பிரபாகரன், கிருபாகரன், கமலாகரன் மூவரும் இணைபிரியாத நண்பர்கள். ஆனால் ஏழைகள். யாருக்கு எந்த நேரத்தில் சரீர உதவி தேவைப்பட்டாலும் தாமதியாமல் சென்று உதவுவர். எது கிடைத்தாலும் பகிர்ந்து உண்டனர்.
ஒரு நாள் நகரத்துக்குப் போவதென்று முடி வெடுத்துப் புறப்பட்டனர்.
நள்ளிரவு ஒரு பெரிய மரத்தடியில் தங்கினர். அருகில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
“கிருபா! காட்டிலே கொடிய மிருகங்கள் சஞ்சரிக்கும். அதனாலே சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டி ஒருவர் காவல் இருக்க இருவர் உறங்குவோம். காவல் இருப்பவனுக்குத் தூக்கம் வரும்போது அவன் உறங்குபவரில் ஒருவரை எழுப்பட்டும்."
கமலாகரன் குளிர் காய்ந்து கொண்டிருக்கையில் ஒரு மான் நொண்டிக்கொண்டே வந்தது. கமலாகரன்
அதன் பாதத்தை ஆராய ஒரு முள் குத்திக்கொண் டிருப்பதைக் கண்டான். அதைப் பிடுங்கி அதன் காயம் ஆற பச்சிலையை வைத்துக் கட்டினான்.
அப்போது ஒரு தேவதை வந்து ஒரு கங்கணத்தை நீட்டி, "கருணையுள்ளவனே! நான் இங்குள்ள வனதேவதை. இந்தப் பரிசைப் பெற்றுக்கொள். என்னை நினைத்தால் நீ விரும்பும் பொருள் உனக்குக் கிடைக்கும். இன்று போல் இரக்கமுள்ளவனாக என்றும் இரு” என வாழ்த்தி மறைந்தது.
கமலாகரனுக்கு சந்தோஷம் சொல்லி மாளாது. பிரபாகரனை எழுப்பி நடந்ததைக் கூறி கங்கணத்தைக் காண்பித்தான்.
"சரி, நீ தூங்கு" என்றபடி பிரபாகரன் காவல் காத்தான். பிரபாகரன் அங்கே வாடியிருந்த செடி கொடிகளுக்குச் சுற்றி வரப் பள்ளம் கட்டி அங்கிருந்த மூளிப்பானையால் தண்ணீர் ஊற்றினான்.
இப்போது வனதேவதை வந்தது.
''காட்டிலுள்ள செடிதானே என்று அலட்சியம் காட்டாமல் நீர் வார்க்கும் இளகிய மனம் கொண்ட வனே! இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்” என்று ஒரு புல்லாங்குழலை நீட்டியது.
"இளைஞனே! இதன் இசைக்கு மயங்காதவரே இருக்கமாட்டார்கள். நீ உதட்டில் வைத்தாலே போதும்” எனக் கூறி மறைந்தது.
அடுத்து கிருபாகரன் விழித்தான். சற்று நேரத்தில் பாம்பு ஒரு தவளையைக் குறிவைத்துச் செல்வதைக் கண்டான் கிருபாகரன். வேகமாகச் சென்று தவளையை மண்ணோடு ஆற்றில் வீசினான். ஒரு மரக்கிளையை ஒடித்து மண்தரையில் தட்ட பாம்பு ஓடி மறைந்தது.
இப்போதும் வனதேவதை வந்தது. "கொடிய நாகத்தையும் கொல்ல மனமின்றி விரட்டிய கொடை யாளியே! இந்தப் பொற்பையைப் பெற்றுக்கொள். இது அள்ள அள்ளக் குறையாது. தரும் குணத்தைக் கைவிட்டால் இது சுரக்காது. இன்று போல் மூவரும் கூடிவாழுங்கள் என வாழ்த்தி மறைந்தது.
மகிழ்ச்சி தாளாமல் சினேகிதர்களை எழுப்பிய கிருபாகரன் நடந்ததைச் சொன்னான். அதற்குள் விடிய ஆரம்பித்தது. மூவரும் வழிப்பயணத்தைத் தொடர்ந் தனர்.
