Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

16. விசித்திர அழுகுரல்

உஜ்ஜியினி நகரில் பத்திரசேனன் என்னும் பெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒருமகன் இருந்தான். அவன் பெயர் புரந்தன்.

புரந்தன் கல்வி கற்பதில் அக்கறைக் காட்டாமல் தீயோர்களிடம் நெருக்கமான நட்பினைக் கொண்டிருந்தான். தந்தையின் செல்வம் பெரும் பங்கையும் தீய வழியில் செலவு செய்து கொண்டிருந்தான்.

இதனைக் கண்டு பத்திரசேனன் மிகவும் கவலையடைந்தான். தன் மகனை வீட்டை விட்டு வெளியே துரத்தி அடித்தான்.

வீட்டை விட்டு வெளியே வந்த புரந்தனின் கையில் பணம் எதுவுமில்லை. அதனால் அவன் நண்பர்கள் எல்லோரும் அவனை விட்டு விலகிச் சென்றார்கள்.

இதனால் மிகவும் மனம் நொந்த புரந்தன் உஜ்ஜியினியை விட்டு வெளியேறி தேசாந்திரமாக பல ஊர்களுக்கும் செல்லத் தொடங்கினான்.

ஒரு நாள் அவன் இமயமலைச் சாரலில் உள்ள மந்தாரகேசம் என்னும் நகரை வந்தடைந்தான்.

பகல் பொழுது முழுவதுமாக பல இடங்களிலும் அலைந்து திரிந்த புரந்தன் இரவில் தான் படுத்துறங்க வேண்டி ஓர் இடத்தைத் தேடினான்.

ஊருக்கு வெளியே உள்ள மூங்கில் புதருக்குள் பெரியப் பாறை ஒன்றிருந்தது. அந்தப் பாறையேதான் படுத்துறங்க தகுதியான இடம் என எண்ணிய புரந்தன் அங்கு சென்று படுத்து உறங்கலானான்.

நடு இரவு நேரத்தில் ஏதோ இரு பெண்களின் கூக்குரல் திடீரெனக் கேட்டது. அதனைக் கேட்ட புரந்தன் திடுக்கிட்டு விழித்து எழுந்தான். மூங்கில் புதருக்கு அருகாமையிலேயே, "ஐயோ என்னை யாராவது வந்து காப்பாற்றுங்களேன். இந்த ராட்சசன் என்னைக் கொன்று விடுவானே!" என்று ஒரு பெண் பரிதாபமாகக் குரல் கொடுத்து அழுவது தெளிவாகக் கேட்டது.

புரந்தன் அழுகுரல் கேட்ட இடத்தை நோக்கிச் சென்று சுற்றி சுற்றிப் பார்த்தான். அங்கு ஆள் யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. மீண்டும் பாறையில் வந்து படுத்துறங்க முடிவு செய்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதேப் பெண்ணின் அழுகுரல் தெளிவாகக் கேட்டது. இதனால் புரந்தனின் தூக்கம் கலைந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்த பின்னர் புரந்தன்தான் கேட்ட பெண்ணின் சப்தத்தைப் பற்றி அந்த ஊர் மக்களிடம் விசாரித்தான்,

அவர்களோ அவனைப் பார்த்து, "ஐயா! ஒவ்வொரு நாளும் இதே மாதிரிதான் அலறல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு அழுது ஓலமிடுவது மட்டும் யார் என இதுவரை தெரியவில்லை " என்று கூறினர்.

அந்தப் பெண்ணைப் பற்றிய விளக்கத்தை யாரும் கூறாததால் புரந்தன் அந்த நகரைவிட்டு தன் சொந்த ஊரான உஜ்ஜியினி மாகாளிப் பட்டணத்தை அடைந்ததும் மன்னன் விக்கிர மாதித்தனைச் சென்று பார்த்து தான் கண்ட அதிசயத்தைக் கூறினான்.

அதனைக் கேட்டு விக்கிரமாதித்தனும் ஆச்சர்யமடைந்தான். "புரந்தா! நீ கூறும் இடம் எமது ஆளுகைக்கு உட்பட்ட நகரமாக இருந்திடுவதால் அவ்விடத்திலுள்ள குறைப் பாட்டைப் போக்குவது எனது கடமையே ஆகும்'' எனக்கூறி தான் வீற்றிருந்த சிம்மாசனத்திலிருந்து இருந்து இறங்கினான்.

பின்னர் வேதாளத்தை அழைத்து, “மந்தார தேசத்தில் அரூப நிலையில் அழுகுரல் மட்டும் கேட்கிறதாமே? அது என்ன அதிசயம்" எனக் கேட்டான்.

