Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

15. பாரதநாடு

ராமபத சௌதுரி 

ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல - அங்கே பிளாட்பாரமும் இல்லை , டிக்கெட் கௌண்டரும் இல்லை - திடீரென்று ஒருநாள் அங்கே ரயில் தண்டவாளத்தையொட்டிப் பளபளக்கும் முள்வேலி போடப்பட்டது . அவ்வளவுதான் - இரு திசைகளிலும் போகும் ரயில்களில் எதுவுமே நிற்பதில்லை. ஒரேயொரு ஸ்பெஷல் ரயில் மட்டும் என்றாவது ஒரு நாள் காலையில் அங்கு வந்து நிற்கும் - என்றைக்கு நிற்கும் என்பது எங்களுக்கு மட்டுமதான் முன்னதாகத் தெரியும் நாங்கள் என்றால் பிகாரி சமையல்காரனைச் சேர்த்து நாங்கள் ஐந்து பேர்.

ரயில் நிற்பதில்லை , ஸ்டேஷன் இல்லை . அப்படியும் அந்த இடத்துக்கு ஒரு பெயர் கிடைத்து விட்டது -- 'அண்டா ஹால்ட் 'அண்டா என்றால் முட்டை - நாங்களும் அந்தப் பெயரைப் பயன்படுத்தத் துவங்கி விட்டோம்.

அருகிலிருந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவில் மகதோ இனத்தவர் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்று இருந்தது . அந்தக்கிராமத்தில் நிறையக் கோழிகள் வளர்க்கப்பட்டன . மகதோக்கள் அங்கிருந்து வெகு தொலைவிலிருந்த புர்க்குண்டாவில் சனிக்கிழமை தோறும் கூடும் சந்தையில் கோழிகளையும் முட்டைகளையும் விற்கப் போவார்கள் . சில சமயம் சந்தையில் கோழிச்சண்டையும் நடக்கும்.

ஆனால் BF332க்கு 'அண்டா ஹால்ட்' என்று பெயர் வர இது காரணமல்ல. எங்களுக்க அந்தக் கிராமத்து முட்டைகள் மேல் எவ்வித ஆசையும் இல்லை .

ரயில்வே இலாகா ஒரு காண்டிராக்டருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது . அவனிடம் ஒரு டிராலி வண்டி இருந்தது . அவன் சிவப்புக் கொடி கட்டப்பட்ட அந்த டிராலியைத் தண்டவாளங்களின் மேல் தள்ளிக் கொண்டு வந்து அங்கேகூடை கூடையாக முட்டைகளை இறக்குவான் - பிகாரி சமையல் காரன் பகோதிலால் அவற்றை இரவில் வேக வைப்பான் - பிறகுவெந்த முட்டைகள் தோலுரிக்கப்படும் - உரிக்கப்பட்ட முட்டைத் தோல் நாளடைவில் மலைபோல் குவிந்து விட்டது இதனால்தான் அந்த இடத்துக்கு 'அண்டா ஹால்ட்' என்று பெயர் வந்தது.

ராணுவ மொழியில் வழங்கப்பட்ட BF332-ல் உள்ள BF என்ற எழுத்துக்கள் Breakfast (காலையுணவு) என்ற ஆங்கிலச்சொல்லின் சுருக்கம் என்று நினைக்கிறேன்,

அப்போது ராம்கட் என்ற ஊரில் போர்க் கைதிகளின் முகாம் ஒன்றிருந்தது. அங்கு இத்தாலியப் போர்க் கைதிகள்துப்பாக்கிகளாலும் முள்வேலியாலும் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சில சமயம் அவர்கள் ஒரு ரயிலில் ஏற்றப்பட்டுவேறோரிடத்துக் கொண்டு செல்லப் படுவார்கள் , அவர்கள் ஏன் , எங்கே கொண்டு போகப் படுகிறார்களென்று எங்களுக்குத்தெரியாது .

மறுநாள் காலையில் ரயில் வந்து நிற்கும் என்று எனக்குச் செய்தி வரும் . முட்டைகளும் கூடவே வரும் - நான் பகோதிலாலிடம் முட்டைகளைக் காட்டி "முன்னூத்தி முப்பது காலைச் சாப்பாடு " என்று சொல்வேன்.

பகோதிலால் எண்ணி அறுநூற்று அறுபது முட்டைகளுடன் உபரியாக இருபத்தைந்து முட்டைகள் எடுத்துக்கொள்வான் முட்டைகளில் சில அழுகிப் போயிருக்கலாம் என்பதற்காக உபரி முட்டைகள் - பிறகு அவற்றை நன்றாக வேக வைப்பான் - வெந்தமுட்டைகளை மூன்று கூலிகளின் உதவியோடு தோலுரிப்பான்.

