சீர்ஷேந்து முகோபாத்தியாய்
தயவுசெய்து என்னை ஒரு தடவை பாருங்கள் இதோ இங்கே இருக்கிறேன் ! சற்றுமுன்புதான் நான் இடித்துப் புடைத்துக்கொண்டு பஸ்ஸின் படியில் ஏறினேன் - தாங்கமுடியாத கூட்டத்தில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் முண்டி எலிபோல் துளைபோட்டுக்கொண்டு இவ்வளவு தூரம் உள்ளே நுழைந்து விட்டேன், நான் குட்டை பஸ்ஸின் கைப்பிடிக் கழிகள் ரொம்ப உயரம் எனக்கு எட்டாது . நான் சீட்டின் பின்புறக் கம்பியைப் பிடித்துக் கொண்டு நிற்பேன் , பஸ் அதிர்ந்து குலுங்கும்போது நான்பக்கத்திலிருப்பவர்கள் மேல் சாய்ந்து என்னைச் சமாளித்துக் கொள்வேன் - பக்கத்திலிருப்பவர்கள் என்னைக் கோபித்துக்கொள்வதில்லை. என் எடை மிகக்குறைவு. ஆகையால் நான் யார் மேலாவது சாய்ந்தாலும் அவர்களுக்கு நான் சாய்வது தெரியாது .
இப்போது நான் பஸ்ஸின் பின்பக்கத்தின் ஒரு சீட்டின் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் . என் இருபுறமும்மலைபோல் பெரிய பெரிய மனிதர்கள். அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் , வெளியிலிருந்து என்னைப்பார்க்கவே முடியாது . பார்க்க முடிந்தாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள். இதுதான் கஷ்டம் -- ரொம்பப்பேர் என்னைப்பார்த்தாலும் கவனிப்பதில்லை , என் பக்கத்திலிருப்பவர்கள் , எதிரிலிருப்பவர்கள் என்னைப் பார்க்கலாம் , ஆனால் அக்கறையெதுவுமின்றிப் பார்ப்பார்கள் . நான் இருப்பதும் இல்லாததும் அவர்களுக்கு ஒன்றுதான். இதற்குக் காரணமென்னவென்றால் என்னைத் தனிப்படுத்திக் காட்டக்கூடிய எந்தவிதச் சிறப்பும் என் தோற்றத்தில் இல்லை - என் உயரம் ஐந்தடி இரண்டங்குலந்தான் நான் ஒல்லி ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி அவ்வளவு ஒல்லியில்லை நான் கறுப்பு - ஆனால் என்னை ஒருமுறை பார்த்தவர்கள்மறுபடி திரும்பிப் பார்க்குமளவுக்கு அவ்வளவு கறுப்பில்லை - நாற்பது வயதில் என் தலைமுடி நிறைய உதிர்ந்துவிட்டது ஆனால் வழுக்கை விழவில்லை , வழுக்கை விழுந்திருந்தால் அது மற்றவல்களின் பார்வையில் படும் , என் முகம் சராசரி - ரொம்ப அழகுமில்லை , ரொம்ப அவலட்சணமுமில்லை , மூக்கு சப்பையுமில்லை - சிறியதுமில்லை , கண்கள் ரொம்பப் பெரிதுமில்லை. ரொம்பச் சிறிதுமில்லை. ஆகையால் இந்தக் கூட்டத்தில் யாரும் என்னைப் பார்ப்பார்களா ? பார்த்தாலும் கவனிக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.
என் கல்யாணத்துக்குப்பிறகு மனத்தைத் தொடக்கூடிய , அதே சமயம் வேடிக்கையான நிகழ்ச்சியொன்று நடந்தது புதுமனைவி என் வீட்டுக்கு வந்து ஓரிரண்டு நாட்களுக்குப் பின் அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன் - இன்னும் சில நாட்களுக்குப்பின் மாமனார் வீட்டுக்கு இரண்டாம் முறையாகப் போகும் சடங்கு இருந்ததால் சில துணிமணிகள்வாங்க வேண்டியிருந்தது.
நான் வீட்டிலிருந்து கிளம்பியதும் என் மனைவியிடம் "நியூ மார்க்கெட் போவோமா?" என்று கேட்டேன்.
என் பொருளாதார நிலை நியூ மார்க்கெட்டில் பொருள் வாங்க இடம் கொடுக்கவில்லை. நாங்கள் எப்போதும் எங்கள்வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய துணிக்கடையில்தான் மலிவு விலையில் துணிமணிகள் வாங்குவோம் . இருந்தாலும் நான் என்மனைவியை நியூ மார்க்கெட்டுக்குக் கூப்பிட்டதற்கு ஒரு காரணம் , என் மனைவி வெளியூர்க்காரி - கல்கத்தாப் பெண்ணல்ல அவள்நியூ மார்க்கெட் பார்த்ததில்லை . இன்னொரு காரணம் , என் மாமனார் எங்களைக் காட்டிலும் சற்று அதிக வசதியுள்ளவர் ஆகையால் நான் நியூ மார்க்கெட்டுக்குக் கூட்டிப்போனால் என் மனைவி சந்தோஷப்படுவாள். துணிமணிகள் நியூ மார்க்கெட்டில்வாங்கப்பட்டவை என்று தெரிந்தால் வேற்றகத்தாரும் சற்று ஆச்சரியப்படுவார்கள்.
ஆனால் நியூ மார்க்கெட்டுப் போகலாம் என்று நான் சொல்லியது பெருந்தவறாகி விட்டது . ஏனென்றால் நான் அங்குபோகாமலிருந்தால் அந்த நிகழ்ச்சி நடந்தேயிருக்காது.
