Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

14. நண்பனுக்காக முன்னுரை

பிமல் கர் 

என் நண்பன் காலஞ்சென்ற வசுதா முகோபாத்தியாய் ஒரு பிரபலமாகாத எழுத்தாளன் - வசுதா உயிரோடிருந்தபோது சுமார் இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவனுடைய புத்தகமொன்றை வெளியிட்டோம் . அந்தப் புத்தகப் பிரதிகள் வெகுகாலம் கோயாபகானில் ஒரு அச்சகத்தில் முடங்கிக் கிடந்து வீணாகிவிட்டன - நாங்கள் அதன் சில பிரதிகளை நடைபாதைப் புத்தகக் கடைகளுக்கு இரண்டணா நாலணா விலைக்கு விற்றோம் அந்தப் பிரதிகளை யாராவது வாங்கிப் படித்திருப்பார்கள் என்று எங்களுக்குத் தோன்றவில்லை.

வெகுகாலத்துக்குப் பிறகு அதே புத்தகம் இப்போது மறுபடி அச்சிடப்படுகிறது . அதை அச்சிடுபவன் எனக்கும் வசுதாவுக்கும் நண்பனான புவன் . முதல்தடவை புத்தகத்தை வெளியிட்டவர்களில் புவனும் ஒருவன்.

புத்தகத்தின் பெயர் 'நரகத்திலிருந்து பிரயாணம் ', இந்தத் தடவையும் அதே பெயர்தான் வைக்கப்பட்டிருக்கிறது - முதல் பதிப்பில் புத்தகத்தில் மூன்று கதைகள் இருந்தன . இந்தப் பதிப்பில் இன்னும் இரண்டு கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன வசுதா ஒரு மருத்துவமனையில் இறந்து போனான் . அங்கு போகவோ , அவன் கடைசிக் காலத்தில் ஏதாவது எழுதியிருந்தால் அதை சேகரிக்கவோ சாத்தியப்படவில்லை எங்களுக்குக் கிடைத்துள்ள படைப்புகளையே இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறோம். நான் முதலிலேயே வாசகர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் . நான் எழுத்தாளனில்லை ; முன்னுரை எப்படி எழுதுவதென்று எனக்குத் தெரியாது , என் மொழிநடையும் ஒரு முன்னுரைக்கேற்றதல்ல - புவன்தான் எனக்கு இந்தப் பொறுப்பைக்கொடுத்திருக்கிறான் இளமைக் காலத்தில் நானும் வசுதாவோடு எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் நான்தான் முன்னுரைஎழுதத் தகுந்தவன் என்று புவன் நினைக்கிறான் . தவிர , அவனைவிட எனக்கு வசுதாவைப்பற்றி அதிகம் தெரியும் என்பது அவன் கருத்து. இந்தக் கருத்து சரியில்லை ... புவன் எழுத முயலாவிட்டாலும் வசுதாவிடம் அவனது நேசம் என்னுடையதைவிடக்குறைந்ததல்ல ; வசுதாவுடன் அவனது நெருக்கமும் அப்படித்தான் இருந்தாலும் வசுதாவின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்பொறுப்பு என்மேல் விழுந்திருக்கிறது .

வசுதா போன்ற ஒரு பிரபலமாகாத எழுத்தாளனின் , யாரும் படிக்காத , எல்லாராலும் மறக்கப்பட்ட ஒரு புத்தகத்தை இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் மறுபடி பிரசுரிக்க முன் வந்ததற்கு ஒரு விளக்கம் தேவை - நட்புணர்வு ஒன்றைத்தவிரவேறு முக்கியமான காரணம் எதுவுமில்லை . இறந்துபோன நண்பனுக்காக இந்த முறையில் எங்கள் அன்பைத் தெரிவிப்பதில் எங்களுக்கு தனிப்பட்ட முறையின் சிறிது ஆறுதல் கிடைக்கிறது

நான்கைந்து மாதங்கள் முன்னால் புவன் காசிக்குப் போயிருந்தான் . அங்கு ராமாபுராவில் ஒருவரைச் சந்தித்தான் அவர் வயது முதிர்ந்தவர் . ஒரு நாள் புவன் அவருடைய வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பையன் அங்கு வந்து ஒருபோட்டோவைக் கொடுத்துவிட்டப் போனான் , சில நாட்களுக்கு மன் அந்த அறையில் ஒட்டடையடிக்கும்போது அந்த போட்டோகீழே விழுந்து அதன் கண்ணாடி உடைந்து விட்டதாம். இப்போது மறுபடி கண்ணாடி போட்டு வந்திருக்கிறது அது . தற்செயலாக அதைப் பார்த்த புவன் அதில் வசுதா இருப்பதைக் கவனித்தான் . நிறம் மங்கிய அந்த போட்டோவில் இடம் பெற்றிருந்த மூவரில் ஒருவன் வசுதா . மற்ற இருவர் அந்த முதியவரும் அவருடைய பெண்ணும்.

"இவன் என்னோட நண்பன் வசுதா " என்று புவன் சொன்னான். இவன் ஒரு எழுத்தாளன்."

"என் பெண்ணும் அப்படித்தான் சொன்னா ஆனா நான் ஒரு நாளும் அவன் எழுதிப் பார்க்கல்லே " கிழவர் சொன்னார் "ஒரு தடவை நான் ஹரித்வாருக்குப் பணிவிடை செய்யறதைப் பார்த்தேன் . இது ஹரித்வாரிலே எடத்த போட்டோ - இந்தப்பையன் ஒரு துறவி மாதிரி இருந்தான்... இப்பபோ இவன் எங்கேயிருக்கான், தெரியுமா?"