இந்த முட்டைத் தோல்கள்தான் முள்வேலிக்கு வெளியே மலையாகக் குவியும்.

காலையில் ரயில் வந்து நிற்கும் . அதன் இரு திசைகளிலிருந்தும் ராணுவச் சிப்பாய்கள் கீழே குதிப்பார்கள் காவலுக்காக .

பிறகு கோடுபோட்ட சிறையுடையனிந்த போர்க் கைதிகள் ரயிலிலிருந்து இறங்குவார்கள் - ஒவ்வொருவர் கையிலும் ஒருபெரிய குவளை , ஒரு பீங்கான் தட்டு,

மூன்று கூலிகளும் இரண்டு பெரிய பெரிய டிரம்களைக் கவிழ்த்து அவற்றை மேஜை போலப் பயன்படுத்துவார்கள் போர்க்கைதிகள் வரிசையாக அந்த டிரம்களைக் கடந்து போவார்கள் - ஒரு கூலி ஒவ்வொரு கைதியின் குவளையிலும்சுடச் சுடக் காப்பியை ஊற்றுவான், இன்னொரு கூலி ஒவ்வொரு கைதிக்கும் இரண்டு துண்டு ரொட்டி கொடுப்பான் , மூன்றாவதுகூலி இரண்டிரண்டு முட்டைகள் கொடுப்பான் . பிறகு கைதிகள் ரயிலில் ஏறிக்கொள்வார்கள் . தோளில் அடையாளப் பட்டையும்காக்கிச் சீருடையும் அணிந்த கார்டு விசில் ஊதுவான் , கொடி அசையும் , ரயில் புறப்பட்டுவிடும் . மகதோக்கள் யாரும் அங்கு நெருங்குவதில்லை . அவர்கள் தூரத்திலுள்ள வயல்களில் மக்காச் சோளம் விதைத்தவாறே நிமிர்ந்து நின்று இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள்.

சில சமயம் ரயில் சென்ற பிறகு நாங்கள் முகாமைப் பகோதிலாலின் பொறுப்பில் விட்டுவிட்டு மகத்தோக்களின் கிராமத்துக்குப் காய்கறிகள் வாங்கப் போவோம் . மகதோக்கள் குன்றுச் சரிவில் கடுகு , கத்திரிக்காய் , பீர்க்கங்காய் பயிரிடுவார்கள்,

திடீரென்று ஒரு நாள் அண்டா ஹால்ட் எல்லா ரயில்களும் நிற்குமிடமாகிவிட்டது முள்வேலிக்கும் தண்டவாளத்துக்கும் இடையிலுள்ள நிலம் செப்பனிடப்பட்டு பிளாட்பாரம் போல் மேடாக்கப்பட்டது.

போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரயில்கள் மட்டுமின்றி ராணுவத்தை ஏற்றி வந்த விசேஷ ரயில்களும் அங்கே நிற்கத்தொடங்கின . அவற்றில் காபர்டின் பேண்ட் அணிந்து கொண்டு அதன் பின்பக்கப் பையில் பணப்பை வைத்திருந்த அமெரிக்கசிப்பாய்கள் வந்தார்கள் . ராணுவப் போலீசார் கீழே இறங்கி இங்குமங்கும் நடப்பார்கள் , வேடிக்கையாகப் பேசுவார்கள் போர்க்கைதிகளைப் போலவே ராணுவ சிப்பாய்களும் வரிசையாக நின்று ரொட்டி , காப்பி , முட்டை வாங்கிக்கொண்டு ரயில் ஏறிக்கொள்வார்கள் . காக்கியுடையணிந்த ரயில்கார்டு கோடியை அசைத்தவாறு விசில் ஊதுவான் . நான் ராணுவ மேஜரிடம்ஓடிப்போய் சப்ளை பாரத்தில் கையெழுத்து வாங்குவேன்.

ரயில் போய்விடும். எங்கு என்று எங்களுக்குத் தெரியாது.

