தேபேஷ் ராய்
தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது - பங்குனி மாதம் போல் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது . - நாள் முழுதும் . வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர்களின் அறைக்குத் திரும்பும்போது பிநய்யின் பார்வை பள்ளிக்கு வடக்குப் புறமிருந்தவீட்டின் மேல் விழுந்தது - ஆசிரியர் அறையிலிருந்து வகுப்புக்குப் போகும் போது யூகலிப்டஸ் மரத்தின் உச்சி அவன் கண்ணில்பட்டிருந்தது . இங்கிருந்து இடுகாடு கண்ணுக்குத் தெரியாது - இடுகாட்டின் தென்கிழக்கு மூலையில்தான் அந்த மரம்.
அந்தக் காற்று உடம்பின் திரவப் பகுதியை அளவுக்கதிகமாக உறிஞ்சிவிட்டதால் தோல் காய்ந்துபோய் சொரசொரப்பாகஆகிவிட்டது | முகத்தைக் கையால் தடவினால் காய்ச்சல் மாதிரி சுடுகிறது . சலவை செய்யப்பட்ட துணிகளை மடிப்புக் கலையாமல் இன்று எடுத்து உடுத்திக்கொண்டு, இன்றே முகத்தை ஷேவ் செய்து கொண்டிருந்தால் இந்தக் கதகதப்பு , வறட்சி இருந்திருக்காது -
பள்ளிக்கு வடக்குப்புறத்து வீட்டுக்கு மேலே வானத்தைத் தவிர வேறெதுவும் என்றுமே இருந்ததில்லை - யூகலிப்டஸ்மரத்தைத்தவிர , வானமும் யூகலிப்டஸ் மரமும் இந்த ஒன்றுமில்லாத வெறுமையை இன்னும் அழுத்தமாகக் காட்டின - தாய் அல்லது தந்தையை அண்மையில் இழந்தவன் பின்னால் உணரும் வெறுமைபோல - ஒரு கூத்து நடந்து முடிந்த உடனே ஏதோ ஒன்று சற்று முன் இருந்தது , இப்போது இல்லை" என்ற உணர்வு ஏற்படுவதுபோல ... இந்த வெறுமைக்குத் தன்னை மிகவும் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டான் விநய் - ஆகையால் அகாலத்தில் வீசிய இந்த வசந்த மாருதம் அவனை எவ்வளவு மகிழ்வித்திருக்கவேண்டுமோ அவ்வளவு மகிழ்விக்கவில்லை . மாறாக அவன் எப்போதோ தான் அனுபவித்து இப்போது கழிந்துபோய்விட்டஏதோ ஒரு உணர்விலே அமிழ்ந்திருந்தான்,
விளையாட்டு மைதானத்தில் அசோக் பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான் . அவன் அணிந்திருந்த பேண்டும் விக்கெட்டுக்குப் பின்னால் அவன் தயாராக நின்று கொண்டிருந்த தோரணையுமே பிநய்யின்கவனத்தை ஈர்த்தன.
பிநய் தன் வகுப்பில் கரும்பலகையில் ஒரு மரத்தையும் அதன் கிளையில் பறக்கத் தயாரான நிலையிலுள்ள பறவையொன்றையும் வரைந்துவிட்டு அறை வாயிலில் தன்மேல் காற்று வீசும்படி நின்றான் - இன்று காலையில் அவன் ஷேவ் செய்துகொண்டிருந்தால் அல்லது சலவை மடிப்போடு உடையணிந்து கொண்டிருந்தால் இந்த வசந்த மாருதத்தை வரவேற்றிருப்பான் ஆனால் தன்னிடமிருந்த திரவப்பொருள் வற்றிவிட்ட நிலையில் அவனுடைய உலர்ந்த முகத்தில் பட்ட காற்று அவன் கண்களை இடுக்கிக் கொள்ளச் செய்தது - அவன் தன்னை வீணாக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
வசந்த மாருதம் என்பது தென்றல் காற்று - ஆனால் அவனிருப்பது வடக்கு வங்காளத்தில் - தெற்கே வெகுதொலைவில்கடல் - அதன் கரையில் கல்கத்தா. இந்தக் காற்று கல்கத்தாவிலிருந்து வருகிறது என்ற நினைவே தான் வீணாகிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை வலுப்படுத்தியது. ஆகையால் அவன் அடுத்த வகுப்பில் கரும்பலகையில் வெறும் தட்டையும் அதன்மேல்கோப்பையையும் வரைந்தான்.
பொழுது சாய்ந்தபின் காற்று குறைந்து தேய்பிறையின் தொடக்க காலத்துச் சந்திரனோடு *தொடங்கியது . குளிர் அதிகரித்தது தெருவில் தூசி.
செருப்பு அறுந்து போயிருந்தது - தெருவில் நடக்கும்போது இழுத்து இழுத்து நடக்க வேண்டியிருந்தது . அதனாலேற்படும் ஒரு மாதிரியான சத்தம் மக்களின் காலடியோசைக்கு நடுவில் தனியாகக் கேட்கவில்லை , ஆனால் இப்போது முன்னிரவின்ஜனநடமாட்டமற்ற அமைதியில் இந்த அரவம் பிநய்யின் காதில் தெளிவாக விழுந்தது . நள்ளிரவில் தூக்கம் கலைந்தால்கடிகாரத்தின் டிக்டிக் ஒலி இடைவிடாமல், பொருளில்லாமல் கேட்குமே அது போலத்தான் இந்த இழுத்து இழுத்து நடக்கும் காலடியோசையும் , ஒரே மாதிரியான , தடைபடாத , ஆனால் இதமான இந்த ஒலி நிற்கவே நிற்காது . தொடர்ந்து கொண்டேயிருக்கும் என் பிநய்க்குத் தோன்றியது.
அவன் சட்டென்று நின்றான் - காலடியோசையும் ஓய்ந்து விட்டது . அப்படியானால் இது அவனுடைய காலடியோசைதான் .அவன் மறுபடி நடக்கத் தொடங்கினான் . இழுத்து இழுத்து நடப்பதால் ஏற்படும் ஒலி, பழக்கப்பட்ட , இதமான ஒலி மாறாது நிற்காது - இப்பொழுதே செருப்பைப் பழுது பார்த்துவிட வேண்டும் - இப்போதே -! அவன் நாற்புறமும் பார்த்தான் - ஊஹூம் , அதற்குவழியில்லை ... கல்கத்தாவாயிருந்தால் அவனுடைய காலடியோசை மற்ற காலடியோசைகளில் அமுங்கிப் போயிருக்கும் - ஆனால் இங்கே வேறு எவருடைய காலடியோசையும் இல்லை,
சாகக்கிடக்கும் நோயாளி ஜன்னி வெறியில் உடம்பைக் குறுக்கிக் கொள்வான் , விறைத்துக் கொள்வான். ஏதாவதுதேவைப்பட்டால் வாய் பேசமுடியாத நிலையில் கையைக் கண்டபடி ஆட்டுவான் , கண்களை அகலமாகத் திறந்து விழிப்பான் ,அடுத்த நிமிடமே சோர்வில் துவண்டு போய்விடுவான் . அதுபோல் செருப்பைப் பழுது பார்த்துவிட வேண்டுமென்று பரபரப்படைந்தபிநய் மறுகணமே துவண்டுபோனான் . சாக் ...கர் சாக் ! சாக் .... கர் சாக் ! ஒரே மாதிரி ஒலி , ஒரே மாதிரி , இருட்டாயிருக்கட்டும் , வெளிச்சமாயிருக்கட்டும் , வளர்பிறையானாலும் சரி , தேய்பிறையானாலும் சரி முகச்சவரம் செய்து கொண்டிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி - ஒரே மாதிரி ஒலி . ஜனநடமாட்டமிருந்தால் ... அதுதான் இல்லையே .... ஆகையால் ஒரே மாதிரிஒலி ... ஜட்கா வண்டி போனாலும் சரி , மாட்டு வண்டி போனாலும் சரி , சக்கரங்களின் உராய்வில் சரளைக் கற்கள் அழுதாலும் சரி .... கேள்வி கேட்பாரில்லை . யாரும் அடிமையில்லை , யாரும் ஆண்டானில்லை , எல்லாரும் பொதுமக்கள் ... சாக் ... கர் சாக் ...!