புவன் ஏனோ அவரிடம் வசுதா இறந்த செய்தியைச் சொல்லவில்லை . "எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டான்

காசியிலிருந்து திரும்பி வந்தபிறகு வசுதாவின் புத்தகத்தை மறுபடி வெளியிட வேண்டுமென்று தோன்றிவிட்டது புவனுக்கு இதற்கு என்ன காரணமென்று பல தடவைகள் அவனைக் கேட்டுவிட்டேன் - அவன் பதில் சொல்வான் , "பிரசுரிக்கறது நம்கடமை - வசுதா உயிரோடிருந்தபோது நான் எவ்வளவோ தடவை 'என்கிட்டே காசு இருந்தா ஒன் புத்தகத்தை முன்னாலேயேபிரசுரித்திருப்பேன் 'னு அவன்கிட்டே சொல்லியிருக்கேன். இப்போ என்கிட்டே பணம் இருக்கு. நான் அதை அவனோட புத்தகத்தை வெளியிடச் செலவு செய்ய விரும்பறேன்"

இந்த நாற்பத்தாறு நாற்பத்தேழு வயதிலும் புவன் முன்போலவே உணர்ச்சிவசப்படுபவனாயிருக்கிறான். என்னால் அப்படி இருக்க முடியவில்லை - எனக்குள்ள ஒரே ஆறுதல் வசுதாவுக்காக இந்த முன்னுரையை எழுத முடிகிறது என்பதுதான் வாசகர்கள் பெருந்தன்மையோடு என் குறையை மன்னித்து விடுங்கள்

முதல் உலகப் போர் முடிந்த ஆண்டில் --அதாவது 1918-ல் மேற்கு வங்காளத்தில் வசுதா பிறந்தான். அது கார்த்திகைமாதமாயிருக்கலாம் , அவனுடைய தந்தை ஒரு போஸ்ட் மாஸ்டர் . அவர்கள் குடும்பம் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்தது. இந்த மாற்றல்கள் வங்காளத்திலும் பீகாரிலுந்தான் - வசுதாவின் தாயார் அடக்கமும் அமைதியும்கடவுள் பக்தியும் மிக்கவர் . வசுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய அக்கா புக்ககத்தில் இறந்துபோய் விட்டாள் . அவனுக்கு வேறு உறவினர் இருந்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது.

வசுதா கல்லூரிப் படிப்புக்காகக் கல்கத்தா வந்தபோது எங்களுக்கு அவனுடன் அறிமுகம் ஏற்பட்டது அவன் கெட்டிக்கார மாணவனல்ல பார்ப்பதற்கும் அழகாயிருக்க மாட்டான் - கரகரப்புத் தொண்டை அவனக்கு ஆனால் நண்பன் என்ற முறையில் அவன் விலைமதிப்பற்றவன் , அவன் தான் படித்ததை விடப் பத்து மடங்கு சிந்தித்தான் அவன் எங்களுக்கு ஏதாவது சொல்லவோ தெளிவாக்கவோ முயலும் போது அவனது கரகரத்த குரல் உணர்ச்சி மிகுதியால் மிகவும் கவர்ச்சிகரமாகிவிடும். அவன் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன் என்பதை அவனுடைய கண்களே சொல்லும் . அவனுக்கு நீள முகம் : கூர்மையானமேவாய் , நீளமான மெல்லிய மூக்கு - ஆனால் கண்கள் சற்றுச் சிறிதாக , பிரகாசமாயிருக்கும் - அடர்த்தியான புருவங்கள் : மாநிறம் ,சுருட்டை முடி , ஒரு சாதாரண வங்காளி இளைஞனிடமிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை எதுவும் அவனிடமில்லை. ஆனால் அவனோடு நெருங்கிப் பழகிய எங்களுக்கு . அவன் எங்கள் மாதிரி அல்ல , அவனிடம் ஏதோ ஒரு தனிக்கவர்ச்சி இருக்கிறது என்று தெரிந்திருந்தது .

பி ஏ படித்துக் கொண்டிருந்தபோது வசுதா எதத் தொடங்கினான் : அதற்கு முன்னாலேயே அவன் எழுதத் தொடங்கிவிட்டானா என்று எங்களுக்குத் தெரியாது . அவனுடைய முதல் கதை எங்கள் நண்பர்கள் நடத்திவந்த ஒரு பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கதை இப்போது கிடைக்கவில்லை - கல்கத்தாவில் குண்டு விழுந்த காலம் அது. எங்கும் குழப்பம் - மக்கள் பயத்தில் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள் . இந்தக் குழப்பச் சூழ்நிலையில் மற்றவர்கள் கதை எழுதியது போல் வசுதாவும் எழுதினான். மிகசாதாரணக் கதை அது அப்போது நாங்கள் அவனைப் புகழ்ந்தாலும் அந்தக் கதை மிகவும் சாதாரணந்தான் - அந்த கதைசம்பந்தமாக எதுவும் எங்களுக்க நினைவில்லை.

தன் உண்மையான எழுத்துப் படைப்பு 1943ஆம் ஆண்டில்தான் தொடங்கியதென்று வசுதாவே நினைத்ததாக எங்களுக்குத் தோன்றுகிறது. அப்போது நாங்களெல்லாரும் வேலையிலமர்ந்து விட்டோம் , வசுதா சிவில் சப்ளை அலுவலகத்தில் வேலைபார்த்து வந்தான் நானும் புவனும் வேறு அலுவலகங்களில் பணி புரிந்தோம். வசுதா பௌபஜாரில் ஓர் உணவுவிடுதியில்தங்கியிருந்தான், தினம் மாலையில் நானும் புவனும் அவனைப் பார்க்கப் போவோம் - முன்னிரவு வரை அவனோடிருப்போம் வசுதா தன் எழுத்தைப் பற்றிச் சொல்லுவான் , தான் எழுதியது ஏதாவது இருந்தால் அதைப் படித்துக் காட்டுவான். அவனது மனம் அமைதியற்றிருந்தது . எந்தப் படைப்பையும் இறுதிவரை எழுதப் பொறுமையில்லை அவனுக்கு . ஏதோ எழுதப் போவதாகச் சொல்லுவான் , ஆனால் எழுத மாட்டான் - எதையாவது எழுதத் தொடங்குவான் . அரைகுறையாக விட்டுவிடுவான் . மாதக்கணக்கில் இதே மாதிரி நடக்கும் , இது எழுதப் போகிறேன் , அது எழுதப் போகிறேன் என்று சொல்வான் ஒன்றும் எழுதமாட்டான்