அன்றும் அமெரிக்க சிப்பாய்களை ஏற்றிக்கொண்டு ரயில் வந்து நின்றது மூன்று கூலிகளும் சிப்பாய்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்கள் - சிப்பாய்கள் "முட்டை அழுகல் , ரொட்டித் துண்டு காய்ஞ்சு போச்சு " என்று சொல்லி அவற்றைஎறிந்து விடாமலிருக்கிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தான் பகோதிலால்,

அப்போது தற்செயலாக முள்வேலிப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

முள்வேலிக்குச் சற்று தூரத்தில் ஒரு மகதோச் சிறுவன் கண்களை அகல விரித்துக்கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான் - அவன் கோவணம் மட்டுமே அணிந்திருந்தான் . அவனுடைய அரைஞாணில் ஒரு உலோகத்துண்டு கட்டப்பட்டிருந்தது . ஒரு நாள் அவன் எருமைக்கன்று ஒன்றின் மேல் சவாரி செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அந்தப் பையன் ஆச்சரியத்தோடு ரயிலையும் சிவந்த முகமுடைய அமெரிக்க சிப்பாய்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு சிப்பாய் அவனைப் பார்த்து 'ஏய் !' என்று பயமுறுத்தவும் அந்தப் பையன் அலறியடித்துக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினான் , சில சிப்பாய்கள் இதைப் பார்த்து "ஹோ ஹோ'வென்று சிரித்தார்கள் ,

பையன் மறுபடி ஒருநாளும் வரமாட்டான் என்று நான் நினைத்தேன்.

ஆனால் மறுதடவை ரயில் வந்து நின்றபோது அந்தப் பையன் முள்வேலிக்கு வெளியே வந்து நின்று கொண்டிருப்பதைக்கவனித்தேன் அவனோடு கூட அவனைவிடச் சறுறு பெரிய இன்னொரு பையன் பெரிய பையனின் கழுத்தில் நூலில்கட்டப்பட்ட துத்தநாகத் தாயத்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது புர்க்குண்டாச் சந்தையில் இத்தகைய தாயத்துகள்குவியல் குவியலாக விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன் , இவை தவிர குங்குமம் , மூங்கில் கழியில் தொங்கவிடப்பட்ட பல நிறநூல்கள் , கண்ணாடி மணி , பாசி மணி மாலைகள் இன்னும் பல பொருள்களும் விற்கப்படும் சில சமயம் ஒரு நாடோடிவியாபாரி கழுத்தில் நிறையப் பாசிமணி மாலைகளைப் போட்டுக் கொண்டு, முழங்கால்வரை தூசியுடன் மகதோக்களின் கிராமத்துக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன்,

இரு சிறுவர்களும் முள்வேலிக்கு மறுபுறம் நின்று கொண்டு வியப்போடு அமெரிக்க சிப்பாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . முன்பு வந்திருந்த பையனின் கண்களில் பயம் - சிப்பாய் யாராவது பயமுறுத்தினால் ஓடிப் போகத் தயாராயிருந்தான்.அவன்.

நான் சப்ளை பாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருந்தேன் வாய்ப்புக் கிடைக்கும்போதுமேஜரைப் புகழ்ந்து காக்காய் பிடித்தேன். ஒரு சிப்பாய் ரயில் பெட்டியின் கதவருகில் நின்று கொண்டு காப்பியைக் குடித்தவாறே அந்தச் சிறுவர்களைத் தன் பக்கத்திலிருந்து இன்னொரு சிப்பாய்க்குச் சுட்டிக்காட்டி "அசிங்கம் !" என்று சொன்னான்.

மகதோக்கள் அசிங்கம் என்று எனக்கு அதுவரை தோன்றியதில்லை , அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். கவண் அல்லது அம்பெறிந்து புனுகு பூனை வேட்டையாடுகிறார்கள் பாட்டுப் பாடுகிறார்கள் . மது தயாரித்துக் குடிக்கிறார்கள் , சில சமயம் வில்லின் நாண் போல நிமிர்ந்து கொண்டு எதிர்த்து நிற்கிறார்கள்,கோவணமணிந்த , குச்சி போன்ற உடல்வாகு கறுப்பு சொரசொரப்பு -

அந்தச் சிப்பாய் 'அசிங்கம் ' என்று சொல்லியது என்னை உறுத்தியது - அந்தப் பையன்கள் மேல் எனக்குக் கோபம் வந்தது சிப்பாய்களில் ஒருவன் ஒரு பாட்டின் வரியொன்றை உரக்கப் பாடினான். சிலர் 'ஹா ஹா 'வென்று சிரித்தார்கள் ஒருவன் குவளையிலிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்து விட்டுக் கூலியைப் பார்த்துக் கண்ணடித்தான் , குவளையை மறுபடி நிரப்பச் சொல்லி, இன்னம் எவ்வளவு நேரம் ரயில் நிற்க வேண்டுமென்று பார்க்க வந்த பஞ்சாபி ரயில் கார்டு மேஜருடன்மூக்கால் பேசினான்,

பிறகு விசில் ஊதியது , கொடியசைந்தது , எல்லாரும் -- சிவப்புப் பட்டையணிந்த ராணுவப் போலீஸ் உட்பட -- அவசர அவசரமாக ரயிலில் ஏறினார்கள் .

