Description
மறைந்த நாகரிகங்கள்
முன்னுரை
பழங்காலத்தில் பல நாகரிகங்கள் முன் பின்னாகவோ சம காலத்திலோ தோன்றி வளர்ந்து ஒளி வீசிச் சாதனைகள் நிகழ்த்திப் பின்பு மங்கி மறைந்து போயின. அவை ஆத்திரேலியா தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் பிறந்தன. ஆனால் சிறப்பில் அவற்றுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டு. அவற்றுள் சிலவற்றைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல்.
மறைந்த நாகரிகங்களை அறிவதால் பயனில்லை எனப் புறக்கணிக்கக் கூடாது. நம்முடைய இன்றைய வாழ்க்கை வசதிகளுக்கும் நாகரிகத்துக்கும் சிந்தனைப் போக்குக்கும் முற்கால மக்களின் அறிவும் உழைப்பும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் அடிப்படையாதலால்
நன்றிக்கடனுக்காவது அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
இது வரலாற்று நூல் அன்று; ஆயினும் இன்றியமையாத வரலாற்றுச் செய்திகள் அங்கங்கு இடம் பெறல் தேவைப்படுகிறது.
இந்த நூலை இயற்றப் பிரெஞ்சு, ஆங்கில நூல்களும் இணையத் தகவல்களும் பயன்பட்டன.
வரலாற்றுக் காலத்தைக் கிறித்துவுக்கு முன் (கி.மு.) கிறித்துவுக்குப் பின் (கி.பி.) என்று குறிப்பது பழைய மரபு. இப்போதெல்லாம் சமயச் சார்பற்ற விதமாய்ப் பொது யுகத்துக்கு முன் (பொ.மு.) பொது யுகத்துக்குப் பின் (பொ.பி.) எனக் குறிக்கின்றனர். இந்த முறையை நான் ஏற்றிருக்கிறேன்.
சிறந்த நூல்களை வெளியிடுவதை உயர்ந்த குறிக்கோளாய்க் கொண்டு செயல்படும் “மெய்யப்பன் பதிப்பகம்” என் இந்த நூலைப் பதிப்பிக்க ஏற்றுக் கொண்டமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேன்மேலும் நூல் இயற்றுவதற்கு என்னைத் தூண்டிய “பதிப்பகச் செம்மல்” அமரர் ச.மெய்யப்பன் அவர்களுக்கு நன்றி யார்ந்த நெஞ்சத்துடன் இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
சொ.ஞானசம்பந்தன்.
1. நாகரிகத்தின் தொட்டில்
ஒரு லட்சம் ஆண்டுக்கு முன்பு எத்தியோப்பியா, கீனியா, தான்சானியா நாடுகள் அடங்கியுள்ள கிழக்கு ஆப்பிரிக்காவில் இன்றைய மாந்த இனம் தோன்றிப் பிற கண்டங்களுக்குப் பரவிற்று என்பது உலக ஆய்வறிஞர்களின் ஆதாரபூர்வ ஒருமித்த முடிவு.
அந்த அறிஞர்களுள் குறிப்பிடற்கு உரியவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்;
- கீனிய நாட்டு லீக்கி லூயி (1903–1972)
- அவரின் மனைவியும் ஆங்கிலேயரும் ஆன லீக்கி மேரி (1913-1996)
- அவர்களின் மகன் லீக்கி ரிச்சர்டு (1944)
உலகெங்கும் வாழ்கிற மனிதர் எல்லாரும் ஹொமோ சப்பியேன்சு சப்பியேன்சு என்று அழைக்கப்படுகிற ஒரே இனத்தைச் சேர்ந்தவரே ஆயினும் நாகரிகத்தில் சில பகுதி மக்களே முன்னேறினார்கள். அந்த முன்னேற்றங்கூட சம அளவில் இல்லை.
ஐம்பதாயிரம் வருடத்துக்கு முன்பே மொழி தோன்றிவிட்டாலும் ஏழாயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே நாம் அறிய முடிகிறது.
வரலாற்றைக் கூறுபவை வரலாற்று நூல்கள். கல்வெட்டுகளும் செப்பேடுகளும் குறைந்த அளவில் பயன்படும். எழுத்து ஆவணங்கள்தான் விரிவான வரலாற்றை அறிவிக்கின்றன என்பதால் தலைசிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றான எழுத்துக் கண்டுபிடிப்புக்குப் பின்பே வரலாறு தொடங்குகிறது.
கணக்கற்ற மொழிகள் பேச்சில் மட்டுமே பயன்பட்டமையால், அதாவது எழுத்தைப் பெறாமற் போனதால், முன்காலத்தில் அவற்றைப் பேசியோர்க்கும் அவர்களைப் போன்ற நம் காலத்துத் தமிழகத் தோடர், ஆத்திரேலியப் பூர்வீகர், ஆப்பிரிக்காவில் சில இனத்தவர் முதலியோர்க்கும் வரலாறு இல்லை.
எழுத்துக் கண்டுபிடிப்பு மட்டுமே போதும் என்றுஞ்சொல்ல முடியாது. அந்த எழுத்து மேற்கூறிய ஆவணங்களை உருவாக்கியிருக்க வேண்டும். எந்தெந்த நாட்டு மக்கள் எழுத்தாதாரங்களைத் தோற்றுவித்தார்களோ அந்தந்த மக்களின் வரலாறு தெரிவதற்கான சாத்தியக்கூறு உண்டு.
பொ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே நெடுங்கணக்கை (Alphabet) உருவாக்கும் அளவு கூரிய அறிவு பெற்று இலக்கிய இலக்கணங்களையும் படைத்தனர் தமிழர் என்பது மகிழ்வுக்கு உரிய செய்திதான்; ஆனால் வரலாற்று நூல்களை அவர்கள் இயற்றாமையால் நம் வரலாறு தெரியவில்லை. இலக்கியங்களின் உதவியால் ஒருவாறு வரலாற்றை உருவாக்கல் ஆகாதோ? ஆகாது. சில குறிப்புகளைத் திரட்டலாம்; அவை தொடர் வரலாறு ஆகமுடியாது. மேலும் எது உண்மை எது கற்பனை என்று பிரித்தறிய இயலாதே!
அதேபோல் பொ.மு. 1000 ஆண்டளவில், கண்கவரும் வெண்கலக் கலைப் பொருட்களைத் தயாரிக்கும் அளவுக்கு நாகரிகம் அடைந்திருந்த ஐரோப்பிய கெல்த்து மக்கள் வரலாறு எழுதாமையால் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிட்டவில்லை.
இனி, வரலாற்று ஆவணங்கள் போதுமா என்றால் போதா என்பதே விடை. அவற்றை வாசிக்கத் தெரியவேண்டுமே!
இவ்வாறு பல தடைகள் காரணமாய்ச் சில நாகரிகங்களைப் பற்றி மட்டுமே நிறைவான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நாகரிகங்கள் மட்டுமே இந்த நூலில் இடம் பெறுகின்றன.
நாகரிகக் காலங்களை இரண்டாகப் பிரிப்பது மரபு;
Reviews
There are no reviews yet.