நியூ மார்க்கெட்டுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த கடைகளின் அலங்கார ஆடம்பரங்களில் மயங்கிவிட்டாள் என் மனைவி அவள் ஒவ்வொரு கடையின் முன்னாலும் நிற்பாள் , அதன் ஷோகேசை ஆர்வத்தோடு பார்ப்பாள் . அவள் என் பக்கம் திரும்பிப்பாக்கவும் மறந்துபோய் விட்டாள் . அவள் என் புது மனைவி . ஆகையால் அவள் என்னைத் திரும்பிப் பார்க்காததில் எனக்குவருத்தம் ஏற்பட்டது இயற்கைதான் - நான் அவளுக்கு எதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுட்டிக்காட்டிச் சட்டாம் பிள்ளைத்தனம் செய்து பார்த்தேன். ஆனால் அவள் குறிப்பிட்ட எந்தப் பொருளிலும் அக்கறையில்லாமல் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் . எனக்கு வந்த கோபத்தில் நான் வேண்டுமென்றே என் நடையின் வேகத்தைக்குறைத்துக் கொண்டு பின் தங்கினேன் . அப்படியும் அவள் என்னைக் கவனிக்காமல் மேலே போய்க்கொண்டேயிருந்தாள் இதைப்பார்த்து நான் நின்றே விட்டேன் , அவள் நடந்து போய்க் கொண்டேயிருந்தாள்.அவளுடைய கண்கள் ஆர்வத்துடன்கடைப்பண்டங்கள் மேலே பதிந்திருக்க அவள் நடந்து சென்ற முறை மரியாதை அணிவகுப்பில் சிப்பாய்கள் நடந்து போவார்களே அதை நினைவுறுத்தியது கடைகளின் பிரகாசமான வெளிச்சத்தில் அவள் கூட்டத்தில் புகுந்து நடந்ததை நான் தொலைவிலிருந்து கவனித்தேன் நானும் அவளுடன் வருகிறேன் என்று நினைத்து அவள் சில சமயம் பேசினாள் , ஆனால் நான்பக்கத்திலிருக்கிறேனா என்று கவனிக்கவில்லை - இவ்விதம் கொஞ்ச தூரம் சென்றபிறகு அவள் ஏதோ ஒரு பொருளைப் பார்த்துமிகவும் பரபரப்போடு எனக்கு அதைக் காட்டுவதற்காகப் திரும்பிப் பார்த்தாள் . நான் அருகில் இல்லை என்பதை அப்போதுதான்கவனித்து அப்படியே நின்றுவிட்டாள் . அவள் பயந்துபோய் நாற்புறமும் என்னைத் தேடத் தொடங்கினாள் . இப்போது ஒருவேடிக்கை செய்யும் ஆசையை என்னால் தவிர்க்க முடியவில்லை . நியூ மார்க்கெட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான குறுகியசந்துகள் - நான் சட்டென்று என் முன்னாலிருந்த சந்தொன்றில் நுழைந்து விட்டேன் . இப்போது அந்த வெளியூர்க்காரி என்னைத்தேடிக் கண்டுபிடிக்கட்டும் ! என்னைக் கவனிக்காமலிருந்ததன் பலனை அனுபவிக்கட்டும்!
நான் உள்ளூரச் சிரித்துக்கொண்டு சற்று வெளியே எட்டிப் பார்த்தேன் , என் மனைவிக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது அவள் நாற்புறமும் பார்த்துக்கொண்டு வேகமாகத் திரும்பி வருகிறாள் - நான் நின்று கொண்டிருந்த சந்துப்பக்கமும் அவள்வந்தாள். ஆனால் என்னைக் கவனிக்காமல் போய்விட்டாள் . இந்த வெளியூர்க்காரப் பெண் ரொம்ப சாகசக்காரி , நான் வேண்டுமென்றே மறைந்து கொண்டிருப்பதால் என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் போய்க்கொண்டிருக்கிறாள் என்றுநான் முதலில் நினைத்தேன் . ஆனால் அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்த்தால் என் எண்ணம் தவறென்று தோன்றியது .
நான் கடைசியில் ஒரு கடிகாரக்கடை முன்னால் அவளது வழியை மறித்து நின்று கொண்டு "ஏய் !" என்று கூப்பிட்டேன் . அவள் மிகவும் திடுக்கிட்டு என்னைப் பார்த்தாள் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு பெரிது பெரிதாக மூச்சுவிட்டவாறு , சிரித்துக் கொண்டு , "நீங்களா ? எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நேரம்? நான் எவ்வளவு நேரமா ஒங்களைத் தேடிக்கிட்டிருக்கேன !" என்று சொன்னாள் . அவள் சொல்லியது உண்மை தானென்று எனக்குத் தோன்றியது , நான் இவ்வளவு நேரம் அவளோடு கண்ணாமூச்சி விளையாடினேன் . அவள் என்னைப் பார்க்கப் பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் அவள் என்னைப்பார்க்கவில்லை , அவளுக்கு முன்னால் நான் நிற்கும்போது கூட அவள் என்னைக் கவனிக்கவில்லையென்று வீடு திரும்பும்போது அவளிடம் சொன்னேன் - முதலில் அவள் நான் சொன்னதை நம்பவில்லை , ஆனால் நான் வற்புறுத்திச் சொன்னதும் அவள் ஆச்சரியப்பட்டுச் சொன்னாள் , "அப்படியா ? இனிமே இப்படிச் செய்யாதீங்க.. இது ரொம்ப ஆபத்து ..!"
"நிறுத்துப்பா , கண்டக்டர் ! நான் இங்கே இறங்கணும் ... கொஞ்சம் நகருங்க.. என் மூக்குக் கண்ணாடி.."
நான் அவசர அவசரமாக இறங்க முற்பட்டேன் . என் பேச்சை யாரும் கேட்கவில்லை - நான் இறங்குவதற்கு முன்னாலேயே கண்டக்டர் மணியடித்துவிட்டான் - ஒரு பொதுக்கை ஆள் எனக்கு இறங்க வழிவிடாமல் படியில் நின்று கொண்டிருந்தான் -புஷ்ஷர்ட் அணிந்த வாலிபன் முழங்கையால் இடித்து என் மூக்குக் கண்ணாடியை வளைத்து விட்டான்,
அதனால்தான் சொல்லுகிறேன் - பஸ் டிராமிலும் சரி , தெருவிலும் சரி , யாரும் என்னைப் பொருட்படுத்துவதில்லையென்று.
