Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

8. உடலும், முகமும்

'துர்காபுரி' என்ற நாட்டை நீதி வம்சன் என்னும் அரசன் நீதி தவறாமல் ஆண்டு வரலானான். அதனால் அந்த நாட்டு மக்கள் நீதிவம்சன் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துப் போற்றினர்.

துர்காதேவி ஆலயம் ஒன்று துர்கா புரியில் அமைந்து இருந்தது. அந்த ஆலயத்தை ஒட்டி துர்கா தீர்த்தம் என்றழைக்கப்பட்ட திருக்குளமும் இருந்தது. வருடந் தோறும் ஆஷாட மாதத்தின் அக்கில பட்சத்து சதுர்த்தியன்று துர்காதேவிக்கு விமரிசையாக விழா நடைபெறுவது வழக்கம்.

அந்தத் திருவிழாவின் போது துர்கா தீர்த்தத்தில் நீராடி அம்மனை தரிசித்து வழிபட்டு வரம் கோரி வேண்டினால் துர்கா தேவியும் அவரவர் வேண்டிய வரங்களை அளித்திடுவாள்'' என்று அந்நாட்டு மக்கள் எல்லோரும் நம்பினார்கள்.

ஒரு சமயத்தில் வழக்கம் போல் துர்காதேவிக்கு திருவிழா நடந்தது. சுந்தரதேவன் என்ற இளைஞன் துர்காதேவி திருவிழாவுக்கு வந்து அம்மனை தரிசித்திட வேண்டி அம்மன் சந்நிதி நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போது அம்மனை வழிபட வந்திருந்த ஒரு குடும்பத்தினரிடையே பேரழகு வாய்ந்த இளம் பெண்ணொருத்தியும் இருந்தாள்.

அந்தப் பெண்ணைக் கண்ட மாத்திரத்தில் சுந்தரதேவனுக்கு அவள் மீது மையல் ஏற்பட்டது. அப் பெண்ணையே மணந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். 'அப்படி அப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உயிர் துறந்து விடலாம்' என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

அப் பெண்ணின் குடும்பத்தார்கள் தன்னை அறிந்து கொள்ளாதவாறு அப்பெண்ணைப் பற்றிய விபரங்களை எல்லாம் விசாரித்து அறிந்தான்.

துர்காபுரிக்கு அடுத்து இருந்த நகரத்தில் வசிக்கும் கந்தப்பெருமாள் என்ற வணிகரின் மகளே அப்பெண் என்பதையும் அந்த அழகியின் பெயர் மதனசுந்தரி என்பதையும் தெரிந்து கொண்டான்.

அதன் பின்னர் சுந்தரதேவன் நேராக துர்காதேவி சந்நிதிக்குச் சென்று அம்மனை வணங்கி “துர்கா தேவியே! பேரழகு வாய்ந்த என் மனம் கவர்ந்த மதனசுந்தரியை எந்தவித இடையூறும் இன்றி திருமணம் செய்து கொள்ள உன்னருள் தேவை. அவ்வாறு உனது திருவருளால் எங்களது திருமணமானது இனிதே நடைபெற்றால் திருமணம் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு எனது தலையைக் கொய்து உனக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்'' என்று வேண்டினான்.

பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்த சுந்தரதேவன், நேராக மதன சுந்தரியின் இல்லத்தை வந்தடைந்தான். அங்கு அமர்ந்திருந்த கந்தப்பெருமாளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவரது புதல்வியான மதனசுந்தரியைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தனக்கு அவளை மணம் செய்து வைக்குமாறு வேண்டினான்.

சுந்தரதேவனின் கண்ணியம் மிக்கப் பேச்சும் கம்பீரமானத் தோற்றமும் கந்தப்பெருமாளை வெகுவாகக் கவர்ந்தது. அவர் சுந்தரதேவனிடம் அவனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் விசாரித்து அறிந்தார்.

சுந்தரதேவன் நல்ல குடும்பத்தை சார்ந்தவன் என்றும் பல கல்வி கேள்விகளில் தலை சிறந்தவன் என்றும், வியாபாரம் செய்கின்ற திறமையும் நிரம்பப் பெற்றவனாக இருக்கிறான் என்பதையும் அறிந்து மனம் மகிழ்ந்தார்.