ஜன்னி கண்ட நோயாளி கத்துவதன் மூலம் சற்று ஆறுதல் பெற முயல்வது போல் பிநய்யும் சில முரட்டு ஒலிகளையெழுப்பித்தன் சங்கட உணர்விலிருந்து விடுதலை பெற முயன்றான். அப்போது அவனுடைய காலடியோசை அவனுக்கு உணர்த்தியது - இந்த ஓசையை நிறுத்தும் உபாயமெதுவும் அவனுக்குத் தெரியாது இந்த ஊருக்கே தெரியாது ; ஆகையால் இந்த 'சாக் ... கர் சாக் தொடரட்டும்!
தன் முழுநாளைய அனுபவத்தை இந்த முன்னிரவு வேளையில் , நடந்து செல்லும்போது இந்த மொழியில் வெளிப்படுத்தியதும் பிநய்யின் அடிவயிற்றிலிருந்து தொண்டைவரை சிரிப்பலை ஒன்று வாந்தி போல் திரண்டு வந்தது.
பிநய் நாகரீகமாகச் சிரிப்பதற்குப் பதிலாக ஒரு குடிகாரன் போல் பலமாகச் சிரிக்க முயன்றான் . தன் சிரிப்பின் நாற்றத்தைமுகர விரும்பியிருக்கலாம் அவன் . ஏப்பம்விட அவன் செய்த முதல் முயற்சியை நிறுத்தவில்லை - அவனுடைய குழந்தைப்பருவத்தில் முதல் சோறு உண்ணும் சடங்குக்குப் பிறகு அவனுடைய வயிற்றுக்குள் எவ்வளவு உணவுப் பொருள்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன என்று நினைத்துப் பார்த்தான் அவன். எவ்வளவு பொருள்கள் வயிற்றில் குவிந்து , அழுகி ... ஒரு போடு போடு வெங்காயம் , உருளைக்கிழங்கு , கபாப் , ராவிலே விருந்து ....
இவ்வாறு நினைத்துவிட்டு அவன் ஓரிரண்டு முறை ஏப்பம் விட முயற்சித்தான். தொண்டைக்குழாயில் சற்று அழுத்தம் கொடுத்துப் பிறகு ஓர் ஏப்பம் விட்டான் - அப்போது வாயைத் திறக்க மறந்துவிட்டதால் அந்த ஏப்பத்தின் நாற்றத்தை முகரமுடியவில்லை . பிறகு வாயைத் திறந்து கொண்டு இரண்டு முறை முயற்சி செய்தான் - "சீ , இதென்ன அசட்டுத்தனம் !" என்றுதன்னையே கடிந்து கொண்டு அவன் மேலே நடக்கத் தொடங்கினான். மறுபடியும் அதே ஒலி - சாக் ---கர் சாக் ! சாக் ... கர் சாக் !அதைக் கேட்காதபோல் அவன் நினைக்கத் தொடங்கினான் - "நான் எங்கே போறதுன்னு தீர்மானம் பண்ணியிருக்கேனா ,இல்லையா ...? இல்லே, வீட்டைவிட்டுக் கிளம்பறபோது ஒண்ணும் நிச்சயம் பண்ணல காலையில டீ குடிக்கிற மாதிரி பொழுதுசாஞ்சதும் சுதீர் அண்ணாவீட்டுக்குப் போகத்தான் வேணுமா ? போய் என்ன செய்யப்போறேன் ? நியூஸ் பேப்பரை இன்னொருதடவை படிப்பேன் - வெளியிலே பெஞ்சிமேல படுத்துக்கிடப்பேன் .... இல்லாட்டி , அந்தப் பொண்ணு - அவ பேரு என்ன ? கோலாபா ,டகரா ? இல்லே , ஜுயியா ? பூனை கீனையா?"
அவனது சிந்தையின் இழை அறுந்து போய்விட்டது . ஓரிழை அறுந்ததும் வேறோர் இழை கிடைத்துவிட்டது . சாக் .... கர் சாக் ,சாக் ...கர் சாக் ஒலியைச் சற்று மறந்திருந்த அவனை மறுபடியும் ஆக்கிரமித்துக் கொண்ட து. சாக் ...கர் சாக் , சாக்..... கர் சாக் ...
"இல்லே , இல்லே , சுதீர் அண்ணா வீட்டுக்குப் போகப் போறதில்லை . இதற்குள் அந்த வீடு இருந்த சந்து முனைக்குவந்துவிட்டான் அவன் . அவன் மீண்டுமொரு முறை தனக்கே சொல்லிக்கொண்டான் , 'இல்லே , போகப்போறதில்ல!" சந்துமுனையில் இடதுபறம் திரும்பாமல் ஓரிரண்டு காலடிகள் வைத்து விட்டுப் பிறகு அவன் தன்னையே கடிந்து கொண்டான் ,"இதெல்லாம் என்ன ! நல்ல வேளையா சுதீர் அண்ணா வீடு இருக்கு ; இல்லாட்டி நாள்பூரா என் வீட்டிலேயே அடைஞ்சுகிடக்கணும்!"
பிநய் இடதுபக்கம் சந்துக்குள் திரும்பினான் . சாக்.... கர் சாக் , சாக் ... கர் சாக் ... நல்ல அவஸ்தை இது! எல்லாத்தையும் குழப்பிவிட்டுடுது இந்தச் சத்தம் ! இன்னிக்குப் போய்ப் பாபுயியோட பாட்டு நோட்டிலே படம் வரைஞ்சு தரணும் . ஆமா, அந்தப்பொண்ணோட பேரு பாபுயி . சாக்.... கர் சாக் , சாக் .... கர் சாக் - ஒரே சத்தம் - இருட்டானாலும் சரி . வெளிச்சமானாலும் சரி...
சுதீர் பாபுவின் வீட்டுக்கருகில் வந்ததும் அவனுக்கு முதலில் வருத்தமேற்பட்டது. கல்கத்தாவுக்காக ஏங்கினான் அவன். அம்மாஅப்பா தம்பி தங்கைகள் நிறைந்த இந்த ஊர் வீட்டிலிருந்து நண்பர்கள் நிரம்பிய கல்கத்தா காபி ஹவுசிலிருந்து , பயணிகள்நிரம்பி வழியும் கல்கத்தா டிராமிலிருந்து சுதீர்பாபுவின் வீட்டில் வந்து இறங்கினான் - வாசல் கம்பிக் கதவைத் திறப்பதற்காகக்காலடியோசையைச் சற்று நிறுத்திக் கொண்டான் - கதவு திறக்கும் போது ஒரு நீண்ட பெருமூச்சு - பிறகு மீண்டும் அதே சாக்.... கர்சாக் , சாக்... கர் சாக்.... அதே ஒலி
பிநய் ஒரு மாலுமி - அவனுடைய கப்பல் கல்கத்தாத் துறை முகத்தில் நங்கூரமிட்டிருக்கிறது . வங்காளம் , அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம் வரை விரிந்து பரந்துள்ள பின்புலத்தில் முன்னிரவுப் பொழுதைக் கழிக்க வந்திருக்கிறான் அவன்.
