Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

தீண்டப்படாத சீதா

~ சீதாயணம் ~

(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

 

 

 

முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.