தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு
இந்த பதிவில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு (Erode Venkatappa Ramasamy) சுருக்கமாக வருடம் வாரியாக பார்க்கலாம்.
பெரியார் பிறப்பு
1879
செப்டம்பர் 17 ஈரோட்டில் வெங்கிட்ட, சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார். தமையனார்: ஈ.வெ.கிருஷ்ணசாமி தங்கைகள்: பொன்னுத்தாயி, கண்ணம்மாள்.
1885 வயது 6
திண்ணைப்பள்ளியில் பயின்றார்.
1889 வயது 10
ஈரோடு நகராட்சித் தொடக்கப்பள்ளியில் நாலாம் வகுப்புவரை பயின்றபின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.
1891 வயது 12
தந்தையாரின் மண்டிக்கடை வாணிபத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.
1895 வயது 16
தனது வீட்டுக்கு வரும் புராணச் சொற்பொழிவாளர்களைக் குறுக்குக் கேள்வி கேட்டுத் திணறவைக்கும் சிந்தனை வளம் மிக்க குறும்புக்காரராக இளம் வயதிலேயே விளங்கினார்.
1898 வயது 19
13 வயது நாகம்மையைத் திருமணம் புரிந்தார்.
1900 வயது 21
ஒரு பெண் மகவுக்குத் தந்தையானார். ஆனால், அக்குழந்தை அய்ந்து மாதங்களிலேயே இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.
1901 வயது 22
மண்டிக்கடையில் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுத்து. முன் மாதிரியாக விளங்கினார்.
1902 வயது 23: சமபந்தி போஜனம்
அனைத்து ஜாதி மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார். வேளாள வகுப்புப் பெண்ணுக்கும் நாயுடு வகுப்பு ஆணுக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் செய்வித்தார்.
1904 வயது 25
துறவுக் கோலம்
தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டைவிட்டு வெளியேறி, துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார்.
புரோகிதப் பார்ப்பனர்களின் சுய நலம், கயமை, வைதிகத்தின் பொய்ம்மை ஆகியவற்றை நேரில் கண்டுணர்ந்து தெளிவு பெற்றார்.
தந்தையாரால் அழைத்து வரப்பட்டு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி என்று தன் பெயரிலேயே வாணிபம் நடத்தினார்.
1905-1908 வயது 26-29
பொது வாழ்வில் விருப்பங்கொண்டு மக்கள் நலப்பணி ஆற்றினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது மீட்புப்பணி ஆற்றியதுடன், இறந்த சடலங்களை உறவினர்களே கைவிட்டுச் சென்ற போதும், தன் தோள்மீது சுமந்து சென்று அப்புறப்படுத்தி அரும்பணி ஆற்றினார்.
- காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டங்கொண்டார்.
1909 வயது 30
இளம் விதவையான தனது தங்கையின் மகளுக்கு எதிர்ப்புக்கிடையில் விதவைத்திருமணம் செய்வித்தார். 1911 வயது 32 தந்தையாரை இழந்தார்.
1914-1918 வயது 35-39
காங்கிரஸ் மாநாடுகளை முன்னின்று நடத்தினார். ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.
- ஏறத்தாழ 28 மதிப்புறு பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஈரோட்டில் பெருவணிகராகத் திகழ்ந்தார்.
1919
சமுதாயப்பணி ஆற்றவும், வகுப்புரிமைக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாகக் கருதி, காங்கிரசில் உறுப்பினரானார். நகர் மன்றப் பதவியை விட்டு விலகினார். திருச்சி காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
1920
தான் வகித்துவந்த மதிப்புறு பதவிகள் அனைத்தினின்றும் தானே விலகினார்.
வாணிபத்தைத் துறந்து, காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார். திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டுத் தலைவரால் அனுமதி மறுக்கப்பட்டது.
1921
கதர் ஆடையை உடுத்தினார்
காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று எளிய வாழ்வை மேற்கொண்டதுடன், ஆடம்பர ஆடையைத்துறந்து கதர் ஆடையை உடுத்தினார். தன் அன்னையார் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கதராடை அணியச் செய்தார். கதர் மூட்டையைத் தோளில் சுமந்து, ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார்.
