Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

16. சீட்டுக்களாலான வீடுபோல

சையது முஸ்தபா சிராஜ் 

I தீபக்மித்ரா 

நான் இதுவரை ஓடிய தூரத்தில் ஒரு வீட்டுக் கதவுகூடத் திறந்திருக்கவில்லை - ஒரு ஜன்னல் கூடத் திறந்திருக்கவில்லை மையிருட்டு -ஊரில் பிளாக் அவுட் அமலிலிருந்தாற்போல - தெரு நனைந்திருந்தது . இந்த அமைதியும் வழக்கத்துக்கு மாறுபட்டது . இரவு பத்து மணியாகிவிட்டது - பின்பக்கத்தில் இப்போதுதான் ஏதோ ஒரு விபத்து நேர்ந்திருக்கிறது . இருந்தாலும் நகரம் முழுவதையும் பயமுறுத்திவிட அல்லது பேச்சில்லாமல் செய்துவிட இவை போதுமான காரணங்கள் அல்ல வரவரமனிதர்களின் இரத்தத்தின் சூடு தணிந்து கொண்டு வருகிறது அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படாமலிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள் . ராம்பாபு . சியாம்பாபு ஐது பாபு எல்லோரும் பேரம் பேசிக் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய செருப்புக்குக் கீழே தரையில் அப்போதுதான் சிந்திய இரத்தம்..... இரத்தத்துக்கு மொழியேதும் இல்லை

பின்னால் சற்றுத் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டு இன்னும் வேகமாக ஓடினேன் - நான் இப்போது உரக்கக் கத்தி மண்டையை உடைத்துக்கொண்டாலும் எந்த வீட்டுக் கதவும் திறக்காது , யாரும் ஜன்னலைத் திறந்துகூட வெளியே எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். எல்லாரும் இந்த அகாலத்தில் ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளும் ஆமைமாதிரி போர்வைகளுக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு விட்டார்கள் . ஆமைக்குக் குரல் இல்லை என்று நான் உயிரியல்நூலில் படித்திருக்கிறேன்,

நகரத்தின் இந்தப் பகுதி எனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாதது ஓடிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் தோன்றியது. உலகத்தின் எந்தப் பகுதியிலும் நீர் -நிலம் -வான வெளியில் மனிதன் போகாத இடமில்லை என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது .ஆனால் என்ன ஆச்சரியம் ! உலகம் கிடக்கட்டும் , இந்த நகரத்திலேயே இன்றுவரைஎன் கால் படாத இடங்கள் , எனக்குத் தெரியாத இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன ! சும்மா பீற்றிக் கொண்டு என்னலாபம் ?

இருபத்தேழு வயதான , துணிச்சல் மிக்க இளைஞனான தீபக் மித்ரா என்ற பெயருள்ள நான் எவ்வளவோ இடங்களுக்குப்போனதில்லை , எத்தனையோ இடங்களைப் பார்த்ததில்லை . எவ்வளவோ விஷயங்கள் எனக்குத் தெரியாமலே இருந்துவிடப்போகின்றன , எதற்கும் அடங்காத உணர்ச்சிமயமான , ஆபத்தான இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் நீர்க்குமிழிபோல் மறைந்துபோய்விடலாம் , ஒரு சிறிய இரும்புத்துண்டு போதும் என் இருபத்தேழு வருடங்களை வீணாக்கிவிட - உலகம் , வாழ்க்கை இவற்றின் பெரும்பகுதி என் பார்வைக்குத் தெரிவதற்கு முன் நான் எரித்துவிடப்படுவேன் அல்லது தண்ணீரில் எறியப்படுவேன் அல்லது பருந்து , காக்கை , நாய்களின் உணவாகத் தேர்ந்தெடுக்கப் படுவேன் - ஐயோ , அழகிய இனிய பழத்தின் சுளை போன்ற என்உடல், உள்ளம் . இளமை ..!

அதனால்தான் நான் ஓடிக்கொண்டிருந்தேன் என் உடலும் உள்ளமும் இளமையும் தங்கள் தங்கள் மொழியில் "தப்பியோடிப்பிழைத்துக் கொள்! தப்பியோடிப் பிழைத்துக் கொள்!" என்று அலறின.

என்னைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்று எனக்குப் புரிந்தது என்னைக் கொல்லும்வரை அவர்களுக்கு நிம்மதியில்லை . அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஆபத்தான இரவில் நகரமும் எதிர்பாராத முறையில் மாறிப்போய் விட்டது . அணிகள் நிறைந்த நாகரீகப் பூங்காவரலாற்றுக் காலத்துக்கு முந்தைய அடர்ந்த காட்கிவிட்டது . பல மாடிக் கட்டிடங்களெல்லாம் பயத்தில் தங்கள் நீண்ட அங்கியை களைந்து கொண்டு பெரிய பெரிய மரங்களாக நிற்கின்றன. இந்த ராம்பாபு , சியாம்பாபு , ஜதுபாபு எல்லாரும் இருட்டில் தவழ்ந்து கொண்டு போய் , மனித குலத்தின் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமான பழம் பழுக்கும் அந்த பழையமரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் , அவர்களுடைய கைகளில் மூன்று சின்னஞ்சிறு கோடரிகள் அடங்கிய பொட்டலம் ஒவ்வோரு கோடரியின் விலை ஐந்து காசு -

மூன்று தெருக்கள் சந்திக்கும் இடம் வந்தது - வலது பக்கம் போவதா , இடது பக்கம் போவதா என்று யோசித்துத் தயங்குவதற்குள் - துப்பாக்கி சுடும் பயங்கர ஒலி ! துப்பாக்கி சுடும்போது மின்மினி போல் சிதறும் நெருப்புப் பொறிகள் தெரிக்கின்றனவா என்று திரும்பிப் பார்த்தேன் . வேடிக்கைதான் , ஆபத்துக் காலத்தில்கூட நம்முள் இருக்கும் அசட்டுக் குழந்தைத்தன்மை செயற்படுகிறது.