அதே , ஒரே மாதிரி ஒலி - அமாவாசையாயிருக்கட்டும் . பௌர்ணமியாயிருக்கட்டும் குளிர் இரவானாலும் சரி, கோடையானாலும் சரி , காட்சி ஒன்றுதான் . மாறாதகாட்சி இல்லை , நகரும் காட்சி : காலங்காலமாக இருந்து வரும் வானம் , சந்திரன் ,நட்சத்திரங்கள், மரங்களுடன் இந்தக் காட்சியை அமைப்பவர்களும் ஜீவனற்றவர்கள் . ஆனால் இந்த நிரந்தரத் திரைக்குமுன்னால் அவர்கள் நடிப்பதாகத்தான் ஏற்பாடு. இந்த நடிக நடிகையரோட வாழ்க்கையைக் காப்பியடிப்பதால் கலை பிறக்காது அவர்கள் மட்டும் கலையைப் படைத்தால் இந்தப் பழைய பின்புலத்தில் எவ்வளவு துன்பியல் இன்பியல் நாடகங்கள் நிகழும் !அதற்குப் பதிலாக இப்போது நிகழ்வது கேலிக்கூத்துதான்,
ஒரே மாதிரி , வெளிச்சமானாலும் சரி இருட்டானாலும் சரி , தேய்பிறையில் நள்ளிரவில் காட்சி சற்று - அந்தி நேரத்தோடு ஒப்பிடுகையில் - மாறுபடும் - வளர்பிறைக் காலத்து முன்னிரவும் தேய்பிறைப் பின்னிரவும் வரலாற்று முற்பட்ட காலத்துக்குரியவை குளிர்காலத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ள மாமரத்தின் மேல் வெயில் தங்குகிறது , வெயிலைத் தேடிக் கண்டுபிடித்து அங்கு உட்காரலாம் . நிலாவைத் தேடி....?
சுதீர் பாபு வீட்டுச் சமையலறை நீளம் குறைவில்லை , ஆனால் அகலம் குறைவு , ரொம்ப அகலக் குறைவுமில்லை மேலே தகரக்கூரை புதுப்பிக்கப்படவில்லை , சுதீர்பாபு பெரிய பெண்ணின் கலியாணத்தின்போது தரையைச் செப்பனிட்டிருந்தார் . அப்போது ஏறக்குறையக் கூரையைத் தொடும்படி கிராதியும் போட்டிருந்தார் . மூச்சைத் திணறச் செய்யும்படி ...வராந்தாவின் ஓர் ஓரத்தில் சுதீர் பாபுவின் அம்மாவுக்காக மடிச் சமையலறை , வீட்டுமனையின் கிழக்குப் பக்கத்தில் மேற்குப் பார்த்த இரண்டு அறைகள் , தெற்குப் பகுதியில் இன்னோர் அறை.
காட்சி ஒன்றுதான் , ஒரே காட்சி , வெளிச்சமானாலும் சரி , இருட்டானாலும் சரி ... காலைக்காட்சிகள் மாறும் . சரத்காலத்துக்காலை நேரத்துக்கு ஓரளவு நிலையான உருவம் உண்டு. மற்றபடி அது மாறும் . நடந்து செல்லும் காலை நேரம் , ஓடிக்கொண்டிருக்கும் காலை நேரம் மாறிக் கொண்டிருக்கும் , எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும் நண்பகல் நீரின் ஆழத்தில் அமிழ்ந்த நிலை மாலை நேரம் இருக்கும்போதே இல்லாமல் போய்விடும் - மலிவான தேங்காயெண்ணெயின் மணம் பொரிக் கிண்ணத்தில் . மாலையில் மினுவுக்குத் தலை பின்னிக் கொள்ள வேண்டியிருக்கும் . தலை பின்னிக் கொள்ளாமல் வெளியே எப்படிப் போவாள் ?அவளுக்குப் பதினைந்து வயது. வெளியே போகாமல் எப்படியிருக்க முடியும் அவளால் ? மினுவின் அண்ணன் நான் - பிநய் - பள்ளியிலிருந்து வந்த பிறகு எனக்குப் பொரியும் வெல்லமும் கொடுக்காமல் எப்படிப் போவாள் அவள் ? ஆகையால் எனக்கு அவள் கொடுக்கும் பொரிக் கிண்ணத்தில் அவளது கைத்தேங்கா யெண்ணெயின் வாசம் இருக்கும்.
பாவம் , மினுவுக்குத்தான் எவ்வளவு கஷ்டம்...!
முன்னிரவு நேரம் . இப்போது நோயாளியின் அறைக்கு வெளியிலுள்ள அமைதி - வெளியுலகில் ? துறைமுகத்தின் பின்புலம் எப்போதும் இப்படித்தான் மயானம் போலிருக்குமா ? அல்லது இந்த வீடுதான் அப்படியா ? என் வீடுதான் அந்த மாதிரியா ? அல்லது என் மனந்தான் ...? சாக் .. கர் சாக் , சாக் .. கர் சாக் ... எல்லாம் நகர்கின்றன , இந்த வீடு .... நாமெல்லாரும் இந்த வீடாகியவண்டியின் பயணிகள் - ஸ்டேஷன் எப்போது வரும்?
வடக்குப் புறத்து அறைகளைக் கடந்து உள்ளே நுழைய ஒரு தகரக் கதவு. ஓர் அறையின் மூன்று பக்கங்களிலும் ஜன்னல்கள் மேற்குப் பக்கத்துச் சுவரையொட்டி பாபுயியின் மேஜை . அதன் மேல் சரசுவதி தேவியின் படம் , தலைவலி மருந்து டப்பா பாபுயிக்கு அடிக்கடி தலைவலி வரும். மேஜையின் மேல் விளக்கு. விளக்கின் மேற்புறம் மூடப்பட்டிருக்கிறது பதினைந்து அல்லது பதினாறு வயதுள்ள பாபுயியின் நாற்புறத்திலிருந்தும் வெளிச்சம் பாய்கிறது - அறையின் மேற்குப் பக்கத்து ஜன்னல் மூடியிருக்கின்றன . கிழக்குப் புறத்து ஜன்னல்கள் திறந்திருக்கின்றன - பாபுயி கிழக்குப் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் . ஆகையால் அவளுடைய முகத்தைச் சுற்றிக்கொண்டு வெளிச்சம் கிழக்கு ஜன்னல்கள் வழியே வெளியே வருகிறது பாபுயியின் மேஜை விளக்கின் வெளிச்சம் கிழக்கு ஜன்னல்கள் வழியே வெளியே வந்து தகரக் கதவின்மேல் மங்கிய ஒளியாகப்பனிபோல் படருகிறது வெளியில் யாராவது பார்வையாளன் நின்று கொண்டிருந்தால் அவன் விளக்கொளியின் எதிரில்பாபுயியின் முகத்தின் எல்லைக் கொட்டைப் பார்ப்பான் (அது தான் தூய்மை வளையமா ? அந்தக் கோடு வட்டமாகத் தெரிகிறது .சில உறுப்புகளை அடையாளங் காட்டும் வளைவுகள் அந்த வட்டத்தில் ) அவளது சில முடிகள் தலையோடு படியாமல் அந்தவெளிச்சத்தில் தெரிகின்றன. தான் ஒரு சித்திரமாக இருப்பது பாபுயிக்குத் தெரியாது , தான் ஒரு சித்திரமென்று எந்தச் சித்திரத்துக்கும் தெரியாது . மனிதன் சித்திரமாவான் என்று பார்ப்பவனுக்குத் தெரியும் , சித்திரம் மனிதனாகலாம் என்று கவிக்குத்தெரியும் - பாபுயி பாடுகிறாள் , "நீ வெறும் சித்திரந்தானா?"