ஈரோடு கள்ளுக்கடை மறியலில், தங்கை கண்ணம்மாள், மனைவி நாகம்மாள் ஆகியோருடன் பங்கேற்றுச் சிறை சென்றார். கள் உற்பத்திக்குக் காரணமாய் அமைந்தவை என்பதால், தனது தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் நீதிமன்றப் புறக்கணிப்புக் கொள்கையின் அடிப்படையில் தன் குடும்பத்துக்கு வரவேண்டிய பெருந் தொகையை நீதிமன்றத்தின் மூலம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இழந்தார். தஞ்சை காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். எனினும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படாமல் தந்திரமாகத் தடுக்கப்பட்டது.
1922
மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில்
இருந்தபோது ‘குடி அரசு‘ எனும் இதழைத் தொடங்கத் திட்டமிட்டார்.
திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆதிதிராவிடர்களை கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்னும் தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.
தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை . சினமுற்ற பெரியார் மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று முழங்கினார்.
1923
சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். நிறைவேற்ற இயலவில்லை.
1924
வைக்கம் போராட்டம்
கேரளத்தில் வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டோர் நடக்க உரிமை கோரி, தீண்டாமையொழிப்புப் போர் நடத்தி இருமுறை சிறை சென்ற பெரியார் இறுதியில் வெற்றி பெற்று ‘வைக்கம் வீரர்‘ என்று புகழப்பட்டார்.
வ.வே.சு. அய்யரால் நிறுவப்பட்ட சேரமாதேவி குருகுலத்தில் நிலவிய ஜாதி வேறுபாட்டை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, அக்குருகுலம் தானே ஒழியும்படி செய்தார்.
திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டில், தானே தலைவராயிருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் தோல்வியுற்றது. நீதிக் கட்சி ஆட்சியின் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.
1925
‘குடிஅரசு’ வார இதழை ஈரோட்டில் 02.05.1925 இல் தொடங்கினார். ‘குடிஅரசு’ பத்திரிகாலயத்தை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஏற்கப்படாததால் மாநாட்டை விட்டு வெளியேறினார்.
பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை ஏற்படுத்த ஓர் இயக்கம் காண வேண்டும் என்ற எண்ணங்கொண்டார்.
நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர் மறைவுக்கு வருந்தினார்.
1926
சுசீந்திரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை ஆதரித்துக் குரல் கொடுத்தார். இந்தி புகுத்தப்படுவதால் வரக்கூடிய கேட்டினை அறிந்து முன்கூட்டியே எச்சரித்தார். நாடெங்கும் சுயமரியாதைச் சங்கங்களை நிறுவினார். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கூட்டிய மதுரை பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். சுயமரியாதை இயக்கம் முகிழ்த்தது.
1927
நாயக்கர் பட்டத்தைத் துறந்தார்
காந்தியாரைப் பெங்களூரில் சந்தித்து உரையாடியபின், கொள்கை மாறுபாடு காரணமாக காந்தியாரிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விட்டொழித்தார்.
- சைமன் கமிஷனை வரவேற்றார்.
- ‘திராவிடன்‘ தினசரியில் சிலகாலம் ஆசிரியராக இருந்தார்.
- திருக்குறள், புத்தர், கொள்கைகளைப் பரப்பினார்.
- நாயக்கர் பட்டத்தைத் துறந்தார்.
1928
- நாகை இரயில்வே தொழிலாளர் கிளர்ச்சியில் சிறை ஏகினார்.
- நீதிக்கட்சியின் தலைவர் பனகால் அரசர் மறைவுக்குக் கவலையுற்றார்.
- ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டைத் தொடங்கினார்.
- வகுப்புரிமையை நிலை நிறுத்திய அமைச்சர். எஸ்.முத்தையா முதலியாரைப் பாராட்டினார்.
1929
பெரியார் தாடி
- செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
- மலேயாவில், நாகம்மையாருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சுயமரியாதைக் கொள்கையைப் பரப்பினார்.
- 1930 மலேயாவிலிருந்து திரும்பும் போது கப்பலில் தாடி வளர்க்க நேர்ந்தது.
- ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தினார்.
