Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

13. உயிர்த்தாகம்

சமரேஷ் பாசு 

மழை பெய்து கொண்டிருந்த ஒரு தேய்பிறை இரவு.

மழை என்றால் திடீரென்று வானத்தில் மேகங்கள் குவிந்து , இடி இடித்து - மின்னல் மின்னிக் கொட்டோ கொட்டென்று ஒன்றிரண்டு பாட்டம் கொட்டித் தீர்க்கும் பெருமழை அல்ல - கட்டிப்போன தொண்டையிலிருந்து அலுப்புத் தரும் வகையில் தொடர்ந்தாற்போல் ஒலிக்கும் அழுகைக் குரல் போல் சில நாட்களாகப் பெய்து கொண்டேயிருக்கிறது மழை - கூடவேகிழக்கிலிருந்து இடைவிடாமல் புயற்காற்று -- புறநகர்ப்பகுதியின் பெரிய ரஸ்தாவைத் தவிர மற்ற தெருக்களும் சந்துகளும் சேறும்சகதியும் நிறைந்த நீண்ட சாக்கடைகளாகி விட்டன. எங்கும் குப்பை , நாற்றம் , எண்ணற்ற வீடுகள் ஒன்றையொன்று நெருங்கியவாறு நின்று கொண்டிருந்தன,

நான் இருப்புப் பாதையையொட்டிய ரஸ்தாவில் போய்க் கொண்டிருந்தேன், நனைந்து கொண்டேயிருந்ததால் என்உடம்பின் கதகதப்பைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை , திறந்தவெளி வழியே அடித்துக் கொண்டிருந்த காற்று ஒரேயடியாகத் தாக்கி உடம்பை நடக்கியது - பற்கள் உரசிக் கொண்டன - வேறு வழியின்றி நான் இடதுபக்கம் திரும்பி ஊருக்குள் நுழைந்தேன் . அங்கு புயலின் தாக்குதலாவது குறைவாக இருக்குமே .

சணல் தொழிற்சாலைகள் மிகுந் அந்த ஊர் அயர்ந்து மயங்கினாற் போலிருந்தது. அதன் இயற்கையான வேலைச்சுறுசுறுப்பும் நடமாட்டமும் அடைமழையில் நமுத்துப்போய் விட்டன போலும். வேறு நாளாகயிருந்தால் தெருநாய்கள் குரைத்துக்கொண்டே வந்து துரத்தும் , இன்று அவை பெயருக்கு ஓரிரு முறை உறுமிவிட்டுத் தங்கள் உடலில் விழுந்திருந்த தண்ணீரை அகற்ற உடம்பைச் சிலிர்த்துக் கொண்டன. குடும்பஸ்தர்கள் இருக்குமிடம் தெரியவில்லை . வீட்டு வாசல்களிலோஜன்னல்கள்லோ ஒரு பொட்டு வெளிச்சங்கூடக் கண்ணில் படவில்லை . தெருவிளக்குகள் ஒரு கண் பொட்டையான மிருகங்கள் போல் பார்த்தன. அவற்றின் மங்கிய வெளிச்சம் இருளைச் சற்றும் குறைக்கவில்லை.

நான் செல்லும் வழி எனக்குச் சரியாகத் தெரியவில்லை - என்றாலும் வடக்குத் திசையிலேயே போய்க் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது. பாதையோரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன் - தாழ்வான பாதை , தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஏதாவதொருவீட்டுத் திண்ணையில் ஏறிக்கொண்டு இரவைக் கழிக்கலா மென்றால் அதற்கும் வழியில்லை - காரணம் , சேரிபோல் காணப்பட்ட இந்தக் குடியிருப்பில் வீடுகளுக்குத் திண்ணை இல்லை - வீடுகளின் நிலையைப் பார்த்தால் அவற்றுக்குள்ளேயும் தரைகாய்ந்திருக்காது என்று தோன்றியது . இங்கு எங்கேயாவது படுத்துக் கொண்டால் ஜனங்கள் பலவிதமாகப் பேசுவார்கள். அதோடுபோலீசின் தொந்தரவு வேறு.

நான் நைஹாத்தி ரயில் குடியிருப்பில் ஒரு நண்பனின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் . அங்கு போய்ச் சேர்ந்துவிட்டால் இந்தச் சங்கடமான இரவின் மழை குளிரிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் உலர்ந்த உடையும் சில நாட்களுக்காவது உணவும் கிடைக்கும்..