ரயில் சென்ற பிறகு மறுபடியும் பழையபடி வெறுமை , மணல் வெளியில் கள்ளிச்செடி வரிசைபோல் முள்வேலி,

சிலநாட்களுக்குப் பிறகு இன்னொரு ரயில் வந்தது . இந்தத் தடவை அதில் வந்தவர்கள் போர்க்கைதிகள் . அவர்கள் ராம்கட்டிலிருந்து வேறெங்கோ போய்க் கொண்டிருந்தார்கள் . எங்கே என்று எங்களுக்குத் தெரியாது , தெரிந்து கொள்ளவிருப்பமுமில்லை.

அவர்கள் கோடுபோட்ட சிறையுடையை அணிந்திருந்தார்கள் . அவர்கள் முகத்தில் சிரிப்பு இல்லை . அவர்களைச்சுற்றிலும் ரைஃபிள் ஏந்திய சிப்பாய்கள் எங்களுக்கும் கொஞ்சம் பயமாயிருக்கும் ஒரு போர்க்கைதி வேஷ்டி ஜிப்பா அணிந்து கொண்டு தப்ப முயன்றதாக நாங்கள் புர்க்குண்டாவில் கேள்விப் பட்டோம் . நாங்கள் வங்காளிகளாதலால் மிகவும் பயப்பட்டோம் .

ரயில் சென்ற பிறகு நான் கவனித்தேன். முள்வேலிக்கு வெளியே அந்த இரண்டு பையன்களோடு , குட்டையான துணியணிந்து ஒரு பதினைந்து வயதுப்பெண்ணும் இரண்டு ஆண்களும் வயல் வேலையை விட்டுவிட்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சிரித்திர்கள் ; பிறகு அருவி நீரோடுவது போல் கலகலவென்று பேசிக்கொண்டேகிராமத்தை நோக்கி நடந்தார்கள்.

ஒருநாள் அமெரிக்க சிப்பாய்கள் பிரயாணம் செய்த ரயில் ஒன்று வருவதைப் பார்த்தும் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மகதோக்கள் சுமார் பத்துப் பேர் ஓடிவந்தார்கள் . ரயில் ஜன்னல் வழியே காக்கியுடையைப் பார்த்ததுமே அவர்கள்ரயில் அங்கே நிற்கும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும் . அந்த வழியே தினம் ஓரிரு பிரயாணி ரயில்களும் சரக்கு ரயில்களும் போவது வழக்கம் . அவை அந்த இடத்தில் நிற்பதுமில்லை , அவற்றைப் பார்த்து மகதோக்கள் ஓடி வருவதுமில்லை. எங்கள் முகாமில் காய்கறிகளும் மீனும் கொண்டு வந்து விற்க ஆளனுப்பும்படி மகேதோ கிராமத்துத் தலைவனிடம் ஒரு நாள் சொன்னேன்.

"வயல் வேலையை விட்டு வரமுடியாது " என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.

ஆனால் இப்போது மகதோக்கள் ஓடி வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது எனக்கு.

கருப்பு உடலில் கோவணம் மட்டும் அணிந்த ஆண்கள் - அகலக் கட்டையான துணியுடுத்திய பெண்கள் , கிராமத்துச்சக்கிலியன் தைத்த முரட்டுச் செருப்புகள் காலில் , அவர்கள் முள்வேலிக்கு வெளியே வரிசையாக நின்றார்கள்.

ரயில் வந்து நின்றது . அமெரிக்க சிப்பாய்கள் கைகளில் குவளைகளை எடுத்துக்கொண்டு திடுதிடுவென்று இறங்கினார்கள்,

அன்று அங்கே இருநூற்றுப் பதினெட்டுப் பேருக்குக் காலையுணவு தயாராயிருந்தது .

அப்போது குளிர ஆரம்பித்து விட்டது . தொலைவில் குன்றின்மேல் பனிப்போர்வை . மரங்களும் செடிகொடிகளும்பனியால் கழுவப்பட்டுப் பச்சைப் பசேலென்று இருந்தன.

ஒரு சிப்பாய் தன் அமெரிக்கக் குரலில் இந்த இயற்கையழகை ரசித்தான்.

இன்னொருவன் ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டு முள் வேலிக்கு அப்பாலிருந்த வெட்டவெளியைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் குவளையை ரயில் பெட்டியின் படியின்மேல் வைத்துவிட்டுத் தன் பேன்ட் பைக்குள்கையை விட்டான் , பையிலிருந்து ஒரு பளபளப்பான எட்டணா நாணயத்தை எடுத்து அதை மகதோக்கள் இருந்த திசையில் எறிந்தான்.