- ‘குடும்பக் கட்டுப்பாட்டை’ விளக்கும் வகையில் ‘கர்ப்ப ஆட்சி’ என்ற நூலை வெளி யிட்டார்.
- ‘மார்க்ஸ் ஏங்கல்ஸ்’ அறிக்கையையும், ‘லெனினும் மதமும்’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
- தேவதாசி ஒழிப்பு மசோதாவை ஆதரித்து, அது சட்டமாக நிறைவேறக் காரணமானார்.
1931
- விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தினார்.
- கதர்த்திட்டத்தின் பொருந்தாத் தன்மையை விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.
- அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். கொழும்பு, ஏடன், சூயஸ் கால்வாய், போர்ட் சைட் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
1932
எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ் முதலிய நாடுகளில் 11 மாதம் பயணம் செய்து, கொழும்பு வழியாக நாடு திரும்பினார்.
- 1933 நாகம்மையார் 11.05.1933 இல் இயற்கை எய்தினார்.
- ‘புரட்சி’ வார ஏட்டைத் துவக்கினார்.
சமதர்மப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள எண்ணி திட்டம் தீட்டினார். ஈரோடு சமதர்மத்திட்டம் என்று இது அழைக்கப்பெற்றது.
திருச்சியில் கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தைத் தடையை மீறி நடத்தி வைத்தமைக்காகவும் ‘திராவிடன்’ இதழ்க் கடன் தொடர்பாகவும், “இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?” என்று “குடிஅரசில்” தலையங்கம் எழுதியதற்காகவும் கைது செய்யப்பட்டு சிறை ஏகினார்.
1934
‘பகுத்தறிவு‘ வார ஏட்டைத் துவக்கினார். பகுத்தறிவு தினசரி இதழை சில காலம் நடத்தினார். ‘பகுத்தறிவு’ வார ஏட்டில் முதன் முதலாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் புகுத்தினார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் பெரியாரை ஈரோட்டில் சந்தித்து உரையாடினார்.
1935
ஈ.வெ.ரா. வேலைத்திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டதால், பெரியார் நீதிக்கட்சியை தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். ‘பகுத்தறிவு’ வார ஏடு நிறுத்தப்பட்டு, மாத ஏடாக வெளிவந்தது. ‘விடுதலை’ இதழ் வாரம் இருமுறை ஏடாக வெளிவரத் துவங்கியது. குடிஅரசு மீண்டும் வார ஏடாக வரத் தொடங்கியது.
1936
- பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மையார் 28.07.1936இல் இயற்கை எய்தினார்.
- நீதிக்கட்சியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்
1937
டாக்டர்.சி.நடேசனார் 18.02.1937 இல் மறைவுற்றதற்குப் பெரிதும் வருந்திக் ‘குடிஅரசி’ல் இரங்கலுரை தீட்டினார்.
தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றுக் காங்கிரஸ் வெற்றிபெற்றது. எனினும் உடனடியாகப் பதவி ஏற்க காங்கிரஸ் முன்வராததால், கவர்னரின் வேண்டுகோளின்படி ஜஸ்டிஸ் கட்சியினரின் இடைக்கால ஆட்சி சிறிது காலம் நடைபெற்றது. பின்னர் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்க முன்வந்தது. ராஜாஜி, காங்கிரஸ் முதலமைச்சராகப் பதவி ஏற்று இந்தித் திணிப்பு , கல்வி ஒழிப்பு போன்ற தமிழர் விரோத ஆட்சியை நடத்தினார். இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை ஆற்றினார்.
1938
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டார்.
இந்தித்திணிப்பை எதிர்த்துப் பெரும்போர் மூண்டது. இந்தியை எதிர்த்துத் தமிழர்பெரும் படை சென்னை நோக்கி அணிவகுத்துச் சென்று திருவல்லிக் கேணி கடற்கரையை அடைந்தது. கடற்கரையில் கூடிய பெருங்கூட்டத்தில் “தமிழ்நாடு தமிழருக்கே!” என்று பெரியார் முழங்கினார்.