எங்கள் குழுவைவிட்டு நான் வெளியே புறப்பட்டிருக்கக் கூடாது என்று இப்போது தோன்றுகிறது - சோற்றுக்குப் பறக்கும் நண்பர்களடங்கிய எங்கள் குழுவில் ஒருவன் சில நாட்களுக்குமுன் இறந்துபோய் விட்டான். அதிலிருந்தே நான் அங்கிருந்து வெளியேறிச் சற்று இளைப்பாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - நண்பன் இழந்தது நல்லதுதான் - சாவைத்தவிரவேறென்ன முடிவு ஏற்பட்டிருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை . பிழைத்திருக்க என்னென்ன தேவையோ அவையெதுவும் அவனிடமில்லை . இருந்தாலும் நெஞ்சுக்குள் அது கிடக்கட்டும்.. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் அவன் சாவதற்கு முன் என்னிடம் ஒரு பொருளைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறான் . சிறிய பொருள்தான் , ஆனால் அதன்சுமை மலைபோல் கனமாக , வருத்துவதாக இருக்கிறது - சுமை என்னவென்றால்...

அடேயப்பா , காற்று முதுகெலும்பின் வேரைப் பிடித்துக் குலுக்குகிறது . மழையும் வலுத்துவிட்டது திடீரென்று - இவ்வளவுநேரங்கழித்து இப்போது இடிக் குமுறலும் கேட்கிறது . இப்போது பற்கள் மட்டுமல்ல , எலும்புகளும் ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன . மரத்தின் முதிர்ந்த கிளைபோல் ஒரேயடியாக நனைந்து ஊறிப் போய்விட்டேன் ....

இப்போது நான் ஒரு நாற்சந்திக்கு வந்திருந்தேன் , பக்கத்தில் சணல் தொழிற்சாலையின் சரக்குகளை ஏற்றியிரக்கப் பயன்படும்கிளை இருப்புப் பாதை - அந்த இடம் சற்றுத் திறந்தவெளி . அங்கே ஒரு எருமை மாட்டுக் கொட்டிலைப் பார்த்து அங்குநுழைந்து விடலாமா என்று நினைத்து அந்தத் திசையில் நான் அடியெடுத்து வைத்தபோது யாரோ என்னைக் கூப்பிடுவது கேட்டது - "ஏய், இங்கே வா!"

எனக்கு அசரீரியில் நம்பிக்கையில்லாவிட்டாலும் நான் திடுக்கிட்டுத்தான் போய்விட்டேன் - அழைக்கப்படுவது நான்தானா ? மழைத்தாரையை ஊடுருவிப் பார்த்து அந்தக் குரலுக்குரியவரைத் தேடினேன் , வலது புறத்தில் ஒரு மங்கலான ஒளிக்கீற்றுகண்ணுக்குத் தென்பட்டது . அங்கே அரைகுறையாகத் திறந்திருந்த கதவின் மேல் சாய்ந்து கொண்டு ஓர் உருவம் , ஒரு பெண் ..அப்படியானால் என்னைக் கூப்பிட்டிருக்க மாட்டாள், முன்னோக்கி அடியெடுத்து வைத்தேன்

"வாய்யா இங்க!"

நின்றேன். "என்னய்யா கூப்பிட்டீங்க?" என்று கேட்டேன்

"வேறே யாரு இருக்காங்க இங்கே?" என்று பதில் வந்தது.

அவள் பேசிய விதத்தைக் கேட்டுத் திடுக்கிட்டேன் . மோசமான இடத்துக்கு வந்துவிட்டேன் போலும் ! அது வேசித்தெரு இல்லாவிட்டாலும் மட்டமான ஜனங்கள் வசிக்கும் சேரிப் பகுதியாயிருக்கலாம்.

நான் உள்ளூரச் சிரித்துக் கொண்டேன். சரியான ஆளாப் பார்த்துத்தான் கூப்பிடுகிறாள் அந்தப் பெண்!

அந்தக் கதவருகில் சற்று நேரம் நின்றால் கூடத் தேவலைதான்,

நான் அசையாமலிருப்பதைக் கண்டு அந்தப் பெண் "இந்த ஆள் செவிடா என்ன?" என்று உரக்கச் சொல்லிக் கொண்டாள்

"போய்த்தான் பார்க்கலாமே !" என்று நினைத்தேன் . உண்மை தெரிந்ததும் அவளே என்னை விரட்டி விடுவாள் . மழையின்தீவிரம் குறையும் வரையில் தலைக்குமேல் ஒரு கூரை கிடைத்தால் நல்லதுதானே! இப்போதிருக்கும் நிலையில் எருமைக்கொட்டிலைத் தாண்டிக்கூடப் போக முடியாது . நைஹாத்தி போய்ச் சேர்வது பற்றிப் பேச்சே இல்லை!