அந்தக் காசு முள்வேலிக்கு உட்புறத்தில் தார் போடப் பட்டிருந்த தரையில் விழுந்தது . மகதோக்கள் வியப்போடு அந்தச்சிப்பாயைப் பார்த்தார்கள் , கீழே கிடக்கும் நாணயத்தைப் பார்த்தார்கள் , பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

ரயில் சென்ற பிறகு அவர்களும் போகத் தொடங்கினார்கள் - நான் அவர்களிடம் , "தொரை ஒங்களுக்கு பஷீஸ் கொடுத்திருக்கார் . எடுத்துக்கிட்டுப் போங்க" என்றேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள் . யாரும் வந்துகாசைப் பொறுக்கிக்கொள்ள முன்வரவில்லை .

நானே காசை எடுத்து மகதோக் கிழவனிடம் கொடுத்தேன் - அவன் ஒன்றும் புரியாமல் என் முகத்தைப் பார்த்தான் - பிறகுஎல்லாரும் மௌனமாக அங்கிருந்து போய்விட்டார்கள்.

முட்டைகள் சப்ளை செய்த காண்டிராக்டரிடம் வேலை பார்ப்பவன் நான் . எனக்கு இந்த வேலை சற்றும் பிடிக்கவில்லை .ஜனநடமாட்டமில்லாத இடம் - பிரயாணி ரயில் எதுவும் நிற்பதில்லை - முகாமில் நானும் பகோதிலாலும் மூன்று கூலிகளுந்தான் வெறும் பொட்டல் வெளி , பகலில் சூனியமான வானம் , என் மனதிலும் சலிப்பு மகதோக்களும் எங்களை நெருங்குவதில்லை நானே போய் அவர்களிடமிருந்து காய்கறிகள் , மீன் வாங்கி வருவேன் . அவர்கள் விற்க வருவதில்லை . ஆறு மைல் தூரம்நடந்து புர்க்குண்டாச் சந்தையில் விற்கச் செல்கிறார்கள்.

பிறகு சில நாட்கள் சிப்பாய் ரயிலோ கைதி ரயிலோ வரவில்லை.

திடீரென்று ஒருநாள் அரைஞாணில் இரும்புத்துண்டு கட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் என்னிடம் வந்து கேட்டான் ,"ரயில் வராதா, பாபு?"

"வரும், வரும் " என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

பையனைச் சொல்லிக் குற்றமில்லை . எங்கும் குட்டையான குன்றுகள் , வறண்ட நிலம் , கிராமவாசிகள் நெருக்கியடித்துக்கொண்டு பிரயாணம் செய்யும் பஸ் ஒன்றைப் பார்ப்பதற்குக்கூட வேலமரக் காட்டைக் கடந்து நான்கு மைல் போக வேண்டும் காலைவேளையில் ஒரு பக்கமும் மாலையில் எதிர்ப்பக்கமும் போகும் பிரயாணிகள் ரயில் தன் வேகத்தைக்கூடச் சற்றும்குறைத்துக் கொள்ளாமல் அந்த இடத்தைக் கடந்துவிடும் , அப்படியும் நாங்கள் ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் வழியேமங்கலாகத் தெரியும் மனித முகங்களைப் பார்க்கக் கூடாரத்திலிருந்து வெளியே ஓடி வருவோம் - மனிதர்களைப் பார்க்காமல் எங்களுக்குச் சலிப்பாயிருக்கும்.

ஆகவே அமெரிக்க சிப்பாய்கள் வருகிறார்களென்ற செய்தி கேட்டால் கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டாலும் கூடவே ஓர்ஆறுதலும் தோன்றும் எங்களுக்கு,

சில நாட்களுக்குப் பிறகு சிப்பாய் ரயில் வருவதாகச் செய்தி வந்தது . மறுநாள் ரயில் வந்தது , வழக்கம் போல் சிப்பாய்கள்ரயிலிலிருந்து இறங்கி முட்டை , ரொட்டி , காப்பி எடுத்துக் கொண்டார்கள்,

திடீரென்று முள்வேலிக்கு வெளியே மகதோக்களின் கூட்டம் - அவர்கள் இருபது பேர் இருக்கலாம் , முப்பது பேர் இருக்கலாம் . முழங்கால் உயரமுள்ள குழந்தைகளைச் சேர்த்தால் மொத்தம் எவ்வளவு பேர் என்று சொல்ல மடியாது , குட்டைத் துணியுடுத்திய பெண்களும் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றார்கள் அங்கே .