இந்தத் தொகுப்பின் முதல் கதை 'விநோதினியின் துக்கம் . அந்தக் காலத்து மாதப் பத்திரிகையொன்றில் பிரசுரமாயிற்று வசுதா சொல்ல விரும்பிய ஏதோ ஒரு விஷயம் முதல் தடவையாக இந்தக் கதையில் வெளிப்பட்டது.

பதின்மூன்றாம் வயதில் விநோதினிக்குக் கல்யாணம் . அப்போது அவளுடைய கணவனின் வயது பதினெட்டு கனமானசிவப்புக் கரைப் புடவை அவளுடைய சிறிய உடம்பில் நிற்க வில்லை. ஆகையால் அவள் பாதிப் புடைவையைப் பொட்டலம்போல் சுருட்டி முதுகில் வைத்துக்கொண்டு அலைவாள் அவளுடைய கணவன் கங்காபதா அவளுக்காகத் திருட்டுத்தனமாகப் படகுத் துறையிலிருந்து மண்பொம்மை , கண்ணாடி வளையல் , ஜிகினாப் பொட்டு , குங்குமம் , கொய்யாக்காய் , நாவல் பழம் எல்லாம் வாங்கி வருவான் - விநோதினி இவற்றைக் கட்டிலுக்கடியில் ஒளித்து வைப்பாள் , இரவில் அவற்றையெடுத்துவிளையாடுவாள் , கொய்யாக்காயைக் கடித்துத் தின்பாள் - கங்கா பதாவுக்குப் படகுத்துறையில் வேலை கிடைத்ததும் அவன் அவளுக்குக் கண்ணாடியாலான சைதன்யரின் பொம்மை ஒன்று வாங்கித் தந்தான் . அதிலிருந்து அவள் சைதன்ய பக்தை ஆகிவிட்டாள் .

இவ்வாறு விநோதினி யுவதியானாள் , குழந்தைகளுக்குத் தாயனாள் , வீட்டை நிர்வாகம் செய்தாள் பிறகு அவளது இளமை கழிந்தது , முதுமையில் காலெடுத்து வைத்தாள் - இந்த சமயத்தில் கங்காபதா இறந்துவிட்டான் -இதன்பிறகு விநோதினிக்குவாழ்க்கையில் பிடிப்பு விட்டுப்போய் விட்டது - அவள் தன் கணவனுடன் நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேல் குடித்தனம்நடத்தியிருந்தாள் . இந்த நீண்ட குடும்ப வாழ்க்கையின் கட்டமைப்பு அவளுக்குப் பழகிப் போயிருந்தது கணவனின்மரணம் இந்தக் கட்டமைப்பைக் குலைத்துவிட்டது . அவளுக்கு இப்போது வாழ்க்கை சூன்யமாக , பொருளற்றதாகத் தோன்றியது ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுத் தண்ணீர் வழியில் எங்கோ மணல் மண்ணில் மறைந்துவிட்டாற்போல் கடவுள் சில கோடுகளையும் நிறங்களையும் வைத்துக்கொண்டு அவளது வாழ்க்கையாகிய ஒரு சிறு சித்திரத்தை தீட்டியிருந்தார் , அந்தச் சித்திரத்தின்பாதிக் கோடுகள் அழிந்து போய்விட்டன , நிறங்கள் வெளிறிப் போய் விட்டன , அவளது வாழ்க்கைச் சித்திரமும் அழிந்துபோய்விட்டது . இனி மறுபடியும் சித்திரம் உருப்பெற வாய்ப்பில்லை,

விநோதினி தன் வாழ்க்கையின் வெறுமையைத் தன் பிள்ளையின் மூலம் தீர்த்துக் கொள்ளப் பார்த்தாள் . ஆனால் அவள் மனம் இதற்கு இடங்கொடுக்கவில்லை சாமி , பூஜை இவற்றிலும் மனதைச் செலுத்த முடியவில்லை அவளால் கண்ணாடி சைதன்யர் அவளுடைய பக்திக்குரியவர் . அவள் நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவருக்கு வழிபாடு செய்துவருகிறாள் . ஆனால் கங்காபதாவின் மறைவுக்குப்பின் சைதன்யரும் வெறும் கண்ணாடியாகி விட்டார் . ஒவ்வொரு பூஜைக்குப்பிறகும் அந்தக் கடவுளின் மண் பதுமை ஆற்றில் போடப்படுகிறது . அந்த மண்ணும் மற்ற அலங்காரங்களும் தண்ணீரில் கரைந்து போகின்றன அல்லது தண்ணீரால் அடித்துக்கொண்டு போகப்படுகின்றன , எதுவும் மிஞ்சுவதில்லை என்பது திடீரென்று பிறந்தது அவளுக்கு - மனித வாழ்விலும் இத்தகைய முடிவு ஒரு தவிர்க்க முடியாத உண்மை . கங்காபதாவையும் விநோதினியையும் ஆற்றில் போடுவதற்காக மேளதாளத்தோடு அவர்களை ஆற்றங் கரைக்குக் கொண்டு வந்தாகிவிட்டது . கங்காபதாவை ஆற்றில் போட்டுவிட்டார்கள் - விநோதினிதான் பாக்கி , அவளைப் போட்டதும் அவள் தன் கணவனோடு சேர்ந்து விடுவாள் - இவ்வாறு நினைத்துவியோதினி கடவுளை வணங்கினாள் இன்று.