இன்று மிக நல்ல நாள் இதமாகக் காற்று வீசுகிறது. வெயில் இருக்கிறது ஆனால் மழைக்காலமாதலால் அதுவும் கடுமையாக இல்லாமல் சுகமாக இருக்கிறது - இப்போது இந்தத் தெருவில் நடந்துபோக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது . சற்று தூரம் போனால் ஒரு நாற்சந்தி , அதைத் தாண்டிப் போனால் என் ஆபீஸ் . நான் நாற்சந்திக்கு வந்து தெருவைக் கடக்க முற்பட்ட அதே சமயத்தில் போலீஸ்காரர் கையை இறக்கிக் கொண்டு விட்டார் . இப்போது நான் ரஸ்தாவைக் கடக்க முடியாபடிவண்டிகள் , எண்ணற்ற வண்டிகள் . "ஏனய்யா , போலீஸ்காரரே ! நான் ரஸ்தாவைக் கடக்கப் போவது ஒனக்குத் தெரியாதா ?இன்னும் கொஞ்ச நேரம் கையைத் தூக்கிக்கிட்டிருந்தா ஒன் கை ஒடைஞ்சு போயிடுமா ?" நான் மாடிக்குப் போவதற்காக ஏறியிருக்கும் லிஃப்டுக்கு நூறு வயது . இதற்கு நாற்புறமும் கம்பிச் சுவர் . பார்க்க இரும்புக்கூண்டு போலிருக்கும் . ஏறி இறங்கும்போது கொஞ்சம் ஆடும் , மெதுவாக ஏறும் நான் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக இந்த லிஃப்டில் ஏறி மேலே போகிறேன். லிஃப்ட் ஊழியன் ராம் ஸ்வரூப் போகி - இந்தப் பதிமூன்று வருடங்களாக என்னை வாரத்தில் ஆறு நாட்கள் இந்த லிஃப்டில் ஏற்றிச்செல்கிறான் . "ஏம்பா ராம்ஸ்வ ரூப் , நீதான் என்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கிட்டே வரியே - அதாவது , என் இருபத்தாறு இருபத்தேழு வயசிலேருந்து - அப்போ என் முகத்திலே முதுமையின் சாயல் விழலே. இப்போ சொல்லு, என் பேரென்ன?
நிசமாகவே அவனைக் கேட்டால் அவன் ஹாஹாவென்று சிரித்துக்கொண்டு பதில் சொல்வான் . "அதென்னங்க , ஒங்க பேருதெரியாதா எனக்கு? நீங்க அரவிந்த பாபு!"
ஆனால் உண்மையில் நான் அரவிந்த பாபு அல்ல . நான் எப்போதுமே - என் சிறு வயது முதலே அரிந்தம் பாசுதான்! நான் ஒரு வங்கியில் வேலை செய்கிறேன் . வங்கி அந்தக் கட்டிடடத்தின் முதல் மாடியில் இருக்கிறது . முதலில் நான் வெவ்வேறு பிரிவுகளில் வேலை பார்த்தேன் - கடந்த பத்தாண்டுகளாகப் பணப்பிரிவில் வேலை - நோட்டுகளை வேகமாக எண்ணுவேன் , கணக்கிலும்புலி . ஆகையால் என்னைப் பணப் பிரிவிலிருந்து வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதில்லை எப்போதாவது மாற்றினாலும் விரைவில் மறுபடி மறுபடி பணத்துக்குத் திருப்பியனுப்பி விடுவார்கள் - பத்தாண்டுகளாக மிகத் திறமையாக வேலை செய்து வருகிறேன்நான் - சில சமயம் பட்டுவாடா செய்யும் பொறுப்பு - பெரும்பாலும் பட்டுவாடாப் பொறுப்புதான் , காரணம் அதில்தான் ஜாக்கிரதை அதிகம் தேவைப்படும் - கம்பிச் சுவர்களாலான ஒரு கூண்டுக்குள் நான் உட்கார்ந்திருப்பேன் - எனக்கு முன்னால் பல இழுப்பறைகள் எந்த இழுப்பறையில் எவ்வளவு பணம் நோட்டாக இருக்கிறது . எவ்வளவு சில்லறை இருக்கிறது என்று நான் கண்ணைத்திறக்காமலே சரியாகச் சொல்லிவிடுவேன் . நான் டோக்கனை வாங்கிக்கொண்டு இழுப்பறையைத் திறந்து பணத்தை எண்ணிமறுபடி பணத்தை எண்ணி வெளியே நிற்பவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த டோக்கனுக்காகக் கையை நீட்டுவேன் . பிறகுமறுபடி இழுப்பறையைத் திறந்து , பணத்தை எண்ணி எடுத்துக் கொண்டு , இழுப்பறையை மூடி ... இப்படி மீண்டும் மீண்டும் செய்து கொண்டேயிருப்பேன் . கௌண்டருக்கு வெளியிலிருந்து என்னைப் பார்ப்பவர்களுக்கு என் வேலை மிகவும் அலுப்பூட்டுவதாகத் தோன்றும் . அவர்கள் என்னை வெளியிலிருந்து பார்ப்பார்கள் , ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை..
எங்களுடைய பெரிய , நெடுங்கால வாடிக்கையாளர்களில் ஒருவர் ராம்பாபு . பெரிய தொழிற்சாலையொன்றின் உரிமையாளர் வங்கியின் முகவரும் அவருக்கு மரியாதை கொடுப்பார் , அவர் ஒரு சந்தேகப் பேர்வழி , பெரும்பாலும் பணம் வாங்கிவர யாரையும் அனுப்பாமல் தானே வருவார், செக்கைக் கொடுத்துப் பணம் வாங்கிப் போவார். நான் எவ்வளவோதடவைகள் அவருக்குப் பணம் பட்டுவாடா செய்திருக்கிறேன் . அவர் புன்சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டுப் பணம் வாங்கிப்போயிருக்கிறார்.
