இராவண காவியம் – தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
காலத்திற்கும் கருத்துக்கும் ஒவ்வாதனவற்றை – முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கவழக்கங்களை – பழமையை அழித்துப் புதுமையைப் படைக்கும் புத்துலகச் சிற்பி கவிஞனேயாவான். உண்மையான கவிஞன் பண்பாட்டின் சின்னமாகப் – பண்பாட்டின் கருவூலமாக – விளங்குவான்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கவிஞர்களுக்கு நீண்ட நெடுநாள் பாரம்பரியமுண்டு; மரபுண்டு. தமிழ் மொழி காலத்தாலும் கருத்தாலும் மூத்த மொழி. அது, ‘முன்னைப் பழமைக்கும் பழமையதாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய்த் ‘ திகழும் பொற்புடைய மொழி; காலத்தால் முதுமை யெய்தாக் கட்டழகு வாய்ந்த மொழி.
தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டு ஒரு மறுமலர்ச்சி இயக்கம் தோன்றிய நூற்றாண்டு எனலாம். இந்நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு – மறு மலர்ச்சி இலக்கியத்திற்கு – வித்தூன்றியவர் ‘செந்தமிழ்த் தேர்ப்பாகன்’ பாரதி. பாரதிக்குப்பின், செந்தமிழ் இலக்கிய உலகில்,
தன்மான இயக்கத்திற்கும், பகுத்தறிவுக் கொள்கைக்கும், இவற்றிற் கெல்லாம் மேலாகத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்க் கவிதையுல கிற்கும் செயற்கரிய பெருந்தொண்டு செய்தவராகப் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறிப்பிடலாம்.
மாகாவியங்கள்
இருபதாம் நூற்றாண்டு, தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பொற்காலம் எனினும், தமிழில் பாரகாவியங்கள் – மாகாவியங்கள் வெளிவரவில்லை . பாரதியும், பாரதிதாசனுங்கூட மாகாவியங்கள் ஏதும் செய்யவில்லை. இந்நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய நாட்டில் பொதுவாக எந்த மொழியிலும் பாரகாவியங்கள் வெளிவரவில்லை . இலக்கிய நோபல் பரிசு பெற்ற வங்கப் பெருங் கவிஞர் தாகூர்கூட ஒரு பெருங்காவியத்தைச் செய்யவில்லை.
புரட்சிக் கவிஞர் ‘வீரத்தமிழன்‘ என்னும் தலைப்பில்,
தென்றிசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என்றமிழர் மூதாதை என்றமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்.
வஞ்சக விபீடணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறைய இசைச் செவியமுது தரும்புலவன் தன்னை
வெஞ்சமரில் சாதல் வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன் மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்.
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்
கீழ்ச்செயல்கள் விடவேண்டும் இராவ ணன்றன்
ஓர்க்கிசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்
என்று ஓர் அருமையான பாடலைத் – தென்னிலங்கை இராவணன் பற்றியதோர் அழகான படப்பிடிப்பைத் – தந்துதவினார். பின்னர், பாவேந்தர் கருத்துக்கேற்ப, ‘எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர்’ ஆன புலவர் குழந்தை அவர்கள், இராவணனின் ஏற்றம் கூறும் இராவண காவியத்தை இயற்றித் தந்து, இருபதாம் நூற்றாண்டில் மாகாவியங்கள் வெளிவரவில்லை என்ற குறையை நிறைவு செய்தார்கள்.
‘என்றுமுள தென்றமிழால்’, ‘செவிநுகர் தீங்கனிகள் ‘ தந்த கவியரசன் – ஆம்! பன்னீராயிரம் பாடிய கம்பன், ‘ஆசைபற்றி அறைய’ லுற்ற ‘இராமகாதை யில், வீரத் தமிழனை – அரும் பெருந்திறல் வாய்ந்த தென்னிலங்கை இராவணனை, ‘இரக்கமென் றொரு பொருளிலா அரக்கர்’ தம் தலைவனாக்கினான்; இராமனைத் தெய்வமாக்கினான்.
கவியரசன் கம்பன் கற்பித்த மாசினைப் போக்கிப் புலவர் குழந்தை அவர்கள், ‘மாசறு பொன்’னாக, ‘வலம்புரி முத்தாக, ‘மாசிலாத் தமிழ்மாக்கதை’யாக இராவண காவியத்தை இயற்றித் தந்தார். இதனைப் ‘பாவண மல்கும் இராவண காவியம்’ என்றே புரட்சிப் பாவேந்தர் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.