வசுதா தன் தாயின் நினைவில் இந்தக் கதையை எழுதினான். வசுதாவின் தாய் கடவுள் பக்தியுடையவரானாலும் தன் கணவரின்மரணத்துக்குப் பிறகு அவருக்கு வசுதாவிடமோ கடவுளிடமோ உண்மையான ஆறுதல் கிடைக்கவில்லை.

"அம்மாவுக்கு மேலுலகத்திலும் நம்பிக்கையில்லை . சாவைத் தான் நம்புகிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று சொல்லுவான் வசுதா

தாயின் மறைவுக்குப் பல நாட்களுக்குப் பிறகு வசுதா இன்னொரு கதை எழுதினான் . அதன் தலைப்பு 'துக்கத்திலிருந்துவிடுதலை ' அந்தக் கதை இந்தத் தொகுப்பின் இரண்டாவது கதை - அதிகம் பிரபலமில்லாத பத்திரிகையொன்றில் அந்தக்கதை வெளியாகியது.

"விநோதினியின் துக்கம் ' இலக்கண மொழிநடையில் எழுதப் பட்டிருந்தது, தொடக்கத்தில் வசுதா இலக்கண மொழியில்தான் எழுதினான் - 'துக்கத்திலிருந்து விடுதலை ' பேச்சு மொழியில் எழுதப்பட்டது .

'விநோதினியின் துக்கம் ' கதையில் விநோதினியின் ஒரே ஆறுதல் சாவுதான் . அவள் சாவையே தன் துக்கத்தின் முடிவுக்குவழியாகக் கருதினாள் - இப்படிச் சொல்வது அவ்வளவு சரியாகப் படவில்லை அவள் சாவின் மூலம்தான் கணவனுடன் ஓர்ஆத்மீகமான மறுசந்திப்பை எதிர்பார்த்தாள் , வசுதா 'துக்கத்திலிருந்து விடுதலை ' கதையில் இந்தச் சாவையெ இன்னும் நன்றாக ஆராய முயன்றான்.

அவன் இந்தக் கதையைத் தன் தாயின் மரணத்துக்கு வெகு நாட்களுக்கப் பிறக எழுதினான் என்பதே முன்பே சொல்லியிருக்கிறேன். வசுதாவின் தாய் நோய்வாயப்பட் டிருந்தபோது அவனுக்கு ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் அவளுடைய பெயரை இங்கு சொல்லவில்லை . வசதிக்காக அவள் பெயர் நிருபமா அல்லது நிரு என்று வைத்துக் கொள்வோம்.

வசுதா தன் தாய் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி கேட்டுத் தன் கிராமத்துக்குப் போனான் தாய் இறந்தபின் அவருடையஈமச் சடங்குகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கினான் . நானும் புவனும் பத்தாம் நாள் சடங்குக்கு வசுதாவின் கிராமத் துக்குப் போனோம். அப்போது வசுதா எங்களிடம் ஒரு விசித்திரமான செய்தியைச் சொன்னான் . ஆற்றங்கரையில் மயானத்தில் அவனுடைய தாயின் சடலம் திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது அவன் ஒரு நாவல் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு நிருவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தானாம் ! அதன் பிறகும் இந்தப் பத்து நாட்களும் தன் தாயைவிட அதிகமாக நிருவைப் பற்றியே நினைக்கிறானாம்.

இது ஏன் ? இந்த மாதிரி எந்த விஷயத்தையும் 'ஏன் ?" என்று ஆராய்வது வசுதாவின் சுபாவம் - அவன் தன் தாயைப் பற்றி எவ்வளவு சிந்திக்கக் கடமைப்பட்டவனோ அவ்வளவு சிந்திக்க வில்லை. தாயின் மரணத்தால் ஏற்பட்டிருக்க வேண்டிய துக்கமும்வேதனையும் அவனக்கு ஏற்படவில்லை . இதற்குப் பதிலாக அவன் நிருபமாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான் இது அவனை ஒரு குற்ற உணர்வுக் உள்ளாக்கியது - தான் ஒரு பெருங்குற்றம் செய்துவிட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு , அவன் தன்னை அனாவசியமாக வருத்திக் கொள்கிறான் என்று நாங்கள் அவனை எவ்வளவோ தேற்றியும்பயனில்லை.

அவன் சில நாட்கள் இவ்வாறு வருத்தமாகப் பொழுதைக் கழித்தான் , நிருபமாவையும் வருத்தப்படச் செய்தான் . பிறகு தன்கேள்விக்கு ஏதோ ஒரு விடை கண்டுபிடித்த இந்தத் துக்கத்திலிருந்து விடுதலை ' கதையை எழுதினான்.

"விநோதினியின் துக்கம்' கதையில் விநோதினி சாவில் தன் துக்கத்தின் தீர்வைக் காண்கிறாள் . 'துக்கத்திலிருந்து விடுதலை 'கதையில் சுகேந்து உணர்கிறான் 'சாவு என்பது வெறும் ஜடந்தான் - வாழ்க்கதான் எதிர்வினையைப் படைக்கிறது, சாவோ எதையும்படைப்பதில்லை!