ஒரு சமயம் என் பெரிய மைத்துனன் கல்கத்தா வந்து சில நாட்கள் உல்லாசமாகப் பொழுது போக்கினான் . அப்போது ஒருநாள் என்னைப் பார்க் தெருவிலுள்ள பெரிய ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துப் போனான் . அங்கே ராம்பாபு வெப் பார்த்தேன் . ஒருபோத்தல் தெளிவான ஜின்னை வைத்துக் கொண்டு தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் ஏதோ கனவிலாழ்ந்திருந்தன , உண்மையில் , நான் என் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதில்லை, அதற்காக ராம்பாபுவைப்பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியதேயில்லை. தெரிந்த மனிதராயிற்றே என்றுதான் அவர் முன்னால் போய் நின்றேன் ராம்பாபு புருவத்தை உயர்த்திப் பார்த்துவிட்டு , "ஒங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! எங்கே பார்த்திருப்பேன், சொல்லுங்க!"
எனக்கு மிகவும் வெட்கமாயிருந்தது , நிஜமாகவே அவருக்கு என்னைத் தெரியாமலிருந்தால் , அல்லது அகம்பாவத்தால் தெரியாதவராகப் பாசாங்கு செய்தால் எனக்கு மிகவும் அவமானமாகிவிடும்.
நான் வேறுவழியில்லாமல் என் வங்கியின் பெயரைச் சொல்லி , "நான் பணப் பட்டுவாடாப் பிரிவிலே -" என்றுசல்லத் தொடங்கியதும் அவருடைய ஜின்னின் தெளிவு அவருடைய முகத்துக்கும் வந்து விட்டது அவர் புன்சிரிப்போடு சொன்னார் , "தெரியுது , தெரியுது ...! பாருங்க , அந்தக் கூண்டுக் குள்ளேயே ஒங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிபோச்சு ,இல்லையா ? அதனாலே திடீர்னு ஒங்களை இங்கே ... புரிஞ்சுதுங்களா ...? விஷயம் என்னன்னா எல்லாம் பார்க்கற கோணத்திலே இருக்கு ... சரியான கோணம் இல்லேன்னா மனுசனை எப்படி அடையாளம் காண முடியும் கூண்டுக்குள்ளேகௌன்டர் வழியாக ஒங்களைப் பார்க்கறோம். அதே மாதிரி இந்தக் கோட் , பேண்ட் , இந்த வழுக்கை எல்லாம் சேர்ந்துதான்நான் - இதுகளிலேயிருந்து ஒங்களையும் என்னையும் பிரிச்சுட்டா , ஒங்களுக்கும் எனக்கும் உண்மையான அறிமுகமே கிடையாது பாருங்க , இந்தப் பார்க்கும் கோணத்தைப் பத்தித்தான் இப்ப நினைச்சுக்கிட்டிருந்தேன் . சின்னவயசிலே நாங்க ஒரு ரயில்காலனியிலே இருந்தோம் . என்னோட அப்பா ரயில் இலாகாவிலே குமாஸ்தா - கட்டிஹார்லே , எங்க வீட்டுக்குக்கிட்டே இன்னொருவீட்டிலேருந்து ஒரபொண்ணு அடிக்கடி வந்து என் அம்மாவோட பேசிக்கிட்டிருப்பா - தாயில்லாப் பொண்ணு சித்திக்கு அவகிட்டே பிரியமில்லே . அவ எங்க வீட்டுச் சமையலறைக்கு வந்து அம்மாவோட பேசிக்கிட்டு ஒக்காந்திருப்பா கூனிக்குறுகி ஒக்காந்துக்கிட்டு - கிழிஞ்ச ஃபிராக்காலே சிரமப்பட்டு முழங்காலை மறைச்சுக்கிட்டு சப்பாத்தி தட்டிக் கொடுப்பா :அல்லது என் அழு மூஞ்சித் தங்கையை இடுப்பிலே வச்சுக்கிட்டு இங்கேயும் அங்கேயும் நடந்து அவளைத் தூங்கப் பண்ணுவா .அவளை எனக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கப் போறதா அம்மா சொல்லுவா . அதைக்கேட்டு நான் அவளை நல்லாப்பார்ப்பேன் - போதையேறும் எனக்கு - பார்க்கப் பரிதாபமா காஞ்ச முகமா இருப்பா அவ.. ஆனா ரொம்ப அழகு...!"
இதைச் சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டார் ராம்பாபு - நான் பரபரப்போடு அவரைக் கேட்டேன் , "அப்புறம் என்னஆச்சு ? அந்தப் பொண்ணு செத்துப் போயிட்டாளா?"