தகரக்கதவு வழியே நுழைந்தால் , கிணற்றடிக்கும் வடக்குப் புறச் சுவருக்குமிடையில் இருண்ட மூங்கில் வேலியில் ஒருஜன்னல் , ஜன்னல் கம்பிகளின் நிழல் - அறைக்குள்ளே ஜன்னலுக்கு நேரே மேஜை : மேஜைக்கு முன்னால் சந்தன் - அவன் தன் விரல்நுனியைப் பல்லில் வைத்துக் கொண்டிருக்கிறான் . அவன் மேற்குப் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு கிழக்குப் புறம் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான் . விளக்கு வெளிச்சம் அவனுடைய முகத்தில் பட்டு ஒரு பாத்திரத்தைப் படைத்திருக்கிறது - ஒளியும் இருட்டும்தற்செயலாகப் படுவதால் ஒரு பாத்திரம் உருவாகுமா ? சந்தனுக்கு வலது பக்கத்தில் விளக்கு - அவனுடைய மூக்கு நல்ல எடுப்பாக இருக்கும். ஆகையால் அவனுடைய இடது கண்ணோரத்தில் இருட்டு அவன் முண்டா பனியன் அணிந்திருக்கிறான் ; அகலமான மணிக்கட்டு - விளையாட்டுக்காரர்கள் போல் குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடி உறுதியான தாடைகள் . ஆனால்கண்களில் மட்டும் ஏன் உறுதியில்லை ? சந்தன் ஏன் நகத்தைக் கடிக்கிறான் ? முன்புற ஜன்னல் வழியே வெளியேவரும் வெளிச்சத்தில் நகர்ந்து செல்லும் மனிதனின் தலைமட்டும் - உடல் இல்லை . சந்தனுக்குப் பயமா?
அதற்குப்பின் ஒரு சிறிய கொல்லை. அதன் இடது புறத்தில் சமையலறை வராந்தாவில் மடிச் சமையல் செய்யுமிடத்தில்சிம்னி விளக்கின் பரவலான சுடர் நிழலையும் ஒளியையும் மாற்றி மாற்றி உண்டாக்கிப்பிறகு அதைத் துடைத்து விடுகிறது வானம் கீழே இறங்கிச் சமையலறைக் கூரைக்குச் சற்று மேலே வருமானால், வேலியின் இரண்டு இடுக்கு வழியே நூலிழைபோல் ஊடுருவிவரும் வெளிச்சத்தால் ஏற்படும் கூரையின் நிழல் அந்த வானத்தில் விழும் .. வராந்தாவின் ஒரு மூலையில் வறட்டி ,கரிக்குவியல் , சுள்ளி மூட்டை - கதைகளில் வரும் பயணிகள் தங்கும் சத்திரத்தில் அவர்களுடைய சாமான்கள் போல் அவை இருட்டில் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன , திடீர் வெளிச்சத்தில் திகைக்கின்றன மடிச் சமையலங்கணத்தில் தணிந்து எரியும் நெருப்பில் சமையல் செய்து கொண்டிருக்கிறாள் சுதீர் பாபுவின் மனைவி - சிம்னி விளக்கின் பழக்கமான வெளிச்சம் பங்குனிக்காற்றுப் போல் அசையும் போது முப்பது வருடங்களாகக் குடித்தனம் செய்யும் சுதீர் பாபுவின் மனைவி அன்னியமாகத் தோற்றமளிப்பது ஏன்?
அந்த நேரத்தில் சடப்பொருள்களும் உயிருள்ளவையும் தெளிவாகத் தெரியும் , முன்னிரவில் பார்வையிலிருந்து மறைந்துவிடும் . முன்னிரவுக் காலம், சிந்தனைக்குரியது இந்த முன்னிரவுக் காலம் , நான் சிந்திக்கப் போகிறேன் , அண்ணியோடுசில வார்த்தைகள் பேசப் போகிறேன் , பிறகு தெற்குப் பக்கத்து வராந்தாவில் படுத்துக் கொண்டு சிந்திப்பேன் - என்ன -என்னசிந்திக்க நினைத்திருந்தேன் , இப்போது என்ன சிந்திக்கிறேன்?
"யாரு?"
அண்ணியின் குரலைக் கேட்டதுமே கண்களை மூடிக் கொண்டு மனக கண்ணால் அவளைப் பார்க்கலாம் அவள்சிறிய மரப்பலகைமேல் கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, முழங்கால்களின் மேல் கைகளை வைத்திருக்கிறாள் - வலதுகையில் ஏதாவது கரண்டி இருக்கும் - இடது கையில் என்ன ? என் காலடிச் சத்தம் கேட்டதுமே அவள் இடுப்புக்கு மேல் உடம்பை உயர்த்திக் கொண்டு கழுத்தையும் நீட்டிப் பார்க்கிறாள்.
"நான்தான் பிநய் " என்று சொல்லிக்கொண்டே சமையலறைப் படிக்கட்டில் காலெடுத்து வைக்கிறான் பிநய் .
"பிநய்யா? வா ! வீட்டிலே எல்லாரும் சௌக்கியமா?" பிநய்யின் குரலைக் கேட்டதுமே அண்ணியின் மேலுடம்பு தளர்கிறது. அவள் இடதுகையால் சுள்ளிகளை அடுப்புக்குள் தள்ளுகிறாள் . சில பொறிகள் பறக்கின்றன , அவள் கண்களை இடுக்கிக்கொண்டு முகத்தை நகர்த்திக் கொள்கிறாள் . தான் கேட்ட கேள்வி முகத்தில் பிரதிபலிக்க அவள் பிநய்யின் பக்கம் திரும்பிப்பார்க்கிறாள். பிநய் எப்போதும் இந்தக் கேள்விக்கு 'உம்' என்று பதில் சொல்லிவிட்ட நிலைப்படியில் உட்காருவான்.
அண்ணி ஏன் தினம் இந்தக் கேள்வி கேட்கிறாள் ? பழக்கம் காரணமாகவா ? தினமும் ஒரே கேள்விதான் - பேலாவுக்கு - அதுதான் அண்ணியின் பெயர் - தான் இப்படி ஒரே மாதிரி பேசுகிறோம் என்ற உணர்வு இல்லை , அவள் இதயபூர்வமாக நெருக்கமானவள் ஆனால் அவளுடைய குரலில் தொலைவு தொனிக்கிறது.
"உக்காரு !" என்று அண்ணி சொல்வதற்குள் அவன் உட்கார்ந்து விட்டான். பிநய் ஒரு சுள்ளியை எடுக்கக் கைநீட்டுகிறான். பிறகு அந்தக் குச்சியால் தரையில் ஏதோ கிறுக்குகிறான் . அண்ணி குச்சியைப் பார்க்கிறாள் , அவனுடைய கிறுக்கலையும் பார்க்கிறாள் . பிநய் குச்சியைத் தூக்கியெறிந்து விடுகிறான்
"ஸ்கூலுக்குப் போனியா?” அண்ணியின் கேள்வி.
அடுத்தாற்போல் கேள்வி வரும் - "இன்னிக்கு சாதத்துக்குத் தொட்டுக்க என்ன ?" அந்தக் கேள்வி வருவதற்கு முன் எழுந்துவிடவேண்டும் . வேறு யாராவது வந்தால் அண்ணியோடு நெடுநேரம் வம்பு பேசிக் கொண்டிருக்கலாம் . ஆனால் அண்ணியிடம் பேச்சு இல்லை. அவள் முப்பது ஆண்டுகக்குமுன் பிறந்தகத்திலிருந்து கற்றுக் கொண்டு வந்த வார்த்தைகள் ஐந்தாண்டுகளில் தீர்ந்துபோய்விட்டன . இந்த கிராமப்புறம் போன்ற நகரத்தில் வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது - அண்ணியைப் பொறுத்தவரையில் சொற்கள் பிறக்குமிடம் தயாராகவில்லை அண்ணி ஏனிந்த மாதிரிப் பார்க்கிறாள் ? அவளுடைய தோற்றத்தில் ஒருவகை விடலைத்தனம் இருக்கிறது . அதைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் அண்ணி தன் குழந்தைகளுக்கு பாபுயி .சந்தன். சோனா , ரூபா ' என்றெல்லாம் எப்படிப் பெயர் வைத்தாள் ? அந்த நளினம் இப்போது ஏனில்லை . ஏன் ? அடுப்பங்கரைச்சூடா ? கண்ணில் புகையா?