- சென்னையில் கூடிய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 13.11.1938 இல் ‘பெரியார்‘ என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பல்லாயிரவர் கைதாகிச் சிறை ஏகினர். பெரியார் 2 ஆண்டுச் சிறைத்தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருக்கும் போதே நீதிக்கட்சித் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் சிறைசென்ற பெரியார் விடுதலையானார். சிறை மீண்டதும் “திராவிட நாடு திராவிடருக்கே!” என்று குரலெழுப்பினார்.
1940
நீதிக்கட்சியின் செயலாளர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மறைவுக்குப் பெரிதும் துயரடைந்தார். வட இந்தியப் பயணத்தை மேற்கொண்ட பெரியார் பம்பாயில் ஜின்னாவைச் சந்தித்து உரையாடினார். அம்பேத்கரும் உடனிருந்தார். காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகிய நிலையில் மாற்று அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர் வேண்டியும், பதவி ஏற்கப் பெரியார் மறுத்தார்.
1941
எம்.என். ராய் சென்னையில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்.
- பெரியார், முயற்சியால் தென்னிந்திய ரயில்வே உணவு விடுதிகளில் ‘பிராமணாள்‘ ‘ இதராள்‘ என்று ஜாதி பேதம் காட்டுவது ஒழிந்தது.
1942
தம் குழுவினருடன் ஸ்டாபோர்டு கிரிப்சை 30.03.1942 இல் சந்தித்து தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.
இரண்டாம் முறையாக கவர்னர் வேண்டியும் அமைச்சரவை அமைக்க மறுத்தார்.
1943
பெரியார் அவர்களை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டின் பிரதிநிதி, சர். வில்லியம்ஸ் பிலிப்ஸ் சந்தித்து உரையாடினார்.
சோதனைக் குழாயில் எதிர்காலத்தில் குழந்தை உருவாக்கப்படும் என்று சுயசிந்தனையில் தோன்றிய தன் கருத்தை உலகுக்கு அறிவித்தார்.
உலகில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றிய பெரியாரின் சிந்தனைகளை விளக்கும் “இனி வரும் உலகம்” எனும் நூல் வெளியிடப்பட்டது.
தமிழிசை இயக்கத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்.
தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயர், பெரியார் அவர்களால் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது.
1944
சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயர், பெரியார் அவர்களால் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது.
இந்து மகாசபைத் தலைவர் மூஞ்சேயைச் சந்தித்து உரையாடினார்.
கல்கத்தாவில் எம்.என்.ராய் அவர்களின் ‘ராடிகல் டெமாக்ரடிக் கட்சி’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கான்பூரில் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
1945
- திருச்சியில் திராவிடர் கழக மாகாண மாநாட்டை நடத்தினார்.
- கருஞ்சட்டைத் தொண்டர்படை என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
- ஈரோட்டில் ‘ஜஸ்டிசைட்‘ என்ற ஆங்கில இதழைத் துவக்கினார்.
1946
திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டு பெரியாரால் அங்கீகரிக்கப் பட்டது.
மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுப்பந்தல் பார்ப்பனர் தூண்டுதலால் எரிக்கப்பட்டுக் கலவரம் மூண்டது.
இந்திய அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்பட்ட முறையைப் பெரியார் எதிர்த்தார்.
ஆகஸ்ட் 15 ‘சுதந்திர நாள்’ அன்று; துக்கநாளே என்று அறிவித்தார்.
1947
- ஆகஸ்ட் 15 ‘சுதந்திர நாள்’ அன்று; துக்கநாளே என்று அறிவித்தார்.
- ஜூலை 1-ஆம் நாள் நாடெங்கும் ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ கொண்டாடச் செய்தார்.
- கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு கூட்டினார்.
1948
- கருஞ்சட்டைப்படை தடைசெய்யப்பட்டு அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.
- இந்தி மீண்டும் திணிக்கப்பட்டதால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போர் துவங்கியது.
- கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரியாருக்குக் கருப்புக் கொடி காட்டியதால், கழகத் தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்.
- ஈரோட்டில் பெரியார் கூட்டிய திராவிடர் கழக ஸ்பெஷல் மாநாட்டில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து திரு.வி.க விடுதலை முழக்கமிட்டார்.
- தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற திராவிடர் கழக மாநாட்டினை நடத்தினார்.
