Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

“தமிழ்த் தாத்தா” உ.வே.சா கதை!

ஓலைச் சுவடிகளை திரட்டி பல தமிழ் இலக்கியங்களை காத்த “தமிழ்த் தாத்தா” உ.வே.சா கதை!

உ.வே.சாமிநாதய்யர் (உ.வே.சா) ஒரு தமிழறிஞர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சா குறிப்பிடத்தக்கவர்.  பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது என்றால் அதற்கு உ.வே.சா தான் காரணம்.

credit commons wikimedia

தோற்றம்

உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் பாபநாசத்தில் உள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் வேங்கட  சுப்பையர், சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.  இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். இவரது தாயார் சாமிநாதன் என்ற செல்லப் பெயரால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்து விட்டது.இவரது தந்தை ஒரு இசைக் கலைஞர். உ.வே.சா அவரது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் கற்றார். உ.வே.சா சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராயிருந்தார். இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடிய போதும் குடும்பத்திற்காகவும் உ.வே.சா கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்தார். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு கூட வசதியில்லாமல் ஊர் ஊராகச் இடம் பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்த போதும், மனம் தளராமல், தமிழை விடாமுயற்சியுடன் கற்றார் உ.வே.சா.  இவர் தந்தை  இராமாயண விரியுரை நடத்திவந்தார். சில சமயங்களில் உ.வே.சா வும் அவருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்து வந்தார். சடகோப ஐயங்காரிடம் கற்ற போது அவருக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூரில் தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது.

ஆசிரியர் பணி 

1880 பிப்ரவரி 16 ஆம் தேதி கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர் பணியை ஏற்ற உ.வே.சா. தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்பு 1903 நவம்பரில் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பதவியேற்றார். அங்கு 16 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த  இரண்டு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். 1924 ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை உ.வே.சா. ஏற்றார்.

creditphila art

பதிப்பித்தல் பணி 

உ.வே.சா 1878 ஆம் ஆண்டு, அவரது 23 ஆம் வயதிலேயே ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றியிருந்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். பல இடர்பாடுகளுக்கு இடையிலும் சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, புறநானூறு  உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டறிந்து முழுப்பொருள் விளங்கும் படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கினார். இவரது தனிச்சிறப்பு என்னவென்றால் உ.வே.சா ஒரு நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் அந்த நூலில் சேர்த்து பதிப்பிப்பார். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உ.வே.சா எதையும் பதிப்பிக்கமாட்டார். இதனால் தமிழின் தரம் மேலும் மேலும் உயர்ந்தது. இவர் பிரதிகளைத் தேடித் தேடி தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான் மைல்களை உ.வே.சா பயணம் செய்துள்ளார். உ.வே.சாவிடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர். தன்னுடைய சொத்துக்களைக் கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.தொடர்ந்து மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். தமிழர்கள் பலர் அளித்த ஊக்கம் தான் அவர் பதிப்பித்தல் பணியை தொடர்ந்து செய்ய காரணமாகியது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்தார்.

எழுதிய நூல்கள்

உ.வே.சா பல செய்யுள்களையும், உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளாா். தந்தையாரின் வருமையைக் கண்டு, ஒரு செல்வந்தரிடம் சென்று நெல் வேண்டும் என்று இயற்றிய செய்யுள் தான் அவரின் முதல் செய்யுள். கலை மகள்துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், மகா வைத்தியநாதையர், கனம் கிருஷ்ணையர், கோபால கிருஷ்ண பாரதியார், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற நூல்களையும்  புதுக்கோட்டை திவான் சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், சுப்ரமணிய பாரதியார், இசைப் புலவர் ஆனை ஐயா முதலியோர் பற்றியும் தனித்தனியே கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உ.வே.சா அவரது வாழ்க்கை வரலாற்றை “என் சரித்திரம்” எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

Credit: wikipedia

அச்சு பதித்த நூல்கள்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4. உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

மறைவு

தமிழ் தாத்தா எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி 1942 ஆம் ஆண்டு அவருடைய 87 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

பட்டங்கள் மற்றும் சிறப்புகள் 

உ. வே. சா அவர்களின் தமிழ்த்தொண்டினை தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான சூலியன் வின்சோன், ஜி.யு.போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். 1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, “இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி தான் என்னிடம் எழுகிறது’ என்றார். இந்த மாநாட்டின் போது அனைவராலும் “தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்டார். உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர தக்க்ஷிண கலாநிதி என்னும் பட்டமும் பெற்றுள்ளார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி “மகா மகோ பாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது.  இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

உ.வே.சா.வின் மகத்தான உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல நூல்கள் கிடைத்திருக்காது..

உ. வே. சாமிநாதையர்

https://ta.wikiquote.org/s/qy

Jump to navigationJump to search

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சுயசரிதையில் இருந்து

காகிதம் என்பதறியா மக்கள் ஓலைகளில் எழுதி வைத்திருந்ததைப் படிக்கும் போது ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி

இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. ரகரத்துக்கும் (துணைக்) காலுக்கும் வேற்றுமை தெரியாது. சாபம்சரபமாகத் தோன்றும் ஓரிடத்தில் சரடு என வந்திருந்தது. அந்த வார்த்தையைப் பலகாலம் சாடு என்று நினைத்தேன். இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதம் தெரியாமல் மயங்கின இடங்கள் பல.

 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.