சற்று நேரம் யோசித்தபடி இருந்த வேதாளம், "வேந்தே அது ஓர் அசுரனின் மாயவேலை எனப்படுகிறது. அந்த அசுரன் செய்திடும் கொடுமையைத் தாங்களே நேரில் காண வேண்டுமெனில் உஜ்ஜியினி மாகாளியின் அருளைப் பெற்று அந்நகருக்குச் செல்லுங்கள்" என்று யோசனை கூறியது.

புரந்தனை அரண்மனையிலேயே இருக்கச் சொல்லிய விக்கிரமாதித்தன் நேராக மாகாளியம்மன் ஆலயத்தை நோக்கிச் சென்று அம்மனைப் பணிந்து வணங்கினான்.

அம்மனும் அவன் முன் தோன்றி, "விக்கிரமாதித்தா நீ கேட்பது என்ன?" என்று கேட்டாள்.

“தாயே! மந்தார தேசத்தில் உருவம் தெரியாது அழுகுரல் மட்டும் கேட்கும் அதிசயம் நடைபெறுகிறது. அழும் உருவத்தை நான் கண்ணால் பார்க்க அருள் செய்ய வேண்டும்'' என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.

மாகாளியும் விக்கிரமாதித்தனுக்கு விபூதி பிரசாதத்தை அளித்தாள். “விக்கிரமாதித்தா... நீ இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால் பிறர் கண்களுக்குப் புலப்படாத எந்தக் காட்சியாக இருந்தாலும் அக்காட்சி உன் கண்களுக்குப் புலப்படும்" என்றுக் கூறி மறைந்தாள்.

அம்மனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு நேராக அரண்மனைக்குச் சென்று அங்கு தனக்காகக் காத்திருந்த புரந்தனை அழைத்துக் கொண்டு நேராக மந்தார தேசத்தில் இருந்த மூங்கில் புதர் இருக்குமிடத்தை அடைந்தான்.

இரவுப் பொழுது துவங்கியது. நள்ளிரவு நேரத்தில், 'ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள்! என்னை இந்த அரக்கன் கொல்லப் போகிறானே!" என்று ஒரு பெண் அலறியபடி அழும் ஒலி கேட்டது.

அலறல் சப்தம் கேட்டதும் விக்கிரமாதித்தன் விபூதி பிரசாதத்தை எடுத்து தன் நெற்றியில் இட்டதும் மூங்கில் புதரின் உள்ளே பார்த்தாலே அச்சத்தைக் கொடுக்கும் உருவம் கொண்ட ராட்சசன் ஒருவன் அழகிய இளம் பெண்ணை தன் கத்தியால் வெட்டிக் கொல்ல முயற்சி செய்தபடி இருந்ததை அவனால் தெளிவாகப் பார்த்திட முடிந்தது.

அக்காட்சியைக் கண்டதும் வெகுண்டெழுந்த விக்கிரமாதித்தன் தனது உடைவாளை உருவியபடி மூங்கில் புதரினுள் பாய்ந்து இளம் பெண்ணைக் கொல்ல முயன்று கொண்டிருந்த அந்த ராட்சசனை வெளியே இழுத்துப் போட்டு அவன் கழுத்தை ஒரே வெட்டில் வெட்டினான். ராட்சசனின் தலை துண்டித்து விழவும் அவன் உயிர் பிரிந்தது.

ராட்சசன் கொடுமைக்கு ஆளாகி இருந்த அந்த இளம் பெண்ணை அழைத்து, 'பெண்ணே ! யார் நீ? ஏன் இம்மாதிரியான ராட்சசனின் கொடுமைக்கு ஆளானாய்?" எனக் கேட்டான்.

விக்கிரமாதித்தனைப் பணிந்து வணங்கிய அந்தப் பெண், "ஐயா! வெகு காலமாக கடும் சாபத்திற்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டிருந்த என்னை காப்பாற்றியதோடு எனக்கு சாப விமோசனமும் அளித்து ரட்சித்தீர். நான் தங்களுக்கு எவ்வாறு நன்றி கூறுவது என்று தெரியாமல் இருந்தேன். எனது வரலாற்றைத் தாங்கள் கேட்க விரும்பினால் அதனை உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் இந்த நகரில் வாழ்ந்த அந்தணரின் மகள். என் பெயர் சந்திரகலா இந்நகரிலேயே எனக்கு நிகரான அழகி எவரும் இல்லை என்பதில் எனக்கு அளவில்லாத கர்வம் இருந்தது. இதனால் எனக்குத் திருமணம் என்றால் அது பேரழகும், ஆண்மையும் கம்பீரமும் கொண்ட ஓர் அரச குமாரனுடன்தான் என ஆணவம் கொண்டு கூறி வந்தேன்

