Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

13. மோகநாயகியின் மாளிகை

வீரத்தில் சிறந்து விளங்கிய மன்னன் வீரவர்மன் ரங்கபுரம் என்ற நாட்டை ஆண்டு வரலானான். அவனுக்கு மோக நாயகி என்ற மகள் இருந்தாள். அவள் கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினாள்.

அம்மன்னனது அவையில் சமரன் என்னும் அமைச்சர் இருந்தார். அந்த அமைச்சருக்கு மதிவல்லபன் என்ற மகன் இருந்தான்.

மதிவல்லபனும், மோக நாயகியும் ஒன்றாகக் கூடி வளர்ந்து வந்ததால் அவர்களுக்குள் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவில்லாத அன்பு கொண்டிருந்தனர்.

மோக நாயகி பருவ வயதை அடைந்ததும் அரசகுல மரபுப்படி அவளை தோழிமாருடன் சேர்த்து அரண்மனைக்குள் இருந்த மாளிகையில் இருக்குமாறு அமர்த்தப்பட்டாள்.

அவள் இருந்த மாளிகையைச் சுற்றிலும் கடுங்காவல் போடப்பட்டிருந்தது. இவ்வாறே மோக நாயகியும், மதிவல்லபனும் பிரிந்து இருந்த போதிலும் உள்ளத்தால் ஒன்றியிருந்தனர். அதன் காரணமாக எவரும் அறியாதபடி இரகசியமாக சந்தித்துக் கூடி மகிழ்ந்து வாழ்ந்து வரலாயினர்.

ஒவ்வொரு இரவும் மதிவல்லபன் எவரும் அறியாதபடி மோகநாயகியின் இருப்பிடம் சென்று விடுவான். இரவு முழுவதும் அவர்கள் இருவரும் கூடியிருந்து உல்லாசமாகப் பொழுதைக் கழித்து வரலாயினர். பொழுது விடியும் முன்பாக மதிவல்லபன் மாளிகையை விட்டு வெளியேறி விடுவதால் எவருக்குமே இவர்களின் தொடர்பு தெரியாமலிருந்தது.

பலநாட்களாக உல்லாசமாக இருந்ததின் விளைவால் மோக நாயகி கர்ப்பம் அடைந்தாள். இதனை அறிந்ததும் இருவருமே திடுக்கிட்டனர்.

மோக நாயகி மதிவல்லபனைப் பார்த்து, ''நாம் இருவருமே பழகியதின் விளைவாக நான் கர்ப்பவதியாகும் நிலை உண்டாகிவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது என்ன" என்று கவலையுடன் கேட்டாள்.

மோக நாயகியின் இக்கட்டான நிலையினை உணர்ந்த மதிவல்லபன் அவளுக்கு ஆறுதல் கூறியவனாய், "அன்பே! இந்தப் பிரச்சனையை நாம் நேர்மையான முறையில் தீர்த்துக் கொள்ள இயலாது, மேலும் இதனை உன் தந்தை அறிந்துவிட்டால் உறுதியாக அவர் மிகுந்த கோபமும் ஆத்திரமும் அடைவார். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாலும் மனம் ஒத்துக் கொள்ளமாட்டார்.

கேவலம் மந்திரி ஒருவனின் மகனா நம் மகளுக்கு மணவாளனாக அமைவது என எண்ணி கோபம் கொள்வார். எனவே நாம் வேண்டிய அளவு பொருளைச் சேர்த்துக் கொண்டு இந்நாட்டைவிட்டு வெகு தொலைவுக்குச் சென்றுவிடலாம். அங்கு நான் நல்லதொரு வேலையைத் தேடிக் கொண்டால் நமது வாழ்க்கை இன்பமாக அமையும்" என்று கூறினான்.

மதிவல்லபனின் இந்த யோசனையும் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இருந்தமையால் மோக நாயகியும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

ஒருநாள் இரவு நேரத்தில் யாருமே அறியாவண்ணம் மோக நாயகியை அழைத்துக் கொண்டு மதிவல்லபன் நாட்டைவிட்டு வெளியேறினான். வெகு தொலைவுப் பயணம் செய்து கோதாவரிப் பட்டணம் என்னும் நகரினை அடைந்தனர். அந்நகரில் தாங்கள் வசித்திட ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினர்.

