Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

சீதா நாடு கடத்தப்படல்

நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….

[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]

 

 

இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,

நேரம்: பகல் வேளை.

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.

[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]

இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?

இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?

இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?

இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!

பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவும் மில்லை.

இராமன்: பரதா!…. இம்முறை…. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?

பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.

இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?

இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!

மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?

இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!

இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!

இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.

இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!

இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?

 

இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?

இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!

பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.

இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனித்ததை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.

பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?

இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.

சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?

இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!

இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?

இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!

இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘

இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.

பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?

இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!

இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!

இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.

(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)

(முதல் காட்சி முற்றும்)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.