இதன் பொருட்டு தனது மகளான சுந்தரியை சுந்தரதேவனுக்கு மணமுடித்துத் தர சம்மதித்தார். ஓர் இனிய முகூர்த்த நாளில் சுந்தரதேவன் மதனசுந்தரி ஆகியோர் திருமணம் பெரியவர்களின் ஆசியுடனும் துர்காதேவியின் பேரருளாலும் இனிதே சுகமாக நடைபெற்றது.

தான் மணந்த மதனசுந்தரியுடன் சுந்தரதேவன் அந்நகரத்திலேயே தங்கி இருந்தான். அவனது மண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

ஒருநாள் சுந்தரதேவன் தனது மாமனாரிடம் சென்று "மாமா! நான் எனது குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து பல மாதங்கள் ஆகி விட்டன. எனவே எனது மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு எங்களது ஊருக்குச் செல்லலாம் என எண்ணுகிறேன். தயவு கூர்ந்து எனக்கு அனுமதி வழங்கிட வேண்டுகிறேன்'' என்று கூறியவாறு அவரை வணங்கி நின்றான்.

சுந்தரதேவனின் வேண்டுகோளைக் கேட்ட கந்தப் பெருமாள் மகிழ்ந்து தக்க சீர்வரிசைகளைக் கொடுத்து தனது மகளான மகனசுந்தரியை அவனுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றிட துணையாக மூத்தப் புதல்வன் தாருகனையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் மூவரும் துர்காடரியை வந்தடைந்தனர்.

துர்காபுரியின் எல்லையை அடைந்ததுமே சுந்தரதேவனுக்கு துர்காதேவியின் ஞாபகம் வந்தது.

மதனசுந்தரியை திருமணம் செய்வதற்காக துர்கா தேவியிடம் வேண்டுதல் செய்தது அவன் நினைவுக்கு வந்தது. அதனால் சுந்தரதேவன் மதனசுந்தரியையும், தனது மைத்துனன் தாருகனையும் அழைத்துக் கொண்டு துர்கா தேவி ஆலயத்திற்கு வந்தான். அவன் அவர்கள் இருவரையும் ஆலயத்திற்கு வெளியே நிற்க வைத்து விட்டு தான் மட்டும் துர்காதேவியின் சன்னதி முன்பாக வந்தான்.

தனது எண்ணத்தை உடனே நிறைவேற்றி வைத்த துர்காதேவிக்கு தன் வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்த அவன் தன் கையிலிருந்த வாளினால் தன் தலையின் கழுத்துப் பகுதியை தானே வெட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டான்.

நேரம் சென்று கொண்டிருந்தது. கோயில் சன்னதிக்கு சென்ற சுந்தரதேவன் இன்னும் திரும்பி வராததைக் கண்டு தாருகன் தன் தங்கையை அங்கே நிற்க வைத்துவிட்டு தான் மட்டும் ஆலயத்தினுள் நுழைந்தான். அங்கே துர்காதேவி முன்பு தனது மைத்துனான சுந்தரதேவன் கழுத்து அறுபட்டு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.

மைத்துனன் இறந்த செய்தியை தங்கையிடம் சென்று கூறிட மனம் வராத அவன் சோகத்தில் கீழே கிடந்த வாளினால் தன் தலையை அறுத்துக் கொண்டு மடிந்தான்.

சன்னதி வாசலில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த மதன சுந்தரியோ! இத்தனை நேரமாக நம் கணவரும், அண்ணனும் உள்ளே என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லையே என்று கவலையடைந்தாள் அவள் உடலெங்கும் பதட்டம் ஏற்படத் தொடங்கியது. வேகமாக ஆலயத்தின் உள்ளே சென்றாள். அங்கு கண்ட காட்சியைப் பார்த்ததும் அலறத் தொடங்கி விட்டாள்.

பின்னர் துர்காதேவியின் முன்னே சென்று "தாயே! அம்மா! நான் செய்த பாவம் என்ன? எவருக்குமே கிடைத்திராத குணவானாகிய ஆண் மகனை எனக்கு மணவாளனாகக் கொடுத்து எனக்கு ஆனந்த வாழ்க்கையினைக் கொடுத்தாய். ஆனால் இன்று நீ என் வாழ்க்கை அரை குறையுமாக முடியுமாறு செய்து விட்டாயே! இனி நான் என்ன செய்வேன்! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியினை நான் எப்படி காண்பேன்! எனது அன்புக் கணவனையும், அன்பு சகோதரனையும் உன் பாதத்தில் பலியாக்கி சேர்த்து அருளியது போன்று என்னையும் உன் காலடியில் பலியாக ஏற்றுக் கொள்'' என்று கீழே கிடந்த வாளினை எடுத்து தன் தலையை அறுக்க முயற்சித்தாள்.