"இல்லே , இல்லே , சாகலே . நான் பெரியவனான பிறகு அவளைத்தான் கலியாணம் பண்ணிக்கிட்டேன். இப்பவும் இருக்கா. ஒரே பொதுக்கையா ஆயிட்டா . எப்பவும் சிடுசிடுக்கறா . என்னை ஆட்டி வைக்கறா ... அவ ஃபிரிட்ஜைத் திறக்கறபோது நகைகளைத் தேர்ந்தெடுக்கறபோது , வேலைக்காரங்களைத் திட்டறபோது அல்லது காரை எடுக்கச்சொல்லி டிரைவரைக்கூப்பிடறபோது அவளைப் பார்த்தா நம்பவே முடியலே - முந்தி ஒருநாள் ஒடம்பு சரியில்லாமே இருந்த அவளைப் பார்க்க வந்த என் அம்மா கொண்டு வந்து கொடுத்த ரெண்டு ஆரஞ்சுப் பழத்தை வாங்கிக்கிட்டு அழகாச் சிரிச்ச பொண்ணுதான் இவ --இன்னிக்குப் பாருங்க. அவளோடே சண்டை போட்டுக்கிட்டு வெளியே வந்துட்டேன். எரிச்சலாயிருந்தது எனக்கு. அந்தப்பழைய ஆசையெல்லாம் போயிடுச்சு . இங்கே வந்து தனிமையிலே ஒக்காந்தாப் பழைய நினைவெல்லாம் வருது - அவ வந்து அடுப்படியிலே கிழிஞ்ச ஃபிராக்காலே முழங்காலை மறைச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கறது , என் அம்மா அவளைப் பாசத்தோடு பார்க்கறது .... உடனே அந்தப் பொண்கிட்டே அன்பு ஊற்றெடுத்தது என்னுள்ளே இப்போது வீடு திரும்பி அவளைச் சமாதானப்படுத்துவேன் - புரிஞ்சுதா ....?" ராம் பாபு அந்த வெள்ளை ஜின்னை ஒரு மடக்குக் குடித்துவிட்டுச் சிரித்தார் ... "கௌன்டர்மூலமாத்தானே ஒங்களைப் பார்த்தேன். அந்தக் கௌன்டர் தான் முக்கியம் ..."
இருபத்து மூன்று இருபத்துநான்கு வயதுள்ள ஒரு இளைஞன் கௌன்டருக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறான். ஏதோநினைவில் தன் டோக்கனைக் கௌன்டரின் மேல் தட்டிக் கொண்டிருக்கிறான் . அவனுக்கு என்னைத் தெரியும் . அவனுடைய அப்பா பழைய கார்களை வாங்கி விற்பவர் . முன்பு அவர்தான் பணமெடுக்க வருவார் . இப்போது இவனை அனுப்புகிறார் நடுநடுவில்நான் சிரித்துக்கொண்டே "அப்பா சௌக்கியமா ?" என்று அவனைக் கேட்பேன் . அவனும் புன்சிரிப்போடு தலையையசைத்து "ஆமா " என்பான் . ஆனால் என்னைத் திடீரென்று இங்கிருந்து மாற்றிவிட்டு இன்னொரு சராசரித் தோற்றமுள்ள அளைக் கௌன்டருக்குப் பின்னால் உட்கார்த்து வைத்தால் இந்த இளைஞனுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது . அப்போதும் அவன் ஏதோ நினைவில் டோக்கனைக் கௌன்டரில் தட்டிக் கொண்டிருப்பான் , பணம் எண்ணிக் கொடுப்பவரைப் பார்த்துச்சிரிப்பான் - தன் தவறை உணர்ந்து கொள்ளச் சற்றுநேரம் பிடிக்கும் அவனுக்கு . காரணம் , அவன் ஒருபோதும் என்னை உண்மையில் பார்க்கவில்லை . ஒரு சமயம் அவன் தன் புதுக் காதலியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது ஒருஸ்கூட்டர் வாங்கத் திட்டம் போட்டுக் கொண்டிருக்கலாம்......
அவன் திரும்பி ரிசப்ஷனிஸ்ட் பெண்ணைப் பார்த்தான் , பிறகு கடிகாரத்தைப் பார்த்தான் , டோக்கனின் நம்பரைப் பார்த்துக்கொண்டான் , என் கைகள் ஒரு கட்டு நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருப்பதைக் கவனித்தான் . பிறகு தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான் ஆனால் அவன் என்னைப் பார்க்கவேயில்லை என்று எனக்குத் தெரியும் - இன்னும் பதினைந்து நிமிடங்களில் மணி இரண்டு அடிக்கும் . நான் பணப் பட்டுவாடாவை நிறுத்தி விட்டு டிபன் சாப்பிடக் கீழே போவேன். அவன் என்னைத்தெருவிலோ , நடைபாதைக் கடையில் நான் பிஸ்கெட்டும் டீயும் சாப்பிடும்போதோ பார்த்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வானா?
"வாழைப்பழம் என்ன விலை? ஜோடி நாப்பது காசா? அடேயப்பா! ஆமா 1 ஆமா , மர்த்தமான் பழந்தான் , மர்த்தமான்பழம் எனக்குத் தெரியாதா ? இந்த அழகான மஞ்சள் நிறம் , வழவழப்பான தோல் , தடிமன் இதெல்லாம் மர்த்தமானுக்கு அடையாளம் - இன்னிக்கு நான் வாழைப்பழம் சாப்பிடற நாள் இல்லைதான் . நான் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வாழைப்பழம் சாப்பிடுவேன் . நேத்துத்தான் சாப்பிட்டேன் ... சரி, ஒண்ணு கொடு .. இல்லே ஒண்ணுமட்டும் ...! இந்தா இருபது காசு..."
வாழைப்பழம் பிரமாதம் ! நான் பழத்தைச் சாப்பிட்ட பிறகும் அதன் தோலைச் சற்று நேரம் அதன் ஞாபகார்த்தமாகக்கையில் வைத்துக்கொண்டிருந்தேன் . பிறகு பத்துப் பதினைந்து நிமிடங்கள் இங்குமங்கும் உலவினேன். வாழைப்பழத்தோல் இன்னும் என் கையில் . எனக்கு நாற்புறமும் ஜனங்கள் அமைதியாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களுடைய முகங்களில் எவ்விதச் சலனமும் இல்லை , இவர்கள் ஒருபோதும் போரிட்ட தில்லை , நாட்டுக்காக உயிர் விட்டதில்லை , எல்லாரும் சேர்ந்துகடினமான வேலை எதையும் செய்ததுமில்லை . இந்த இனமே கொஞ்சங் கொஞ்சமாக செத்துக்கொண்டு வருகிறது , இது தன்சின்னஞ்சிறு கவலைகளில் மூழ்கியிருக்கிறது - யாருக்கும் மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லை - இவர்களுக்குக் காலத்தைப்பற்றிய உணர்வு இல்லை - ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் வரலாறு இவர்களுக்குப் புரியாது . இவர்களைப் பொறுத்தவரையில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே - "பாரத நாடு " என்ற வார்த்தை இவர்களுக்கு ஒரு வெறும் சொல்தான் - "டெலிபதி ", "க்ரீக் ரோ" முதலிய சொற்களைப்போல.