அந்தப் பெண்ணுக்கருகில் வந்தேன் . இயற்கையாக எழுந்த தயக்கத்தை மீறிக்கொண்டு "என் கூப்பிட்டே?" என்று கேட்டேன்.

சிரிப்பும் எரிச்சலும் கலந்த குரலில் அவள் சொன்னாள் , "எந்த ஊர் ஆளுடா இது ..! சரி சரி, உள்ளே வா!"

நான் உள்ளே நுழைந்ததும் அவள் கதவை மூடிவிட்டாள் - மழையின் அரவம் சற்றுக் குறைந்தது . வெளியேயிருந்து சாரலடிக்க வழியில்லை இருந்தாலும் ஓட்டுக் கூரையின் ஓட்டைகள் வழியே தண்ணீர் ஒழுகித் தரை ஈரமாயிருந்தது . கட்டிலிலிருந்த படுக்கைமட்டும் நனையவில்லை . அறைக்குள் ஒரு சில பாத்திரங்கள் - பானை, தட்டு, டம்ளர் ....

"இந்த அடைமழையிலே எங்கே சாகறதுக்குப் போறே ?" எனக்கு வெகு நாள் பழக்கமானவள்போல் அவள் பேசினாள்.

"ரொம்ப தூரம் .. ஆனா ..."

"புரிஞ்சுது .." குறும்பாகச் சிரித்தாள் அவள் "ரூம் பூராச் சேறாக்கிட்டே நீ .. சரி, மொதல்லே இந்த ஈரத்துணியை அவுத்துப்போடு !"

குளிர் ஒரு புறம் , திகைப்பு ஒரு புறம் ; உறைந்து பொய்விடும் நிலை எனக்கு .. "ஆனா ..."

"ஒனக்கு உடுத்திக்க என்ன தருவேன் ? நனைஞ்ச சட்டையைக் கழட்டு மொதல்லே ...!"

சட்டையைக் கழற்ற முடிந்தால் நிம்மதிதான் எனக்கு . ஆனால் -- குரலில் சற்று வலுவை வரவழைத்துக்கொண்டு , "நீகூப்பிட்டது வீண்தான் , என் சட்டைப் பை காலி !" என்றேன்.

பெண் திகைத்து நின்றாள் . நான் நினைத்தது சரிதான். அவள் வாயைத் திறந்தவாறு என்னைப் பார்த்துக்கொண்டுசிறிது நேரம் நின்றாள் . அவளுக்கு என் பேச்சில் நம்பிக்கை ஏற்படவில்லை போலும்!

"ஒண்ணுமே இல்லியா?" நிராசையால் அவளது முகம் இருண்டுபோய் விட்டது .

"காசு இருந்தா இந்த மாதிரி மழையிலே அலைஞ்சுக் கிட்டிருப்பேனா ?" அவள் சோர்ந்து போய் மௌனமாக நின்றாள் . இப்படி நடக்குமென்று.

எனக்கு முன்பே தெரியும்.

ஆனால் அவள் தொழில் செய்பவள் , பிச்சைக்காரி அல்ல.

நான் கதவைத் திறக்கப் போனேன்.

"இப்போ எங்கே போகப் போறே?" அவள் பின்னாலிருந்து கேட்டாள் .

"அந்த எருமைக் கொட்டிலுக்கு " என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தேன் - ஐயோ ! குளிர்காற்று என்னைவிழுங்க வருவது போல் தாக்கியது . நான் வெளியில் கால் வைத்தேன்.

அவள் திடீரென்று பின்னாலிருந்து கூப்பிட்டாள் , "ஏய் , இதைக் கேளு! எப்போ கூப்பிட்டேனோ , இங்கேயே ராத்திரி இருந்துட்டுப் போ ..உம் , என் அதிருஷ்டமே இப்படித்தான்!" ஒரு பெருமூச்சு விட்டாள் அவள் -

"ஒன் அதிருஷ்டம் நல்லாவேயிருக்கட்டுமே ! நான் கொட்டிலுக்கே போயிடறேன்."

"ஒன்னிஷ்டம் " என்று சொல்லிவிட்டு அவள் கட்டிலில் உட்கார்ந்தாள் . "இன்னிக்கு இனிமே நம்பிக்கை இல்லே."