"சுதீர் வரலியா?" பிநய் எழுந்து நின்றுகொண்டு கேட்டான்.
"இல்லே .. நீ எங்கே கிளம்பிட்டே ?" அடுப்பைப் பார்த்துக் கொண்டே அண்ணி கேட்டாள்.
"அந்த ரூமிலே இருக்கேன் ... சுதீர் அண்ணா இன்னும் வரலியா?"
"டியூசனுக்குப் போயிருக்கார்."
என்ன சிந்திக்க நினைத்திருந்தேன் ? முன்னிரவு வேளையில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் - ஒன்று - சோனா , ரூபமா , மீரா இவர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. இரண்டு - பாபுயி, மூன்று - நான். நான்கு - அண்ணி , ஐந்து -சுதீர் அண்ணா .....
பாபுயி என்ன நினைக்கிறாள்?
சுசித்ரா மித்ராவின் படம் ஒன்று வரைந்து தரச் சொல்லியிருந்தாள் பாபுயி, நான் தரவில்லை , தரப் போவதில்லை ,பாபுயி . நீ படிப்பை நிறுத்திவிடு, பாட்டை நிறுத்திவிடு! துணிமணிகளைத் தோய்த்து அலசிப் பிழி, சமையலறையைக் கழுவி விடு உன் கையில் மஞ்சள் மணக்கட்டும். உடம்பில் மஞ்சள் பூசிக்கொண்டு, 'நல்வரவு ' என்று எழுதப்பட்டிருக்கும் சிவப்பு நெட்டித்தோரணத்துக்குக் கீழே நடந்து போய்விடு . இல்லாவிட்டால் நீ சாக வேண்டியதுதான் நீ செத்துப் போ!
பிநய்க்குச் சிரிப்பு வந்தது . உள்ளூர அல்ல , உதட்டில் - பாபுயி பாசு சாகத்தான் வந்திருக்கிறாள் . அவளை யார் காப்பாற்றமுடியும் ? முன்னிரவு நேரத்தில் இந்த மாதிரி அமங்கலமாக நினைக்கக்கூடாது . தெற்குவாசலைத் திறந்தால் சாகவேண்டியதுதான். வெகுநாட்களாகப் படுத்த படுக்கையாயிருக்கும் நோயாளியின் சிரிப்புப்போல் பிநய் தன் சிரிப்பைத் தானேபார்த்துக் கொண்டான் . அதனால்தான் அவனுடைய சிந்தனையும் நோயாளியின் சிந்தனையாயிருந்தது ....
முன்னிரவு வேளையில் சரசுவதியின் படத்துக்கருகில் தலைவலி மருந்தைப் பார்த்து கொண்டே பாபுயி சுசித்ராமித்ராவைப் பற்றி நினைக்கிறாளா? நினைக்கிறாள். அது தவிர அவளுடைய வயதுக்கேற்ற மற்ற நினைவுகளும் நினைப்பாள் .எல்லா நினைவுகளும் ஒன்று சேர்ந்து அதனால் மனது பெரிதாகி, மனது பெரிதாகி.....
பாபுயி சுசித்ரா மித்ராவின் படம் கேட்டிருக்கிறாள் . அதை வரைய வேண்டும் . அதற்குமுன் அவளை அந்தப் பாட்டைப்பாடச் சொல்லிக் கேட்கவேண்டும் "என்னை இருளில் வைத்திருக்காதே , என்னைப் பார்க்க விடு!"
பாபுயி , உன் "நீ ' எங்கே ? எனக்குக் காட்டுவாயா ? என்னுடைய 'நான்' வெறும் சூனியம் . வாழ்நாள் முழுதும் சூனியத்தைத்தேடல் . ஐயோ!
"பிநய் , டீ போட்டுத் தரவா?"
"வேணாம்"
பேலா இவ்வளவு நேரம் எதாவது சிந்தித்துக் கொண்டிருந்தாளா ? இல்லை - பேலா என்பது சிந்தனையல்ல , உடல் அது அறிவு அல்ல , இருப்பு - நானும் அப்படித்தான் - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு . மனிதன் நகரத்தில் வசிக்கிறான் - என்னிடம் இருபத்தாறு ஆண்டுகளின் பாவம் இருக்கிறது . நான் பதினைந்து ஆண்டுகளின் எளிமையை வேண்டினேன்.
பாபுயி, அந்தப் பாட்டைப் பாடு "நான் என்னைப் பார்க்க விடு!"
இங்கே உடலின் உந்துதல்தான். உள்ளத்தின் உந்துதல் எங்கே ? மனம் ஒரு துண்டுப் புல் , மிருதுவான, சிறிய புல் - மனமே ,நீ எங்கே ? மனமே , நீ எங்கே ? மனமே நீ என் உடலுக்குள் வா! இறங்கி வா, வா!
உள்ளத்தின் தொடர்பாகப் புயலைப் பற்றி நினைத்ததுமே வானம் , கடல் , மலை எல்லாம் ஒன்றாகக் கலந்து அவன் மனதில் ஒரு விசித்திரமான சித்திரத்தைத் தோற்றுவித்து விட்டது . இந்தச் சின்னச் சின்னக் கூச்சல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதால்சில பெரிய விஷயங்கள் கவனத்துக்கு வருவதில்லை - பெரிய , விசாலமான - அதாவது ஆங்கிலத்தில் 'வொய்டு 'காட்டுத்தனமான - அதாவது ஆங்கிலத்தில் ஒயில்டு '-விஷயங்கள் (வொய்டு என்ற வார்த்தைக்கு எதுகையாகத்தான் 'ஒயில்டு ' என்ற சொல்லும் மனதுக்கு வந்தது என்று தெரிந்தும் பிநய் அந்தச் சொல்லை ஒதுக்கவில்லை ) வொய்டுக்குள் ஒயில்டும் இருக்கத்தான் செய்கிறது இல்லாவிட்டால் சித்திரம் தீட்டும் விருப்பம் எப்படி உண்டாகும்?
இங்கு கண்ணுக்குத் தோன்றும் சித்திரம் - விளக்குக்கு நாற்புறமும் தெளிவற்ற முகங்கள் - குழந்தைகளின் முகங்கள் - அவர்களை அடையாளம் தெரியவில்லை . மனித உடலின் கோட்டுருவம் நிறம், பிரகாசமான வெளிச்சத்தில் நிழல் விழுகிறது அண்ணியின் இடுப்புக்கு மேல் உடல் ஏதோ காலடியோசை கேட்டுச் சட்டென்று சுறுசுறுப்பாகிறது. கொடி போன்ற கோடு... இரண்டு கால்களுக்கிடையே முகத்தை வைத்துக்கொண்டு படுத்திருந்த நாய் சட்டென்று தலையைத் தூக்குகிறது ... அழகானமிருகம் ... அதன் கண்களில் மனிதத்தன்மை - அண்ணியின் தோற்றத்திலிருந்த அந்த இளமை எங்கு போய்விட்டது....?
பிநய் கண்களை மூடிக்கொண்டு தேடுகிறான் - செதுக்கப் பட்ட சிலையில் மறைந்திருக்கும் கோடுகளைத் தேடுவதுபோல அண்ணியின் இளமை எந்தக்கோட்டில் மறைந்திருக்கிறது?
நல்ல அழுத்தமான நிறத்தில் பெரிதாக ஏதாவது . அகலமாக ஏதாவது , பெரிதாக , பெரிதாக - முன்னாலுள்ள எல்லா விஷயங்களின் கோடுகளும் குறுகியவை , நிறங்கள் ஜீவனற்றவை.... சுசித்ரா மித்ராவின் சித்திரத்தில் என்ன பார்க்க விரும்புகிறாள் பாபுயி ?நான் என்ன பார்க்க விரும்புகிறேன்? பார்க்க விடு! என்னுடைய என்னைப் பார்க்கவிடு.....!