மறுகணமே ஒரே தாவில் இடதுபக்கம் திரும்பி ஓடினேன் , உயரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . துணிச்சல் மிக்க கொரில்லாஒன்று ஜன்னலைத் திறந்து அதன் கம்பியில் மூக்கைத் தேய்த்துக் கொண்டு வெளியே பார்க்கிறது . அழகான வீடு , அதன் மேல் கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன . ஏதோ ஒரு மலரின் மணம் என் விருப்பத்துக்கு மாறாக என் உணர்வில் புகுந்தது .நான் நெஞ்சுயரமிருந்த கேட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் பத்திரமாக இருக்கும் உணர்வு ஏற்பட்டது . இந்தமாதிரி வீடுகளில் சாதாரணமாக ஒரு நாய் இருக்கும் , வாசலில் 'நாய் ஜாக்கிரதை ' என்று அறிவிப்பு இருக்கும் என்பது நினைவுவந்தது . ஆனால் நான் உள்ளே நுழைந்த நாயின் குரைப்பொலி கேட்கவில்லை . நல்ல வேளை இந்த வீட்டில் நாய் இல்லை . அல்ல , இருந்தாலும் அதைக் கட்டி வைத்திருக்கிறார்கள் வீட்டுக்குள்

சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டேன் . வெளியே எந்த அரவமுமில்லை. அவர்கள் வேறு சந்துகளில் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் போலும் , இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எனக்கு ஆபத்தில்லை, மேலே திறந்திருந்த ஜன்னலிலிருந்து வந்தமங்கிய வெளிச்சத்தில் நாற்புறமும் பார்த்துக்கொண்டேன் - ஒரு சிறிய புல்வெளி - இருபுறமும் மலர்ச் செடிகள் . இந்த இருட்டில் இந்த ஆபத்தான இடத்தில் ஹாஸ்னுஹானாப் பூவுக்குத்தான் எவ்வளவு துணிச்சல்! கோபமும் எரிச்சலும் ஏற்பட்டது எனக்கு இது உசிதமில்லை ! பூச்செடிகளை ஒரு அறை அறைந்து "வாயை மூடு " என்று சொல்லிவிட வேண்டும். "இங்கு வராதீர்கள் !"என்று பறவைகளை அதட்ட வேண்டும் . காதல் ஜோடிகளைக் கண்டிக்க வேண்டும் !. கணவனும் மனைவியும் அருகருகே படுத்துக்கொள்வதைத் தடை செய்ய வேண்டும் . தொழிலாளர்கள் அழிந்து போகட்டும் ! இஞ்சீனியர்கள் வேலை செய்ய வேண்டாம் !விஞ்ஞானிகள் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்!

அந்த சமயத்தில் மறுபடியும் துப்பாக்கி சுடும் ஒலி கேட்டது , வீடுகள் அதிர்ந்தன . வண்டிகளின் கடகட ஓசை - பிரகாசமானவெளிச்சக் கற்றையொன்று கண நேரம் தோன்றிப் பிறகு இருளில் மறைந்துவிட்டது போலீஸ் வந்துவிட்டது !

வீட்டுப்பக்கம் பின் வாங்கினேன் எதிரில் பெரிய கம்பிக்கதவு திறந்திருந்தது -வாரிசு இல்லாத சொத்துமாதிரி . அப்படியானால் இது பல ஃபிளாட்டுகள் கொண்ட வீடு - கதவை மூடுவார் என்று ராம்பாபு நினைத்துக் கொண்டிருப்பார் -ராம்பாபு அல்லது ஜது பாபு மூடுவார் என்று நினைத்துக் கொண்டிருப்பார் சியாம்பாபு - வீட்டுக் காவல்காரன் ஒருவன் இருந்தாலும் அவன் கஞ்சா குடித்துவிட்டு எங்கேயோ மயங்கிக் கிடக்கிறான் போலும். ஆமாம், இருக்கிறான். மாடிப்படிக்குக் கீழேயுள்ள சின்னஞ்சிறு அங்கணத்தில் ஒரு கட்டிலில் அசைவின்றிக் கிடப்பவன்தான் காவல்காரன்.

அகலமான மாடிப்படிகளின்மேல் அரவம் செய்யாமல் ஏறினேன் . படிகளுக்கு மெல் முதல் மாடியில் ஒரு மின்சார விளக்கு எரிந்து கொன்டிருந்தது விளக்கைச் சுற்றிலும் ஒட்டடை , தூசி கீழே புல் தரையையும் பூச்செடிகளையும் பார்த்து நான் அந்த வீடு அழகாக , தூய்மையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் . ஆனால் அதன் கிழட்டுத் தனமும் பராமரிப்புக் குறைவும் இப்போது கண்ணில் படத் தொடங்கின - நான் மேலே ஏற ஏற அருவருப்பளிக்கும் பாழடைந்த இடமொன்றில் நுழையும் உணர்வு ஏற்பட்டது எனக்கு . மாடியில் நான்கு கதவுகளில் பூட்டுகள் தொங்கிக் கொன்டிருந்தன - இன்கு வசித்துக் கொண்டிருந்தவர் களெல்லாரும் ஒரே கூட்டமாக எங்கே போய் விட்டார்கள் . இரண்டாம் மாடியில் மூன்று கதவுகள் . இங்கும் ஒட்டடை படிந்த விளக்கு - மூன்று கதவுகளில் இரண்டில் பூட்டுக்கள் தொங்கின . மூன்றாவது கதவுக்குரிய ஃபிளாட்டின் ஜன்னலில்தான் நான் அந்தக் கொரில்லாவைப் பார்த்திருக்க வேண்டும் . அந்த ஆள் தனியாக இருக்கிறானா , அல்லது குடும்பத்தோடு இருக்கிறானா ....?

ஒரு ஃபிளாட்டில் கதவிலும் பெயர்ப்பலகை இல்லை , அழைப்பு மணி இல்லை , சுவர்களில் சிவப்பு , கறுப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்கள் எங்கும் எல்லாருக்கும் மனப்பாடமானவை , பயத்தில் என் உடல் சிலிர்த்தது , இந்த இடம் எனக்குப் பாதுகாப்பானதில்லை . நானே தற்செயலாக 'அவர்களுடைய ' கோட்டைக்குள் வந்து அகப்பட்டுக்கொண்டு விட்டேனோ?

வேறு வழியில்லை. துணிவை வரவழைத்து கொண்டு பேண்ட் பைக்குள் கையைவிட்டு அதிலிருந்த -38 குறுக்களவுள்ள ரிவால்வரை இறுகப்பிடித்துக் கொண்டேன் . அதில் ஒரு குண்டு தான் பாக்கி இருக்கிறது , அது போதும். பின்னால் பல மணிகள், நாட்கள், மாதங்கள், வருடங்கள் பிழைத்திருப்பதற்காக இப்போதைக்கு ஒரு சில மணிநேரம் பிழைத்திருக்க வேண்டும் .இது எனக்கு மிகவும் அவசியம் - ஐயோ , என் இருபத்தேழு வீணான வருடங்களே ! என் இளமை மந்திரத்தால் கட்டுண்டபூனைக்குட்டி போல் ! என்னுள்ளே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கதவு வளையத்தை மெதுவாக ஆட்டினேன் - இரண்டு தடவை . பிறகு மெதுவாகக் கதவைத் தட்டினேன்.