சிலநாட்கள் கழிந்தது. ஒருநாள் மோகநாயகியை பார்த்த மதிவல்லபன், "அன்பே! வீட்டினுள் பத்திரமாக இரு. நான் வெளியே சென்று வேலை ஏதாவது தேடிக்கொண்டு வருகிறேன், நல்ல ஊதியத்துடன் வேலை எனக்குக் கிடைத்துவிட்டால் நாம் எவ்வித கவலையும் கொள்ளாமல் நமது வாழ்க்கையை இன்பமாகக் கழிக்கலாம்" என்று கூறினான்.

"நீங்கள் அதிகநேரம் காலதாமதம் செய்யாமல் விரைவாக வந்துவிடுங்கள். நான் தனிமையில் இருப்பது எனக்குப் பெரும் கவலையினை ஏற்படுத்தும்'' என்று விடைகொடுத்து அனுப்பினாள்.

வெளியே சென்ற மதிவல்லபனோ பல இடங்களிலும் அலைந்து நது வேலை தேடலானான். ஓர் இடத்தில் வேலை கிடைத்தும் பாதுமான வருமானம் இல்லாமல் இருந்ததுடன் அவனது நதஸதுக்கும் அது குறைவாக இருந்தது. எப்படியாவது நல்லதொரு வேலையைத் தேடிய பின்னர் வீடு திரும்பலாம் என்ற மனஉறுதியுடன் பல இடங்களிலும் அலைந்து திரிந்தான்.

நீண்ட பயணத்தினால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எதிரே தென்பட்ட மாளிகையின் முன்பாக இருந்த திண்ணையில் படுத்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.

மதிவல்லபன் படுத்து தூங்கிய மாளிகையில் சுந்தரி என்னும் பேரழகு கொண்ட தாசி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவளுக்குத் தான் செய்து வருகின்ற தாசித்தொழில் வெறுப்பைக் கொடுத்தது. நல்ல குணமிக்க ஆடவனை மணந்து அவனுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆவல் அவள் மனதில் இருந்தது.

வீட்டினுள் இருந்த சுந்தரி எதேச்சையாக வெளியே வந்தாள். தன்வீட்டுத் திண்ணையில் யாரோ ஒரு அறிமுகம் இல்லாத ஆடவன் படுத்துறங்குகிறானே என்று எண்ணியவளாய் அவனருகே சென்றாள்.

இளவரசனைப் போன்ற கம்பீரமானத் தோற்றத்துடன் இருந்த மதிவல்லபன் மீது சுந்தரிக்கு அவளை அறியாமலேயே பிரியம் ஏற்பட்டது. அவன் களைப்பு மிகுதியாலேயே உறங்குகிறான் என்பதை உணர்ந்த சுந்தரி அவனைத் தட்டி எழுப்பி தன் மாளிகையினுள் அழைத்துச் சென்றாள். பின்னர் அவன் பசியாற அறுசுவை உணவையும் அளித்தாள்.

சுந்தரி தனக்கு அளித்த உணவை உண்டதால் மதிவல்லபனின் களைப்பும், சோர்வும் நீங்கியது. புது உற்சாகம் குடி கொண்டது. சுந்தரிக்கு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டான், மீண்டும் வேலை தேடியபடி புறப்பட ஆயத்தமானான்.

சுந்தரியோ அவனது இரு கரங்களையும் பற்றியபடி அவனருகில் அமர்ந்தாள்.

''அன்பானவரே! நீங்கள் யார் எவர் என நான் அறிந்திடாத போதிலும் தங்களை மணந்து குடும்பம் நடத்த விரும்புகிறேன். என்னிடம் தேவைக்கு அதிகமாக பெரும் செல்வம் உள்ளது. எனவே என்னைத் தாங்கள் மணந்து என்னுடன் குடும்பம் நடத்துவதில் தடை ஏதும் இருக்காது என்று நம்புகிறேன். அதனால் என்னைத் தங்களின் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று வேண்டினாள்.

சுந்தரியின் பேச்சைக் கேட்ட மதிவல்லபன் மனம் வருந்தினான். - பெண்ணே ! உன்னிடம் இருக்கும் அழகுக்கும், பெரும் செல்வத்திற்கும் உன்னை மனைவியாக அடையப் பாக்கியம் செய்து இருக்கவேண்டும். ஆனால் நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். என் மனைவி என் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். அதனால் உன்னுடைய தீர்மானத்திற்கு என்னால் உடன்பட இயலாத நிலையில் உள்ளேன். அதனால் மனம் வருந்துகிறேன்" எனக் கூறினான்.