1949
திருக்குறள் மாநாடு
- திருக்குறள் மாநாடு நடத்திப் பாமரரும் அந்நூலை அறியும் வண்ணம் பரப்பினார்.
- திருவண்ணாமலையில் கவர்னர் ஜெனரல் சி.ராசகோபாலாச்சாரியாரைச் சந்தித்து உரையாடினார்.
- மணியம்மையாரை 09.07.1949 இல் திருமணம் புரிந்து கொண்டார்.
- உடுமலைப்பேட்டையில் தடை உத்தரவை மீறிக் கைதானார்.
- இந்திய அரசமைப்புச்சட்டம் 26.11.1949 இல் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தார்.
- அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் எனும் தனி அமைப்பை ஏற்படுத்தினார்.
1950
- ‘பொன்மொழிகள்’ என்ற நூலுக்காகச் சிறை ஏகினார்.
- ஜனவரி 26 குடிஅரசு நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடிக்கக் கோரினார்.
- அரசியல் சட்டம் ஒழிக! என்று முழங்கினார்.
- வடநாட்டவர் துணிக்கடை, உணவுக்கடைமுன் மறியல் செய்தார்.
- வகுப்புரிமை செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து திருச்சியில் வகுப்புரிமை மாநாடு நடத்தினார்.
- மத்திய அமைச்சர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்து எதிர்ப்பைக் காட்டும்படி அறிவுறுத்தினார்.
- பெரியாரின் தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி 04.02.1950இல் இயற்கை எய்தினார்.
1951
பெரியாரின் வகுப்புரிமைப் போர் வெற்றிபெற்று, வகுப்புரிமை வழங்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது.
கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே திருச்சியில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்
திருச்சி ரயில் நிலையத்தில் இந்திப் பெயர்ப்பலகையை தார் கொண்டு அழித்தார்.
1952
கொல்லைப்புற வழியில் முதலமைச்சரான ஆச்சாரியார், குலக் கல்வித் திட்டத்தினைக் கொண்டுவந்தார். பெரியார் வெகுண்டெழுந்தார்.
திருச்சி ரயில் நிலையத்தில் இந்திப் பெயர்ப்பலகையை தார் கொண்டு அழித்தார்.
சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்தைப் பதிவு செய்தார்.
திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தென்பகுதி ரயில்வே தொழிலாளர் யூனியன் போன்றவற்றைத் துவக்கினார்.
1953
- சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது என்று முழங்கினார்.
- நாடெங்கும் கணபதி உருவப் பொம்மையை, புத்தர் விழாக் கொண்டாடி, பொதுக்கூட்டத்தில் உடைக்கும்படி வேண்டினார்.
- தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பிள்ளையார் பொம்மைகள் உடைந்து நொறுங்கின.
- சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு வெகுண்டெழுந்தார்.
- இரண்டாம் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் நாளில் ரயில் நிலையங்களில் இந்திப் பெயர்ப்பலகையை தார்கொண்டு அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.
- ஈரோடு சண்முகவேலாயுதத்தின் “ஈரோட்டுப்பாதை” எனும் வார இதழைத் துவக்கிவைத்தார்.
குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு
1954
மூன்றாம் முறையாக ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.
ஈரோட்டில் புத்தர் கொள்கை மாநாடு; குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு ஆகியவற்றை நடத்தினார்
நாகையில் திராவிடர் கழக மாநாட்டில் குலக்கல்வி ஒழிப்பு பிரச்சாரப்படை அமைக்கப்பட்டு பயணம் தொடங்கியது.
குலக்கல்வித் திட்டத்திற்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பினால் ராஜாஜி பதவி விலகியபின், காமராசர் முதலமைச்சர் ஆனார்.
குலக்கல்வித் திட்டத்தை காமராசர் ஒழித்தார். காமராசர் ஆட்சியை பெரியார் ஆதரித்தார்.
பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்தர் மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார் , அங்கு அம்பேத்கர், இலங்கை புத்தமத அறிஞர் மல்லல சேகரா ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.
இரண்டாம் முறையாக மலேயா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நாடெங்கும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தினார்.
