Description
மஞ்சள் ஆறு Read Online
மஞ்சள் ஆறு
நாஹ்ராமக்ரோ என்ற புலிமலை உச்சியை மாலை நேர மஞ்சள் கதிர்கள் தழுவிக் கிடந்ததால், ஏற்கெனவே செடி கொடிகள் அதிகமின்றி உடைந்த பாறைகளுடனும் அந்தப் பாறைகளிலிருந்து உதிர்ந்து அக்கம் பக்கத்தில் பதிந்து கிடந்த சின்னஞ்சிறு மணல் திட்டுகளுடனுமிருந்த அந்த மலைப்பிரதேசம் சொர்ணச் சாயைக் கொஞ்சம் அதிகமாகவே பெற்றிருந்ததல்லாமல், மலையுச்சியிலிருந்த சாருணீ தேவியின் ஆலயத் தங்கக் கலசங்கள் வெயிலில் ஜாஜ்வல்லியமாக மின்னி, மேவார் நாட்டில் கதிரவனையும் தோற்கடிக்கும் ஒளிப் பிழம்புகள் பல உண்டு என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. அந்தப் பாலைவன நாட்டின் உஷ்ணத்தையும் உக்கிரத்தையும் தப்பி முளைத்துவிட்ட சிற்சில செடிகள், திருடர்களைப் போல் மலைப்பாறை இடுக்குகளிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. அரசனிலிருந்து ஆண்டி வரை சகலரும் சந்தேகம் தவிர்த்துக் கொள்ள வரும் அந்தச் சாருணீ தேவியின் ஆலயத்தின் பிரசித்தி ராஜ்புதனம் முழுவதும் பரவிக் கிடந்தபோதிலும் அதிலிருந்து உச்சிக்குச் செல்லும் பாதைக்கு படிகள் ஏதும் அமைக்கப்படாமல் பாறைகள் மட்டும் ஆங்காங்கு வெட்டி விடப்பட்டிருந்ததால், எந்த நிமிஷத்திலும் கூழாங்கற்களில் வழுக்கி மலையடிவாரத்துக்கு மனிதனோ மிருகமோ வந்துவிடும் பயங்கர நிலையில் அந்தப் பாதையிருந்தது.
Reviews
There are no reviews yet.