ஆரியப் பண்பாட்டிற்குக் கைலாகு கொடுத்து வரவேற்றுச் செந்தமிழ் மக்களிடையே அதைத் திணிக்க உதவும் ‘இராம காதை’ யைக் கம்பன் இயற்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அவ்வாரியப் பண்பாட்டைத் தடுத்துத் தமிழர் பண்பாட்டைத் திராவிடர் நாகரிகத்தைக் – காக்கும் நோக்கத்தோடு புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் இயற்றி வெளியிட்டார்.
இருபெரும் புலவரும் காவியம் இயற்றினர்.
இருபெரும் புலவரும் காவியம் இயற்றினர். ஒருவர் இராமாயணம்‘ எழுதினார்;
இன்னொருவர் ‘இராவண காவியம்‘ இயற்றினார்.
முன்னவர் ‘ஆரியமாயைக்கு’ ஆட்பட்டவர்; பின்னவர் தமிழ்ப் பண்பாட்டிற்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்;
அது மட்டுமன்று, தமிழினம் – தமிழ்ப் பெருமக்கள் – ஆரியத் திற்கு அடிமைப்படும் இழிநிலை கண்டு இதயம் கொதித்தவர்; கொத்தடிமை நிலைகண்டு குமுறி எழுந்தவர் – காழ்ச்சிந்தை கொண்ட கன்னித் தமிழ்ப் புலவர்.
வான்மீகி இராமாயண மூலத்திலிருந்து கம்பன் தனது இராமாயணக் கதையைப் – பாத்திரங்களைப் – படைத்தான் எனினும், தமிழ்ப் பண்பாடு என்று தான் கருதியதற் கேற்பப் பல மாறுதல்களையும் ஆங்காங்கே செய்து தமிழுணர்வினைக் காட்டியுள்ளான். வருணனைகளும், சொல்லாட்சியும் விரவியுள்ள கம்பனின் சுவைமிகு செந்தமிழ்ச் செய்யுட்களை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட நம்மால் இயலாது.
ஆயினும், பன்னீராயிரம் பாடிய பாட்டரசன் கம்பன் எழுப்பாத இன்றமிழ் உணர்வை எழுப்பியவர், தமிழின் அருமையை – இனிமையை – ஏற்றத்தைப் – பெருமையைத் – தனிப் பெருந்தன்மையை உணர்த்தியவர், கம்பனின் இராமாயணத்தை இராவண காவியமாக மாற்றியமைத்த தன் மூலம் செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்தவர் புலவர் குழந்தை அவர்கள்.
இராவண காவியம், பெருங்காப்பிய நிலைகளைச் சிறிதளவும் வழுவிடாமல் மரபு நிலைகளை மாண்புறக் காத்து நிற்கிறது. இது, தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களையும், இராமாயணம், பாரதம், காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம் ஆகியவற்றின் இலக்கிய நயங்களையும் விஞ்சிய கலைநயமும், காவிய அழகும், உணர்ச்சிப் பெருக்கும், ஓசையின்பமும் கனிந்து மிளிரும் ஒரு பெருங்கருவூலமாகத் திகழ்கிறது. இந்நூல், சொல்லோசைப் பாடல்களின் சுரங்கமாக விளங்குகிறது.
இராமாயணத்தின் காவிய நாயகன் இராமன், இராவண காவிய நாயகன் இராவணன்.
எனவே, இராவண காவியம் தெற்கேயிருந்து எழுகிறது. ஐந்து காண்டங்கள் – 57 படலங்கள் – 3100 பாடல்களும் தமிழ் தமிழ் என்றே முழங்குகின்றன. இந்நூல் ஒரு கற்கண்டுக் கட்டி. இராவண காவியம் தெவிட்டாத தேனாற்று வெள்ளம். அதில் சில துளிகளை நாம் இங்கே சுவைத்து மகிழலாம்.
பழந்தமிழகத்தின் கல்விநிலை பற்றி ஆசிரியர் பாடுகையில், தாய்மொழிப் படலத்தில்,
ஏடுகை யில்லா ரில்லை
இயலிசை கல்லா ரில்லைப்
பாடுகை யில்லா ரில்லைப்
பள்ளியோ செல்லா ரில்லை
ஆடுகை யில்லா ரில்லை
அதன்பயன் கொள்ளா ரில்லை
நாடுகை யில்லா ரில்லை
நற்றமிழ் வளர்ச்சி யம்மா.
தமிழென திருகட் பார்வை
தமிழென துருவப் போர்வை
தமிழென துயிரின் காப்புத்
தமிழென துளவே மாப்புத்
தமிழென துடைமைப் பெட்டி
தமிழென துயர்வுப் பட்டி
தமிழென துரிமை யென்னத்
தனித்தனி வளர்ப்பர் மாதோ.