அவர்களைப் பார்த்து எனக்கு ஓர் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. பகோதிலாலோ கூலிகளோ மகதோ கிராமத்துக்குப்போக விரும்பினால் எனக்குப் பயமாயிருக்கும்.

அங்கே பிளாட்பாரம் இல்லை - ரயிலில் ஏறி இறங்க வசதிக்காகப் பாதையோரம் தார் போட்டுச் சற்று மேடாக்கப்பட்டிருந்தது அமெரிக்கச் சிப்பாய்கள் காப்பியை உறிஞ்சிக் குடித்தவாறு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள் . அவர்களில் சிலர்மகதோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு சிப்பாய் பகோதிலாலை நெருங்கித் தன் பேண்ட் பையிலிருந்து பணப் பையை எடுத்தான். பிறகு அதிலிருந்து ஓர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்துப் பகோதிலாலிடம் "சில்லறை இருக்கா ?" என்று கேட்டான்.

சிப்பாய்கள் பொதுவாகச் சில்லறை வைத்துக் கொள்வதில்லை , கடைக்காரனிடம் ஏதாவது சாமான் வாங்கினால் அல்லது டாக்சியோட்டிக்குப் பணம் கொடுப்பதானால் கரன்சி நோட்டைக் கொடுத்து விடுவார்கள் , "பாக்கியை நீயே வச்சுக்க "என்று சொல்லி விடுவார்கள். நான் இதை ராஞ்சியில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

பகோதிலால் சிப்பாய்க்கு , ஓரணா , இரண்டணா , நாலணா சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தான் . அப்போது மகதோக்களின் கூட்டத்தில் இரும்புத் துண்டை அரைஞாணில் அணிந்திருந்த சிறுவன் சிரித்துக்கொண்டே கையை நீட்டி ஏதோ கேட்டான்.

பகோதிலாலிடமிருந்து சில்லறைகளை வாங்கிக்கொண்ட சிப்பாய் அவற்றை மகதோக்களிருந்த பக்கம் எறிந்தான் . இதற்குள் நான் சப்ளை பாரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்து விட்டேன் - கார்டு விசில் ஊதிவிட்டான். ரயில் ஓடத் தொடங்கியது .

நான் மகதோக்கள் பக்கம் திரும்பிப் பார்த்தேன்,

அவர்கள் சற்று நேரம் மௌனமாகக் கீழே கிடந்த சில்லறைகளைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள் - பிறகு திடீரென்று அரைஞாணில் இரும்புத்துண்டு கட்டியிருந்த சிறுவனும் துத்த நாகத் தாயத்து அணிந்த சிறுவனும் முள்வேலிக்குள் நுழைந்துவந்தார்கள் .

அப்போது முரட்டுச் செருப்பு அணிந்த மகதோக் கிழவன், "ஜாக்கிரதை !" என்று கத்தினான் - அந்தச் சத்தத்தில் நான்கூடத்திடுக்கிட்டுப் போய்விட்டேன்.

ஆனால் இரு சிறுவர்களும் அவனுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை . அவர்கள் எல்லாச் சில்லறைகளையும் பொறுக்கிக்கொண்டு தோலுரித்த பிஞ்சுச் சோளக் கொண்டை போல் சிரித்தார்கள் . மகதோ ஆண்களும் பெண்களும் கூடவேசிரித்தார்கள்.

மகதோக் கிழவன் கோபத்துடன் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே கிராமத்துக்குப் போனான் மற்ற மகதோக்களும்தங்களுக்குள் கலகலவென்று பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.

அவர்கள் சென்றபின் அந்த இடத்தில் மறுபடி வெறுமை , நிசப்தம் - சில சமயங்களில் எனக்கு மிகவும் அலுப்பு ஏற்படும் தூரத்தில் குன்றுகள், இலுப்பைக் காடு , வேல மரங்களுக்கப்பால் கொஞ்சமாகத் தண்ணீரோடும் அருவி , பசுமையான வயல்கள் அவற்றில் ஆங்காங்கே கோவணமணிந்த கருப்பு மனிதர்கள் , கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சி.

அவ்வப்போது சிப்பாய ரயில் வந்து நிற்கும் , சிப்பாய்கள் காலையுணவு உண்டுவிட்டுப் போவார்கள் , மகதோக்கள்முள்வேலிக்கு வெளியே கூட்டமாக வந்து நிற்பார்கள்.

"தொரை, பக் ஷீஸ்! தொரை, பக் ஷீஸ்!"

ஒரே சமயத்தில் பல குரல்கள் .