என் தந்தை எனக்கு திருமணம் செய்ய பல முயற்சிகள் செய்தும் இக்காரணத்தைக் கூறி மறுத்து வந்தேன். என் விருப்பப்படி பெரும் பொருள் செலவு செய்து எனக்குத் திருமணம் செய்து வைக்கவும் என் தந்தைக்கு வழியில்லை . அதன் காரணமாக அவர் இதே நகரில் வாழ்ந்த ஏழைக்கு என்னைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். எனக்குக் கணவனாக வாய்த்த அந்த ஏழை இளைஞனுக்கு பணவசதிதான் இல்லையேத் தவிர கல்வி கேள்விகளிலும், பல கலைகளிலும் அவர் சிறந்து விளங்கினார். பலவகை சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். யோக யாகங்கள் பலவற்றைச் செய்து முடித்து சித்தி முறைகள் பலவற்றையும் கவரப் பெற்றிருந்தார். அவரை என் கணவராக ஏற்றுக் கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை . என் அழகுக்கு ஏற்ற கணவன் அவரல்லவே! என் பேரழகுக்கு ஈடு இணையாக அவர் இல்லாததால் பலவகைகளிலும் அவரை நான் அவமானப்படுத்தி வந்தேன். அதனைக் காலமும் பலவகைகளிலும் அதனைப் பொறுத்துக் கொண்டிருந்த அவர் முடிவில் கோபம் கொண்டார்.

ஒருநாள் என்னை அழைத்த அவர், "சந்திரகலா! நீ எனக்கு இழைத்திருக்கும் அவமானத்தை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒரு மனைவி யானவள் தன் கணவனுக்கு செய்திடக்கூடிய மிகமிக சாதாரண கடமைகளைக்கூட எனக்கு நீ செய்யாமல் புறக்கணித்துவிட்டாய்! ஒரு கணவனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதேதான் ஒரு மனைவியின் கடமை. அதை விடுத்து என்னை நீ ஒவ்வொரு நாளும் என்னை இழிவாகவே நடத்தினாய். பொறுத்துப் பார்த்தேன். இனிமேலும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. நீ பயங்கரமான உருவம் கொண்ட ராட்சசன் ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டு அவனது வன்முறை வெறியாட்டத்திற்கு தினமும் ஈடு கொடுத்து வருவதையே உன் வாழ்க்கையாகக் கொள்வாய் இதன் காரணமாக உனக்கு மன வேதனை அதிகமாகும். உன்னை எவராலுமே காப்பாற்ற இயலாத அளவுக்கு நீ படும் வேதனையை யாருமே சிரித்துக் கொள்ள முடியாது. இதுதான் நான் உனக்கு கொடுக்கின்ற சாபம்! " என்றார்.

அந்த சாபத்தின் காரணமாகவே நான் பலகாலம் அந்தக் கொடிய ராட்சசனின் பிடியில் சிக்கி அவஸ்தைப்படும் நிலைக்கு ஆளானேன். என் நிலை குறித்து வருந்திய நான் என் கணவரை வணங்கி என் சாப விமோசனம் தருமாறு வேண்டினேன். ஆனால் அவர் மனம் இரங்கவில்லை . இருந்தாலும் எனக்கு மரணம் அளிப்பதன் மூலம் என் மனம் நிம்மதியடைய விரும்பினார்.

பின்னர் அவள் என்னைப் பார்த்து, "பெண்ணே ! உனக்கு ஒரு வகையில் நான் இட்ட சாபத்திற்கான விமோசனம் தரலாம் என எண்ணுகிறேன். என்றாவது ஒருநாள் விக்கிரமாதித்தன் இங்கு வந்து உன்னைக் கொடுமைப்படுத்தும் ராட்சசனைக் கொன்று உன்னைக் காப்பாற்றுவார். அதன் பின்னர் நீ உயிருடன் இருக்கமாட்டாய்! உனது மரணத்துடன் உன் வாழ்க்கை முடிந்துவிடும்'' என தன் வாழ்க்கைப் பற்றி விக்கிரமாதித்தனிடம் கூறியதும் அவள் உயிர் பிரிந்தது.

அதனைக் கண்ட விக்கிரமாதித்தனோ தன்னால் அப்பெண்ணின் மரணத்தை தடுக்க முடியவில்லையே என்று வருந்தியபடி தன் மனதைத் தேற்றிக் கொண்டு உஜ்ஜியினி மாகாளிப் பட்டணத்தை வந்தடைந்தான்.

இப்படியாக நவரத்தின சிம்மாசனத்தில் ஏறி அமர வந்த போஜ மன்னனிடம் பதுமைகள் இவ்வாறு கதையைக் கூறலாயின.