நடிகவேள். எம்.ஆர்.ராதா “இராமாயணம்” நாடகம் நடத்தி இராமனின் இழிசெயலை அம்பலப்படுத்தினார். இராமாயண நாடகத்தின் விளைவாக அரசினரால் நாடகத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1955
இந்தித் திணிப்பை எதிர்த்து, தேசியக் கொடியை எரிக்கும் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.
காமராசர் உறுதிமொழியை ஏற்று, அக்கிளர்ச்சியை ஒத்திவைத்தார்.
1956
- தட்சிணப்பிரதேசம் எனும் கேடான அமைப்பைக் கைவிடுமாறு காமராசர், நேரு ஆகியோரைத் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார்.
- காமராசர் தட்சிணப் பிரதேச அமைப்பை நிராகரித்தார்.
- இராமன் பட எரிப்புக் கிளர்ச்சி தொடர்பாகப் பெரியார் கைது செய்யப்பட்டார்.
- மொழிவாரிப் பிரிவினைக்குப்பின் தனித் தமிழ்நாடு பிரிவினைக் கொள்கையை வலியுறுத்தினார்.
1957
திருச்சியில் வினோபா பாவேயைச் சந்தித்து உரையாடினார்.
திருச்சி கலெக்டர் மலையப்பன் மீது பார்ப்பன நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராகப் பேசியதாக கோர்ட் அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு பெரியார் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பெரியார், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்டேட்மென்டை தாக்கல் செய்தார்.
தஞ்சையில் 03.11.1957 இல் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்டன.
அம்மாநாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தும் கிளர்ச்சியை அறிவித்தார். அக்கிளர்ச்சியில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். சில ஆயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர். சிறையில் இருவரும், விடுதலையானவுடன் உடல்நலிவுற்று இருபது பேரும் மாண்டனர்.
பார்ப்பனருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தால் ஆறுமாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையேகினார்.
1958
சோசலிச இயக்கத் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா பெரியாரைக் கண்டு உரையாடினார்.
பல மாதங்களாக சென்னை முரளி கபே முன் நடை பெற்ற பிராமணாள் பெயர் அழிப்புக் கிளர்ச்சி வெற்றிபெற்றது.
திராவிடர் கழகத்தின் சார்பில் பல மாவட்டங்களில் நடைபெற்ற சுதந்திரத் தமிழ்நாடு மாநாடுகளில் பெரியாரும் ‘நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் கலந்து கொண்டனர்.
திருச்சி பெரியார் மாளிகையில் தோழர் கி. வீரமணி மோகனா வாழ்க்கை ஒப்பந்தத்தை 7.12.58இல் பெரியார் நடத்தி வைத்தார்.
புரட்சிக் கவிஞர் வாழ்த்துக் கவிதை வழங்கிச் சிறப்பித்தார்.
1959
வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லக்னோ , டில்லி , கான்பூர், பம்பாய் முதலிய இடங்களுக்குச் சென்று பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரம் செய்தார்.
முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் நடத்திய ‘ஆகாஷ்வாணி’ பெயர் ஒழிப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கினார்.
நாத்திகர்
1960
தமிழ்நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தி தமிழ்நாடு நீங்கிய தேசப்படத்தை எரிக்கும் கிளர்ச்சியை நடத்தி சிறை ஏகினார்.
பல்லாயிரவர் தேசப்படத்தைக் கொளுத்தி சிறை சென்றார்கள். 1961 பொதுத் தேர்தலில் காமராசரை ஆதரிக்க வேண்டும் என்று பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
- சென்சஸ் கணக்கெடுப்பின் போது “நாத்திகர்” என்று கூறும்படி திராவிடர்கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
1962
பொதுத்தேர்தலில், உடல்நலம் குன்றிய நிலையிலும், கடுமையாக உழைத்து, காமராசருக்கு ஆதரவு திரட்டி வெற்றியைத் தேடித் தந்தார்.
சென்னையில் ‘வாக்காளர்’ மாநாட்டை நடத்தினார்.
தோழர் கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்துக்கு முழுநேரத் தொண்டராக வர இசைந்தமையறிந்து மகிழ்ந்து, பெரியார் அவரைப் பாராட்டி ஆகஸ்ட் 10ஆம் நாள் விடுதலையில் “வரவேற்கிறேன்” என்று தலையங்கம் தீட்டினார்.
