இன்னிலை மூலமும் உரையும்

இன்னிலை eBook

  • இன்னிலை மூலமும் உரையும் PDF Download

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

இன்னிலை

பதினேழு நூல்களைக் காண்பீர்கள்; பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. “நாலடி நான்மணி” என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந் நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது.

இவ்வமையத்தில் இவ்விரு நூல்களையும் ஆய்ந்து உரையெழுதுவித்துப் பதித்து வெளியிடின் புலவர் பலரும் இரண்டின் வரலாறு, அருமை, பெருமை, சொல்லின்பம், பொருளின்பம் கண்டு இது சிறந்தது அது சிறந்தது என ஆராய்ந்தறிந்து ஒன்றைத் தேர்ந்து பதினெண் கீழ்க்கணக்கின்பாற்படுத்துவதற்குத் தகுதியாம்.

தமிழ் நாட்டுச் செல்வர்களும் தாய் மொழிப் பற்றுடைய அறிஞர் பலரும் இந் நூல்களை வாங்கிக் கற்றுப் பண்டைக்கால வழக்கம் ஒழுக்கம் அறிந்து நல்வாழ்வு பெற விழைகின்றனம்.

இன்னிலை வரலாறு

திரு. பொய்கையார் இன்னிலை. திரு வ. உ., சிதம்பரம் பிள்ளையவர்கள் விருத்தியுரையுடன் தில்லையாடி த. வேதியப் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது. இரண்டாம் பதிப்பு. அம்பா சமுத்திரம் அகஸ்தியர் அச்சுக்கூடம் விபவ வருஷம்” என்று முன்பக்கம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் “முன்னுரை” “ஆசிரியர்”. “உரைப்பாயிரம்,” “இரண்டாம் பதிப்புரை” ஆகிய நான்கும் வ. உ. சி அவர்களே வரைந்திருக்கின்றனர். பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று “இன்னிலை” தான் என்பதற்கும் அதனை இயற்றியவர் பொய்கையார் என்பதற்கும் இது சிறந்த நூல் என்பதற்கும் பல காரணங்காட்டி விளக்குகிறார். இந்நூல் அவர்கள் கைக்குக் கிடைத்த விதம் அப் புத்தகத்தில் உள்ளபடி இங்கு வரைகின்றேன் அறிக. இன்னிலை‘ஆசிரியர்’ என்ற தலைப்பில் உள்ளது இது.

“இந்நூலினது ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டுத் தொடக்கத்தில் மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னும் சொற்களும், அம் முதலேட்டின் முடிவில் திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னுஞ் சொற்களும், அவ்வேட்டுப் பிரதியின் கடைசி ஏட்டு முடிவில் பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என்னும் சொற்களும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் ஏட்டுப் பிரதியை எழுதிய திருமேனி இரத்தினக் கவிராயரவர்கள் செந்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும் தெய்வ பக்தியுஞ் சிறந்து விளங்கியவர்கள். இந்நூலின் ஏட்டுப் பிரதியை அளித்த ஸ்ரீமான் மலையையாப் பிள்ளையவர்கள் அக்கவிராயவர்களின் ஏடுகளை யெல்லாம் போற்றி வைத்திருக்கும் அவர்களுடைய சந்ததியார்களின் தலைவராய் விளங்கியவர்கள். பொய்கையார் என்பவர் இன்னிலை என்னும் நூலை இயற்றிற்றிலர் என்றாவது, அந்நூலை வேறு யாரேனும் இயற்றினரென்றாவது நாம் கேள்விப்படவில்லை. ஆதலால் இன்னிலை என்பது இந்நூலே என்றும் இந்நூலை இயற்றியவர் பொய்கையாரே யென்றும் நாம் கொள்ளலாம்” என்பது, இன்னிலை முதலிற் பதித்ததும் இரண்டாவது பதித்ததும் வ.உ.சி அவர்களே என்பதும், ஏட்டுப் பிரதியும் ஒன்றே என்பதும், அது மலையையாப் பிள்ளையவர்கள் அளித்தனர் என்பதும், மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து, திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து, பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என அவ்வேட்டின் முதலிலும் முடிவிலும் எழுதப்பட்டிருந்தன என்பதும் நாம் அறிகின்றோம். உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர், என்பதற்கு ஆதாரம் ஒன்று மின்று, வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர்.

உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23 ஆம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5 ஆம் சூத்திரவுரை 12 ஆம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர். இளம் பூரணத்தைநோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது. முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியல் 113 ஆம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5 ஆம் செய்யுள் மேற் கோளாக வந்துள்ளது. யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2 ஆம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற் கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும் வகை ஆங்கில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க.

இன்னிலை

அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி யிலக்கியங்களிற் சிறந்தன சங்ககால இலக்கியங்கள் எனச் சாற்றுவர் புலவர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு எனப்பெயர்பெறும். பத்துப்பாட்டு இன்ன இன்ன என அறிவதற்கு “முருகு பொருநாறு” என்ற வெண்பாத் துணை புரிகின்றது. எட்டுத்தொகை நூல்களை “நற்றிணை நல்ல” என்ற வெண்பா எடுத்துக் காட்டுகின்றது. அவ் வெண்பாக்களிற் கூறிய முறைப்படியே தொகுக்கப்பட்டுப் பின்னர் அச்சிற் பதிக்கப்பட்டு அவைகள் உலவுகின்றன.

பண்டைக்காலப் பாவலர் பாடிய பாக்கள் தாம் எனத் துணிவதற்கு அந் நூல்களிலுள்ள கவி ஒவ்வொன்றும் சான்றாம். கற்றுவல்ல சான்றோர் அவற்றில் ஒன்றையேனும் பழங்காலத்தது அன்று எனப் பகர்வாரிலர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுவதும் அவ்வாறு தெளிவுறப் பதிந்து வெளிவந்தில, வந்தவை சில அக்காலத்தின வல்லவெனத் துணிவதற்கு அவ்வந் நூற்கவிகள் சான்றாய்த் தோன்றா நின்றன. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணையைம்பது, திணை மொழியைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி நானூறு ஆகிய நூற்கவிகள் பண்டைக் காலத்தன வென்னலாம். கற்றோர்க்குக் கருத்து வேறுபாடு தோன்றாது. மற்றை நூற்கவிகளை நோக்கின் ஐயமே உள்ளத்திலெழும், துணிவு பிறவாது. இது நிற்க. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணு முறையுங் காட்டும் ஒரு வெண்பாவும் இதுகாறும் ஐயத்திற்கிடமாகவே உள்ளது. நாலடி நான் மணி நானாற்ப தைந்திணைமுப், பால் கடுகங்கோவை பழமொழி-மாமூலம், இன்னிலை காஞ்சியுடனேலாதி யென்பவே, கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”

இது பதினெட்டு நூல்களையும் காட்டுமாறு ஒரு புலவராற் பாடப்பட்டது எனத் தெரிகிறது. பாட வேறுபாடு பல. வேண்டிய வேறுபாடு ஒன்றை மட்டும் காட்டுகின்றேன். “இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு” என்பது இவ்வேறு பாட்டில் ஒன்று. முன்னது “இன்னிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது “கைந்நிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது. இன்னிலையை நூலாகக் கொண்டால் கைந்நிலை மறைந்து “ஒழுக்க நிலையனவாம்” கீழ்க்கணக்கு என அடை மொழியாகின்றது. கைந்நிலையை நூலாகக் கொண்டால் இன்னிலை மறைந்து “இனிய நிலைமையாகிய காஞ்சி என அடை மொழியாகின்றது.

பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் எவர்க்கும் தோன்றுகின்றது. “இன்னிலை” உள்ளது என்று பலர் கூறினர். கைந்நிலை உள்ளது ஒன்று பலர் கூறினர். ஏட்டிலுள்ளது என முன்னர்க் கூறியவர்கட்கு எடுத்துக் காட்டுபவர் போல “இன்னிலை” என்ற நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதித்தனர். “கைந்நிலை” என்ற நூலை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் பதித்தனர். அவற்றின் வரலாறு சிறிது காண்க.

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “இன்னிலை மூலமும் உரையும்”

Your email address will not be published. Required fields are marked *