நாடெலாம் புலவர் கூட்டம்
நகரெலாம் பள்ளி யீட்டம் வீ
டெலாம் தமிழ்த்தாய்க் கோட்டம்
விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம்
பாடெலாம் தமிழின் தேட்டம்
பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்
மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம்
வண்டமி ழகத்து மாதோ.
என்று பாடிப் பாடிப் பரவசமடைகிறார். மற்றும், தமிழ்மொழியின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட் டத்தோடு பாடியுள்ளார். விஞ்ஞானத்தைத் தமிழில் சொல்ல முடியுமா என்று கேட்பவர்களுக்கு, மொழியியலையே தனித் தமிழ்ப் பாவடிவில் இன்னோசை பயின்ற எழிலோவியமாக்கிக் காட்டுகிறார்.
அடுத்து இராவணன் கல்வி பயின்ற முறையினைக் கூறும் பகுதி மிகுதியும் சுவை பயப்பதாக உள்ளது:
தமிழென ஆசான் சொல்லத்
ததும்பிய மழலை வாயால்
தமிழ்மொழி யென்னும், பின்னும்
தமிழ்மொழி என்ன வெந்தாய்!
தமிழ்மொழி யெமது சொந்தத்
தாய்மொழி யென்னும் பின்னும்
தமிழக மென்ன எங்கள்
தாயகம் என்னும் மாதோ.
அமிழ்துணும் என்னில் அன்னை
அப்பவே தமிழுண் டேனிவ்
வமிழ்துவேண் டாம்போ வென்னும்;
அமிழ்தது தமிழ்தா னென்ன
அமிழ்தமிழ் தமிழ்தா மன்னாய்!
ஆமது தமிழ்தா னென்னும்
தமிழ்தமிழ் தாக வுண்டு
தமிழ்மகன் வளரு மாதோ.
எப்படி இராவணன் கல்விகற்ற பாங்கு! நெஞ்சம் மறவாப் பாடல்களாக இவை கொஞ்சி மகிழவில்லையா?
அடுத்து, இராவணன் மண்டோதரியான வண்டார் குழலியைக் காணும்போது, புலவர் குழந்தையின் துள்ளலோசைப் பாடல்கள் முகிழ்ப்பதைப் பார்ப்போம்:
தண்டாமரை மலரோகனி
தமிழோதமி ழகமோ
உண்டோர்மன முள்ளூற
வுவக்குந்தெளி தேனோ
கண்டோகனி யோவேறெது
காணோமென வேதான்
வண்டார்குழல் என்றேபெயர்
வைத்தார்மன மொத்தே
என்றும்,
பாவைக்குல மெல்லாமவள்
படிமைக்குற வாடும்
கோவைக்குல மெல்லாமவள்
குதலைக்கிடை நாடும்
காவிக்குல மெல்லாமவள்
கண்ணுக்குற வாடும்
பூவைக்குல மெல்லாமவள்
புள்ளுக்குல மாகும்!
என்றும்,
புள்ளுக்குல மெல்லாமவள்
பூவைக்குழல் கூடும்
எள்ளுக்குல மெல்லாமவள்
இமைகட்கிடை நாடும்
வள்ளைக்குல மெல்லாமவள்
அள்ளுக்குற வாடும்
கிள்ளைக்குல மெல்லாமவள்
கிளவிக்குல மாகும்.
என்றும் பாடிக் காட்சிப் படலத்தை நம் கருத்தில் பதித்துவிடு கிறார். இவ்வாறு பாவின் தரத்திலும், கதையின் அமைப்பிலும் நூல் சிறந்தோங்குகிறது.
ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதை,
தஞ்சமய நெறிகளைச்செந்
தண்மையுட னறனிழுக்காச்
சால்பு தாங்கும்
நெஞ்சுடைய வறிவரொடு
புலவருமாங் கிருக்குமென
நினைக்கு மாறு
விஞ்சியதஞ் சூழ்ச்சியினாற்
சுவையொடுகற் பனைக்கதையா
விளம்பி யந்த
நஞ்சனைய வஞ்சகர்கள்
மன்னரையு மவர்களொடு
நம்பச் செய்தார்.
என்று குறிப்பிடுகிறார். இப்படிப் புகுந்தவர்கள் தமக்கேயுரிய புலைத் தொழிலையும் கொலைத் தொழிலையும் தொடங்கினர்.