தயவு செய்து என்னைப் பாருங்கள் ! நான் அரிந்தம் பாசு , அதிகம் உயரமில்லாத , அதிக ஒல்லியாக இல்லாத , அதிகச்சிவப்பில்லாத ஒரு மனிதன் . நான் டெலிபதி அல்ல. க்ரீக் ரோ அல்ல, பாரத நாடும் அல்ல. அரிந்தம் பாசு என்பது வேறுவிதமானசொல் - இந்த வேற்றுமையை உங்களால் புரிந்து கொள்ள முடியுமா?
அது போகட்டும் ... நான் உண்மையில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே சில சமயங்களில் சந்தேகம் வருகிறது .வங்கிக் கௌன்டருக்கு வெளியிலிருந்து கையை நீட்டிப் பணம் வாங்கிக்கொண்டு சிலர் போகிறார்கள். சிலர் புன்சிரிப்புடன்நன்றி சொல்லிவிட்ப் போகிறார்கள். ஆனால் எனக்குப் பதிலாக வேறு யாராவது அங்கே உட்கார்ந்திருந்தாலும் அவர்கள் முன்போலவே கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொள்வார்கள் . அவர்களில் சிலர் நன்றியும் கூறிவிட்டுப் போவார்கள் கௌன்டருக்குப் பின்னால் வேறு ஆள் உட்கார்ந்திருக்கிறான் என்பதைக்கூடக் கவனிக்க மாட்டார்கள்.
அந்த நியூ மார்க்கெட் நிகழ்ச்சியைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன் ! என் மனைவி என் முன்னால் நின்றுகொண்டே , என்னைப் பார்த்துக் கொண்டே , என்னைக் கவனிக்காமல் நான் எங்கே போய்விட்டேன் என்று தேடிக் கொண்டிருக்கிறாள்!
நான் மிகவம் கவனமாக அந்த வாழைப்பழத்தோலை நடைபாதையின் நடுவில் போட்டேன் , கவனிக்காமல் நடந்து செல்லும் மனிதர்களே ! உங்களில் யாராவது அதன் மேல் கால் வைத்து வழுக்கி விழுந்தால் அந்த சமயத்தில் திடுக்கிட்டுத் தன்னினைவுக்கு வருவீர்கள் . உங்களுக்கு அதிகம் அடிபடாவிட்டால் , அல்லது நீங்கள் விழாமல் சமாளித்துக்கொண்டால் உங்களுக்குஒரு பெரிய லாபம் ஏற்பட்டிருக்கும் - நீங்கள் நாற்புறமும் திரும்பிப் பார்ப்பீர்கள் . எந்தத் தெருவில் நடந்து கொண்டிருகிறீர்கள் என்பது உங்கள் நினைவுக்கு வரும் - பலமாக அடிபட்டிருந்தால் உங்கள் கை , கால் , அல்லது மண்டை உடைந்திருக்கும் என்ற உணர்வில் உங்களைச் சுற்றியுள்ள ஆபத்தான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையோடிருப்பிர்கள் . ஒருவேளை உங்களுக்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் "நீங்கள் " விழித்துக்கொண்டு “உயிரோடிருப்பது எவ்வளவு பெரிய அதிருஷ்டம் " என்பதை உணர்ந்து கொள்வீர்கள் , மற்ற சக மனிதர்களைப் பற்றி நினைக்கத் தொடங்குவீர்கள் - இன்றி 1969 ஆம் ஆண்டின் ஜூலை 16 ஆம்நாள் அதாவது உங்கள் திருமண ஆண்டு விழா நாள் என்ற விஷயம் உங்களுக்கு நினைவு வரும் , அல்லது இந்த ஆண்டு உங்களுக்கு நாற்பது வயது நிரம்புகிறத் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வீர்கள் , போரோ புரட்சியோ இல்லாத இந்தப் பாரதநாட்டில் ஒரு சாதாரண நண்பகல் நேரத்தில் நடைபாதையில் வாழைப்பழத்தோலைப் போட்டதன் மூலம் நான் உங்களுக்குப்பெரிய கெடுதல் எதுவும் செய்துவிடவில்லை என்பதை அப்போது நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் சந்திரனைப் பற்றி, அதில் கால் வைக்க முயலும் மூன்று தைரியம் மிக்க மனிதர்களைப்பற்றி , நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா ? வேண்டாம் , அவர்களைப்பற்றி நமக்கேன் கவலை ? இந்த மாதிரி விஷயங்கள் அனாவசியமாக மனிதர்களைப்பரபரப்புக்குள்ளாக்குகின்றன . பிறகு அவர்கள் களைத்துப் போய் விடுகிறார்கள் அந்த மூன்று வீரர்களிடம் நல்ல இயந்திரங்கள் இருக்கின்றன , அவர்கள் நிச்சயம் சந்திரனுக்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள் - பத்திரமாகக் திரும்பியும் வந்துவிடுவார்கள் நீங்கள் அவர்களுக்காக அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம் : தெருவைப் பார்த்து நடங்கள். ராஜபவனுக்கு முன்னால் எவ்வளவு பெரிய மைதானம் , எவ்வளவு விசாலமான ஆகாயம் ! உங்களுக்குப் பக்கத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஜனங்களைப்பார்த்துக் கொள்ளுங்கள் . அவர்களை வேறு இடங்களில் பார்த்தால் அடையாளங் கண்டு கொள்ளுங்கள் . இந்த இனியமாலை நேரத்தில் நான் உங்களுக்குப் பக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறேன் . என்னைப் பாருங்கள் ..! இப்போதுதான் நான் ஆபீசிலிருந்து புறப்பட்டேன் , விளையாட்டு பார்க்கவேண்டுமென்று இன்று சற்று முன்னாலேயே புறப்பட்டுவிட்டேன் நீங்களும் அந்தப் பக்கந்தானே ....?