மதிவல்லபன் ஏற்கனவே மணமானவன் எனத் தெரிந்த பின்னரும் சுந்தரி அவனை பலமுறை வற்புறுத்தியும் அவளது எண்ணத்தினை அவன் ஏற்க மறுத்தான்.

அவனுக்கு மாய மந்திர தந்திரங்களில் ஓரளவுக்கு பயிற்சி இருந்தமையால் மதிவல்லபனை தந்திரமாக மயக்கி தன்னுடனேயே இருக்குமாறு வைத்துக் கொண்டாள்.

சுந்தரியின் மாய வலையில் சிக்குண்ட மதிவல்லபன் தனது கடந்தகால வாழ்க்கையையும் தனக்காக தன் மனைவி மோக நாயகி காத்துக் கொண்டிருப்பாள் என்பதையும் மறந்தவனாய் அவளுடனேயே தங்கிவிட்டான்.

மதிவல்லபனின் வருகையை எதிர் நோக்கிக் காத்திருந்த மோகநாயகி வெகுநாட்களாக அவன் திரும்பி வராததைக் கண்டு குழப்பமும், கவலையும் அடைந்தாள். எப்படியும் மதிவல்லபன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை மோகநாயகிக்கு இருந்த போதிலும் அவன் திரும்பி வராததால் அச்சமும், கவலையும் அடைந்தாள்.

ஒரு வாரம் சென்றபின்னர் மதிவல்லபன் என்ன ஆனான் என்பதே அவளுக்குப் புரியாமல் ஆனது.

ஒருவேளை அவன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. தன் கையிலிருந்த பொருளைக் கொண்டு ஒருவாறாக காலத்தை கழிக்கத் தொடங்கினாள்.

மோக நாயகிக்கு பிரசவ நேரம் நெருங்கியது. பிரசவ வலியினால் துடித்தாள், அவள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லாம் ஓடிவந்து உதவி செய்ய அவள் அழகான ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.

குழந்தைப் பிறந்து சிறிது காலத்திலேயே அவளுக்கு வாழ்க்கை வெறுப்படைந்து விட்டது.

தனது கணவன் என்ன ஆனார்? கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தன்னால் எவ்வாறு வாழமுடியும் எனத் தவியாய் தவித்தாள்.

அக்கம் பக்கத்தினர் எல்லாம் யோசனை செய்யவே தனது கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு அந்நாட்டு மன்னனிடம் சென்று தனது நிலையினை விளக்கி எவ்வகையிலாவது காணாமல்போன தன் கணவனை கண்டுபிடித்துத் தடுமாறு முறையிட்டாள்.

அவளுடைய நிலையினைக் கண்டு மனம் இரங்கிய மன்னனும் தனது அமைச்சரை அழைத்து மோக நாயகியின் கணவனான மதிவல்லபனை விரைவில் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு ஆணையிட்டான்.

மன்னனின் ஆணையைக்கேட்டவுடன் அமைச்சனும் தன் காவலர்களை அழைத்து மதிவல்லபன் பற்றிய விபரங்களை கூறி நாட்டின் நாலாப்புறமும் சென்று தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு உத்தரவிட்டான்.

எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்ட போதிலும் காவலர்களால் மதிவல்லபனைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. மதிவல்லபன் அந்நாட்டிலேயே இருந்த சுந்தரியின் மாளிகையுள் அவள் மீது கொண்ட மயக்கம் காரணமாக அடைபட்டுக் கிடந்தமையால் அவனைப் பற்றிய எந்த விபரமும் காவலர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

சில நாட்கள் கடந்தன. மீண்டும் மோகநாயகி மன்னனிடம் சென்று தன் கணவனைப் பற்றி விசாரிக்க அவன் தனது அமைச்சனை அழைத்து விசாரிக்க, அமைச்சன் தான் காவலர்களை நாலா திசைகளிலும் அனுப்பி அவனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு உத்தரவிட்டேன் என்றும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை ' என்றும் கூறினான்.