இருபத்திரெண்டாம் நாள் அன்று போஜ மன்னன் முப்பத்தோறு படிகளைக் கடந்து முப்பத்திரெண்டாம் படியில் காலடியை வைத்தபோது அப்படிக்குக் காவலாக இருந்த ஞானப்பிரகாசவல்லிப் பதுமையானது அவனைப் பார்த்து. ''போஜ ராஜனே! இந்த வைரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லாட்சி நடத்தி வந்த எமது விக்கிரமாதித்த மன்னருக்கு நிகரான தகுதி உமக்கு உண்டா என சோதித்து அறியவே இவ்வளவு நாட்களும் அவரின் சாகசக் கதைகளை உமக்குக் கூறி வந்தோம்.

இப்போது எங்களது தடையும் நீங்கியது. எங்கள் மாமன்னருக்கு நிகரான தகுதியை உடையவரே தாங்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டோம். இனிமேல் தாராளமாக இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து நீங்கள் ஆட்சிப் புரியலாம். இனி நான் தங்களுக்குக் கூறப்போவது பதுமைகளான எங்களது சொந்த வரலாற்றுக் கதை. அக்கதையினையும் கூறுகிறேன் கேளுங்கள்.

"மாமன்னரே! இன்று பதுமைகளாக இருக்கும் நாங்கள் முப்பத்து இரண்டு பேரும் ஒரு சமயம் உமாதேவியின் பணிப்பெண்களாக இருந்து வந்தோம். ஒரு முறை பரமசிவனும், உமையவளும் வெளியில் சென்று திரும்பிய போது நாங்கள் அவர்கள் வருவதை அறியாது எங்களுக்குள் பேசி சிரித்தபடி இருந்தோம்.

தற்செயலாக திரும்பிப் பார்த்தபோது அங்கே உமையவளும், பரமசிவனும் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டோம். எங்களின் அலட்சியத்தைக் கண்ட உமையவள் கடும் சினங்கொண்டாள்.

"நீங்கள் அனைவரும் கொலுப் பதுமைகளாக ஆகக் கடவது பின் நீங்கள் அனைவரும் இந்திரனின் நவரத்தின சிம்மாசா படிகளின் காவல் பதுமைகளாகுவீர்!'' என்று சாபம் இட நாங்கள் சாப விமோசனம் தருமாறு வேண்டுகோள் விடு—---.களது வேண்டுகோளுக்கு மனம் இரங்கிய உமையவள். "நீங்கள காவல் பதுமைகளாக இருக்கும் சிம்மாசனம் பூலோகத்தில் விக்கிர மாதித்தனிடம் சேரும்

விக்ரமாதித்தன் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து காடாறு மாதம், நாடாறு மாதமாக பட்டியுடன் இணைந்து வெகு செய்த பின்னர் அவருக்குப் பிறகு அவருக்குப் பிறகு சிம்மாசனம் பூமிக்குள் புதையுண்டு மண்மேடாகிவிடும். பின்னர் அந்த போஜராஜனால் தோண்டி எடுக்கப்பட்டு அதில் அமர்ந்து ஆட்சி செய்ய முயல்வான்.

அவ்வாறு அமரப்போகும் மன்னனை ஒவ்வொரு படியிலும் உள்ள நீங்கள் ஒவ்வொரு நாளாகத் தடுத்து விக்கிரமாதித்தனின் சிறப்பைக் கூறுவீர்கள்'' என்றார்.

''அதனுடன் உங்களுக்கு இட்ட சாபம் முடிந்து, விமோசனம் உண்டாகும். நீங்கள் போஜராஜனை அழைத்து சிம்மாசனத்தில் அமரவைத்து விட்டு கைலாயத்தை அடைவீர்கள். அதன் பின்னர் போஜராஜன் நூறு ஆண்டுகள் நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லாட்சி புரிவான். அவன் காலத்திற்குப் பின்னர் அந்த சிம்மாசனம் அங்கிருந்து தேவலோகம் சென்று இந்திரனை அடையும்'' என பார்வதியான உமையவள் கூறினாள். இனிமேல் தாங்கள் எந்தவித தடையும் இன்றி இந்த நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லாட்சிப் புரிவீராக. நாங்கள் இனி தங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறோம்" என்று ஞானப் பிரகாச வல்லிப் பதுமை கூறியதும் பதுமைகள் அனைத்தும் பேரழகுப் பெண்களாக உருமாறி போஜ மன்னனை வணங்கி கைலாயம் நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

போஜராஜன் அந்த நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து நூறாண்டு காலம் நல்லாட்சிப் புரிந்தான். அவனுக்குப் பின் நவரத்தின சிம்மாசனம் வானை நோக்கிக் கிளம்பி தேவேந்திரப் பட்டணமான அமராவதியைச் சென்று அடைந்து அங்கேயே தங்கிக் கொண்டது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.