II ஹிரண்மய் தத்தராய் 

என்ன ஆச்சு? மறுபடியும் பவர்கட்டா ? மழைக்காலம் முழுவதும் இந்தத் தொந்தரவு தொடரும் - மெழுகுவர்த்தி வாங்கிவாங்கிப் போண்டியாகி விட்டேன்! கார்ப்பரேஷன்...

இந்த சமயம் மருமகள் ஓடி வந்தாள்

" கேட்டீங்களா ..? இந்த ராத்திரி மறுபடி ஆரம்பிச்சுட்டது ."

குதித்தெழுந்தேன் "என்னம்மா ஆரம்பிச்சுட்டுது?"

ராணுவுக்கு என்மேல் எகரிச்சல் ஏற்பட்டிருக்குமோ 7 வயதாக ஆக என் கண்களைப்போல் காதுகளும் வலுவிழந்து கொண்டிருக்கின்றன என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் . அப்படியும் அவள் எரிச்சல் படுகிறாள் . அவளுக்கு நாளுக்குநாள் என்மேல் எரிச்சல் வளர்வது எனக்குத் தெரியும் .. நான் திடீரென்று "யாரோ கூப்பிடறாங்க போலிருக்கு - என்று சொல்லிக்கொண்டு வாசலுக்கு ஓடுவது : இவையெல்லாம் எரிச்சலூட்டுகின்றன . நான் இதை உணர்கிறேன் . குறிப்பாக நான் முன்னறையில் சௌமேனின் போட்டோவை வைத்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை . அவனது சமீப காலத்துப் போட்டோ , இது ஒன்றுதான் பெரிய அளவு போட்டோ . இதில் அவன் மட்டும் இருக்கிறான். அவனுடைய மற்ற போட்டோக்களெல்லாம் வெகு காலம் முன்பு எடுக்கப்பட்டவை . அவற்றுள் பலவற்றில் ராணுவும் கூட இருக்கிறாள் . அவையெல்லாம் போட்டோ ஆல்பத்தில் இருக்கின்றன . நான் அந்த ஆல்பத்தைச் சில சமயம் என்னிடமே வைத்திருப்பேன், சில சமயம் ராணுவிடம் கொடுப்பேன். சிலசமயம் அவளே என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு போவாள் . ஆனால் அவற்றில் இப்போதைய சௌமேனைப் பார்க்க முடியவில்லை . இப்போது அவனுடைய நெற்றியில் சுருக்கம் விழுந்திருக்கிறது , தாடையெலும்பு துருத்தி நிற்கிறது , அவனுடைய உடலின்மென்மை தேய்ந்து கொண்டு வருகிறது , கண்களில் ஓர் அசாதாரண ஒளி. அவனுடைய இந்த மாற்றங்களெல்லாம் இந்த போட்டோவில் இடம் பெற்றிருக்கின்றன.

சௌமேன் , என் ஒரே பிள்ளை , என் செல்லப் பிள்ளை , "அவன் அனுபவிக்கும் துன்பங்களையெல்லாம் , வேதனைகளையெல்லாம் எனக்குக் கொடுத்துவிடு !" என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டேன் . ஏனென்றால் உலகத்தில் பல எதிரிகளுடன் போரிட்ட அனுபவம் இந்தக் கிழவனுக்கு உண்டு , பல பயங்கர நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன் நான் , பயங்கரச் சூடு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் நெருப்பு , புயல் , மழையின் தாக்குதல்கள் , இன்னும் பல எதிர்பாராத எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறேன் நான் - எவ்வளவு வகை ஆபத்துகள் நேர்ந்திருக்கின்றன ! நான் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டோவெற்றிகொண்டோ இன்னும் நிலைத்திருக்கிறேன் . ஆகையால் எந்தவித நோய் - கஷ்டம் , வேதனையைத் தாங்கிக் கொள்வதும் எனக்குச் சிரமமாயிருக்காது . ஆனால் சௌமேன் ! அவனது ஆத்மா மென்மையானது . அவன் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோஎதிர்பார்க்கிறான் . வாழ்க்கையின் மோகனக் கவர்ச்சியில் அவன் கனவுகள் பல கண் கொண்டிருக்கிறான் . ஆகையால் நான்கடவுளை வேண்டிக்கொள்வேன் - "சௌமேனின் கஷ்டங்களை என்னிடம் கொடு , அவனுடைய இன்பங்கள் அவனிடமே இருக்கட்டும் " என்று ஆனால்....

போட்டோவைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தேன் ! அவன் திடீரென்று ஏன் இந்த போட்டோ எடுத்துக் கொண்டான்என்று எனக்கு முன்னால் புரியவில்லை , பிறகு புரிந்தது . இந்த போட்டோ அவன் வெளியேறுவதற்றுமுன் எனக்கும் அவன்மனைவிக்கும் ஆறுதலளிப்பதற்காகக் கொடுத்த நினைவுச் சின்னம் , "இதை வைத்துக்கொண்டு ஆறுதல் பெறுங்கள் !" என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்!

ஆம் , நான் எழுபத்திரண்டு வயதுக் கிழவன் , வெறும் நினைவுகளுடன் காலந் தள்ள முடியும் என்னால் , என் போன்றகிழவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் . ஆனால் என் மருமகள் ராணு ? அவளால் முடியுமா ?

அவளுடைய இரத்தமும் தசையும் உள்ளமும் இன்னும் ஓய்ந்துவிடவில்லையே ! அவளுக்கு சௌமேனின் உடம்பு வேண்டும் . அவள் சௌமேனை நேரடியாகப்பெற வேண்டும் , வெறும் நினைவாகவோ குறியீடுகளாகவோ அல்ல . ஆகையால் அவளுடைய கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது . அவள் கையாலாகாத கோபத்தில் துடிதுடிக்கிறாள் . கணவனைச் சபிக்கிறாள் , தலையைச் சுவரில் மோதிக்கொண்டு திட்டுகிறாள் . அவள் தன் கணவன் ஒரு கோழை என்று நினைக்கிறாள் . நான் அவளைக் குற்றஞ் சொல்லவில்லை . சௌமேன் இப்படிச் செய்யலாமா ? அவனே தேர்ந்தெடுத்துக் காதலித்த பெண் ராணு . முதலில் எனக்கு அவர்களுடைய காதலைப்பற்றி ஒன்றும் தெரியாது பிற்பாடு தெரிந்துகொண்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன் - ராணுவை அன்போடு ஏற்றுக் கொண்டேன் ...

ராணு சௌமேன் மேல் ஏற்பட்ட கோபத்தில் வேறு யாரோடாவது ... இல்லை , அப்படி நடந்துவிடாது!