"இந்த அடைமழையிலே தங்க ஒரு இடம் கிடைச்சிருக்கற போது அதை விடுவானேன் ?" என்று தோன்றியது எனக்கு - ஒருபெண் பிள்ளையோடு இரவைக் கழிப்பது மிகவும் அசிங்கம் என்றும் தோன்றியது . ஏனென்றால் எனக்கு இது ஒரு புதுமாதிரி அனுபவம் எனக்குப் பெண்களிடம் ஆர்வமும் ஈர்ப்பும் மற்றவர்களைவிட அதிகமாகவே உண்டு என்பது உண்மைதான் .ஆனால் இந்த மாதிரியா ! சீச்சீ - இது என்னால் முடியாது ...! ஆனால் அவளோடு படுத்துக் கொள்ளாமலும் இரவைக்கழிக்கலாமே ...! நான் அறைக்குள் மறுபடி நுழைந்து கதவை மூடினேன்.

அவள் நல்ல உயரம் - மாநிறம் - வற்றிய கன்னங்கள் - எப்போதும் பசும்புல்லைத் தேடிக் கொண்டிருக்கும் மாட்டின்கண்கள் போன்ற பெரிய பெரிய கண்களில் மை . முகத்தில் சாயம் தடிமனான உதடுகளுக்கு மேல் மூக்கு நுனி மேலேதிரும்பியிருக்கிறது.

அவள் சிரமப்பட்டுத் தேடி ஒரு பழைய உள் பாவாடையை எடுத்துக்கொண் வந் கொடுத்தாள் -- "இதையே கட்டிக்க வேறே ஒண்ணுமில்லே."

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது பரவாயில்லை , யாரும் பார்க்கவில்லையே! ஆனால்..

திடுக்கென்றது எனக்கு . சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தேன். என் நண்பன் என்னிடம் கொடுத்துவிட்டுப்போன ,மலைபோல் கனக்கும் சிறிய பொருள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன் பொருள் அல்ல அது ; அது ஒரு இரத்தக்கட்டி , ஆம் இரத்தக் கட்டிதான்... எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது . அந்தப் பெண் இருந்த பக்கம் திரும்பி உற்றுப்பார்த்தேன் . அவள் பின்பக்கம் திரும்பிக்கொண்டு தன் உள் பாடியை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

"என்கிட்டே ஒண்ணும் இல்லே, சொல்லிட்டேன்!" என்று சொன்னேன்

"எவ்வளவு தடவைதான் இதைத் திருப்பித் திருப்பிச் சொல்லுவே?" என்று அலுப்போடு கேட்டாள் அவள்.

"இருந்தாலும் முன்னாலேயே சொல்லிடறது நல்லது . எனக்கு ஒரு ஆசையுமில்லே... நான் ஒரு வழிப்போக்கன் மாதிரி ராவைக்கழிச்சிட்டுப் போயிடறேன்."

அவள் தன் மாட்டுக் கண்களையுயர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு "யார் ஒன்னைக் கட்டாயப் படுத்தறாங்க ?" என்று கேட்டாள்.

அவள் சொன்னது சரிதான் . நான் அந்த உள் பாவாடையை அணிந்து கொண்டேன். இருந்தாலும் திறந்த மேலுடம்பு குளிரில் வெட வெடத்தது. வெளியே மழையும் காற்றும் பட்டுக் கதவு அதிர்ந்தது.

அவள் என்னைப் பார்த்துவிட்டுச் சிரிப்புத் தாங்காமல் புடவையை வாயில் திணித்துக்கொண்டாள். பிறகு ஒரு பழையபுடைவையை எடுத்து என் பக்கம் எறிந்துவிட்டு , "இதை ஒடம்பிலே சுத்திக்கிட்டுப் படு " என்றாள்.

பிறகு அவள் என் ஈரத் துணிகளை ஒரு கொடியில் உலர்த்திவிட்டு , "இதெல்லாம் சீக்கிரம் காஞ்சுடும் " என்று சொன்னாள்.

சுக உணர்வு இருக்கிறதே, அது மிகவும் பயங்கரமானது . இந்த மாதிரி சங்கடமான நிலையில், நான் ஒரு வேசிப்பெண்ணின்வீட்டில் இருக்கிறேன் என்பதையே மறந்து போய்விட்டேன். "என் வயிறு அடியோடு காலி. அதனால்தான் இந்த மழையிலேயும்காத்திலேயும் ரொம்ப அசந்து போயிட்டேன்" என்று சொன்னேன்.

அவள் பதில் சொல்லாமல் முகத்தை முழங்கால்களுக்கு நடுவே புதைத்துக் கொண்டிருந்தாள்.

"சரி, படுத்துக்கறேன்" என்றேன்.