சுருக்கமாகச் சொல்வதென்றால் , விநோதினி சாவின் மூலம் பெற விரும்பிய அமைதியை சுகேந்து வாழ்வின் மூலம் , உயிர்த்துடிப்பின் மூலம் பெற முயல்கிறான்,

சுகேந்துதான் 'துக்கத்திலிருந்து விடுதலை - கதையின் நாயகன் . அவனுடைய வயது கதையில் சற்று அதிகமாகக் காட்டப்பட்டிருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஒரு காதல் கதை போலத் தோன்றும். ஆனால் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே ஏற்படும் முரண்பாடுதான் இந்தக் கதையின் கரு என்பது என் கருத்து - சுகேந்து ஒரு விசித்திரமான மனக்குழப்பத்தோடு சோகமாகவாழ்க்கை நடத்துவதை நாம் கதையின் தொடக்கத்தில் காணுகிறோம் - அவன் ரேணு என்ற பெண்ணைக் காதலிக்கிறான் ஆனால் அவனுடைய தாயைப் பற்றிய நினைவின் தீவிரம் அவன் ரேணுவுடன் இயற்கையான உறவு கொள்வதைத் தடுக்கிறது உறுத்தல் - தான் தன் தாயின் சாபத்தைச் சுமந்து கொண்டு வாழ்ந்து வருவதாகத் தோன்றுகிறது அவனுக்கு . இது எப்படி என்று அவனுக்குப் புரியவில்லைதான் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றவில்லை என்று மட்டும் அவனுக்குப் புரிகிறது.

சுகேந்து இந்தக் குழப்பத்திலிருந்து வெளியேறுவான் என்று நாம் எதிர்பாராத நிலையில் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வாக ஒருநிகழ்ச்சி நிகழ்கிறது . கதையின் இறுதியில் நேரும் ஆச்சரிய நிகழ்ச்சியைத்தான் குறிப்பிடுகிறேன் . அப்போது குளிர்காலத்தின்தொடக்கம் - அந்த நேரத்தில் சுகேந்துவும் ரேணுவும் ரேணுவின் வீட்டு மொட்டைமாடியிலமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் கல்கத்தாச் சந்துகளிலிருந்து எழும் அடுப்புக் கரிப்புகை , காஸ் விளக்கின் மங்கிய ஒளி , சிறிது நிலவு இவையெல்லாம் சேர்ந்து ஒரு மங்கலான வெளிச்சம் பரவியிருக்கிறது எங்கும் , ரேணு பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து போயிருந்தாள் - சுகேந்துமட்டும் தனியாக உட்கார்ந்திருந்தான் , அப்போது யாரோ தன்னருகில் வந்து உட்கார்ந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது வெள்ளை நிழல் போன்ற ஓர் உருவம் - முதலில் அந்த மங்கலான வெளிச்சத்தில் அதை அடையாளங்கண்டு கொள்ள முடியவில்லை அவனால் , சற்றுக் கவனித்துப் பார்த்ததில் புரிந்தது அது அவனுடைய அம்மா!

முதலில் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது . பின்னர் அவனுக்குப் புரிந்தது . அம்மா ஏன் அங் வந்திருக்கிறாரென்று தாயிடம் பாசமும் தாய்க்காகத் துக்கமும் பொங்கி வந்தன அவனுக்குள், ஏதோ ஒரு வகை இனம்புரியாத மனநிலை அவனை ஆட்கொண்டது , அவன் தன் தாயிடம் ஏதோ சொல்ல முற்பட்டான். திடீரென்று இதென்ன மணம்? யாருடைய மணம் ஏதோ நினைவில் அவன் தலை குனிந்தான். சட்டைப்பைக் குள்ளிருந்து ஒரு பூவின் மணம் வருவதை உணர்ந்தான் . சிறிதுநேரம் முன்பு ரேணு தன் கொண்டையிலிருந்த ஒரு ரோஜா மலரை எடுத்து அவன் பைக்குள் வைத்தது அவனுக்கு நினைவு வந்தது அந்த மலரின் மணம்தான் எவ்வளவு இனிமையாக , இதமாக , உயிர்த் துடிப்போடு இருக்கிறது . ரேணுவின் உடல் , உள்ளம் ,அவளது காதல் இவையெல்லாம் அந்தக் கணத்தில் ஒரு பேரலையாகக் கிளம்பி அவனை அடித்துச் செல்லத் தொடங்கியது அந்த நிலையில் சுகேந்து தன் தாயிடம் , "இனிமேல் நீ வராதே !" என்று சொன்னான்.

வசுதா தன்னுள்ளத்தில் அனுபவித்த பச்சாதாப உணர்வை சுகேந்து கடந்து செல்வதாகக் கதையில் சித்திரிக்கிறான் . தான்நிருவைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தபடியால் தன் தாயின் மரணத்துக்காகப் போதிய அளவு வருந்தவில்லை என்ற குற்ற உணர்வால் அவனுக்கு ஏற்பட்டிருந்தது - சோகத்திலிருந்து இப்போது விடுதலை கிடைத்து விட்டது அவனுக்கு - நிருவிடம் அவனுக்கிருந்த ஈடுபாடு இயற்கையானதுதான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான் . ஏனென்றால் நிரு உயிரோடிருக்கிறாள் வாழ்வும் அன்பும் ஒன்றோடொன்று இணைந்தவை.

'துக்கத்திலிருந்து விடுதலை ' காதல் கதையல்ல , அது காதலைப் பற்றிச் சொல்லவில்லை. மனிதன் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவன் , இந்த ஈடுபாடில்லாமல் யாரும் வாழ முடியாது என்ற கருத்தையே வசுதா இந்தக் கதையில் சொல்ல முயல்கிறான்.

இந்தக் கதை வசுதாவின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன். சுகேந்து இந்தவிளைவுக்கு ஒரு சாதனமாக அமைந்தான் ....

இத்தொகுப்பின் மூன்றாவது கதை 'நரகத்திலிருந்து பிரயாணம் : தொகுப்பின் முதல் பதிப்புக்கு இந்தப் பெயர்தான்வைக்கப்பட்டிருந்தது . இந்தத் தொகுப்புக்கும் இதே தலைப்புதான் கொடுக்கப்பட்டுள்ளது.