அந்த ஆட்டக்காரன் முட்டாள் பாருங்கள் ! ஆஃப் சைடிலே நின்று கொண்டு ஒரு நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டுவிட்டான் . விளையாட்டு முடிய இன்னும் பத்து நிமிஷந்தான் இருக்கிறது - ஒரு கோல்கூட விழவில்லை . அந்த ஆள் -ஐயோ அவனுக்கு யார் சிவப்பு ஜெர்ஸி போட்டுக் கொள்ளக் கொடுத்தார்கள் ? அவனை விரட்டுங்கள் வெளியே ! இஷ்டத்துக்குத்திட்டுங்கள் அவனை ! என் நாக்கில் கெட்ட வார்த்தைகள் வருவதில்லை . இருந்தாலும் பாருங்கள் , கோபத்தில் என் கை கால்கள் நடுங்குகின்றன . இன்று காலை முதல் சந்திரனையும் அதன் மேல் காலெடுத்து வைக்க முயலும் மூன்று வீரர்களைப் பற்றியும் நினைத்து என் நரம்புகள் தளர்ந்து போயிருக்கின்றன . அத்துடன் இப்போது இந்த மோசமான விளையாட்டுக் குழு ! எதிர்க்கட்சிஎன் அபிமானக் கட்சியைவிட ஒரு பாயிண்ட் கூட ஜெயித்து விட்டது - என்ன கஷ்டம் ! விளையாட்டு முடிய எட்டு , ஒன்பதுநிமிஷந்தான் இருக்கிறது - "என்ன சொல்றீங்க , அண்ணே ! கோல் ஆகுமா ? எப்படி ஆகும் ? எதிர்க் கட்சிக்காரங்க . அவங்க கோலுக்குமுன்னாலே சுவர் மாதிரி நின்னுக்கிட்டிருக்காங்க - இவங்க விளையாடற அழகைப் பார்த்தா இவங்களுக்குக் கோல் போடற எண்னம் இருக்கறதாவே தெரியலே...."
அந்த ஆட்டக்க்காரன் ஆஃப் சைடில் நின்று கொண்டு மிகவும் நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டுட்டான் . அவன் முன்னால் போய்ச் சொல்லத் தோன்றுகிறது எனக்கு “ஏய் , இந்தோ பாரு ! நான் அரிந்தம் பாசு, சின்ன வயசிலேருந்து நான் ஒன் கட்சியை ஆதரிச்சு வந்திருக்கேன். இந்தக் கட்சி ஜெயிக்க நான் சாமிக்கு அர்ச்சனை பண்ணியிருக்கேன், தோத்தாத்தற்கொலை பண்ணிக்கலாமான்னு நினைச்சிருக்கேன் . இதெல்லாம் தெரியுமா ஒனக்கு ? இந்தக் கூட்டத்திலே நான் ஒரு முக்கியமானஆள் . எவ்வளவு படபடப்போடே கடிகாரத்தைப் பார்த்துக் கிட்டிருக்கேன் ...!" ஆனா நான் சிரிக்கிறேனா , அழறேனா என்ன செய்யறேன்னு யார் கவலைப்படறாங்க....?
ஊஹூம் , கோல் விழவில்லை ! நடுவர் விசில் ஊதிவிட்டார் . ஆட்டம் முடிந்து விட்டது , இப்போது பாருங்கள் , நான் எவ்வளவுசோர்ந்துபோய் விட்டேன் என்று, என் தோள்கள் சரிகின்றன . நான் இந்தக் கட்சியை எவ்வளவு நேசிக்கிறேன், பாருங்கள் .ஆனால் அதனால் கட்சிக்கு என்ன வந்தது ? இந்தக் கட்சி ஜெயித்த போதெல்லாம் நான் எப்படிக் குதித்திருக்கிறேன், அறிமுகமில்லாதவர்கள் முதுகில் தட்டியிருக்கிறேன், தோற்றபோது எப்படி அழுதிருக்கிறேன் என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாது . எல்லாம் வீண். இதனாலெல்லாம் ஒரு பிரயோசனமுமில்லை * நான் இன்று காலை முதல் சந்திரனையும் அந்த மூன்று வீரர்களையும் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து , அந்தக் கவலையில் சோறு கூட இறங்காமல் ... இதைப்பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை?
தயவு செய்து என்னைப் பாருங்கள் . எனக்குத்தெரியும் , ஏற்கெனவே நீங்கள் பந்தயப் பட்டியலில் உங்கள் அபிமானக்கட்சியின் நிலை குறித்துக் கவலையாயிருக்கிறீர்கள். அதற்கு மேல் சந்திரன் , சந்திரப் பயணிகள் மூவரைப்பற்றிய கவலை வேறு உலகத்தில் எவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன! மனிதன் இருபத்தொன்பதரை நீளம் தாவுகிறான் ; ஒரு ஜனாதிபதிசுட்டுக் கொல்லப்படுகிறார் ; உங்கள் அரசியல் கட்சி தேர்தலில் தோற்றுவிடுகிறது ; புரட்சி வரத் தாமதமாகிறது. ஆகையால்தான்நான் -- வங்கிக் குமாஸ்தா அரிந்தம் பாசு - உங்களுக்கு இவ்வளவு அருகிலிருந்தாலும் உங்களால் என்னைப் பார்க்க முடியவில்லை , என் நான்கு வயதுப் பிள்ளை ஹாபு மாடி வராந்தாவில் கையைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் . யாருக்கும் அடங்கமாட்டான் . காலையிலிருந்தே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறான் . நான் சீக்கிரம் ஆபீசிலிருந்துவந்து அவனைத் தேர்த் திருவிழாவுக்குக் கூட்டிப் போக வேண்டுமாம் - எனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறான் அவன் .