1963
கட்சிப்பணிக்காக, முதலமைச்சர் பொறுப்பை விட்டு விலகத் தீர்மானித்த காமராசருக்கு பெரியார் தனது எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் விலகுவது, ‘தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் , காமராசருக்கும் தற்கொலையாக முடியும்’ என்று முன் கூட்டியே தந்தி மூலம் அறிவித்தார்.
பெரியார் திடலில் ‘ராதா மன்றம்’ திறப்பு விழாவை நடத்தினார்.
1964
நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.
புரட்சிக்கவிஞர் 21.04.1964இல் மறைவுக்குப் பெரிதும் வருந்தினார்.
இராமாயணம்’ கொளுத்தப்பட்டது.
1965
- பெரியார் வேண்டுகோளின்படி திராவிடர் கழகத்தினரால் நாடெங்கும் ‘ இராமாயணம்’ கொளுத்தப்பட்டது.
பார்ப்பனர், பத்திரிகைகாரர்கள் தூண்டுதலின் பேரில் இந்தி எதிர்ப்புப் போரில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்தார்.
பெரியார் அளித்த நன்கொடையால் கட்டப்பட்ட திருச்சி ஈ.வெ.ரா. அரசினர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் பக்தவத்சலம் திறந்து வைத்தார்.
1966
சங்கராச்சாரியாரை பகிஷ்கரிக்க அவர் சென்ற இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டச் செய்தார்.
‘பசுவதை’ என்ற பெயரால் டில்லியில் காமராசர் வீட்டுக்குத் தீ வைக்க முயன்ற பார்ப்பனக் கூட்டத்தைக் கண்டித்து, காமராசர் கொலை முயற்சிக் கண்டன நாள் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினார்.
1967
பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அறிஞர் அண்ணா , முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பார்ப்பன சூழ்ச்சிக்கு ஆட்படாமல், ஆட்சியை பெரியாருக்குக் காணிக்கையாக்கினார். பெரியார் ஆதரவு நல்கினார். பெரியார் மகிழும்வண்ணம்,
- சுயமரியாதைத் திருமணச் சட்ட முன்மொழிவு,
- தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்,
- இந்தியை ஒழிக்கும் வகையில் இரு மொழித்திட்டம்
ஆகிய முப்பெருஞ் சாதனைகளை அண்ணாவின் ஆட்சி நிகழ்த்தியது.
- இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை படிக்க
தஞ்சை மாவட்டம் விடயபுரத்தில் 24,25.05.1967 நாட்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு உலகுக்கு அளிக்கப்பட்ட புகழ்பெற்ற கடவுள் மறுப்பு வாசகம் வருமாறு;
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; – கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”
திருச்சியில் பெரியார் சிலையை காமராசர் திறந்தார்.
சுயமரியாதைத் திருமணச்சட்டம்
1968
சுயமரியாதைத் திருமணச்சட்டம் ஜனவரி 17இல் நடைமுறைக்கு வந்தது கண்டு மகிழ்ந்தார்.
தமிழ் நாடெங்கும் டில்லி ஆதிக்கக் கண்டன நாள் கடைப் பிடிக்கச் செய்தார்.
வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லக்னோவில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாட்டில் உரையாற்றினார்.
1969
தமிழ்நாடு பெயர் மாற்றம் 14.01.1969 முதல் நடைமுறைக்கு வந்தது குறித்து மகிழ்ந்தார்.
அறிஞர் அண்ணா மறைவுக்குப் பெரிதும் வருந்தி இரங்கலுரை பகன்றார்.நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இது 4 கோடி மக்களையும் பொறுத்த பரிகாரம் காண முடியாத துக்க சம்பவமாகும் என்று குறிப்பிட்டார்.
ஜாதி இழிவை ஒழிக்க கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அண்ணா மறைவு இரங்கல் கூட்டத்தில் பெரியார், இந்திராகாந்தி, ராஜாஜி ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றினர்.
1970
‘உண்மை ‘ எனும் பகுத்தறிவு இதழைத் துவக்கினார்.
- முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோளுக்கு இணங்கி கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தை ஒத்திவைத்தார்.