மேஜரிடம் பாரத்தில் கையெழுத்து வாங்க வந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

அந்த இரு சிறுவர்கள் மட்டுமல்ல , சில இளைஞர்களும் கைகளை நீட்டி பஷீஸ் கேட்கிறார்கள் - குட்டைத் துணியணிந்தவளர்ந்த பெண்ணும் கேட்கிறாள்.

முன்பொருநாள் நான் காய்கறி வாங்கக் கிராமத்துக்குப் போயிருந்தபோது அவள்தான் "ரயில் எப்போ வரும் ?" என்று என்னைக் கேட்டவள்.

தோளில் பட்டையணிந்த மூன்று நான்கு சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து கை நிறையச் சில்லறையை எடுத்து அவர்கள் பக்கம் எறிந்தார்கள் - மகதோக்கள் ரயில் புறப்படும் வரை காத்திருக்காமல் ஒருவர் மேலொருவர் விழுந்து காசுகளைப் பொறுக்கத் தொடங்கினார்கள் . அவர்கள் அவசர அவசரமாக முள்வேலிக்குள் நுழைந்து வரும்போது சிலருக்கு உடம்பில் கீறல் , காயம் ஏற்பட்டது . சிலருடைய கோவணங்கள் வேலியில் சிக்கிக் கொண்டன. ரயில் சென்ற பிறகு அவர்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன் - மகதோ கிராமத்தினரில் பாதிப் பேர் அங்கு வந்துவிட்டதாகத் தோன்றியது . எல்லாருக்கும் கொஞ்சம் காசு கிடைத்து விட்டது . ஆகையால் அவர்கள் முகத்தில் சிரிப்பு - ஆனால் எவ்வளவு தேடியும் முரட்டுச் செருப்பணிந்த அந்த மகதோக் கிழவனை மட்டும் பார்க்க முடிய வில்லை - அவன் வரவில்லை . முதல் தடவை அவன் அதட்டியும் சிறுவர்கள் பொறுக்கியெடுத்த காசுகளை எரியவில்லை என்று அவனுக்குக் கோபமாயிருக்கலாம்.

கிழவன் மட்டும் இப்போது தனியே வயலில் மண்ணை வெட்டிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு எனக்கு இதமாயிருந்தது.

முகாமில் இருந்த எங்கள் ஐந்து பேருக்கு எப்படியோ பொழுது கழிந்தது . இடையிடையே சிப்பாய் ரயில் வரும் , நிற்கும் , போகும் மகதோக்கள் முள்வேலிக்கு வெளியே கூட்டமாகக்கூடி 'தொரை , பக் ஷீஸ் ! தொரை பக் ஷீஸ்!" என்று கத்துவார்கள்.

அப்போது சில நாட்கள் மகதோக் கிழவன் வயல்வேலையை விட்டுவிட்டுக் கைகளிலிருந்து மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டு அங்கே வேகமாக வந்து எல்லாரையும் அதட்டுவான். ஆனால் யாரும் அவனை பொருட்படுத்துவதில்லை - அவன் பரிதாபமாக அவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்பான் . ஆனால் யாரும் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.

சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து சில்லறையை எடுத்து எறிவார்கள் , மகதோக்கள் ஒருவர் மோலொருவர் குப்புற விழுந்துகாசுகளைப் பொறுக்குவார்கள் . காசு 'எனக்கு , ஒனக்கு ' என்று சண்டை போட்டுக் கொள்வார்கள் . இதைப் பார்த்துச் சிப்பாய்கள் "ஹா ஹா 'வென்று சிரிப்பார்கள்.

இதன்பிறகு மகதோக் கிழவன் வருவதில்லை . மகதோக்களின் 'பிச்சைக்காரத்தனம் அவனுக்குப் பிடிக்கவில்லை , அதனால் அவன் அங்கு வருவதில்லை என்பதற்காக நான் கர்வப்பட்டேன்,

மகதோக்களின் நடத்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை . அவர்களது இந்த நடத்தைக்காக நான் வெட்கப்பட்டேன் . அவர்களுடைய வறுமைமிக்க தோற்றத்தைப் பார்த்துச் சிப்பாய்கள் அவர்கள்பிச்சைகாரர்கள் என்று நினைப்பது எனக்கு மிகவும் வருத்தமளித்தது - ஒருநாள் அவர்கள் 'பக் ஷீஸ்! பக் ஷீஸ்!' என்று கத்திக் கொண்டிருந்தார்கள் . நான் ரயில் கார்டு ஜானகிநாத்துடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன் . 'கிறீச் , கிறீச்' என்று ஒலியெழுப்பிய பூட்ஸ் அணிந்து என் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒருராணுவ அதிகாரி தொண்டையைக் காரி கொண்டு 'பிச்சைக் காரப் பசங்க' என்று சொன்னான்

நானும் ஜானகிநாத்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம் . என் முகம் அவமானத்தில் கறுத்தது. என்னால்தலை நிமிர முடியவில்லை உள்ளூர எரிச்சல் பட்டேன் - கையாலாகாத எரிச்சல்.

