முன்னொரு காலத்தில் வளம் மிக்க வாஜ்புரம் என்னும் நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அரிசுவாமி என்ற அந்தணர் தன் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
அவர் அந்நகரத்து அரண்மனையில் பணிபுரிந்து வந்தார்! அரண்மனை செல்வாக்குடன் அவரது குடும்ப வாழ்க்கையானது மிகவும் மகிழ்ச்சிகரமாக நடந்து கொண்டிருந்தது.
அரிசுவாமிக்கு சந்திராவதி என்ற மகள் இருந்தாள். அவள் மிகவும் அழகு மிக்கவளாக இருந்தாள். இன்னும் சொல்லப் போனால் அவள் தேவதையைப் போன்று காட்சியளிக்கலானாள். மேலும் எல்லாவிதமான கலைகளிலும், தேர்ச்சிப் பெற்று, அனைத்து சாஸ்திரங்களையும் கற்று புலமை மிக்கவளாக விளங்கினாள்.
தனது மகளுக்கு அந்தணரான அரிசுவாமி தக்க மணவாளனைத் க கொண்டிருந்தார். தனக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய தை ஆவலுடன் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டாள் சந்திராவதி.
உடனே தன் தந்தையை நோக்கிய அவள் "தந்தையே! தாங்கள் எனக்கு திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்யப் போவதாக அறிந்தேன், அதனை குறித்து எனது கருத்தினை தங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்" என்றாள்
அதனை கேட்ட அரிசுவாமியும் "மகளே! உனது கருத்தினை நான் வரவேற்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னிடம் நீ தாராளமாகத் தெரியப்படுத்தலாம்" என்றார்.
''தந்தையே! நீங்கள் இந்த அளவுக்கு எனக்கு உரிமை கொடுப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் மற்றவர்களைப் போன்று சாதாரண ஒரு மனிதனை கணவனாக அடைய விரும்பவில்லை . எனக்கு கணவனாக வரக்கூடியவர் எல்லா கலைகளிலும், அறிவிலும், பண்பிலும், ஒழுக்கத்திலும் தேர்ச்சிப் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை தேர்வு செய்து எனக்கு மணமுடித்து வைத்தால் என் மணவாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றாள்
தன் மகள் கூறியதைக் கேட்டு அரிசுவாமி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ''மகளே! உன்னுடைய கருத்தை நான் ஏகமனதுடன் வரவேற்கிறேன். நீ புத்திசாலித்தனமாகத்தான் கூறுகின்றாய்! உனது விருப்பப்படியே தக்க மணவாளனை தேடி உனக்கு மணம் செய்து வைக்கிறேன்" என்றார்.
அதனைக் கேட்டதும் சந்திராவதியும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
இது நடந்து சில நாட்களுக்குப் பின்னர் தவசீலன் என்ற இளைஞன் அரிசுவாமியைத் தேடி வந்தான்.
“இளைஞனே! நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?'' என்று அன்புடன் கேட்டார் அரிசுவாமி.
"எனக்கு உங்கள் மகள் வேண்டும்!'' என்று பதில் கூறினான் தவசீலன்.
அதனைக் கேட்டதும் அரிசுவாமி திடுக்கிட்டார்! "என்ன துணிச்சல் உனக்கு? என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றாயே!" என்று ஆத்திரமடைந்தார்.
''ஐயா! நீங்கள் ஆத்திரமடைய வேண்டாம்! உங்கள் மகளை மணந்து கொள்ள எனக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை உங்களிடம் நிரூபித்துக் காட்டுகிறேன்'' என்றான்.
உடனே அரிசுவாமி மகிழ்ச்சியடைந்தார். "இளைஞனே! உன்னைப் போன்றவர்களைத்தான் என் மகளுக்கு மணவாளனாக தேர்வு செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நீ உடனே என்னிடம் காட்டு. நீ திறமை மக்கவனாக இருந்தால் நிச்சயமாக என் மகளை உனக்கு திருமணம் செய்து தருவேன்' என்றார்.