அவள் தலையைத் தூக்கினாள் . அவளது முகத்தில் வேதனை . தெளிவாகத் தெரிந்த அவளது நெஞ்சின் எலும்புகள் அவள் மூச்சுவிடும் போது ஏறி இறங்குகின்றன. "சாப்பிடறியா .. சோறும் கூட்டும் இருக்கு."

சோறும் கூட்டுமா? நிஜமாகவா ? எதிர்பாராத அதிருஷ்டந்தான் ! சோற்று மணத்திலேயே அரைவயிறு நிரம்பி விடும் சோறே கிடைத்துவிட்டால் சொல்ல வேண்டுமா?

என் நாக்கில் நீர் ஊறியது . என் வயிறோ என்னிலிருந்து வேறுபட்ட ஒரு தனிப் பிராணிபோல் 'சோறு' என்ற பெயரைக்கேட்டதுமே உற்சாகத்துடன் அசைந்து கொடுத்தது. ஆனால் -

இதற்குள் அவள் பீங்கான் தட்டில் சோற்றை வைத்து விட்டாள் . அதைப் பார்த்ததும் என் மனதில் மறுபடி சந்தேகம் எழுந்த . நான் அவசரம் அவசரமாகக் கொடியிலிருந்த என் சட்டையை எடுத்துக்கொண்டேன் . நிலைமை மோசமாகத்தோன்றியது . நான் பயந்துகொண்டே சொன்னேன், "சோத்துக்க் கொடுக்க என்கிட்டக் காசு இல்லே ."

அவளுடைய மாட்டுக் கண்களில் எரிச்சல் தோன்றியது , "இதை எவ்வளவு தடவைதான் சொல்லுவே ! எருமைக்கொட்டகைதான் ஒனக்குச் சரியான இடம்!"

சுகமாக இருப்பதைவிட நிம்மதியாக இருப்பது மேல் - என் அதிருஷ்டங்கெட்ட நண்பன் சாவதற்கு முன்னால் ஒரு பெரியசுமையை என்மேல் வைத்துவிட்டுப் போய்விட்டான் . இப்போது அதைச் சுமந்துகொண்டு நடமாடுவதே கஷ்டமாயிருக்கிறது எனக்கு அதை வைத்துக்கொள்வதும் கஷ்டம், உதறித் தள்ளுவதும் கஷ்டம் நான் வெளியே மழையிலும் புயலிலும் நின்று கொண்டிருந்ததால் இந்தச் சுமை பற்றிய நினைவே இருந்திருக்காது எனக்கு....

"நீ மனுசங்களோட ஒரு நாளும் இருந்ததில்லியா?" அவள் கேட்டாள்.

நல்ல கேள்வி! கேள்வியைக் கேட்பவள் யார்? ஒரு வேசிப்பெண்.

"இருந்திருக்கேன் , ஆனா ஒன் மாதிரி மனுசங்களோடே இல்லே " என்று சொன்னேன்.

அவள் சற்றுநேரம் மௌனமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள் , பிறகு "சோறு இருக்கே, சாப்பிட்டிடு !இல்லாட்டி வீணாத்தானே போகும்!”

யோசித்துப் பார்த்தேன். சாப்பிட்டால் என்ன! இலவசச் சாப்பாடு! தவிர, வேறு யாரும் பார்க்கவில்லையே!

சட்டையைக் கையில் சுருட்டி வைத்துக்கொண்டு சோற்றை அள்ளியள்ளிப் போட்டுக் கொண்டேன் . பிறகு , ஒரு செம்புத்தண்ணீர் குடித்தேன் - இந்த மாதிரி பரிமாறப்பட்ட சாதத்தைச் சாப்பிடுவது என்னைப் பொருத்தவரையில் ஒரு சுகபோக நிகழ்ச்சி அது காரணமாகவே என் மனதிலும் சந்தேகம் சூழ்ந்திருந்தது.

பிறகு படுக்கை , அது ஒரு சங்கடம் , நான் கட்டிலில் படுத்துக் கொண்டு "நீ எங்கே படுத்துக்குவே?" என்று கேட்டேன்.

அவள் மௌனமாக என்னைப் பார்த்துவிட்டுத் தன் நழுவியிருந்த முக்காட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் .

நான் எழுந்து உட்கார்ந்தேன்

அவள் கட்டிலுக்கருகில் கீழே உட்கார்ந்து கொண்டு சொன்னாள் , "நீயே தூங்கு , நான்தான் தினம் தூங்கறேனே ! ஒருராத்திரிதானே ! நான் ஒன்னைக் கூப்பிட்டதாலே ..." பேசிக் கொண்டிருக்கும் போது அவள் நான் என் சட்டையைக் கையில்சுருட்டி வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். பிறகு கொடியைப் பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பினாள் . நானும் அவளைப் பார்த்தேன்.