இந்தக் காலத்தில் பெண்கள் உடல்பசிக்கு அடிமையாவதைக் கவனித்து வருகிறேன் . அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்தத் தசை வெறிக்கு ஆளாகிறார்கள் - புதுமை என்றாலே கூட்டையுடைத்துக்கொண்டு வெளியே வருவதுதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள் - சமூக நெறிமுறைகளை மீறிப் பாலுணர்வுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தால்தான் மனிதனுக்குமுழுமையான விடுதலை கிடைக்கும் என்று நவ நாகரீகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது ..

இந்த மனப்போக்கு ராணுவைத் தொற்றிக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன், அவளது குடும்பப் பாரம்பரியம் கல்வி , ஆளுமை இவையெல்லாம் அவளிடம் நான் நம்பிக்கைக் கொள்ளப் போதுமானவை . இருந்தாலும் சௌமேனின் மறைவால் அவளிடம் ஓர் எதிர்விளைவு ஏற்படுவது இயற்கைதான் . விதவைத் திருமணத்தை ஆதரித்ததற்காக ஈசுவரசந்தர வித்யாசாகரைத்தூற்றுமளவுக்கு நான் ஒரு மட்டமான பழமைவாதியல்ல . சௌமேன் உண்மையிலேயே இறந்து போயிருந்தால் நான்ராணுவின் அப்பா என்ன சொன்னாலும் அதைப் பொருட்பத்தாமல் அவளுக்கு மறுமணம் செய்துவைப்பேன் -- ராணஅதற்கு இசைந்தால்.

இதென்ன நினைப்பு ? எனக்குத் திக்கென்றது - என் கால்கள் பாறையாய்க் கனத்தன . என் உடம்பு நடுங்கியது - சௌமேன் என்ஒரே பிள்ளை. அப்படியானால் நான் என்னையறியாமல் அவனுடைய சாவை விரும்புகிறேனா ? இல்லையில்லை . அவன்எங்கிருந்தாலும் பிழைத்திருக்கட்டும் ! அவன் என்ன செய்தாலும் சரி , எனக்கு ஆட்சேபமில்லை . நான் வேண்டுவது அவன் பிழைத்திருக்கட்டும் என்பதுதான் . இதுவரை சௌமேனின் போட்டோவுடன் பத்திரிகைகளில் பல விளம்பரங்கள் கொடுத்தாகிவிட்டது போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன் . ஊர் பேர் தெரியாத சவங்களின் படங்களைப் பார்ப்பதோடு நில்லாமல் நேரே சவக்கிடங்குகளுக்கும் போய் வந்திருக்கிறேன். சவங்களை சௌமேனின் சவந்தானோ என்று சந்தேகப்பட்டிருக்கிறேன் .இப்படித்தான் ஒருதடவை நான் ஒன்பது அநாமதேயச் சவங்களில் ஒன்றை சௌமேனின் சவந்தான் என்று நம்பியபோது இன்னொருவன் வந்து அந்தச் சவம் மிருகாங்கன் என்பவனுடையது என்றான் - பல சோதனைகளுக்குப்பிறகு அது மிருகாங்கனின் சடலந்தான் என்று தெரிந்தது .

ஆகையால் அவன் போலீசுக்குப் பயந்தோ வேறு என்ன காரணமாகவோ ஒளிவு மறைவாயிருக்கிறான் என்று தோன்றுகிறது அவன் விரைவில் ஒருநாள் தன்னுடைய தந்தைக்கும் மனைவிக்கும் முன்னால் நிச்சயம் தோன்றுவான் - காரணம் அவன் நிச்சயம்தன் செய்கைக்கு ஒரு விளக்கம் தருவான் . அவனுக்குக் கடிதமெழுத வாய்ப்பில்லாமலிருக்கலாம் . மேலும் கடிதத்தில் எல்லா விஷயங்களையும் விளக்க முடியாது கடிதமெழுதுவது ஆபத்தாகவுமிருக்கலாம் - ஆகையால் அவன் நிச்சயம் நேரில் வந்து விளக்கம்தருவான் . இந்த மாதிரி மின்சாரமில்லாத இரவு வேளையில் , இருட்டில் , நள்ளிரவில் தெருவில் ஜனநடமாட்டமில்லாதபோது ,மழையும் புயலும் பலமாயிருக்கும்போது அவன் அரவமில்லாமல் நனைந்த உடையில் மேலேறி வந்து கதவைத் தட்டுவான் - இந்தக்கட்டிடத்தில் மற்ற ஃபிளாட்டுகளிலெல்லாம் பூட்டு தொங்குவதைப் பார்த்து அங்கிருந்தவர்களெல்லாரும் ஓடிப்போய்விட்டார்கள் , யாரும் நான் வந்திருப்பதைக் கவனிக்க மாட்டார்கள் என்று நிம்மதியடைவான் ...

ஆகையால்தான் வாசல்கதவை எப்போதும் திறந்து வைத்திருக்கும்படி காவல்காரனிடம் சொல்லி வைத்திருக்கிறேன் காவல்காரன் பயங்கொள்ளி, ஆனால் இரக்கமுள்ளவன் . இரக்கம் காரணமாக அவன் மாடிப்படியின் கதவைத் திறந்து வைத்திருக்கிறான் , கோழைத்தனம் காரணமாக வாசல் கேட்டை மூடி வைத்திருக்கிறான் . நான் ஒரேயொரு ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு இரவு முழுதும் -- ஆம் , இரவு முழுதும் -- தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் . எனக்கு இரவில் தூக்கம்வருவதில்லை . நான் உறங்கிவிட்டால் , அப்போது அவன் வந்தால் , என் முன்னால் வந்து நிற்கக் கூச்சப்படுவான் . சிறுவயதில் என்னிடம் அனாவசியமாகப் பயப்படுவான் அவன் - ராணு வந்து கதவைத் திறப்பாள் . அவன் அவளுடைய அறைக்குள் போய்விடுவான்...

ராணு எப்போது போனாள் ? ஏதோ ரகளை , குழப்பம் என்று சொன்னாளே! இந்தப் பேட்டைக்கு மின்சாரம் சப்ளைசெய்யும் இயந்திரத்தை யாரோ சேதப்படுத்திவிட்டு இருட்டில் நாசக்காரி வேலைகள் செய்கிறார்களோ ? வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது . யாருக்கும் யாருக்கும் சண்டை நடக்கிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லை - ஒன்றும் தெரியாமலிருந்ததுதான்எனக்கு எமனாகி விட்டது . என் பிள்ளையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலிருந்ததால்தான் இந்த வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

நான் மறுபடியும் ஜன்னலருகே போகவேண்டும் , ராணு வந்ததால் நான் அங்கிருந்து நகர்ந்து வந்திருந்தேன் . அடே ,மின்சாரம் வந்துவிட்டதே ! இந்த நேரத்தில் சௌமேன் தெருவில் வந்திருந்தால் நான் அவனைக் கவனித்திருக்க முடியாது . அவன்அரவமின்றி மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருப்பான் , இதோ கதவு வளையத்தை ஆட்டப் போகிறான் , ராணுவைப் பெயர்சொல்லிக் கூப்பிடப் போகிறான் . கூப்பிடட்டும் . எனக்குத் தெரிந்து போய்விடும் .....