இளைஞனோ இதனைக் கேட்டதும் மகிழ்ச்சியால் துள்ளினான். உடனே தாமதிக்காது வானில் பறந்து செல்லக்கூடிய ஓர் பொறியினைத் தயார் செய்தான். அந்தப் பொறியில் தானும் ஏறி அரிசுவாமியையும் ஏறி அமரச் செய்து வான் வீதியில் பறந்து சென்றான். இப்படியே உலகம் முழுவதும் அரிசுவாமியுடன் தவசீலன் தனது பொறியில் ஏறி வலம் வந்து பூமியில் இறங்கினான்.
தவசீலனுக்கு இப்படி ஒரு திறமை இருக்கும் என்று அரிசுவாமி சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. தவசீலனை ஓஹோ! ஓஹோ என்று புகழத் தொடங்கி விட்டார். "இளைஞனே! இன்றிலிருந்து அதாவது நான் உனக்கு வாக்களித்த நாளில் இருந்து ஏழாம் நாளன்று திருமணம் நடந்தேறும்! இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை" என்று முகூர்த்த நாளையும் குறித்து தக்க நேரத்தில் நீ வந்துவிட வேண்டும் என்று கூறி அனுப்பினார்.
மறுநாள் அரி சுவாமியின் மகன் தேவ சுவாமியிடம் சூரன் என்றழைக்கப்பட்ட மற்றொரு வீரன் வந்து சந்தித்தான். சூரன் தேவ சுவாமியை நோக்கி, "தேவ சுவாமி உமது சகோதரி சந்திராவதியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்'' என்றான்.
உடனே தேவசுவாமி “தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று என் தங்கை சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றாள்'' என்று சந்திரவாதியின் நிபந்தனைகளை எல்லாம் எடுத்துரைத்தான்.
உடனே சூரன் ''நான் சாதாரணமானவன் அல்ல! எனக்கு உண்டான திறமைகளை எல்லாம் இதோ காட்டுகிறேன்'' என்றபடி வில் வித்தை, வாள் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, குத்துச் சண்டைப் பயிற்சி போன்றவற்றின் செய்து காட்டினான்.
சூரனின் வித்தைகள் எல்லாம் பெரும் பரபரப்பையும், பிரமிப்பினையும் ஏற்படுத்தின. இப்படியும் ஒரு வீரன் இந்த உலகத்தில் இருக்கின்றானா என்று வியப்பும் ஆச்சர்யமும் அடைந்தான் தேவசுவாமி.
"உன்னை என் தங்கை ஏற்றுக் கொள்வாள். எனவே நீதான் என் தங்கைக்கு கணவன்" என்றபடி திருமண நாளையும் நிச்சயித்தான்
அவன் எந்த நாளினை திருமண நாளாக நிச்சயித்தானோ அதே நாளில் அவனது தந்தையும் தனது மகளின் திருமண நாளை நிச்சயம் செய்திருந்தார்.
அன்று மதிய வேளையில், தந்தையும் மகனும் வெளியே சென்றிருக்க சந்திராவதியின் தாய் மட்டும் வீட்டிலிருந்தாள்.
அந்த நேரத்தில் ஞானி என்ற இளைஞன் சந்திராவதியின் தாயை சந்தித்தான்.
தனது எண்ணத்தை தெரியப்படுத்தி "தங்கள் மகளை மணம் செய்ய வந்துள்ளேன்!" என்றான்.
சந்திராவதியின் தாயோ "நீ எந்தவிதத்தில் திறமை மிக்கவன் என்று தெரியவில்லையே! என் மகளின் நிபந்தனைகளுக்கு நீ பொறுத்தமானவன் தானா என்பதும் புரியவில்லையே!" என்றாள்
அதனைக் கேட்ட ஞானி "தாயே! என்ன அப்படி கூறி விட்டீர்கள்! என்னைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பில்லையே! இதோ எனக்குள் இருக்கும் திறமையை நானே உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் முக்காலத்தையும் பகுத்துணரும் ஆற்றலைப்பெற்று இருக்கிறேன். நேற்று நடந்தது. அன்று நடப்பது. நாளை நடக்க இருப்பது என்பதை துள்ளியமாக அறிந்து என்னால் பதில் கூற முடியும்'' என்று கூறினான்.