அப்போது திடீரென துர்காதேவி மதன சுந்தரியின் முன்னே காட்சி கொடுத்தாள்.

''மகளே! நீ அவசரப்படாதே! உன்னுடைய பக்தியை நான் மெச்சுகிறேன். இதோ இந்த கும்ப தீர்த்தத்தை பெற்றுக் கொள் இறந்து கிடக்கின்ற உன்னுடைய கணவன். சகோதரன் ஆகியோான தலைகளை எடுத்து அவர்கள் உடம்போடு பொருத்தி கம்பத் தாத்தத்தால் தடவிவிடு, தலையும் உடம்பும் பொருந்திய இடத்தில் பெ கூறியபடி கும்பத் தீர்த்தம் தடவ அவர்கள் இருவரும் மீண்டும் உயிர் பெற்று எழுவர், உனக்கு எல்லாவித சௌபாக்கியங்களும் கிடைக்கும்" என்று கூறியபடி மறைந்தாள.

மறுநிமிடமே மதனசுந்தரி அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தாள் ப என்ன செய்கிறோம்! ஏது செய்கிறோம் என்று தெரியாமலேயே பதட்டம் அடைந்தாள்.

அந்த பதட்டத்தின் காரணமாக கணவன் தலையை எடுத்து சகோதரனின் உடலிலும், சகோதரன் தலையை எடுத்து கணவனின் உடலிலும் பொருத்தி கும்ப தீர்த்தம் கொண்டு தடவினாள். உடனே இருவரும் உயிர் பெற்று எழுந்தனர். ஆனால் சுந்தரதேவன் தலை தாருகன் உடம்போடும், தாருகன் தலை சுந்தரதேவனின் உடம்போடும் பொருந்தியிருப்பதைக் கண்டு துணுக்குற்றாள். இருவரில் யாரை தன் கணவனாக ஏற்பது என அறியாது குழம்பினாள்."

இவ்வாறாக கதையைக் கூறி முடித்த வேதாளம் "மதனசுந்தரி யாரை கணவனாக தேர்ந்தெடுப்பாள்? இதற்கான பதிலை நீ கூற வேண்டும். சரியான பதிலை நீ கூறா விட்டால் உன்னுடைய தலை சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறி விடும்" என்றது.

அது வரையிலும் மௌனமாக இருந்த விக்கிரமாதித்தன் "வேதாளமே! எண் சாண் உடம்புக்கும் அதன் தலைப் பகுதியே பிரதானமாகும். மனிதனின் சிறப்பு தன்மையே அவரவர் தலையில்தான் அமைந்துள்ளது. தலைப்பாகத்தில் உள்ள மூளையின் செயல்பாட்டினைப் பொறுத்தே மனித வாழ்க்கை அமைந்துள்ளது. எதையும் பகுத்து உணர்ந்து முடிவு செய்கின்ற ஆற்றல் தலையில் இருக்கின்ற மூளைக்கு மட்டுமே உண்டு. எனவே மதன சுந்தரி சுந்தரதேவனின் சிரசு எந்த உடலுடன் பொருந்தியுள்ளதோ அந்த உடலுக்கு சொந்தமானவனையே கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றான்.

சரியானப் பதிலை கூறியதால் விக்கிரமாதித்தனின் மௌனம் கலைந்தது. உடனே வேதாளமும் மகிழ்ச்சியுடன் கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மயானத்தை அடைந்து முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கியது.

தன்னிடம் இருந்து விடுபட்டுச் சென்ற வேதாளத்தை மீண்டும் கட்டி தூக்கியவாறு தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினான் விக்கிரமாதித்தன்.

விக்கிரமாதித்தனின் பொறுமையினையும், விடா முயற்சி களையும் கண்டு வேதாளம் வியப்படைந்தது. எனவே அது மீண்டும் தனது கதையைத் தொடர்ந்தது.

 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.