அதனைக் கேட்டதும் மோகநாயகி துக்கமடைந்தாள். "மன்னா! என் பொருட்டு! தாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் பலவற்றிற்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். எவரையும் குறை கூறிப் பயன் இல்லை . இது என தலைவிதி. இதை நான்தான் அனுபவித்தாகவேண்டும். தாங்கள் எனக்கு ஓர் உதவியை மட்டும் தயவு செய்து செய்திட வேண்டும். தீக்குழி ஒன்றினை தயார் செய்ய கட்டளையிடுங்கள். நானும் என் குழந்தையும் அந்தத் தீயில் குதித்து எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். கணவரைப் பிரிந்து அநாதைகளாக நாங்கள் வாழ்வதைக் காட்டிலும் இவ்வுலகில் இல்லாமலேயே போவது மேலாகும்" என்று கூறினாள்.

மோக நாயகிக்கு மன்னன் பல வகையிலும் சமாதானம் கூறியும் அவள் ஏற்காததால், வேறுவழியின்றி தீக்குழி தயார் செய்ய உத்தரவிட்டான் மன்னன்.

ஆதரவற்றவாறு கணவனைப் பிரிந்த ஒரு பெண் தன் சொந்த வாழ்க்கையில் உண்டான துயரம் காரணமாக தீக்குழிக்குப் போவதை சுற்றிலுமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டு மக்கள் அனைவரும் அங்கு பெருங் கூட்டமாக கூடியிருந்தனர்.

இச்செய்தியை சுந்தரியும் அறிந்தாள். மதிவல்லபனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு தீக்குழி இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தாள்.

தீக்குழி தயாரானது. மோக நாயகி தன் குழந்தையை மார்போடு அணைத்தவாறு தீக்குழியை வலம் வந்து முடித்ததும், சட்டென்று தாமதிக்காமல் தீக்குழிக்குள் குழந்தையுடன் பாய்ந்தாள்.

மோக நாயகி தீக்குழிக்குள் பாய்ந்ததைக் கண்ட மதிவல்லபன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்

மெல்ல மெல்ல அவனுள் இருந்த மயக்கநிலை அகன்று கடந்த காலத்திய நினைவுகள்  வரலாயின.

முற்றிலுமாகத் தன்னை உணர்ந்ததும் மதிவல்லபன் “ஐயோ! என் அருமை மனைவியும், குழந்தையும் தீக்குழியினுள் பாய்ந்து விட்டனரே!" என்று பதறியவன் வேகமாக ஓடிச் சென்று அவனும் சட்டென தீக்குழியுள் பாய்ந்து தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டான்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரி, தீக்குழியுள் பாய்ந்தவளே மதிவல்லபனின் மனைவி என்பதை அறிந்தாள். அவளைத் தொடர்ந்து அவள் கணவனும் தீயில் பாய்ந்ததும் 'இம்மாபெரும் மோசமானச் செயல் தன்னால்தானே நடந்தது. ஒரு குடும்பமே என்னால் தீக்குளித்து அழிந்து போனகே! இனிமேல் நான் உயிருடன் இருக்கமாட்டேன்" என்று கருதியவளாம் அவளும் தீயில் குதித்தாள்.

அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களை எல்லாம் கண்ட அமைச்சனோ மிகவும் மனவேதனைப் பட்டான். இந்த ஊரிலேயே மோகநாயகியின் கனவன் இருந்தும் நம்மால் அவனைக் கண்டுபிடிக்க முடிய வில்லையே! அவர்கள் தீயில் பாய்ந்து இறந்தபாவம் தன்னையே சாரும்,' என்று எண்ணினான்.

தாமதிக்காது தீயினுள் பாய்ந்து தானும் உயிர்விட்டான்.

இதனைக் கண்டு மன்னன் அதிர்ச்சியடைந்தான். 'இந்த நாட்டில் வசித்த ஒரு அபலையின் துயரத்தைப் போக்க முடியாத நானெல்லாம் ஒரு மன்னனா?' என மனம் வருந்தியபடியே தானும் அந்த தீக்குழிக்குள் பாய்ந்து உயிரைவிட்டான்.''

இரவிக்கைக்குள் ஊடுறுவிய வேதாளம் இக்கதையைக் கூறிமுடித்ததும். விக்கிரமாதித்தனை நோக்கி, “மன்னவா! தீக்குழியில் பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தவர்களுள் யாருடைய தியாகம் உண்மையிலேயே சிறந்தது'' என்று கேட்டது.

பேசா மடந்தையை மறுபடியும் பேசவைத்திடவேண்டும் என்று முடிவு செய்த விக்கிரமாதித்தன், "தீக்குழிக்குள் பாய்ந்து உயிர் நீத்தவர்களுள் தாசித் தொழில் செய்து வந்த சுந்தரியின் தியாகமே சிறந்தது" என்றான்.