“அப்படியானால் எனது கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் எனால் கூற முடியுமா?'' என்று கேட்டாள் சந்திராவதியின் தாய்.
“ஓ! தாராளமாக கூறுவேனோ! இதோட கவனமாக கேளுங்கள்!'' என்று கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் அப்படியே பிட்டுப் பிட்டு வைத்தான்.
இதனைக் கேட்ட சந்திராவதியின் தாயோ மிகவும் ஆச்சர்யமடைந்தாள். ''உன்னைப் போன்ற ஒரு திறமை சாலியை இந்த உலகத்தில் தேடிப் பிடிப்பது என்பது மிகவும் அடிமையான வேலை. நிச்சயமாக என் மகளை நான் உனக்கு மணம் செய்து வைக்கிறேன்" என்றான். உடனே முகூர்த்த நாளையும் குறித்துக் கொடுத்தாள்.
அவள் குறித்துக் கொடுத்த நாளும் அவள் கணவனும் மகளும் நிச்சயம் செய்து கொடுத்த நாளாகவே இருந்தது.
அடுத்தநாள் அரிசுவாமி, அவன் மனைவி, தேவசுவாமி மூவரும் ஒன்றாக அமர்ந்து சந்திராவதி திருமணம் பற்றிப் பேசத் தொடங்கினர். அப்போது ஒவ்வொருவரும் தாங்கள் சந்தித்த மாப்பிள்ளைப் பற்றிய விபரத்தைக் கூறி நிச்சயம் செய்து இருக்கும் நாளையும் தனித்தனியே கூற மூவரும் திகைத்தனர் என்ன செய்வது என்று புரியாமல் ஒருவருக் கொருவர் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தனர்.
நாம் மூவரும் ஒரே நாளில் நிச்சயம் செய்துவிட்டோமே மூவரும் ஒரே நேரத்தில் வருவார்களே! அவர்களுக்கு நாம் என்ன பதிலைக் கூறுவது என்று திகைப்படைந்தனர்.
மூவரும் நிச்சயம் செய்த திருமண நாளும் வந்தது. ஒரே சமயத்தில் அரிசுவாமியை சந்தித்த தவசீலனும், தேவ சுவாமியை சந்தித்த சூரனும், சந்திராவதியின் தாயை சந்தித்த ஞானியும் அரிசுவாமி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
மூவரும் எல்லா விபரத்தையும் அறிந்தனர். மூவருமே சந்திராவதியை தனக்கே மணமுடித்து தர வேண்டும் என்று வாக்கு வாதம் நடத்தினர்.
வாக்கு வாதம் முற்றிப் போய் கைகலப்பு வரையில் சென்று விட்டனர்.
அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கின்ற வேளையில் அரிசுவாமியின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது
உடனே அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த மூவரையும் தடுத்தார்.
"உங்கள் மூவருக்குமே! என் மகள் சந்திராவதியை மணந்து கொள்ள எல்லா தகுதியும் இருக்கிறது என்பதை நான் அறிவேன். அவளுக்கேற்ற மணமகனை நாங்கள் தேர்வு செய்த போது மூவருமே கலந்து பேசாமல் விட்டு விட்டோம்! அதனால்தான் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க நான் ஒரு வழியினைச் சொல்கிறேன். எனது மகளை உங்கள் முன்பாக வரச் சொல்கிறேன். அவளுக்கு யார் விருப்பமோ அவரை அவள் மணந்து கொள்ளட்டும்! மற்ற இருவரும் இந்தப் பிரச்சனையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளட்டும்! இந்த நிபந்தனையை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் சந்திராவதியை இங்கே அழைத்து வருகிறேன்" என்றார்.