III ராணு தத்தராய் 

ஒரு ராத்திரிகூட இவர்களிடமிருந்து தப்புவதில்லை , இதோ மறுபடி ஆரம்பித்துவிட்டார்கள் . இரவு பூராவும் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் , நடு நடுவே தூக்கம் கலையும் , அப்போது கோபம் வரும் , கோபத்தால் களைப்பு , சோர்வு ஏற்படும் . அழுகை வரும் ஆனால் இன்று அழுகை என்பதே அவமானம் , என்னையே சிறுமைப்படுத்திக் கொள்வதாகும் மனிதன் தன் நாதியற்ற நிலையை முழுதும் உணர்ந்து விட்டால் சூடு தணிந்து போகிறான் . நானும் ஆறிப்போயிருக்க வேண்டும் . ஆனால் முடியவில்லை என்னால், அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது -அவர்களை ஏதோ ஒரு நெருப்பு உள்ளூர எரிக்கிறது . அந்த நெருப்பின் சூடு தீவிரமாகி யார் மேலாவது வெடித்து அவனை விழுங்கி விடுகிறது . என் கணவரும் இப்படித்தான் விழுங்கப்பட்டிருக்கிறார் . இது பற்றி எனக்கு ஆறுதல் ஒரு புறம் , கோபம் ஒரு புறம் - என் போன்ற இன்னும்பல பெண்களின் கணவர்கள் , தந்தையர் , குழந்தைகளுக்கும் இந்த முடிவு நேர்ந்திருக்கிறது என்பது ஆறுதல் . எங்களால் - என்போன்ற பெண்களால் - ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கோபம்.

சில மாதங்களுக்கு முன்னால் என் கணவர் வேலை செய்து வந்த பெரிய தொழிற்சாலை மூடப்பட்டு அவருக்கு வேலை போய்விட்டது - வீட்டு வாடகை பாக்கி - குடும்பத்தில் வறுமை - என் மாமனார் செலவாளி - அவரால் அதிகம் சேமித்து வைக்கமுடியவில்லை . அவருடைய பென்ஷன் தொகையில் காலந்தள்ளுகிறோம் . ஆனால் இதுவும் ஒரு பிழைப்பா ? எனக்குக்கஷ்டமாயிருக்கிறது - உள்ளம் துடிக்கிறது ; வெளியே கிளம்பி ஏதாவது வேலை தேடிக் கொள்ளத் தோன்றுகிறது - ஆனால் என்மாமனார் பழங்கால மனப்போக்குள்ளவர் , கோழையுங்கூட அலைந்து திரிந்து என் கணவரைத் தேடிக் கண்டு பிடிக்கநினைத்தேன் நான் . ஆனால் என் மாமனார் என்னைத் தனியாக எங்கும் பகவிடவில்லை . இது ஒரு அடிமை வாழ்வு என்று எனக்குச் சில சமயம் தோன்றுகிறது . நான் எனக்குத் தெரியாமலேயே ஒரு கூண்டில் அடைபட்டு விட்டேன். அந்தசுயநலம் பிடித்த கிழவனார் என்னைத் தம் காலியான பணப்பெட்டியைக் காவல் காக்கும் பூதமாக இங்கே வைத்துக்கொண்டிருக்கிறார்.

ஊஹூம் , இனிமேல் தாங்க முடியாது என்னால் . நான் ஓடிப்போய் விடப்போகிறேன். நான் ஏன் இங்கே இருக்கவேண்டும் ? இந்த வெறுமை | வீணாகக் காத்திருத்தல் , சலிப்பூட்டும் பகல்கள் , இரவுகள் .... இந்தக் கட்டிடத்தில் குடியிருந்த குடும்பங்களெல்லாம் இங்கிருந்து ஓடிப்போய் விட்டன - இந்தப் பேட்டையே காலியாகிக் கொண்டிருக்கிறது . சில கிழடுகளும் குழந்தைகளுந்தான் எஞ்சியிருக்கிறார்கள் - எப்போதாவது கேட்கும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கி வெடிக்கும் ஒலியைத் தவிர வேறெந்த அரவமுமின்றி ஒரு நிரந்தர அமைதி குடிகொண்டிருக்கிறது இங்கே எப்போதாவது யாரோ தெருவில் நடக்கும் காலடியோசை கேட்கிறது . இந்தச் சூனியமான ஆவியுலகத்தில் சிறைபட்டுத் தேய்ந்து போகிறது என் இருபத்திரண்டு வயது இளமை . நான் இங்கே இருக்க மாட்டேன், நான் ஓடிப்போகப் போகிறேன்!

எங்கே ஓடிப்போவது ? அம்மா அப்பாவுக்கு என்மேல் உள்ளூரக் கோபம் -- நான் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த வரனைஉதறித் தள்ளிவிட்டேனென்று . நான் அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக , அவர்களுக்குத் தெரியாமல் இவரை பதிவுதிருமணம் செய்து கொண்டேன் . பிறகுதான் நாங்கள் இருதரப்பாருக்கும் செய்தி தெரிவித்தோம் . இதற்குப் பின் வெகு நாட்கள்வரை என் பிறந்த வீட்டில் பூகம்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது . எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது - புக்ககத்தில் அப்படியொன்றும் நேரவில்லை - என் மாமியார் உயிரோடிருந்தால் அங்கும் இவை நேர்ந்திருக்கும் . காரணம் , பெண்கள்தான் பெண்களின் எதிரிகள் என் தாய் என் எதிரி . ஆகையால் நான் தாய்வீடு திரும்ப வழியில்லை. திரும்பிச் சென்றால் எதிரி இளப்பம் செய்வாள்.

அப்படியானால் எங்கே போவேன் ? இரவும் பகலும் சிந்தித்துப் பார்க்கிறேன் - ஒரு வழியும் தெரியவில்லை . எப்படியும்நான் ஓடிப்போகத்தான் போகிறேன் ! நாளுக்கு நாள் உள்ளூரக் காய்ந்து கொண்டிருக்கிறேன் நான் ! இன்னும் சில நாட்கள் இப்படி இருந்தால் நான் செத்துப்போய் விடுவேன் , வேண்டாம் - நான் பிழைத்திருக்க ஆசைப்படுகிறேன்!