விக்கிரமாதித்தனின் தவறான பதிலைக் கேட்டதும் பேசாமடந்தை உணர்ச்சி வசப்பட்டாள்.

“நீர் கூறுவது எந்த வகையில் நியாயம்? தனக்கு இன்பம் தந்தை ஆசைநாயகன் உயிர் நீத்தானே என்று நினைத்தே அவள் உயிர் துறந்தாள். இவ்வுலகில் வாழ எந்த வழியும் இல்லை என்று கருதியே மோகநாயகி தன் குழந்தையுடன் தன்னை தீக்கிரை யாக்கினாள். தனது கடமையில் இருந்து தவறிய காரணத்திற்காக சுந்தரி உயிர்விட்டாள். ஆனால் எந்த ஒரு பழிபாவத்திற்கும் ஆளாகாமல் தவறுகள் எதுவும் செய்யாமல் இருந்த மன்னனின் உயிர்த் தியாகமே சிறந்தது'' என்று எடுத்துரைத்தாள்.

பேசாமடந்தையின் நியாயமான பதிலைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் பெரும் மகிழ்ச்சியடைந்தான். “பேசா மடந்தையே! நீ இரண்டாவது முறையாக உன்னை அறியாமலேயே பேசியது என்னுடைய மற்றொரு வெற்றியே!" என்றான்.

பேசா மடந்தையோ தன் நாக்கை கடித்தவளாய் இனிமேல் எக்காரணம் கொண்டும் பேசப் போவதில்லை என முடிவெடுத்தாள்.

நெடு நேரம் வரையிலும் அமைதியோடு இருந்த விக்கிரமாதித்தன் இனிமேலும் பேசா மடந்தையை எப்படி பேச வைப்பது என்று யோசிக்கலானான்.

உடனே வேதாளத்தை ரகசியமாக அழைத்தான். பேசா மடந்தையின் மேலாடைக்குள் சென்று விடுமாறு கட்டளை யிட்டான். வேதாளமும் உடனே பேசாமடந்தையின் மேலாடைக்குள் ஊடுருவிச் சென்றது.

உடனே விக்கிரமாதித்தன் பேசாமடந்தையின் பேரழகு மேனியே நான் பார்த்திட முடியாதபடி மறைத்துக் கொண்டிருக்கும் பேசாமடந்தையின், மேலாடையே! உன் எஜமானி பேசாமடந்தை வாய்திறவாது இருப்பதால் இந்த இரவில் மீதிப் பொழுதை கழிப்பது எவ்வாறு எனப் புரியவில்லை . தயவு செய்து நீயாவது கதை ஒன்றினை கூறிடு" என்றான்.

உடனே மேலாடை, "வேந்தே! என்னையும் மதித்து நான் கதை கூறவேண்டும் என்ற உமது கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன். இதோ நான் இருப்பது சற்று சங்கடமான நிலைதான். என்னுடைய எஜமானி தன் உடம்பு முழுவதும் வெகு இறுக்கமாக என்னைச் சுற்றிக் கொண்டிருப்பதால் என்னால் வாய்த் திறந்து பேசுவதற்கு வெகு கஷ்டமாக உள்ளது. எனவே நீர் வேண்டுவது போல் என்னால் எவ்வாறு கதை கூற இயலும்" என்று கேட்டது.

தனது மேலாடையும் வாய்திறந்து பேசுவதைக் கண்டதும் பேசாமடந்தைக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

உடனே அவள் தனது மேலாடையைக் களைந்து விக்கிர மாதித்தனின் முன்பாக வீசியெறிந்துவிட்டு ஒரு துண்டுத் துணியை மட்டும் மார்பு மீது போர்த்தியவளாய், தர்மச் சங்கடமான சூழ்நிலையோடு அமர்ந்திருந்தாள்.

அதனைக் கண்ட விக்கிரமாதித்தனோ உற்சாகமடைந்தான். சிரித்தபடியே அவன் மேலாடையைப் பார்த்து, ''பேசா மடந்தையின் மேலாடையே உனது எஜமானியம்மாவின் மேனியழகினை நான் கண்டு களித்திடுமாறு செய்த உனக்கு மிகவும் நன்றி. இப்போது நீ விடுதலைப் பெற்றுவிட்டதால் கதையைத் தாராளமாக கூறிடலாம்" என்றான்.

மேலாடையும் கதையை கூறத் தொடங்கியது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.