"சட்டை ஈரமாயிருக்கே" என்றாள்.

"அதனாலே ஒனக்கென்ன?"

அவள் மௌனமாகி விட்டாள் . சோர்ந்து போயிருந்த என் நரம்புகள் சற்று சுகங் கண்டதும் வெது வெதுப்பாகி வழக்கமான வலுவைப் பெற்றுவிட்டன என்று தோன்றியது - இவ்வளவு நேரம் என்னைத் திண்டாடச் செய்த மழை , புயல் இவற்றின் ஒலி கதவுவழியே மங்கலாக வந்து தாலாட்டுப்பேர்ல் இனிமையாக ஒலித்தது , தூக்கம் கண்ணிமைகளை அழுத்தியது.

அவள் பக்கம் திரும்பிப் பார்த்தேன் . அப்படியே உட்கார்ந்திருந்தாள் அவள் . அவள் எந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறாளென்று சரியாகத் தெரியவில்லை . அவளுடைய தோற்றத்தில் சோர்வு , அமுக்கிவைக்கப்பட்ட வேதனை தெரிந்தது , யார்கண்டார்கள் ! இவர்களிடம் பாசாங்குக்குப் பஞ்சமில்லை , நான் உறங்கியபின் .. நான் நாளைக்கே இந்தத் துரதிருஷ்டம் பிடித்தபொருளுக்கு ஒரு ஏற்பாடு செய்துவிடப் போகிறேன் ! சாகும் தருவாயில் அவன் ஏன் என்னிடம் இந்தப் பொருளைக் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் ? ஒரு இரத்தக் கட்டி ! ஆம் , இரத்தக் கட்டிதான் ! வியர்வை நாற்றமடிக்கம் கந்தைத் துணிப்பொட்டலம் - பெரும்பசியின் நாற்றமும் அதற்குள் அடங்கியிருந்தது - செத்துக் கொண்டிருந்த நண்பன் வாயிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நக்கியவாறு என்னிடம் சொல்லியிருந்தான், "இதை நீ வச்சுக்க!"

அவன் சொல்லிய விதத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் நெஞ்சுக்குள்ளே .. அந்தப் பேச்சு இப்போதுவேண்டாம்!

அப்போதும் அவள் அதே நிலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நான் திடீரென்று சொல்லிவிட்டேன் , "நீயும் கட்டில்லயேகொஞ்சம் தள்ளிப் படுத்துக்க"

அவள் என்னைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "சீ, என்ன தரங்கெட்ட மனுஷன்!" என்றாள் பிறகுபடுத்துக் கொண்டாள்.

என் உடல் இளைப்பாறிய சுகத்தில் தாராளமாகக் கிடந்தது - அந்தப் பெண்ணின் உடம்பு என்னிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்தாலும் அதன் கதகதப்பை என்னால் உணர முடிந்தது .

என்ன விசித்திர இரவு ! எவ்வளவு விசித்திரமான சூழ்நிலை! மற்றவர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்! சீச்சீ ...! ஆனால் என் சோர்ந்து தளர்ந்த உடம்புக்கு இவ்வளவு சுகம் இதற்குமுன் எப்போதாவது கிடைத்திருக்கிறதா என்று எனக்கு ஞாபகமில்லை தூக்கக் கலக்கத்தில் கண்கள் மூடுகின்றன..

ஆனால்...

அது கூடாது .. என் நண்பனைப் பற்றித்தான் சொல்கிறேன் ...

அதிருஷ்டங் கெட்டவன் சாகும் சமயத்தில் "என் இரத்தம் !" என்று சொல்லித் துணிப் பொட்டலத்தைக் கொடுத்தான்.

"என்ன இரத்தம் ?" என்று கேட்டேன்,

அவன் கண்ணீரையும் வாயிலிருந்த ஒழுகிக் கொண்டிருந்த இரத்தத்தையும் துடைத்துக் கொண்டே , "என் நெஞ்சோடரத்தம் .. நான் தினம் சாப்பிடாமே ..." என்று சொல்லித் தன் சோகைபிடித்த , நடுங்கும் விரல்களால் பொட்டலத்தைத்தடவினான்.

என்னால் கோபத்தையடக்க முடியவில்லை . "எதுக்கடா ?" என்று கேட்டேன்.