அவர் போவதற்கு முன் ஒன்றும் சொல்லவில்லை - மாலையில் டீ குடித்துவிட்டு வெளியே போனார் . நாள் முழுதும் 'உம் 'மென்று பேசாமல் உட்கார்ந்திருந்தார் - இப்போதெல்லாம் எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுகிறாரென்று நானும் அவரைஎதுவும் கேட்பதில்லை - வரவர நிதானமிழந்துவிட்டார் , முன் கோபியாகிவிட்டார் . வேலை விஷயமாகக் கவலைப்படுகிறாரென்று நான் நினைத்தேன் . அவர் அதிகம் பேசுவதில்லை - எதுவும் சொல்லாமல் வெளியே போய்விடுவார் . எப்போது வீடுதிரும்புவார் என்று நிச்சயமில்லை - மாமனார் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் . என் கணவர் வீ திரும்பியதும் என் மாமனாருக்கு ஏதோ சமாதானம் சொல்வார் . என்னிடம் ஒன்றும் சொல்வதில்லை , சொல்வது அவசியம் என்று அவர் நினைக்கவில்லை , இரவில் அவருடைய ஸ்பரிசத்துக்காகத் தவிப்பேன் . பழக்கம் காரணமாக என் இரத்தமும் தசையும் பரபரக்கும் அவரோ என்னை மெல்லத் தள்ளிவிட்டு "ரொம்ப சூடாயிருக்கு . கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கோ , ராணு" என்று சொல்லித் திரும்பிப் படுத்துக் கொள்வார்.

எனக்கு அழுகை வரும் , அவருக்கு என்மேல் ஏதாவது கோபமா ? என்மேல் சந்தேகப்படுகிறாரா ? யாராவது அவரிடம் என்னைப்பற்றிக் கோள் மூட்டியிருக்கிறார்களா ? கடவுளுக்குத் தெரியும் -- நான் மனத்தால் எப்படியிருந்தாலும் உடலால் குற்றமெதுவும் செய்யவில்லை - நான் மௌனமாக அழுவேன்.

ஆச்சரியமென்னவென்றால் , நான் அழுவது அவருக்குத் தெரிந்துவிடும் . அவர் என்னை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு , "இல்லே ராணு , எனக்கு ஒம்மேலே கோவமில்லே , யார்மேலேயும் இல்லே என் கோவமெல்லாம் என்மேலேதான் என்னையே என்னாலே தாங்கிக்க முடியலே. என்னை நம்பு , ராணு! எனக்குப் பொறுக்க முடியாத துக்கம் ..." என் சொல்வார்.

நான் பெண்ணாகையால் அவருக்கு ஆறுதலாகச் சொல்வேன் , "ஒங்க துக்கத்தை என்கிட்டே கொடுங்க!"

"சீ, பைத்தியம் !" என்று சொல்லிவிட்டு அவர் மௌனமாகி விடுவார் என்னை அணைத்திருக்கும் கைகள் தளரும் . பிறகு அவர் மல்லாந்து படுத்திருப்பார்.

அவர் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று புரியும் எனக்கு , "என்ன ஆச்சு ஒங்களுக்கு? சொல்லுங்களேன்! ஒங்ககால்லே விழறேன் " என்று கெஞ்சுவேன்.

அவர் பதிலே சொல்லமாட்டார் . அல்லது "ஒண்ணுமில்லே என்று சொல்வார்.

அவருடைய கவலையெல்லாம் பணங்காசு பற்றித்தான் என்று நான் நினைப்பேன் . வேலையில்லாமலிருப்பவர்களுக்கு இது இயற்கைதான் - "கவலைப்படாதீங்க. ஏதாவதொரு வேலை நிச்சயம் கிடைச்சிடும் " என்று அவரைத் தேற்றுவேன்.

அவர் வெளியேறுவதற்கு முதல் நாளிரவு தூக்க மயக்கத்தில் ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொன்னார் அப்போதுநான் விழித்துக் கொண்டுதானிருந்தேன் , அந்தச் சொல்லைக் கேட்டு நான் திடுக்கிட்டேன், என் நெஞ்சு படபடத்தது.

என்ன சொல்கிறார் இவர்?

"துரோகி...! நான் துரோகி...! நான் துரோகி..!"

ஏதோ புரிந்தது .. இல்லை.. புரியவில்லை . மர்மத்தின் கறுப்புத்திரை சற்று விலகியது. அல்லது நான் கேட்டது பிரமையாக இருக்கலாம். என் ஊகம் தவறாயிருக்கலாம் . ஆனால் என் இரத்தம் பனியாகக் குளிர்ந்துவிட்டது . தொடை கனத்தது மண்டை பனியாய் உறைந்தது - ஜீவனில்லாமல் படுத்துக் கிடந்தேன்.

இந்த விஷயத்தை மாமனாரிடம் சொல்லவில்லை நான் - சொல்வது அவசியமென்று நினைக்கவில்லை - என்ன நடந்ததென்று எனக்குத் தெரியும் - என் சங்கு வளையலும் குங்குமமும் இந்த சுமங்கலித் தோற்றமும் வெறும் வேஷம் - நான் ஒரு குடும்பத்தின்மருமகளாக நடமாடுவது வெறும் பாசாங்கு - எனக்குத் தெரியும் அவர் திரும்பி வரப் போவதில்லை!

அப்டியும் என் இரத்தத்தில் எதிர்பார்ப்பு முள்ளாய்க் குத்துகிறது . மாடிப்படிகளின் சுரங்க வெளியில் காற்று சுழல்கிறது. அதனால் ஏற்படும் ஓசை கதவு வளையத்தை ஆட்டும் ஒலி போலிருக்கும். நான் திடுக்கிட்டு எழுந்து உட்காருகிறேன் கதவுப்பக்கம் ஓடுகிறேன் - கதவைத் திறப்பதற்கு முன்பே அவரிடம் என்ன சொல்வது என்று யோசித்துப் பார்த்துக் கொள்கிறேன் பிறகு கதவைத் திறக்கிறேன் , மங்கிய ஒளியில் மஞ்சளாக ஏதோ கோடுகள் அசைந்து மறைகின்றன. வெறும் சூனியம்! பின்னாலேயே ஓடி வருகிறார் மாமனார் , "வந்துவிட்டானா ..? சமு வந்துட்டானா ..? சமு இல்லையா ..? ஏம்மா பதில் சொல்லாமேநிக்கறே?" என்று படபடக்கிறார்,

என்ன சொல்வேன் நான் ? "ஒருத்தரும் இல்லே , வெறுங்காத்துதான் " என்று சொல்லிவிட்டுத் திரும்பி வருகிறேன் , திரும்பியதும் அந்த போட்டோ பார்வையில் படுகிறது - கோபத்தில் , எரிச்சலில் , வேதனையில் அதைக் கீழே போட்டு உடைக்கத்தோன்றுகிறது . இல்லாத அந்த மனிதரின் நிழலைப் பார்த்து "துரோகி ! நம்பிக்கைத் துரோகி!" என்று கத்தத் தோன்றுகிறது ...