துக்கத்திலிருந்து விடுதலை ' கதையெழுதிச் சுமார் ஓராண்டுக்குப் பிறகு வசுதா இந்தக் கதையை எழுதினான் இதைக் காதல் கதையென்று சொல்லலாம். ஒரு காதல் கதைக்கு 'நரகத்திலிருந்து பிரயாணம் ' என்ற தலைப்பு விசித்திமாகத்தோன்றலாம் . இந்தக் கதையில் ஓர் இளைஞனின் காதல் வேட்கையும் காதல் தோல்வியும் சித்திரிக்கப்பட்டுள்ளன , வசுதாதன்னையே இந்தக் கதையில் கதாநாயகன் பரிமலாகச் சித்திரித்திருக்கிறான். கதாநாயகியின் பெயர் நிருபமாதான் கல்கத்தாவில்சதானந்த சௌத்திரி சந்தில் ஒரு வீட்டின் மாடியில் நிருபமா வசித்து வந்தாள் . அந்த வீட்டின் கீழ்த்தளத்தில் பரிமலின் நண்பனொருவன் தங்கியிருந்தான் , பரிமல் அவ்வப்போது நண்பனைப் பார்க்க வருவான் . இவ்வாறுதான் அவனுக்கு நிருபமாவுடன்பரிச்சயம் ஏற்பட்டது -- இந்தப் பரிச்சயம் நெருக்கமாக வளரச் சிறிது காலம் பிடித்தது என்றாகும் பரிமல் முதல் சந்திப்பிலேயேநிருபமாவால் ஈர்க்கப்பட்டான் என்பதை ஊகிக்க முடிகிறது. சிலர் காதல் ஒரு தெய்வீக உணர்வு என்று நினைக்கிறார்கள் காதல் மனித இதயத்துக்கு உயிரூட்டுவதாகக் கருதுகிறார்கள் - இத்தகையவர்களில் பரிமலும் ஒருவன். மிகவும் சாதாரணப்பெண்ணான நிருபமாவுக்கு சங்கோச சுபாவமுள்ள பரிமலைப் பிடிக்காமற்போனது இயற்கையே ,

எனினும் கதையின் முதற்பகுதியில் பரிமலும் நிருபமாவும் நெருங்கிப் பழகுகிறார்கள் . இரண்டாம் பகுதியில் இருவரிடையேகாதல் ஏற்படுகிறது. பரிமலின் காதல் ஆழமானது , உண்மையானது - இந்த காதல் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக விலையுயர்ந்ததாக ஆக்குவதாகப் பரிமல் நினைத்தான். நிருபமா அப்படி நினைக்கவில்லை . அப்படி நினைக்கக் காரணமும் இல்லை அவளுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை இருந்தாலும் இந்தக் காதலில் அவளுக்குக் கிளுகிளுப்பு ஏற்பட்டது

இந்தக் காதல் இறுதியில் முறிந்து விட்டது. இதன் காரணத்தை ஊகிக்க முடியும், நிருபமா வீட்டுக் கீழ்த்தளத்தில் குடியிருந்த பரிமலின் நண்பன் மன்மதனின் சூழ்ச்சியாலும் நீசத்தன்மையாலும் இந்தக் காதல் முறிந்தது. இந்த முறிவுக்குக்காரணம் பரிமல்தான் என்று ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது . சில சமயங்களில் நிருபமாதான் இதற்குப் பொறுப்பு என்று தோன்றுகிறது மன்மதன் நிருபமாவை அடைவதற்குப் பரிமலுடன் போட்டியிட்டான். ஆனால் அவன் மிகவும் தந்திரசாலியாக திருட்டுத்தனமாக , போக்கிரித்தனமாகச் செயல்பட்டான் - அவன் நிருபமாவின் தாயையும் பிறகு நிருபமாவையும் வசப்படுத்திக்கொண்டான் . நிருபமாவின் தாய்க்குக் காதலைப் பற்றி அக்கறையில்லை . அவளுக்குத் தெரிந்ததெல்லாம் குடும்ப வாழ்க்கையும் பெண்ணின் சுகமுந்தான் - அவள் பரிமலைத் தகுந்த வரனாகக் கருதவில்லை - நிருபமாவும் தவறு செய்துவிட்டாள் -- மன்மதனின் புத்திசாலித்தனமும் திறமையும் அவளைக் கவர்ந்து விட்டன தவிர அவள் பரிமலை ஏற்றுக் கொள்வதை அவளுடைய தாய்விரும்பவில்லை. சிறு வயதிலிருந்தே நிருபமாவுக்கு நோய் என்றால் பயம் , அருவருப்பு - பரிமலை நோயாளியாகக் கருதினாள் அவள் வெகுநாட்களாகவே அவள் பரிமலைத் தன் காதலனாகக் கருத முயற்சி செய்து வந்தாள் . ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு இந்தக் காதல் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டால் நிருபமாவுக்கு வாழ்க்கையில் இன்பம் , அமைதி கிடைக்குமா கிடைக்கும் என்று தோன்ற வில்லை அவளுக்கு.