"பிச்சைக்காரப் பசங்க! பிச்சைக்காரப் பசங்க!"

என் கோபமெல்லாம் மகதோக்கள் மேல் திரும்பியது . ரயில் போனதும் நான் பகோதிலாளைக் கூட்டிக்கொண்டு போய் அவர்களை விரட்டினேன் , அவர்கள் பொறுக்கிக் கொண்ட காசுகளை மடியில் செருகிக்கொண்டு சிரித்தவாறே ஓடிப்போய்விட்டார்கள்,

எனினும் மகதோக்களால் எனக்கு ஏற்பட்ட அவமான உணர்வை ஓரளவு தனித்தது ஒரு கர்வம் . மகதோக் கிழவனின் உருவத்தில் அந்த கர்வம் ஒரு குன்றுபோல் என் கண் முன்னாள் உயர்ந்து நின்றது.

ஒரு செய்தி கேட்டு எனக்கு ஆறுதல் ஏற்பட்டது - காண்டிராக்டரைச் சந்திக்கப் புர்க்குண்டா போனபோது நான் கேட்டசெய்தி அது . அண்டாஹால்ட்டை மூடிவிடப் போகிறார்களாம்.

கூலிகளில் இருவர் இவ்வளவு காலம் மேஜையாகப் பயன்பட்ட இரண்டு டிரம்களையும் முள்வேலிக்கு வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள் மூன்றாவது கூலி எங்கள் கூடாரத்துக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தான். பகோதிலால் "ஆட்டம்க்ளோஸ் , ஆட்டம் க்ளோஸ்!" என்று சொல்லியவாறு டிரம்களைக்காலால் உதைத்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று இங்கு எழுந்த அரவத்தைக் கேட்டு மகதோக்கள் ஓடி வந்தார்கள்.

நாங்கள் அவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தோம் . ஏனோ பகோதிலால் சிரித்தான்.

இதற்குள் முள்வேலிக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது.

திடீரென்று விசில் ஒலி. ரயில் வரும் அரவம் , ஜன்னல்களில் காக்கியுடை எங்களுக்கு ஒருபுறம் எரிச்சல் , ஒருபுறம் வியப்பு - ரயில் வரப்போகும் செய்தியை எங்களுக்கு அனுப்பப் புர்க்குண்டாஆபீஸ் மறந்துவிட்டதா ? இந்த முகாமையே எடுத்துவிடப் போவதாக நாங்கள் கேள்விப்பட்டது தவறா ? ரயில் நெருங்க நெருங்க ஒரு விசித்திரமான சத்தம் பலமாகக் கேட்டது . சத்தம் அல்ல , பாட்டு - ரயில் மிக அருகில் வந்தபோது சிப்பாய்களெல்லாரும் ஒன்று சேர்ந்து உரக்கப் பாடுவது கேட்டது.

நான் ஒன்றும் புரியாமல் ஒரு புறம் ரயிலைப் பார்த்தேன் , இன்னொரு புறம் திரும்பி முள்வேலிப் பக்கம் பார்த்தேன் . அந்தநிமிஷம் மகதோக் கிழவன் மேல் என் பார்வை விழுந்தது - கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டு அவனும் "தொரை,பக் ஷீஸ்! தொரை, பக் ஷீஸ் " என்று கத்திக் கொண்டிருந்தான்.

மகதோக் கிழவனும் மற்றவர்களும் பிச்சைக்காரர்கள் போல் , பைத்தியம் பிடித்தவர்கள் போல் கத்திக் கொண்டிருந்தார்கள் . ஆனால் இன்று அந்த ரயில் இங்கே நிற்கவில்லை . மற்ற பிரயாணி ரயில்களைப்போல் அதுவும் அண்டாஹால்ட்டைப் புறக்கணித்துப் போய்விட்டது - ரயில் இனி நிற்காது என்று எங்களுக்குப் புரிந்தது.

ரயில் போய்விட்டது . ஆனால் இவ்வளவு காலமாக வயல்களில் விவசாயம் செய்து கொண்டிருந்த மகதோக்கள் எல்லாரும்பிச்சைக்காரர்களாகி விட்டார்கள்.

(பாரத்வர்ஷ. ஏபங் அன்யான்ய கல்ப , 1959)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.