IV

கதவைத் திறந்தவளை எனக்குத் தெரியாது . ஆனால் அவளுக்குப் பின்னால் ஓர் உயரமான ஸ்டூலின் மேல்வைத்திருக்கும் போட்டோ யாருடையது என்று எனக்குத் தெரியும் . மறுகணம் என் மண்டைக்குள் நெருப்பு பற்றியெறிந்தது காதுகளிலிருந்து சூட்டுக் காற்று வெளிறியது . கண்களிரண்டும் வீங்கிக் கொண்டன . சௌமேன் ! இது அவனுடைய வீடா? கடைசியில் இங்கேயா வந்து சேர்ந்துவிட்டேன்.....?

என் திகைப்பை அந்தப் பெண் கவனித்தாளா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பார்த்து அவளும் திடுக்கிட்டாள் ஓரடி பின்வாங்கி, நடுங்கும் குரலில் , "யாரு யாரைப் பார்க்கணும் ?" என்று கேட்டாள் . நான் என்னைச் சமாளித்துக் கொண்டேன் . நிதானமான குரலில் சொன்னேன் , "இன்னி ராத்திரி மட்டும் இங்கே தங்கப்போறேன் . சத்தம் போடாதீங்க ! சத்தம் போட்டுப் பிரயோசனமில்லே - நான் ஒங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யமாட்டேன் - இந்த ராத்திரி மட்டும் ..." அவள் பின்வாங்கினாள் . நான் உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டேன் உட்கார்ந்து கொண்டு "ஒருடம்ளர் தண்ணி கொடுங்க , தண்ணி மட்டுந்தான் . இந்த அகாலத்திலே சாப்பாடு போடச் சொல்லித் தொந்தரவு செய்யமாட்டேன் ஒரு ஜமுக்காளம் கொடங்க இங்கேயே படுத்துக்கறேன்...." என்றேன்.

அவள் பதிலேதும் சொல்லவில்லை . அவள்தான் சௌமேனின் மனைவியோ ? அப்படியானால் ஏனின்னும் சுமங்கலி வேஷம் ? இவர்களுக்கு இன்னும் செய்தி தெரியாதோ 7 பைக்குள் கையைவிட்டேன் . ஏதாவது தகராறு செய்தால் உள்ளேயிருக்கும் பொருளை எடுத்துக் காட்டிப் பயமுறுத்த வேண்டும் . அதற்கு அவசியமேற்படாது என்று தோன்றியது . கையை வெளியே எடுத்தேன் . வீட்டுக்குள்ளே கவனித்துப் பார்த்தேன் - இரு பக்கங்களில் இரண்டு அறைகள் - கதவுக்கருகில் கிழிந்த அழுக்குத் திரை - இந்த அறையில் சாமான்கள் அதிகமில்லை - ஒரு ஷெல்ஃபில் சில புத்தகங்கள் - ஒரு மேஜை , இரண்டு நாற்காலிகள் . ஒரு ஸ்டூலின் மேல் போட்டோ . அந்த போட்டோவைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது எனக்கு . "ஒன்னைப் பார்த்தாக் கொலைகாரன் மாதிரி இல்லே . ஒங்கிட்டே எனக்குப் பயமில்லே தீபு " என்று அவன் இப்போதும் சொல்வது போலிருந்தது .

உடனே தண்ணீர் வந்தது, போட்டோ பக்கம் திரும்பாமல் தண்ணீரை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தேன். பிறகுடம்ளரைக் கீழே வைக்கப் போனேன் . அதற்குள் அவள் அதைக் கையில் வாங்கிக்கொண்டு திரும்பிப் போக முற்பட்டாள்.

நான் அவளைக் கூப்பிட்டேன், "இதைக் கேளுங்க!"

அவள் மௌனமாக என் பக்கம் திரும்பினாள்.

"ஒங்க வீட்டிலே இன்னும் யார் யார் இருக்காங்க?"

"நானும் அப்பாவுந்தான் ."

"இந்த போட்டோவிலே இருக்கிறவர் எங்கே?"

"தெரியாது."

"நீங்க யாரு?"

"இந்த வீட்டு மாற்றுப்பெண்"

"அப்படீன்னா அந்த போட்டோவிலே இருக்கற ஓங்க புருஷன்..."

"ஆமா"

நான் மௌனமானேன்.

"இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கணுமா?" அவள் கேட்டாள்.

"ஆமா ... நீங்க அப்பான்னு சொன்னது ஒங்க மாமனாரைத் தானே?"

"ஆமா."

"ஒங்க புருஷன் ஏன் இங்கே இல்லே?"

"தெரியாது.. நான் ஒங்களுக்குப் படுக்கை கொண்டுவந்து போடறேன்."

அவள் உள்ளே போகத் திரும்பினாள் . அந்த சமயத்தில் பக்கத்து அறையின் திரையை விலக்கிக்கொண்டு அந்தக் கிழட்டுக்கொரில்லா வந்துவிட்டது ..."யாரு வந்திருக்காங்க.. சமுவா .. யாரு .. யாரு..? நீங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க ..அம்மா இது யாரு?"

சௌமேனின் மனைவி சொன்னாள் , "சும்மா இருங்கப்பா . இவர் ஒங்க பிள்ளையோட சிநேகிதர் . அவரைப் பத்தி ஏதோசெய்தி கொண்டு வந்திருக்கார்."

நான் திடுக்கிட்டேன். என் நெஞ்சு படபடத்தது. அவள் எல்லாம் தெரிந்து கொண்டு சொல்கிறாளா அல்லது மாமனாரைச்சமாதானப்படுத்துவதற்காகத் தனக்குத் தோன்றியதைச் சொல்கிறாளா ? அவள் பக்கம் திரும்பிப் பார்த்தேன் , வெறித்தபார்வை, அதில்தான் எவ்வளவு பளபளப்பு ! அவளுடைய உதட்டோரத்தில் தென்படும் மௌனப் புன்னகைக் கீற்று ஏன்?

என் பைக்குள் ரிவால்வர் துருப்பிடித்துப் போயிருக்கக்கூடும் - அதன் குதிரை பழுதாகியிருக்கும் . அதிலுள்ள குண்டு நனைந்போயிருக்கும் - கிழவர் சற்றுக் குனிந்து கொண்டு தணிந்த குரலில் என்னைக் கேட்டார் , "சமு எப்படியிருக்கான் ? எங்கேயிருக்கான் ?என்ன பண்றான் இப்போ ...? அவன் ரொம்பச் சிறுபிள்ளைத் தனமா இருக்கான் இவ்வளவு பயப்படும் படியா என்ன இருக்கு ..நான் போலீஸ் சூப்பரிண்டெண்டெண்ட்கிட்டே போய்ச் சொல்லியிருக்கேன் -- நான் சர்க்கார் உத்தியோகத்திலே இருந்தவன்....

