது நாம் சூழ்ந்து நின்று அதைப் பிடித்துவிட வேண்டும். அதன் இறகுகளை மொத்தமாகப் பிய்த்து விற்றால் நிறையப் பணம் கிடைக்கும். அதை முதலீடாக வைத்து வியா பாரம் செய்து பெரும் பணக்காரனாகலாம். நம் கையிருப்புத் தீர்ந்துவிட்டதால் அனேகமாக நாளை அது வரக்கூடும். விடியற்காலையில் நாம் தூங்காமல் விழித்திருந்து வலை போட்டுப்பிடிக்க வேண்டும்" என்றான்.
குடும்பத்தினர் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டு வீட்டுக்கூரை மேல் மெல்லிய திரையை விரித்தனர். அவர்கள் எண்ணப்படி மறுநாள் வந்த வாத்து வலையில் அகப்பட்டுக் கொண்டது. ஆனால், குடும்பத்தினர் கைபட்டதுமே வாத்தின் இறகுகள் வெண்மையாகி விட்டன.
அவர்கள் தங்கள் பேராசையை எண்ணி வெட்கப் பட்டு பறவையை சுதந்திரமாகவிட அது பறந்தே போயிற்று. அதன் பிறகு அது திரும்பி வரவேயில்லை .