சட்டநாதன் தலைமையிலான பிற்பட்டோர் நலக் குழுவினர் பெரியாரைச் சந்தித்து அரிய ஆலோசனைகளைப் பெற்றனர்.
உலகநாடுகள் அவையைச் சேர்ந்த கல்வி , அறிவியல் பண்பாட்டுக் கழக மன்றத்தினரால்* 27.06.1970 இல் (UNESCO) பெரியார் அவர்களுக்கு ‘விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
பம்பாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.
டாக்டர் எஸ்.சந்திரசேகர் பெரியாரைக் கண்டு குடும்பநலத் திட்டம் பற்றி உரையாடினார்.
1971
இராமன் உருவப் பொம்மை செருப்பால் அடிக்கப்பட்டது
“கலைஞர் ஆட்சியில் ” அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பெரியாரின் தங்கை ‘குடிஅரசு’பதிப்பாசிரியரான கண்ணம்மாள் 25.02.1971 இல் மறைந்தார்.
- சேலத்தில் பெரியார் கூட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இராமன் உருவப் பொம்மை செருப்பால் அடிக்கப்பட்டது.
பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவெற்றி பெற்று கலைஞர், மீண்டும் முதலமைச்சர் ஆனார். பெரியார் மகிழ்ந்தார்.
“மாடர்ன் ரேஷனலிஸ்ட்” என்னும் ஆங்கில இதழைத் துவக்கினார்.
1972
ஈழத் தந்தை செல்வநாயகம் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரை 22.02.1972 இல் சந்தித்து உரையாடினார்.
டில்லி அரசின் தாமிர பத்திர விருதை இந்திரா காந்தி வழங்க, அதனை கலைஞர் மூலம் பெற்றார்.
தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு பெரியார் வெகுண்டெழுந்தார்.
1973
பெரியார் பிறந்தநாளில் எம்.ஜி.ஆர் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரைச் சந்தித்து நேரில் வாழ்த்தியதுடன் ரூ 5000/ பணமுடிப்பும் அளித்தார்.
மதுரையில் கருஞ்சட்டைப்படை மாநாடு நடத்தினார்.
கடும் குளிரில் தமிழகமெங்கும் பிரச்சாரத் தொடர்பயணம் மேற்கொண்டார்.
- சென்னையில் நடத்திய இழிவு ஒழிப்பு மாநாட்டில் கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 24.01.1974 இல் நடத்தப்போவதாக அறிவித்தார்.
சென்னை தியாகராயர் நகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில் 19.12.1973 இல் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
உடல் நலம் குன்றி சென்னை பொது மருத்துவமனையிலும் , பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
பெரியார் மறைவு
கவலைக்கிடமான நிலையை அடைந்து 24.12.1973 அன்று காலை 7.40 மணிக்கு இயற்கை எய்தினார். பெரியார் மறைவுக்கு மாநில அரசே துயரத்தைக் கடைப்பிடிக்கும் என்று முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்தார். அரசுப்பதிவு இதழிலும் (Gazette) பெரியார் மறைவுச் செய்தியை தமிழக அரசு வெளியிட்டு தனிச் சிறப்புச் செய்தது. பெரியார் இயற்கை எய்திய நாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
இலட்சக்கணக்கானோர் தாங்கொணாத்துயரத்துடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அந்தத் துயரக் கடலின் ஊடே பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் பெரியார் வாழ்க! பெரியார் வாழ்க! என்று எழுப்பிய முழக்கம் சோகக் கடலின் உணர்ச்சி வெள்ளம், வீரவணக்கமாக மாற்றப்பட்டது.
அரசு மரியாதையுடன் 25.12.1973 மாலை 5.05 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெரியார் மறைவுக்கு மாநில அரசே துயரத்தைக் கடைப்பிடிக்கும் என்று முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்தார்.
பெரியார் மறைவுக்குப்பின் தலைவராகப் பொறுப்பேற்ற அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்களும், பொதுச் செயலாளரும் “விடுதலை” ஆசிரியருமான கி.வீரமணி அவர்களும் கொள்கை விளக்கை ஏந்தி வழிகாட்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
- இராவண காவியம் – கலைஞர் கருணாநிதி கருத்து
- இராவண காவியம் கதை