கூர்ஜரத்தை ஆண்ட அரசர் கும்பசேனன். அவ ருடைய மந்திரிகளிலே அறிவு நிறைந்தவர் குணாளன். அதனால் அரசனுக்கு குணாளனிடம் பிரியம் அதிகம். மற்ற மந்திரிகளுக்கு இது பொறாமையைத் தந்தது. அதிலும் துரந்தரர் அவரைக் கவிழ்க்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார். இதை குணாளனும் அறிவார்.
ஒரு நாள் மன்னர் "குணாளா! நம் சபையில் உள்ளவர்களைவிட அறிவாளிகள் நாட்டில் உண்டா ?" என்று கேட்டார்.
"ஏன் இல்லாமல்? ஒரு சோதனை செய்து பார்த்து விடலாமா? ஆனால், இது பற்றி எவரிடமும் வாய் திறக்கக்கூடாது. நம் அமைச்சர்களில் துரந்தரர் எப்படி?" என்று கொக்கியிட்டார் குணாளன்.
"உன்னளவு இல்லாவிட்டாலும் புத்திசாலிதான்! எத்தனை யோசனைகள் சொல்லியிருக்கிறார்!'' என்றார் வேந்தர்.
ஒப்புக்கொள்கிறேன் அவரைவிட மேதாவி ஒருவரை மக்களிலிருந்து அடையாளம் காட்டட்டுமா?'' என்று சவாலாகக் கேட்டார் மந்திரி.
கும்பசேனன் வியப்போடு ஒப்புக்கொண்டார்.
“அரசே! பலகாரக்கடை வைத்திருக்கும் பலராமனை அழைத்து வரச் சொல்லுங்கள்” என்றார் அமைச்சர்.
“பலராமனா? எழுத்து வாசனையே கிடையாதே'' என்று ஆச்சரியப்பட்டார் மன்னர்.
“படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை ! பலராமிடமும் துரந்தரரிடமும் நான்தான் பேசுவேன். நீங்கள் குறுக்கிட்டால் காரியம் கெட்டுவிடும்" என்று நிபந்தனை விதித்தார் அமைச்சர்.
முதலில் மந்திரியை அழைத்து வரச் செய்தார் குணாளன். துரந்தரர் வந்ததும் குணாளன் அவரிடம், "நண்பரே! முன்னர் இளவரசருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததல்லவா? அப்போது இளவரசர் குணமானால் திருப்பதிக்கு முடிகாணிக்கை தருவதாக வேண்டிக்கொண்டேன். இளவரசர் முடியை இழக்க மறுக்கிறார். அவருக்கு பதில் எவராவது முடிகாணிக்கை செலுத்தலாம். அரசர் அன்னை பவானிக்கு முடி தருவதாக நேர்ந்து கொண்டிருக்கிறார். நான் தரலாமென்றால் என் தாயார் இறந்து ஒரு வருடம்
ஆகவில்லை! இப்போது முடி தந்தால் தெய்வம் ஏற் காது. உங்கள் ஞாபகம் வந்தது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால்..." குணாளன் முடிப்பதற்குள்,
“எனக்கென்ன மறுப்பு? இளவரசருக்காக முடியிறக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எங்கே எப்போது தர வேண்டும்?" என்று பரபரப்பானார் துரந்தரர்.
மன்னரின் அபிமானத்தைப் பெற இது சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார். விடுவாரா?
"அமைதி, அமைதி. நாவிதரை அழைத்து வரச் சொல்லியிருக்கிறேன். இங்கேயே கொடுத்துவிடுங் கள். அரசர் குடும்பத்தோடு போய் வேண்டுதலை நிறைவேற்றி விடுவார். உங்களுக்கு அதற்காக எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டார் குணாளன்.
"அபசாரம், அபசாரம்! தெய்வகாணிக்கைக்குப் பணம் கேட்கலாமா?" என்று துரந்தரர் பதற,
“விலை கொடுக்காவிட்டால் வேண்டுதலை தெய்வம் ஒப்புக்கொள்ளாது. ஏதாவதொரு தொகை சொல்லுங்கள்” என்றார் துரந்தரர்.
மன்னர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
"அப்படியா, சரி. ஐம்பது ரூபாய் கொடுங்கள்" என்றார் துரந்தரர். நாவிதரும் வந்துவிட்டார். சந்தோஷ மாய் முடியிறக்கிக்கொண்டு ஐம்பது ரூபாய் பெற்று மன்னரை வணங்கிச் சென்றார் துரந்தரர்.
கும்பசேனனுக்கு எதுவும் புரியவில்லை . ஆயினும் மௌனமாக இருந்தார். அடுத்து காத்திருந்த பலராமன் அழைக்கப்பட்டார். துரந்தரரிடம் கூறியதை அவ ரிடமும் கூறினார் குணாளன்.
பலராமனும் சந்தோஷமாய் சம்மதித்தான்.
"உனக்கு அதற்கு எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார் மந்திரி.
"எஜமானே! தகப்பனார் இறந்தபோது முடி யிறக்கினேன். ஐயாயிரம் செலவாச்சு. அம்மா இறந்த போது மொட்டை போட்டுக்கொண்டேன். அதுக்கு ஐயாயிரம். அப்புறம் பிரார்த்தனைக்கென்று பழனி, திருப்பதி, குருவாயூர் ஒவ்வொன்றிலும் குடும்பத் தோடு போய் முடி இறக்க மொத்தமாகப் பத்தாயிரம் செலவு பண்ணியிருக்கேன். இது ராஜா மகனுக்காகப் போட்டுக்கற மொட்டை. இதுக்குத் தட்சிணை தரேங்கறீங்க! இருபத்தஞ்சாயிரம் தந்தா சந்தோஷப் படுவேன்” என்றான்.
இருபதாயிரம் கொடுத்தார் மந்திரி. நாவிதர் அழைக்கப்பட்டார்.
நாவிதர் தலையில் தண்ணீர் தெளிக்கவும் பலராமன் கோபமாக, "இது சுத்தமான நீரா? ராஜா மகனுடைய முடியாக்கும் இது! கண்டபடி பிடிச்சிழுக் காதே! உடம்புதான் பலராமன். முடி ராஜகுமாரனோட தாக்கும்! கத்தியை நல்லா சாணை பிடிச்சிருக்கியா? இது சாவுக்கு அடிக்கிற மொட்டையில்லே! பிரார்த் தனை முடியாக்கும்” என்று அதிகாரமாய்ப் பேச, மன்னரின் பொறுமை எல்லை கடந்தது. "குணாளா! இந்த முட்டாளை முதலில் விரட்டு. இது என்ன பித்துக்குளித்தனமான சோதனை?" என்று எரிந்து விழுந்தார்.
நாவிதர், பலராமன் இருவருமே ஓடிப்போனார் கள். அவர்கள் சென்ற பிறகு, “அரசே! இருபதாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு முடியைக் கொடுக்காமல் போன பலராமன் புத்திசாலியா? ஐம்பது ரூபாய்க்கு முடியை இழந்த துரந்தரர் புத்திசாலியா?" என்று கேட்டார் குணாளன்.
பலராமன் பணத்தைத் திருப்பித்தர முன் வந்தபோது 'எடுத்துக்கொண்டு தொலை என்று எரிந்து விழுந்தவராயறே மன்னர்! என்ன பேச முடியும்.