ஒருவகையில் பரிமலையும் குற்றவாளியாகக் கருதலாம் . அவன் காதல் பாதையில் வெகுதூரம் அனாயாசமாகப் பயணித்துவந்த பிறகு திடீரென்று ஓரிடத்தில் நின்று விட்டான் - இதற்கான காரணத்தை ஊகிக்க முடியும் - இந்தக் காதல் மூலம் அவனுக்குக்கிடைக்கக்கூடியதெல்லாம் இதற்குள்ளேயே அவனுக்குக் கிடைத்திருக்கலாம். இப்போது அவன் காதலால் நேரும் துக்கம் அதன் நிறைவின்மை இவற்றைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கலாம் . காதலின் லாப நஷ்டங்களைச் சிந்தித்துப் பார்த்த அவன் காதல் நிலையானதல்ல அது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று புரிந்து கொண்டான் - உயிர்த்துடிப்புள்ள அழகுக்குத் தேய்வு உண்டு , மாறுதல் உண்டு அதுபோல் காதலிலும் நிறைவின்மை உண்டு , துக்கம் உண்டு, பரிமல் எதிர்பார்த்தநிலையான, தேய்வில்லாத அன்பு உண்மை வாழ்க்கையில் அடைய முடியாத ஒன்றாகும்

நிருபமாவின் குற்றம் அவள் ஒரு சாதாரணப் பெண் என்பதுதான். அவள் வேண்டியது வாழ்க்கையில் சுகம் , வசதி பரிமலை ஏற்றுக்கொள்ள அவள் தயங்கினாள் . அவளது தயக்கத்தின் ஒரு பகுதி மன்மதனின் சூழ்ச்சியின் விளைவு இன்னொரு பகுதி வாழ்க்கையில் அவளது எதிர்பார்ப்பின் விளைவு .

"நரகத்திலிருந்து பிரயாணம் ' வசுதாவின் சொந்த வரலாறு தான் -- இறுதியில் நிருவின் காதல் அவனுக்கு அமைதியளிக்கவில்லை நிரு இறுதியில் வேறொருவனை மணந்து கொண்டு விட்டாள் . காதலின் இந்தத் தோல்வி பற்றி நாங்கள் நினைத்தது போல் வசுதா நினைக்கவில்லை . அவன் சொல்வான் , "காதல் பற்றி நமது கருத்து மிகவும் குறுகியது - காதல் என்பது ஒரு பெண் அல்லது ஓர் ஆணைச் சார்ந்திருப்பதாக நாம் நினைக்கிறோம் , அந்தப் பெண் அல்லது ஆண் விலகிப்போய்விட்டால் நாம்துன்பத்தால் துடித்துச் சாகிறோம். இது ஏன்?

இந்த 'என் ? என்ற கேள்வியிலிருந்து வசுதா ஒரு போதும் விடதலை பெறவில்லை - நாம் வாழ்க்கையில் சாதாரணமாகச்சந்திக்கும் அற்ப எல்லைகளுக்குட்பட்ட அன்பு அவனுக்குப் பிடிக்கவில்லை . இந்த அன்பை அவன் இறுதியில் மறுத்துவிட்டான். பொறாமை , பேராசை , நீசத்தனம் முதலிய உணர்வுகள் வலுப்பதன் காரணமாக நம் வாழ்க்கை உள்ளூர மாசுபட்டுப்போவதை அவன் கண்டான் - நம் குறைகளே நம்மை நரகவாசிகளாக ஆக்கி விட்டன என்பது அவன் கருத்து . இந்த நரகத்திலிருந்து மீட்சிபெறுவதைச் சித்திரிக்கும் முயற்சிய அவனது "நரகத்திலிருந்து பிரயாணம் கதை தனிப்பட்ட காதலின்பமாகியஎல்லையைக் கடந்து செல்ல அவன் முயற்சி செய்தான் போலும் ,

வசுதா கல்கத்தாவை விட்டுச் சென்ற அதே ஆண்டில் நான் திருமணம் செய்துகொண்டேன் - என் மனைவிக்கு வசுதாவைத்தெரியும் - அவள் வசுதாவின் எழுத்தை ரசித்தாளா என்று எனக்குத் தெரியாது - நான் வசுதாவை என் திருமணம்வரைகல்கத்தாவில் தங்கும்படி கேட்டுக் கொண்டேன். அவன் தங்கவில்லை. இதற்குச் சில மாதங்கள் முன்புதான் நாங்கள் அவனதுசிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தோம்

அதன் பிறகு நான் வசுதாவைச் சந்திக்கவில்லை . வருடத்தில் ஓரிரண்டு கடிதங்கள் அவனிடமிருந்து வரும் = புவனுக்கும் அதேமாதிரி எப்போதாவது கடிதம் வரும் அவன் ஒரு நாடோடியாகி விட்டான் என்ற அவனுடைய கடிதங்களிலிருந்து எங்களுக்குப் புரிந்தது . பிறகு ஒரு சமயம் அவன் தீவிர கடவுள் பக்தனானான் - இறுதியில் அவன் கடவுளை விட்டுவிட்டுப்பொது நல சேவையில் ஈடுபட்டு விட்டான்.

வசுதாவின் கடைசி இரண்டு கதைகளைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை . நான் நகரத்தில் வசிக்கும் பிராணி வசுதா நரகத்தைவிட்டு வெளியே பயணிக்கச் செய்த முயற்சிகள் பற்றி எனக்குத் தெரியாது . 'ஈசுவர் ' என்ற அவனது நான்காவதுகதையும் , அடைக்கலம்" என்ற ஐந்தாவது கதையும் அவனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியின் வரலாற்றைத் தெரிவிக்கலாம் .புவன் காசியிலிருந்து திரும்பி வரும்போது அந்தக் கிழவரின் பெண்ணிடமிருந்து இந்த இரண்டு கதைகளின் கையெழுத்துப்பிரதிகளையும் வாங்கி வந்திருந்தான் - இரண்டுமே முற்றுப் பெறாத கதைகள் - இவற்றைப் படிக்கும் வாசகர்களும் இதை உணர்வார்கள்,

"ஈசுவர் சாதாரண நடையில் எழுதப்பட்டதல்ல - இதை ஒரு குறியீட்டுக் கதை எனலாம் படிக்கும் போது அது மிகவும் எளிமையாகத் தோன்றும். ஆனால் இறுதியில் ஏதோ ஒர வெறுமை , குறை தென்படும் . கதையின் இயற்கைக்கு மாறானதன்மை அதன் தொடக்கத்திலேயே தெரியவரும் . ஒரு வழிப் போக்கன் மழையும் புயலுமான ஓர் இரவின் இருளில் ஒருகோவிலில் அடைக்கலம் பெறுகிறான் - அங்கே இருட்டிலேயே ஒர துறவியைச் சந்திக்கிறான் . அவனுடன் உரையாடும்போதுதுறவி சொல்கிறார் , "என்னிடமிருக்கும் பையில் ஒரு விளக்கு இருக்கிறது . அதை ஏற்றிக்கொண்டால் எந்த மழையிலும் இருட்டிலும் வழி தெரியும்."