ககனேந்திர நாத் தாகூர் தீட்டிய யட்சபுரி -(தெளிவற்ற வெளிச்சம் , ஒளியும் நிழலும் முக்கோண வடிவமாக விழுவதால் சில சமயம் ஒரு தங்கத் தூணின் தோற்றம் , சில சமயம் மனித உடலின் சாடை . நந்தினியின் விரிந்த சில வில்கள் , அரளி மலர்க்கொத்தின் சிவப்பு - மிகவும் சிக்கலானது - வேண்டாம் ).
அபநீந்திர நாத் தீட்டிய ஷாஜஹான் -(மிகவும் சோகமானது . பரிதாபமான உருவங்கள் இருக்கின்றனவோ இல்லையோ எனும்படி : குளிர்காலத்தில் கண்ணாடியின் மேல் சூடான மூச்சுக் காற்று பட்டால் ஏற்படும் மங்கல் திரைபோல் அந்த உருவங்களின்வரைகோடுகளும் மறைந்து போய்விடலாம் - மிகவும் நுட்பமான உருவங்கள் -தாங்க முடியாது)
ரவீந்திரரின் நடனச் சித்திரம் -(கால் கைகளின் இயற்கையான அசைவுகளில் பண்டைய எகிப்தின் இயற்கைத்தன்மை -ஆங்கிலத்தில் "எலிமென்ட்டாலிட்டி ' எலிமென்ட்டாலிட்டிதான் வேண்டும் , ஆகா ! ஹீப்ரூ மந்திர உச்சரிப்பு போல் 'எ -லி -மெ-ன் -ட் -ட -ல்!- அழுத்தமான கோடுகள் , ஆனால் இவ்வளவு சிக்கலான வர்ணங்கள் ஏன் ? நடனக்காரியின் முகபாவனை ஏன்சைத்தானுக்கு அஞ்சலி செய்வது போலிருக்கிறது ? ஒரு பிணத்தை மாதிரியாகக் கொண்டு தீட்டப்பட்ட சித்திரம் போன்ற மனிதத்தன்மையின்மை ஏன் அவள் முகத்தில் ? இந்த அழுத்தமான கோட்டிலும் வர்ணத்திலும் சாவதும் பிறகு உயிர்ப்பதும் எங்கே - பாபுயி , இதனால்தான் எனக்கு உன் பாட்டு பிடித்திருக்கிறது . அழுத்தமான குரல் , தீர்க்கமாக , தாராளமாக , சுசித்ராவின்குரல்போல - பாபுயி , நீ சுசித்ரா மித்ராபோல் ஆவாய் பாபுயி , நீ சுசித்ரா மித்ரா ஆவாயா?)
நந்தலால் போஸ் தீட்டியுள்ள சிவன் - இல்லை , இல்லை - இல்லை ! வீட்டில் அன்னபூரணியை வைத்துக் கொண்டிருப்பவர் அன்னமின்றி அழுவாரா? இது பிசகு, பெரிய பிசகு - வேண்டாம் , இது வேண்டாம்!)
ஜாமினிராயின் ஜன்மாஷ்டமி ஓவியம் - (ஆகா , ஆகா ! மூன்று முறை வளைந்த உடலுடன் புல்லாங்குழல் கிருஷ்ணன் ... மூன்றுவளைவுகள் எங்கே ? முழங்கால் மட்டுந்தான் சற்று வளைந்திருக்கிறது - உடல் முழுவதின் பாரமும் வெள்ளமாக வந்து அந்தமுழங்கால் மேல் இறங்கியிருக்கிறது - சால மரம் போல் நிமிர்ந்த உடல் - மீன் போன்ற கண்கள் ஒவ்வொரு கண்ணும் ஒரு முழு மீனைப்போல ... இவ்வளவு தெளிவை , இவ்வளவு எளிமையை , இவ்வளவு வியப்பைத் தாங்கிக்கொள்ளும் திராணி எனக்கில்லை).
ஃபான் காக் தீட்டிய 'ஓர் ஆற்றின் மேல் காக்கைகள் ஓவியம் - (ஐயோ , என்னைக் காப்பாற்றுங்கள்! என்னால் இந்தவேதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை ! கறுப்புக் காகங்கள் , வானத்தில் அசைவு , தூக்கிய தலை விலங்கிடப்பட்டசிறகுகள், புயல் , கீழே மகா காவியங்கள் வருணிக்கும் ஆறு - ஐயோ , என்னால் தாங்க முடிய வில்லையே ! என்னைக்காப்பாற்றுங்கள்! யார் என்னைக் காப்பாற்றப் போகிறார்கள் ?
கறுப்புக் காகத்தின் சிறகுகளுக்குப் பின்னால் சூரியன் காணாமற்போய்விட்டான் இந்த இருளின் ஈர்ப்பில் கீழே நீர்பெருக்கு கரை புரண்டு ஓடுகிறது - என்னால் கரைகாணா வெள்ளத்தில் மிதக்கமுடியாது! என்னைக் கரையில் சேர்த்து விடுங்கள். எனக்குத் தங்க இடம் கொடுங்கள் ! பாபுயி , நீ எங்கே -! காகங்கள் இரத்தம் உறிஞ்சுபவையாக ஆகிவிட்டன . இனி இரத்தமில்லை என நெஞ்சில் , அந்தக் கருத்த கும்மிருட்டில் என் கொலைகாரக் காவிய நதி சிவந்து விட்டது - பாபுயி , நீ எங்கே ? மனமே , நீ எங்கே ? நான் எலும்புக்கூடாகி விட்டேன்!)
நந்தலால் போஸின் அர்ஜுனன் -ஆகா படுத்திருக்கும் நிலையில் அர்ஜுனன் , மிகவும் அனாயசமாக இழுக்கப்பட்ட கோடுகள் , பெரிய முகம் , விசாலமான மார்பு , தொடை உருண்டையாக முழங்காலில் வந்து இறங்கியிருக்கிறது . உடல் பாரம் ஒருமுழங்கையின் மேல் விழ , அந்தக் கையின் தசை நார்கள் நிலத்தாமரையின் இதழ்கள் போல் , இன்னொரு கை அடைக்கலம்போல - எதிர்ப்பது போல் - உடம்பின் தசை நரம்புகளிலெல்லாம் திகைப்பின் சாயல் தன் முன்பாதங்களுக்கிடையே முகத்தைப் புதைத்திருக்கும் சிங்கமொன்று ஏதோ சலசலப்பொலி கேட்டுத் திடுக்கிடுவது போல , முதுகு ஓர் அடைக்கலம்போல -அரச மரத்தின் அடிமரம் போல . (எனக்குக் கிடைத்துவிட்டது - இயற்கையுணர்வுகளோடு நளின உணர்வுகளின் கலவை - எனக்குக்கிடைத்துவிட்டது ! நான் சித்திரம் வரையப் போகிறேன் - அது கடல்போல் கரடு முரடாயிருக்கும் , அசையும் பொருளும் அசையாப் பொருளும் நிறைந்த உலகம் போல் அழகாயிருக்கும் , காவியம் போல் மகத்தானதாக இருக்கும். இசைக்கவிதைபோல்சோகமாயிருக்கும் -நான் ஓவியம் தீட்டப்போகிறேன்) பாபுயி, நான் அர்ஜுனன் ...!