நான் அவரை இடைமறித்துச் சொன்னேன் . "ஒங்க பையன் போலீசுக்குப் பயப்படலே.. அவன் ஒரு துரோகி அதனாலே..."

"நிறுத்து !" கிழவர் கர்ஜித்தார்,

"ஒங்க மாற்றுப் பெண்ணையே கேளுங்க !" நான் சிரித்துக் கொண்டு சொன்னேன்.

அந்தப் பெண் சொல்லியது என்னைத் திகைக்க வைத்தது , "ஆமாம்பா . இவர் சொல்றது சரிதான்?"

"இருக்கவேயிருக்காது ! இவன் பொய் சொல்கிறான்!" கிழவர் கத்தினார் . "இவன் புளுகன் , மோசக்காரன் ! நான் யாரையும் நம்பல்ல ! எல்லாரும் துரோகிகள் !"

அந்தப் பெண் சற்று முன்னால் வந்து ,"சும்மா இருங்கப்பா!" என்றாள் .

கிழவர் விரலால் வாசலைச் சுட்டிக்காட்டி , "இப்பவே போயிடு இங்கேயிருந்து ! என் சமு துரோகியா ...? பொய்யும் புளுகும் சொல்ல வந்திருக்கியாக்கும்!"

நான் இப்போது பையிலிருந்த ரிவால்வரை எடுத்தேன் - "ரொம்பக் கத்தாதீங்க...! உள்ள போயிடுங்க நீங்க! நான் இந்தராத்திரி இங்கேதான் இருக்கப்போறேன் - தொந்தரவு பண்ணினீங் கன்னா செத்துப் போயிடுவீங்க ... இந்தாம்மா , இவரைக் கூட்டிக்கிட்டு அந்த ரூமுக்குப் போயிடுங்க...! என் மூளை குழம்பிக் கிடக்கு .. முட்டாள் கிழம் ! வாயை மூடு!"

கிழவர் சற்று நேரம் என் ரிவால்வரைப் பார்த்தவாறு நின்றார் . பிறகு கீழே உட்கார்ந்து , தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினார் . அழுகை நடுவே திக்கித் திக்கிச் சொன்னார் , "என்னைக்கொன்னுடு ! கொன்னுடு ..! சமுவுக்கு என்ன ஆச்சுன்னு இப்போ புரியுது எனக்கு....! நான் பிழைச்சிருந்து என்ன லாபம்?"

மாமனாரைத் தெற்றிக் கொண்டிருந்த அந்தப்பெண் ஒரு விசித்திரப் புன்னகையுடன் என்னிடம் சொன்னாள் , என்ன "ஆச்சுஒங்களுக்கு ? ஒங்களாலே சுட முடியலையா ? ரிவால்வரிலே குண்டு இல்லையா ? அல்லது அது விளையாட்டுத் துப்பாக்கியா ? ஒங்களை அடைச்சிருக்கிற கூண்டிலேருந்து வெளியே வர முடியலே ஒங்களாலே ! தப்பியோடி வந்ததிலெ ரொம்பக் களைச்சுப் போயிட்டீங்க இல்லியா ?" கோபத்தில் எனக்குத் தலைகால் புரியவில்லை . நான் சொன்னேன் ," சௌமேன் மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்தவனை நான் வெறுக்கிறேன் ....! ஆனா இப்போ நான் களைச்சிருக்கேன் கொஞ்சம் தங்கித் தூங்கறத்துக்கு எனக்கு ஒரு இடம் வேணும் இப்போ ."

அவள் கிழவரை அவருடைய அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் தன் அறையிலிருந்து படுக்கையை எடுத்து வந்து அதைத் தரையில் நன்றாக விரித்துவிட்டு ,"சரி படுங்க . எனக்கும் ரொம்பத் தூக்கம் வருது இன்னிக்கு ...அதைத் தவிர .."

நான் படுக்கையில் படுத்துக் கொண்டு , "அதைத் தவிர என்ன !" என்று கேட்டேன்.

"ஒங்களுக்கு நன்றி " என்று சொலிவிட்டுத் தன் அறைக்குப் போய்விட்டாள் அவள்.

எனக்குத் தூக்கம் வரவில்லை அந்தப் போட்டோ ...!நான் தான் வாய்க்கால் கரையில் சென்மேன் கழுத்து நரம்பை அறுத்து அவனுடைய சவத்தை எரித்தவன்

அடுத்த அறையிலிருந்து வரும் ஒலிகளிலிருந்து அங்கே என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடிந்தது . நடக்கவேண்டிய காரியங்கள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. சௌமேனின் மனைவி தன் சங்கு வளையலை உடைக்கிறாள்; நெற்றிக் குங்குமத்தை அழித்துக்கொள்கிறாள் ; பெட்டியிலிருந்து சௌமேனின் வேஷ்டியை எடுத்து உடுத்திக் கொள்கிறாள் . பிறகு தேம்பித் தேம்பியழுகிறாள் . அவளது அழுகையொலி வலுக்கிறது - சாம்பிராணி புகை போல் , மூடுபனிபோல் எங்கும் பரவுகிற எல்லாவற்றையும் விழுங்குகிற அந்த அழுகை அவளுடைய அறைக்கதவின் இடுக்கு வழியே முன்னேறி வந்து கொண்டிருக்கிறது...

நான் காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு கிடந்தேன் . அப்படியும் அழுகை சூழ்ந்த இந்த உலகத்திலிருந்து தப்பியோடிவிட முடியாது என்று தோன்றியது . பிரும்மாண்டமான மலைப் பாம்பு போன்ற அந்த அழுகை என்னை சுற்றி சுருண்டு வந்து என் மூச்சுக் குழாயை நசுக்குகிறது .. எனக்குக் காற்று வேண்டும் மூச்சுவிடக் கொஞ்சம் காற்று வேண்டும்.

விடிவதற்கு முன்னால் எனக்குச் சிறிது உறக்கம் வந்தது - ஒரு கனவு கண்டேன் - எனக்கு நாற்புறமும் வந்து விழுகின்றன ஆயிரமாயிரம் சௌமேன்களின் படங்கள் - அவை உலகத்தையே மூடி மறைந்து விடுகின்றன. தாறு மாறாகக் கலைந்து விழுந்துகிடக்கும் சீட்டுகள் போல் எண்ணற்ற சௌமேன்களுக்கிடையே நான் என் வழியைத் தேடிக் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை...

(தேஷ்', 1971)

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.