வழிப்போக்கன் கேட்கிறான், "அப்டியானால் நீங்கள் ஏன் இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள் ? விளக்கை ஏற்றிக்கொண்டுவழி நடக்கலாமே!"

"என் பையில் ஒரே மாதிரி மூன்று விளக்குகள் இருக்கின்றன --ஒன்று அசல் , மற்ற இரண்டும் போலி , இந்த இருட்டில் என்னால் அசல் எது , போலி எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை " என்கிறார் துறவி!

இதைக்கேட்டு , 'ஆகா , இந்த விளக்கு நம்மிடமிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ! என்று வழிப்போக்கனுக்குத் தோன்றுகிறது . அவனுடைய ஆசையைப் புரிந்துகொண்டு விடுகிறார் துறவி . "உன்னால் முடிந்தால் நீ அசல் விளக்கைக் கண்டு பிடித்துக்கொள் " என்று அவர் சொல்லி அவனிடம் விளக்குகளைக் கொடுக்கிறார் . மூன்று விளக்குகளும் ஒரே மாதிரியாக இருக் கின்றன - இருட்டில் அவற்றில் அசல் எது நகல் எது என்று வழிப் போக்கனால் கண்டுபிடிக்க முடியவில்லை .

"முடியவில்லையா?" துறவி கேட்கிறார்.

"முடியவில்லை ."

துறவி விளக்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்கிறார். "இவற்றில் ஒன்று அசல் விளக்கு ஏற்றத் தெரிந்தவன் கையில் அது நிச்சயம் எரியும். அவன் தன் சொந்த சக்தியால் அதை ஏற்றுவான் " என்கிறார் அவர்.

கதை இத்துடன் நின்று விடுகிறது . ஆனால் வசுதா தொடந்ந்து ஏதோ எழுதப் பலமுறை முயன்றிருக்கிறான் அம்முயற்சிகளில் தோல்வியுற்றிருக்கிறான் என்று கையெழுத்துப் பிரதியிலிருந்து தெரிகிறது . அவன் துறவியின் புதிர் போன்ற பேச்சுக்குப் பொருள்காண முயன்று தோல்வியடைந்திருக்கலாம்.

"அடைக்கலம் " கதை காசியில் எழுதப்பட்டது - அதன் தொடக்கம் இருக்கிறது , முடிவு இல்லை - ஒவ்வோராண்டும் குளிர்காலத்தில் காசியையடுத்த கிராமப் பகுதியில் தொற்றுநோய் பரவுவதுண்டு - ஒரு தடவை அங்கு கடுமையான தொற்றுநோய்பரவியது - அரசாங்க ஊழியர்கள் கூட அங்கே போகத் துணிய வில்லை - கங்கைக் கரையில் சிதைகள் இடைவிடாது எரிந்தன காசியில் வசித்துவந்த கதாநாயகன் ஒருநாள் காலையில் கங்கையில் நீராடிவிட்டு திரும்பும்போது யாரோ தன்னைப் பின்னாலிருந்துகூப்பிடுவதாக உணர்ந்தான் , பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு நண்பன் வந்து அவனுக்குக் கபீரின் பாடல்களை ராகத்தோடுபாடிக் காட்டுவானே அவன்தானோ?

அதே ராகத்தில் அதே குரல் கேட்டது - "நாங்கள் துன்புறுகிறோம் , நாங்கள் அமைதியிழந்து விட்டோம் , மரத்துக்கு வேர்உண்டு , எங்களுக்கு வேர் இல்லை , ஒரே இடத்தில் நிலைத்திருக்க முடியவில்லை எங்களால்..."

அன்று வசுதா வீடு திரும்பவில்லை - தொற்றுநோய் பரவியிருந்த கிராமப்புறத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான் அவன்

இவ்வளவுதான் எழுதியிருந்தது கதையில் . இந்தக் கதையை எழுதிய மறுநாள் வசுதா அங்கிருந்து போய்விட்டதாகக் கிழவரும் அவருடைய மகளும் அவனிடம் சொன்னார்கள் அவன் எங்கே போனான் என்று அவர்களுக்குத் தெரியாது ..

சோட்டா நாக்பூர்ப் பகுதியில் ஓரிடத்தில் ஒரு மிஷன் மருத்துவமனையில் வசுதா இறந்து போனான். அவன் இறந்துபல நாட்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு அவனுடைய மரணச்செய்தி கிடைத்தது .

அவன் மருத்துவமனெயில் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை . எழுத வேண்டிய தேவை அவனுக்குத் தீர்ந்து போயிருக்க வேண்டும்.

வசுதாவின் படைப்புகளைப் பற்றி நான் அவனுடைய நண்பன் என்ற முறையில் எழுதியிருக்கிறேன் - இதுதான் இயற்கை என் கருத்துகளில் தவறு இருக்கலாம் . தவற இருந்தால் வாசகர்கள் என்னை மன்னிக்கட்டும்.

இந்தத் தொகுப்பின் முகப்பில் ஒரு 'சமர்ப்பணம் ' இருக்கிறது . அது முதல் பதிப்பிலும் இருந்தது . அந்த சமர்ப்பணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிருபமாராய் வசுதாவின் அந்த நிருபமாதான் ..

('ஆம்ரா தீன் பிரேமிக் ஓ புவன் , 'ஜூலை 1968)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.