இந்தச் சபதம் செய்ததும் பிநய் கண்களைத் திறந்து பார்த்து விட்டு மறுபடி மூடிக்கொண்டான். அந்த ஒரு கணத்துக்குள் அவன் பார்வையில் பட்டவை -சமையலறையின் இடுக்குகள் வழியே ஒளித்துளிகள் மின்மினிப்பூச்சிகள் போல் கொல்லையில் பறக்கின்றன ; இந்த அறையிலிருந்து வரும் வெளிச்சம் நனைந்த சேலைபோல் நிலைப்படியில் விழுந்து கிடக்கிறது ; அந்தப் பக்கத்து இரு அறைகளின் வெளிச்சம் பனிபோல் மங்கலாகத் தெரிகிறது - 'எனக்குக் கிடைத்து விட்டது , நான் ஓவியம் தீட்டப் போகிறேன் - இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு அவன் கண்களைத் திறந்து கொண்டான் , இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே அவன் கண்களை மூடிக்கொண்டான் - அப்போது நள்ளிரவின் ஆழத்திலிருந்து இன்னொரு மயானத்தின் அழுகை வெகுதொலைவிலிருந்து கேட்கும் ஓநாயின் ஊளையொலிபோல் ஒலிப்பதை உணர்ந்தான் , விளக்கின் தெளிவற்ற வெளிச்சத்தில் உடைந்த கோடுகளாய்த் தெரிகிறது முகம் ; விளக்கின் வெளிறிய ஒளியில் அழுத்தமான நிறங்களும் மங்கிக் காண்கின்றன . நனைந்தசேலை போன்ற ஒளி, மின்மினி போன்ற ஒளி , கொடி போன்ற உடலின் கோட்டுருவம் , திடீரென்று தோன்றித் திடீரென்றுகாணாமற்போன இளமை , வேலியின் மேல் சாளரத்தின் நிழல் , சுவரில் சாளரத்தின் நடுவில் இளமையின் கோபப் பார்வை முதுகைத் திருப்பிக் கொண்டிருக்கும் இளம்பெண்ணுக்கு முன்னால் தலைவலி மருந்து -- இவையெல்லாம் பிநய்யைச்சூழ்ந்து கொள்கின்றன . பிநய் பரிதாபமாகச் சொல்லப் பார்த்தான் . "நான் , பிரசன்ன நாராயண் பள்ளியின் டிராயிங் மாஸ்டர் --நான்ஓவியம் தீட்ட மாட்டேன் , மாட்டேன்!" |
"யாரு? பிநய் சித்தப்பாவா?"
"ஆமா "
"பேசாம படுத்துக்கிட்டிருக்கீங்களே?"
"பின்னே என்ன செய்யறது ... படிச்சு முடிச்சுட்டியா?"
"ஹும், படிக்கப் பிடிக்கலே -"" என்ன செய்யப் பிடிக்கும் ?" "பாட்டுப் பாட...."
"பாடு "
" ஊஹூம் , அம்மா திட்டுவா ...."
"திட்ட மாட்டா .... நான் சொல்றேன் ..."
"இன்னிக்கு நரேன் சித்தப்பா வீட்டுக்குப் போயிருந்தேன் . அவங்க வீட்டிலே கீழகுடியிருக்கறவங்க என்னைப் பாட்டுப்பாடக்கூட்டிக்கிட்டுப் போனாங்க."
"என்னென்ன பாட்டுப்பாடினே?"
"ரொம்பப் பிடிச்சிருந்தது ."
"ஏன்?"
பாபுயி பதில் சொல்லவில்லை.
கொல்லையில் , மடிச் சமையல் பகுதியின் வேலியிலிருந்த இடுக்குகள் வழியே வந்த வெளிச்சம் மின்மினிப் பூச்சிகளாகத்தெரிந்தது . அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் கொள்வதைத் தவிர்ப்பதற்காக அந்த வெளிச்சம் விழுந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அந்தச் சிக்கலான ஒளிச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் , இன்று முழுவதும் காற்று பங்குனி மாதக் காற்றுபோல் தாறுமாறாக வீசிக் கொண்டிருந்தது என்பதை பிநய் நினைவு கூர்ந்தான் - இதன்விளைவாக இயற்கையிலும் சரி , அவனுடைய உடம்பிலும் சரி ஒரு வெறுமையுணர்வு தோன்றியிருந்தது . வெளிச்சம் விழுந்திருக்கும் இடத்தையே பார்த்துக் கொண்டிருப்பதால் பாபுயி தனக்கு நிச்சயம் ஏற்படவிருந்த வீழ்ச்சியிலிருந்து தப்பியிருக்கலாம் ,அவள் முகத்தில், கண்களில் சோகத்தின் சாயை - அது தன்னைத் தொலைவில் இழந்துவிட விரும்புகிறது , இருவருக்குமிடையே அந்தக் கொல்லையை மையமாகக்கொண்டு ஒரு மௌனம் நிலவத் தொடங்கியது - எந்த நிமிடமும் ஒலி ஒரு பெருமூச்சுடன் கருச்சிதைவை விளைவிக்கலாம் . அந்தப் பேரழிவைத் தடுப்பதற்காகவே அவர்களிருவரும் தங்கள் முகபாவனையை இயற்கையாக வைத்துக்கொண்டு தாங்கள் எதிலோ கவனமாயிருப்பது போல் காட்டிக் கொண்டார்கள் அப்போது அவர்களிருவரின் கண் முன்னால் ஏதோ ஒரு வகை ஏக்கம் பல உருவங்களெடுத்துச் சுக்குநூறாக உடைந்தது . பிறகு வேறு உருவங்களாகமாரி , மறுபடி உடைந்து , புதிய புதிய உருவங்கள் சமைக்கத் தொடங்கியது .
ஹீஸ்டீரியா நோய்க்காளான நோயாளி தெளிவும் திண்மையுமற்ற தோற்றங்களுடன் போராடிக் கொண்டு பருப்பொருள்களைப் பரிதாபமாகப் பார்ப்பது போல் அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மார்பில் பால்வற்றிவிட்ட தாய் போலச் சிரித்தான் பிநய் - தாய்க்குப் பால் வற்றிவிட்டது - ஆனால் குழந்தைகளுக்குப் பால் தேவை . ஒருபிள்ளை ஆரோக்கியமான , பால் சுரக்கும் தாயைக் கண்டுபிடித்து அவளிடம் போய்விட்டான்
பிநய் சட்டென்று பாபுயியின் பக்கம் திரும்பிக் கேட்டான் "நரேன் பாபு வீட்டிலே என்ன நடந்ததுன்னு நீ சொல்லலியே!"
பாபுயி இவ்வளவு நேரம் முழங்கால்களுக்கிடையே முகத்தை மறைத்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் . இப்போது அவள்சப்பணங் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள் - தலையைக் குலுக்கி முடியை ஒரு தடவை சரிசெய்து கொண்டாள் . அவள் கதையைக் கேட்பதற்காக பிநய்யும் தன்னைத் தயார் செய்து கொண்டான் .... அவன் கண்ணுக்கு பாபுயி ஒரு புறாவைப் போலத் தோன்றினாள்.
பிறகு திடீரென்று ஒரு சோகம் ஒலியாக உருப்பெற்று பாபுயியின் தொண்டையிலிருந்து வெளிப்பட்டது - அவள் மேல்ஸ்தாயியில் பாடத் தொடங்கினாள் --இரவில் என் மனத்துக்கு என்ன சொல்லிச் சென்றாய் நீ
இந்தச் சில வார்த்தைகளுக்குள் தாளச் சந்தம் குதித்து வந்தது . முதலில் 'கீ ஜானி ' (எனக்கென்ன தெரியும் ?) என்ற சொற்கள் கீழ் ஸ்தாயியில் நிதானமாக ஒலித்தன. பிறகு அதே இரண்டு சொற்கள் மேல் ஸ்தாயியில் இன்னும் இதமாக ஒலித்தன.ஒலிகளின் மோதலில் சோகத்தின் சாயை .
"ஷே கீ ஜாகரணே ' (ஒவ்வொரு சொல்லுக்கும் பிறகு ஒரு சிறு அலை , மகிழ்ச்சி, தயக்கம் , ஐயம், ஆர்வம்). மறுபடியும் கீழ்ஸ்தாயியில் 'கீ ஜானி , (மூடிய கண்கள் ), இந்தக் கொல்லையில் மாமரமிருப்பதால் நிலவு தரையிறங்கவில்லை ; அங்கு வெளிச்சம்மங்கலாக , இருள் போலவே இருக்கிறது .