அரிசுவாமியின் இந்த நிபந்தனைக்கு மூவருமே கட்டுப் பட்டனர்.
உடனே சந்திராவதியை அழைத்து வர வேண்டி அவளது தாயார் வீட்டினுள் சென்றார்.
நேரம் கடக்க கடக்க அவள் வெளியே வரவில்லை. திடீரென பட்டுக்குள்ளேயிருந்து அலறியபடியே வெளியே ஓடி வந்தாள்
"ஐயோ! சந்திராவதியை காணவில்லையே! வீட்டில் எங்குமே அவள் இல்லையே! அவள் எங்கே சென்றிருப்பாள் என்று தெரியவில்லையே!" என்று அழுது புலம்பினாள்,
அந்த நேரத்தில் ஞானி "இதோ பாருங்கள்! நீங்கள் அழ வேண்டாம்! சற்று நேரம் எல்லோரும் அமைதியாக இருங்கள்.
அவள் இருக்கும் இடத்தை நான் கண்டு பிடிக்கிறேன்." என்றபடி தன் கண்களை மூடியபடி அமர்ந்தான்
பின்னர் மெல்ல தன் கண்களை திறந்தான். ''அரிசுவாமி அவர்களே! உங்கள் மகள் சந்திராவதி தற்போது இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன். தூமராட்சசன் என்ற அசுரன் அவளைக் தூக்கிக் கொண்டு தன்னிருப்பிடத்தில் வைத்துள்ளான். அவன் இருக்கும் இடம் விந்தியமலை காட்டின் உள்ளே உள்ளது. அங்குதான் உங்கள் மகளை மறைத்து வைத்துள்ளான்" என்றான்
ஞானி கூறியதைக் கேட்டதும் அரிசுவாமி "ஐயோ! நான் ஏது செய்வேன் ஒரு அசுரன் என் பெண்ணைக் கடத்திச் சென்று விட்டானே! அவள் பிடியில் இருந்து அவளை நான் எப்படி மீட்பேன்?" என்று கவலையுடன் அழத் தொடங்கி விட்டார்.
உடனே தவசீலன் “ஐயா! தயவு செய்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்; சந்திராவதியை அசுரன் பிடியில் இருந்து எளிதாக மீட்டு விடலாம்!'' எனக் கூறியவாறு வானில் விரைவாகப் பறந்து செல்லக்கூடிய பொறி ஒன்றினை தயார் செய்தான்.
உடனே சூரன் தனக்குத் தேவைப்படுகின்ற போர்க் கருவிகளை எல்லாம் எடுத்துக் கொண்டான். இருவரும் அந்தப் பறக்கும் பொறியில் ஏறிக் கொண்டனர்.
உடனே வேகமாக பறந்து சென்று விந்தியமலைக் காட்டை வந்தடைந்தனர்.
அசுரனின் இருப்பிடத்திற்குச் சென்று அவனோடு சூரன் போரிடத் தொடங்கினான்.
சூரனுக்கும் அசுரனுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. ஒரே வீச்சில் அசுரனின் தலையை வெட்டி வீழ்த்தினான். பின்னர் தவசீலனுடன் சேர்ந்து கொண்டு சந்திராவதியை அரசன் மறைத்து வைத்திருந்த இடத்தினுள் புகுந்து அவளை மீட்டு வந்தனர். மீண்டும் பறக்கும் பொறியில் மூவரும் ஏறி அரிசுவாமியின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தனது மகள் சந்திராவதி உயிருடன் திரும்பி வந்ததைக் கண்டு அவள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்த போதிலும் அவளது திருமணச் சிக்கல் தீராமலேயே இருந்தது. ஆனால் அதில் வேறு வகை மாற்றம் ஏற்பட்டது.