கூடைமாதிரி தலை முடிக்குக் கீழே பளபளக்கின்றன அவனுடைய கண்கள் , இவ்வளவு தூரத்திலிருந்தே அவற்றைப்பார்க்க முடிகிறது என்னால்
நான் மாடிப்படியில் கால் வைத்திருக்கிறேன் . அதற்குள் அவன் ஓட்டம் ஓட்டமாகக் கீழே ஓடி வருகிறான். அவனுடைய அம்மா மேலேயிருந்து , "ஹாபுபூ...! எங்கே போறே?" என்று கத்துகிறாள். ஹாபு என் மேல் தாவிக் கொண்டு சிரிக்கிறான் ;"ஏன் இவ்வளவு லேட்டு ? திருவிழா போக வேண்டாமா?" என்று கேட்கிறான்
ஆமாம் , நான் வெளியிலிருந்து திரும்பியதும் என் மக்களுக்கு மத்தியில் சற்று ஆறுதல் பெறுகிறேன் - பையனை இடுப்பில்தூக்கி வைத்துக்கொண்டேன் - அவனது உடலில் இனிமையான வேர்வை மணம் ; குளிர் காலத்து வெயில் போல வெதுவெதுப்பாக ,இதமாக இருக்கிறது அவனது ஸ்பரிசம் - முகத்தை அவனது உடலில் புதைந்து கொண்டால் கண்ணுக்குத் தெரியாமல் ஸ்நானம் செய்யும் உணர்வு ஏற்படுகிறது எனக்கு.
"போகலாம்ப்பா - எனக்கு ரொம்பப் பசிக்குது - கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு சாப்பிட்டுக் கிளம்பலாம் " என்று சொன்னேன்.
நான் ஓய்வு எடுத்துக் கொள்ளும்போது ஹாபு என் உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தான் , "சீக்கிரம் , சீக்கிரம் !"அதட்டினாள் , "திட்டாதே ! சின்னப் பையன் தானே !" என்று நான் அவளைத் தடுத்தேன் அவன் இந்த மாதிரி என்னோடு ஒட்டிக்கொண்டிருப்பது எனக்கு நிஜமாகவே பிடித்திருக்கிறது. ரொம்ப விஷமக்காரப் பையன் அவன் . திருவிழாவுக்குப் போனதும் என் கையைவிட்டு ஓடத் தொடங்கிவிட்டான் - "ஹாபு , ஓடக் கூடாது ! என் கையைப் பிடிச்சுக்கிட்டாத் திருவிழாவை நல்லாப்பார்க்கலாம் " அவன் இங்குமங்கும் பார்த்துவிட்டு உரக்கக் கத்தினான் , "அது என்னப்பா ? அங்கே என்ன?"
"அது குடை ராட்டினம். அது சர்க்கஸ் கூடாரம் .. அது சாவுக்கிணறு ..
ஒரு முழு அப்பளத்தைக் கையிலெடுத்துக்கொண்டு குடை ராட்டினத்தில் ஏறிவிட்டான் ஹாபு அதோ போகிறான் -- வானத்துக்கு அருகில் சிரித்துக்கொண்டு கையை ஆட்டுகிறான் , என்னைப் பார்த்துச் சிரிக்கிறான் , அவனைப் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கிறது எனக்கு , சாவுக் கிணற்றைச் சுற்றியிருக்கும் மேடையில் நின்கொண்டு கிணற்றுக்குள் பயங்கர ஓசையுடன் மோட்டார்சைக்கிள் வேகமாக ஏறி இறங்குவதை ஹாபுவுக்குக் காட்டினேன் . அவன் என்னை இறுகக் கட்டிக் கொண்டு அந்தக் காட்சியைப்பார்த்தான்.
அதன் பிறகு நாங்கள் அரைமணி நேரம் சர்க்கஸ் பார்த்தோம் . இரண்டு தலை மனிதன் , பாடும் பொம்மை , எட்டடி உயரமுள்ள ஆள் -- ஹா பேச்சில்லாமல் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் - அவனுடைய கண்களில் ஆச்சரியம்பளபளத்தது.
வெளியே வந்து அவனைக் கீழே இறக்கிவிட்டேன். அவன் எனக்கருகே நடக்கத் தொடங்கினான் , அவன் கையைப் பிடித்திருந்த என் கை வியர்க்கத் தொடங்கியதால் நான் அவன் கையை விட்டுவிட்டேன்,
அவன் என் கையை விட்டுவிட்டு முன்னால் போகிறான். ஒரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஊதல்களைக்குனிந்து பார்க்கிறான் . பிறகு மேலே போய் இன்னொரு கடையில் முடுக்கி விடப்படும் ஏரோப்பிளேன் பொம்மைகளைப் பார்க்கிறான் . பிறகு மெதுவாக முன்னேறுகிறான் ; விளையாட்டுத் துப்பாக்கிகள் , கலர்ப் பந்துகளைப் பார்த்துக்கொண்டு போகிறான் ..கூட்டத்துக்குள்ளே போகிறான் .....
நான் என் அபிமானமான விளையாட்டுக் காட்சியைப் பற்றி நினைக்கிறேன் - இன்று அனாவசியமாக ஒரு பாயிண்ட்டை இழந்து விட்டதே கட்சி...! சந்திரனுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்களே மூன்று மனிதர்கள்.... அவர்கள் சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்து விடுவார்களா...?
ஹாபு எங்கே ...? அவனைக் காணோமே ! கூட்டத்துக்கு நடுவில் அவனுடைய நீலக் கலர் சட்டையை ஒரு நிமிஷம் முன்னாலே கூடப் பார்த்தேனே! சட்டேன்று மறைந்து போய் விட்டானே!
நான் "பாபூ°°!" என்று கத்திக் கொண்டே கூட்டத்துக்குள் ஓடினேன் --