பாட்டு தொடர்கிறது -'நானா காஜே நானா மதே ஃபிரி கரே ஃபிரி பதே' (பல அலுவலாக , பல எண்ணங்களுடன்வீட்டில் சுற்றுகிறேன் , வீதியில் அலைகிறேன்). இந்த அறையிலிருந்து அந்த அறை , அந்த அறையிலிருந்து இன்னோர் அறை ... தெருவில் தனியாக ... எப்போதும் இரவும் பகலும் காதில் ஏதோ சொல்லி விட்டுப் போகிறான் .... மாலை நேரம் மினுவை அழைக்கிறது - என் பொரிக் கிண்ணத்தில் தேங்காயெண்ணெய் மணம் - அம்மாவை இரவில் - அம்மா , உனக்குத் தூக்கம் வருகிறதா?
"ஷே கதா கீ அகோசரே பாஜே க்ஷணே க்ஷணே ' (அந்த வார்த்தை எனக்குத் தெரியாமல் எதிரொலிக்கிறது ஒவ்வொருகணமும் ). எனக்குத் தெரியவில்லை , புரியவில்லை . என் கண்ணுக்குத் தெரியும் என் உடலுக்குப் பின் எங்கேயோ , அல்லது இந்தஉடலுக்கு வெளியே எங்கோ இதயம் என்ற பொருள் இருக்கிறது - அது எனக்குத் தெரிந்துவிட்டால் ! எனக்குத் தெரியவில்லை புரியவில்லை . ஐயோ , ஐயோ ! |
"ஷே கதா கீ அகாரணே ப்யத்திச்சே ஹ்ருதய் ' (அந்தப் பேச்சு காரணமின்றி என் இதயத்தை வருத்துகிறது ), மாதாகோவிலின் பிரார்த்தனைப் பாடல்போல் ஒரே சமயத்தில் நான்கு ஒலிகள் , கடைசி ஒலி இழுத்து ஒலிக்கப்படுககிறது . 'ஏகீ பய் ' (இது என்ன பயம் ) என்ற சொற்கள் ஒலிகளையெழுப்ப , கூடவே இன்னொரு அலை 'ஏ கீ ஜய்' (இது என்ன வெற்றி ....) அலைக்குப் பின் அலை , அலைக்கு மேல் அலை , கரை நிலை குலைகிறது . ஒரு பெரும் பிரார்த்தனை கடலலை போல் எழுந்து மோதி உடைத்துத் தூளாக்கி அழிக்கிறது , அடித்துக்கொண்டு போகிறது , மூழ்கடிக்கிறது . அற்பமான தசையைக் கரைத்து எலும்பின் ஊனை வெளிப்படுத்தி , இரத்தக் குழாய்களின் இரத்தத்தை வெளியே பெருகச் செய்து , இரத்தச் சிவப்பானபவளத் தீவைச் சமைக்கிறது . ஆகா , படைக்கிறது ... இரத்தச் சிவப்பு ... படைப்பு ... படைப்பு . உலகம் முழுதும் காற்றின் அட்ட காசம் ... படைப்பு ..... எ -லி -மெ-ன் -ட் -ட -ல் , லி -ரி -க -ல் ... நான் ஓவியம் தீட்டுவேன் , பாட்டுப் பாடுவேன், சமுத்திரம் பார்ப்பேன் , ஏபெண்ணே ! கழுத்தை உயர்த்திக் கொண்டு , வறண்ட உதட்டோடு , என்ன ஆர்வத்தில் , என்ன வேதனையில் சிலுவையிலறையப்பட்டகிருஸ்துவின் காலடியில் ஒரு பக்தைபோல் உட்கார்ந்திருக்கிறாய்?
ஐயோ , இந்த இருபத்தாறு வயதிலேயே அகாலத்தில் மூப்படைந்து விட்ட நான் முகத்தை முழங்கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு , அட்லஸ் தேவதைபோல் முதுகை அகலமாக விரித்துக் கொண்டு என்ன சோகத்தில், எந்த வேதனையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ? ஆழ்ந்த இரவில் , இந்த நள்ளிரவில் என்ன சொல்லிவிட்டுப் போகிறான் என் மனதில் ? பொறுக்க முடியவில்லை , பொறுக்க முடியவில்லை .... அந்த வார்த்தையை அவன் மீண்டும் மீண்டும் காதில் சொல்கிறானா ? "ஆர் நோய் , ஆர் நோய் ' (இனி வேண்டாம் , இனி வேண்டாம் ) அமைதியான பார்வை , தியானப் பார்வை , பாதி மூடிய கண்கள் -
சிவனின் தவம்போல் - இரண்டு புருவங்களுக்கருகில் இரண்டு நீளமுடிகள்.... புல்லாங்குழல் ஒலிப்பது மனத்திலா அல்லது வனத்திலா ? புல்லாங்குழலிசைத்து அழைப்பது யார், என்ன சொல்லி அழைக்கிறார் , தெரியவில்லை , தெரியவில்லை .... 'ஷே கதா கீ நானா சுரே போலே மோரே சலோ தூரே - (அந்தச் சொல்லைப் பல சுரங்களில் எனக்குச் சொல்லிவிட்டுப் போகிறாய் தொலைவில் ) ஒவ்வொரு நான்கு சொற்களிலும் சிறிய அலை , தியானத்தின் , உள்ளத்தின் குரல் ... காதுகளை உயரத் தூக்கிக்கொண்டு கஸ்தூரி மான், பிரார்த்தனைகளால் சின்னாபின்னமான கரையின் லயிப்பு ... தொலைவுக்கு , தொலைவுக்கு - தொலைவில் ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்துக்கு , தொலைவில் நடுக் கடலுக்கு , தொலைவில் கடல் மண்ணுக்கு , நீலக்கடலின் கொந்தளிக்கும் ஆழத்தில் , தொலைவில் கடலின் அடித்தளத்தின் ஆகாயத்தில் ! என் நாளங்களிலிருந்து இரத்தத்தை , எலும்பிலிருந்து ஊனை வெளியே எடுத்துக் கொள் .... ஒரு பார்வையின் தீவு , பவளத் தீவு . இரத்த நிற உணர்ச்சிப் பெருக்கின் தீவை உண்டாக்கு - சிறு பெண் பாபுயி , நான் என் கைகளைக் குவித்துக்கொண்டு என் பாவங்களனைத்தையும் உன் காலடியில் கொட்டுகிறேன்.
ஆறு மலையிலிருந்து கடலுக்குப் போகிறது . கங்கையும் பிரும்மபுத்ராவும் கொண்டு வந்து சேர்த்துள்ள வண்டல் மண்ணில் ஒரு நாடு - புவியியலில் ஒரு பெயர் - உலகத்தில் சில மனிதர்கள் .... இயற்கையின் சில அழகுகளை உண்டாக்கு. ஆறு கடலுக்குப் போகிறது --'போ தொலைவுக்கு !' - முகத்துவாரம் , கங்கையின் முகத்துவாரம் , கல்கத்தா ஒரு துறைமுகம் , கல்கத்தா ஒரு பெயர் , கடற்கரையில் - அதற்குப்பிறகு கடல் - பாகீரதி நதிக்கரையிலுள்ள ஒரு துறைமுகம் கல்கத்தா - அஸ்ஸாம், வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா , உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம் இவையெல்லாம் கல்கத்தாவின் பின்புலம் . அதற்குப்பின் நடுக்கடல்.
இந்த இருட்டில் அவர்களிருவரும் ரவீந்திரரின் ஒரு பாடலின் கையெழுத்துப் பிரதியாக ஆகிவிடுகிறார்கள் , அடிக்கப்பட்ட சொற்கள் , உடைந்த பாடல் வரிகள் , இங்குமங்கும் சிதறிய கையெழுத்துக்கள் ..... இடைவெளிகளில் நிரம்புகிறது இசை...
(ஏப்ரல், 1960)