நகர எல்லையில் ஒரு வீடு வாங்கிக்கொண்டு சௌகர்யமாக வாழ்ந்தனர். தினமும் அன்னதானம் நடத்தி, இசைமழை பொழிந்து அனைவரையும் மகிழ்வித்த அவர்களை, அழைத்து வரும்படி தளபதியை அனுப்பினான் வேந்தன்.
அரசன் அவர்களை வரவேற்று புல்லாங்குழல் இசையைக் கேட்டான்.
அரண்மனையில் சிறிது நாள் விருந்தினராகத் தங்கும்படி கேட்டுக்கொண்டான். மூவரும் சம்மதித்தனர்.
அரசகுமாரன் புவனேந்திரன் சோம்பேறி. தந்தை அம்மூவரையும் புகழ்வதைக் கண்டு பொறாமை கொண்டான். அவர்களிடம் நட்புக் கொண்டான்.
ஒரு நாள் அவர்கள் தூங்கும் போது மூன்று அகிசயப் பொருள்களையும் களவாடி மறைத்து வைத்தான். அரசன் அரண்மனை முழுவதும் தேட உத்தரவிட்டான். இளவரசன் அறையைச் சோதனை செய்ய யாருக்கு தைரியம் வரும்? மூவரும் வருத்தமாக அரசனிடம் விடை பெற்று வீட்டுக்குச் சென்று வனதேவதையை தியானித்தனர்.
வனதேவதை தோன்றி, “இந்த மாம்பழக் கூடையை இளவரசனுக்குப் பரிசளியுங்கள். இதில் ஒரு மாம்பழம் தங்க நிறத்தில் பளபளப்பாக இருக்கும். அது பொல்லாதவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்” என்று கூறி மறைந்தது.
பழக்கூடை யோடு அரண்மனைக்குச் சென்று புவனேந்திரனிடம் கொடுத்தனர்.
"இளவரசே! தாங்கள் அன்போடு பழகினீர்கள்! அதற்காக இப்பழங்களைப் பரிசளிக்கிறோம். அதிலும் நெத்த தங்கநிறப்பழம் கிழத்தன்மை வராது தடுக்கும். நண்ட நாள் புகழோடு வாழவைக்கும்" என அளந்தனர்.
இளவரசன் ஆசையோடு எடுத்துக் கடித்தான். அவனது இரு உதடுகளும் வீங்கிக்கொண்டே போயின. பாதிப்பழம் சாப்பிடுவதற்குள் மேல் உதடு வயிறுவரை வளர்ந்து தொங்கியது. கீழ் உதடோ தரையைத் தொட்டது. மாம்பழத்தை வீசி எறிந்தான்.
மூவரும் மெதுவாக அங்கிருந்து நழுவினர்.
அரசர் வந்து பார்த்து சோகமானார். வைத்தியம், மாந்திரீகம் எதற்கும் வளர்ச்சி கட்டுப்படுவதாயில்லை. கத்தியால் அறுத்துப் பார்த்தனர். இளவரசன் போட்ட கூச்சல் கர்ண கடூரமாயிருந்ததோடு கத்தியும் உடைந்தது.
அப்போது வனதேவதை ஒரு துறவி வடிவில் வந்தது. அரசகுமாரனைத் தான் குணமாக்குவதாகக் கூறியது! அரசர் சம்மதித்தார். சோழி குலுக்கிப்போட்டு, ''புவனேந்திரன் எதையோ திருடியிருக்கிறான். எடுத்து வந்து கொடுத்தால் உதடுகள் பழையபடி ஆகும்” என்றார் துறவி.
இளவரசன் ஓடிப்போய் புல்லாங்குழலை எடுத்து வந்து வைத்தான். உதடுகளின் நீளம் மூன்றில் ஒரு பாகம் குறைந்தது.
“ம், இன்னும் இருக்கிறது” என்று துறவி சொல்ல, கங்கணத்தையும் பொற்பையையும் கொண்டுவந்தான். உதடு 'மளமள'வென்று சுருங்கி பழைய நிலைக்கு வந்தது.
அரசன் தன் மகனைக் கண்டித்தார். துறவிக்குப் பரிசளித்தனுப்பினார். வனதேவதை அபூர்வப் பொருட் களையும் பரிசையும் மூன்று நண்பர்களிடம் ஒப்படைத்தது.