"குடும்பம் நடத்தறதுக்கா" அவனைத் திட்ட முற்பட்ட என்னை அவன் பேசிய விதம் தடுத்துவிட்டது . என் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது.

அது போகட்டும்...

அந்தப் பெண் வேதனையோடு முனங்கினாள்.

"என்ன ஆச்சு ?" என்று கேட்டேன்.

அவள் என்னைப் பார்த்துவிட்டு , "ஒண்ணுமில்லே " என்று சொன்னாள் , ஆனால் அவள் கண்களிரண்டும் வேதனையால் சிவந்திருந்தன . அவற்றில் அழுகையின் நிழல்,

அவளுடைய வெப்பமான மூச்சுக் காற்றும் என் உடம்புக்கு இதமாயிருந்தது . குளிரால் உறைந்து என் உடலுக்குச் சூடாகஒத்தடம் கொடுப்பதுபோல - அவள் அப்படியொன்றும் அவலட்சணமில்லை என்று தோன்றியது உதடுகளும் மூக்குந்தான் கொஞ்சம் மோசம் அவளுடைய மூடிய கண்ணிமைகள் , நெஞ்சின் மேல் கோத்திருந்த கைகள் , படிந்திருந்த மார்பு இவையெல்லாம் சேர்ந்து ஒரு விசித்திர பிரமையை உண்டாக்கின.

"ஒனக்குத் தூக்கம் வரலியா?" அவள் கேட்டாள்.

"நான் தூங்கப் போறதில்லே" என்று சொன்னேன் - மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் , 'நான் தூங்கிட்டா ஒனக்குரொம்ப வசதியாயிடும் இல்லியா? அது மட்டும் நடக்காது! நீ பேசினால் எனக்கு சந்தேகம் வலுக்கிறது. பேசாம இரேன்!'

வெளியே இன்னும் புயல் , மழையின் ஆர்ப்பாட்டம் குறையவில்லை ஓட்டிலிருந்து ஒழுகும் மழைத்துளிகள் தரையில் விழும் ஒலி கேட்கிறது . கூடவே மூஞ்சூறின் கீச்சு மூச்சு சத்தம்.

அவளிடமிருந்து மறுபடியும் விம்மல்.

"என்ன ஆச்சு?"

சிறிது மௌனத்துக்குப் பிறகு அவள் பதில் சொன்னாள், "சீக்கு"

என்ன சீக்கு?"

பதிலில்லை .

"சொல்லேன்!"

இப்போதும் மௌனம் .

"என்ன சீக்குன்னு சொல்லித் தொலையேன் !"

நான் எரிந்து விழுந்தேன் . "காசம் , காலரா கீலராவாயிருந்தா நான் இப்பவே வெளியே போயிடறேன் - வியாதியோட ஒருசேர்க்கையும் வேண்டாம் எனக்கு!"

"யாரோட சேர்க்கை பிடிக்கும் ஒனக்கு?" அவள் திருப்பித் தாக்கினாள். உண்மைதான், சேர்க்கை பற்றிப் பேச்சு எதற்கு இங்கே "என்ன சீக்குன்னு சொல்லேன் !" என்றேன்.

"இந்த மாதிரி வாழ்க்கையிலே ஏற்படற சீக்குதான் .." இந்த மாதிரி வாழ்க்கையிலே ? ஐயோ ..! நான் பயத்திலும் வெறுப்பிலும் சுருங்கிப் போனேன். "இந்த வியாதியோடே .."

என் கேள்வியைப் புரிந்து கொண்டாள் அவள் - "அஞ்சு பேர் ஒரு ராத்திரியிலே.."

"என்ன அக்கிரமம்! ஏன் வைத்தியம் பண்ணிக்கலே?"

"காசுக்கு எங்கே போவேன்?"

"பணந்தான் சம்பாதிக்கறயே!"

"அதுமொதலாளியோட பணம்னா!"

"மொதலாளியா? இதுவும் ஒரு வேலையா!"

"இல்லாமே என்ன ? மொதலாளிக்கு இது ஒரு தொழில் - இந்த ரூம் , கட்டில், மத்த சாமான்கள் எல்லாம் மொதலாளிக்கு சொந்தம் - நாங்க இங்கே கூலிக்கு ஒழைக்கறோம்."

இதைக் கேட்டு சோர்ந்து போய்விட்டேன் நான் , அப்படியானால் இவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா ? இவர்களும் கூலிக்கு வேலை செய்பவர்கள்தானா?

"அந்த ராஸ்கல் மொதலாளி ஏன் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணலே?"