ஞானி அரிசுவாமியை ஏறிட்டு "நான் மட்டும் என்னுடைய ஞான திருஷ்டியால் உங்கள் மகளின் இருப்பிடத்தை தெரிந்து கூறியிருக்கா விட்டால் அவளை மீட்டிருக்க முடியாது. ஆகவே அவளை எனக்கே மணம் செய்து கொடுத்து விடுங்கள்" என்றான்.
அப்போது சூரன் "இதோ பாருங்கள்! இவன் ஞானப் பார்வையினால் உங்கள் மகள் இருக்கின்ற இடத்தை கண்டுபிடித்தது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நான் அந்த அசுரனுடன் கடுமையாகப் போரிட்ட பின்னரே உங்கள் மகளை உயிருடன் மீட்டுக் கொண்டு வந்தேன் எனவே நானே அவளை மணந்து கொள்வேன்'' என்றான்.
ஞானியும், சூரனும் சந்திராவதியை மணக்க போட்டியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தவசீலன் இடையில் தன் பேச்சைத் தொடங்கினான் "இருவரும் சற்று நேரம் சும்மா இருங்கள். ஞானி அவள் இருக்கும் இடத்தினை யூகம் செய்து கூறியிருக்கலாம்! சூரன் அகரனிடம் இருந்து சந்திராவதியை உயிருடன் மீட்டுக் கொண்டு வந்திருக்கலாம்! இருந்தாலும் தொலைவான தூரத்தில் அசுரன் இருப்பிடத்தைச் சென்றடைய நான் தானே பறக்கும் பொறியினை படுத்திக் கொடுத்தேன். ஆகையினால் உங்கள் இருவரையும் டெ அவளை மணந்து கொள்ள நானே பொருத்தமானவன்'' என்றான்.
அரிசுவாமி குடும்பத்தினரோ எதுவும் பண்ண முடியாமல் மேலும் குழப்பமடைந்தனர்.
மூவர் பேச்சிலும் நியாயம் இருக்கவே தங்களது மகளை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது எனத் தெரியாமல் மனம் குழம்பினார்கள்."
இவ்வாறு கதையைக் கூறி முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி "விக்கிரமாதித்த பூபதியே! நான் கூறிய மூவரில் யாருக்கு சந்திராவதியை மணந்து கொள்ளும் தகுதி உண்டு என்பதற்கான சரியானப் பதிலை நீர் கூறிட வேண்டும் அவ்வாறு கூறாவிட்டால் உமது தலை வெடித்துச் சிதறும்" என்று கூறியது
அதுவரையிலும் மௌனம் சாதித்த விக்கிரமாதித்தன் தனது மௌனத்தை கலைத்தவனாக “வேதாளமே! ஞானியும், தவசீலனும் செய்த உதவிகள் தங்கள் சகோதரிக்கு செய்திட்ட உதவிக்கு ஒப்பானவை. ஆனால் சூரன் மட்டும் தனது உயிரை பணயமாக வைத்து அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்று சந்திராவதியை மீட்டு வந்தான். எனவே எப்போதுமே காதலுக்கும் வீரத்திற்கும் ஓர் நெருங்கியத் தொடர்பு உண்டு எனவே மற்ற இருவரையும் விட சந்திராவதியை மணந்து கொள்ள சூரனே தகுதியானவன் என்று கூறினான்.
விக்கிரமாதித்தன் இந்தப் பதிலைக் கூறியதும் உடனே வேதாளம் விடுவித்துக் கொண்டு மீண்டும் மயானத்து முருங்கை மரத்தின் கிளையை அடைந்து தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது
தன்னிடம் இருந்து விடுபட்டிச் சென்ற வேதாளத்தை மீண்டும் பிடித்துக் கட்டி தனது தோளில் சுமந்தவாறு சத்திய சீலன இருக்கும் இடமான துர்காதேவி ஆலயம் நோக்கி விக்கிரமாதித்தன் செல்லத் தொடங்கினான்.