அது அவன் இஷ்டம் . தொழிற்சாலையிலே எவ்வளவு தொழிலாளிகள் செத்துப் போறாங்க ! தொழிற்சாலை முதலாளி அவங்களுக்கெல்லாம் வைத்தியம் பண்றானா?"

உண்மைதான். அவளுடைய வேதனை நிறைந்த , அமைதியான பார்வை என்னை நிலை குலையச் செய்தது - போர்க்களத்தில் சிப்பாய் உயிரிழக்கிறான்தான் . ஆனால் அன்றாட வாழ்க்கையில் இந்த மாதிரி யுத்தம்!

"அப்படீன்னா..." என்று பேச ஆரம்பித்தேன்.

"அப்படீன்னா வேறே என்ன? மொதலாளி கண்ணிலே மண்ணைத் தூவி நாங்க எடுத்து வச்சுக்கற காசிலே வைத்தியம்செஞ்சுக்குவோம்.."

"உசிரோடிருக்கவா?" சிரிக்க முயன்ற என் முகம் கோணிக் கொண்டது.

"ஆமா , எல்லாருக்கும் உசிர்லே ஆசைதானே !" வேதனை மிகுதியால் உதடுகளைக் கடித்துக்கொண்டு சொன்னாள் அவள்.

உண்மைதானே ! நிலத்தில் புலி வாழ்கிறது என்று தெரிந்திருந்தும் மனிதன் அங்கு வீடு கட்டுகிறான் , ஊரை அமைத்துக்கொள்கிறான் . வெள்ளம், புயல், பசி என்னதான் இல்லை உலகத்தில்? அப்படியும் வாழ ஏங்குகிறான் மனிதன் என் அதிருஷ்டங்கெட்ட நண்பனும் வாழத்தான் ஆசைப்பட்டான் - அந்தப் பொட்டலத்திலுள்ள ஒவ்வொரு காசும் இரத்தத்தின் ஒவ்வொரு துளி. அந்தப் பொட்டலமே ஒரு இரத்தக் கட்டி ..!

"நீ தூங்கப் போறதில்லையா ?" அவள் கேட்டாள் - இல்லை , என் கண்களில் தூக்கமில்லை - என்மேல் அவளது மூச்சுக்காற்றுபடுகிறது - வேதனையால் சூடான மூச்சுக்காற்று - கணப்பு நெருப்பு போல் இதமாயிருந்தது அது - பொட்டலம் வைத்திருந்த சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றன்.

வெளியே முன் போலவே மழை -புயலின் சீற்றம் . இரவே அநேகமாகக் கழிந்துவிட்டது.

என் உடைகளை அணிந்து கொண்டேன்.

அவள் எழுந்தாள், "கிளம்பிட்டியா ?' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

சட்டைப் பையிலிருந்த பொட்டலத்தை இறுகப் பிடித்துக் கொண்டு "ஆமா" என்றேன்....

அந்த அதிருஷ்டங் கெட்டவன் வாயிலிருந்து ஒழுகிய இரத்தத்தை நக்கியவாறு செத்துக்கொண்டே "இதை நீ வச்சுக்க "என்றான்.

ஏன்? ஏன்?

அவள் தன் வேதனையை அடக்கிக்கொண்டு தணிந்த குரலில் "மறுபடி வா" என்று சொன்னாள்.

அந்தப் பெண்ணுக்குத்தான் எப்படிப்பட்ட கண்கள்! ஈன வாழ்க்கையின் சுவடுகள் பதிந்த முகம் , மேலே வளைந்த மூக்குநுனி , தடித்த உதடுகள்.. இருந்தாலும் இத்தகைய முகத்தைப் பார்த்ததேயில்லை நான்!

வேகமாகத் திரும்பிப் பொட்டலத்தை அவள் கையில் திணித்தேன் - அவள் மூச்சு என்மேல் பட்டது . உடனேபார்வையைத் தாழ்த்திக்கொண்டு, பின்பக்கம் திரும்பி , குமுறும் கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டேன் . என் வாயிலிருந்துகிளம்பிய வார்த்தையைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. "என்னைப் பின்னாலிருந்து கூப்பிடாதே!" என்று சொல்லி விட்டுச் சுமை தீர்ந்தவனாக வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

வானப்பிரஸ்த ஆசிரமத்துக்கு அல்ல , நண்பனின் வீட்டை நோக்கி,

கிழக்குக் காற்று என்னை மேற்கே கங்கைக் கரைப் பக்கம் தள்ளிவிட முயன்றது. அதனால் இயலவில்லை ..

('திருஷ்ணா ', 1957)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.