முதலில் இராவணன் தங்கையான (சூர்ப்பநகை) காமவல்லி ஆரிய ரால் கொல்லப்படுகிறாள். இக்கொலை நிகழ்ச்சி கண்ட தமிழ் மகளிர்குலம் தாங்கொணாச் சினங்கொண்டு கொதித்தெழுகிறது. இங்கே புலவர் குழந்தையின் பாடல்களில் செந்தமிழ்ச் சொற்கள் தீப்பந்தங்களாகவே மாறிச் சுடுவதைப் பாருங்கள்:
பெற்ற கொடும்பாவி!
பெண்கொலைசெய் பாவிதனைப்
பெற்ற பெருவயிற்றைப்
பீறிச் சிதைத்திடுவாய்!
மற்றுநீ பெண்ணன்றோ
மானங்காத் தேமாள்வாய்!
அற்றே லுலகளவு
மவதூறு நீங்காதே .
எம்மை யுருக்குலைத்தே
இந்நிலைக்கா ளாக்கியவச்
செம்மையொன் றில்லாத
தீயவனன் னாட்டுறையும்
அம்மைமீ ரக்கைமீ)
ராமா ரியப்பெண்காள்!
உம்மையுமப் பாவி
யுருக்குலைக்க வஞ்சுவனோ?
வம்புக்கு வந்தாளோ
மாபாவீ யுன்கொடிய
அம்புக்கு வேறிடமின்
றாயதோ வன்றியுனை
நம்பிக்கை காட்டி
நலங்கொண் டகன்றாளோ?
கம்புக் கதிரிருக்கக்
காழி பிளந்தாயே!
என்று வரும் உருக்குலை படலப் பாடல்கள் உண்மையிலேயே நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகின்றன.
இதன் பிறகு, சீதை, தமிழர் போர்முறைப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்படுகிறாள். இராமன் தன் ஆரியப் படையொடு தெற்கு நோக்கி வருகிறான். பீடணனோடு கள்ள நட்பு ஏற்படு கிறது. போருக்கு முன் இராவணன் சபை கூடுகிறது.
அங்கு போர் எழுச்சிப் பாடல்கள் எரிமலை வெடித்துக் கக்கும் தீப்பிழம் பாகவே மாறிவிடுகின்றன. சேயோன் (இந்திரசித்) பேசுகிறான்:
அத்தைக்குச் சினைகொன்று பகைதேடிக் கொண்ட
அறிவற்ற கொலைகார வடவோரை யீதோ
குத்துக்குப் பலநூறு குமுறுக்குப் பலவாக்
குலைவிண்ட தெங்கென்னத் தலைகொய்து வருவேன்
முத்துக்கு வளையேறி முகம்வைத் துறங்க
முருகத்த னையுமுள்ள முருகப் படிந்து
தித்திக்குந் தேனுண்டு வரிவண்டு பாடும்
செந்தா மரைப்பொய்கை சூழ்பண்ணை நாடா!
அப்பாநீ யிப்போதே போவென்று சொன்னால்
அறிவற்ற வடவோரை யொருசுற்றி லேயே
தப்பாமற் கழுகுண்ண விரையாகத் தருவேன்
தந்தேயுன் திருமுன்னர் விரைந்தோடி வருவேன்
ஒப்பேது மில்லாது திசையெட்டுந் தேடி
ஒளிமிக்க கதிரோனும் உறவுக்கு நாட
எப்போது மனமொப்ப தெனமிக்க வாடி
எதிரின்றித் தனிநிற்கு மிணையற்ற புகழோய்!
இப்படியே பாடல்கள் செல்கின்றன. இந்தப் பாடல்களின் வெற்றிக் குறிப்பினையும் சொற்சிற்பத்தையும் தமிழிலக்கியங்களில் வேறெங்குங் காண்பதரிது. இச்செஞ்சொற் கவியின்பத்தில் மூழ்கிzத் திளைக்காதார் யாரே?
அடுத்துப் போர் நடைபெறுகிறது. போரில் இராவணன் மகன் மடிந்து படுகிறான். அவன் அன்னை வண்டார்குழலி உணர்விழந்து புலம்புகிறார்:
தனியா யலர்ந்த மலர்வா யெழுந்து
தகவே கசிந்த தெளிதேன்
கனிபா லினைந்து படவே யுயர்ந்து
கலைதா விவந்த தமிழர்
அனைபோ லுவந்து முடிசூ டவிந்த
வரசா ளவந்த மகனே!
இனியா ரைநம்பி யுயிர்வாழ் வனுந்த
னியலோ டமைந்த வெளியேன்.
படிமேல் நடந்து விளையா டிமுந்து
பசியா கவந்து பரிவாய்
மடிமீ தமர்ந்து தமிழ்வாய் திறந்து
வடிதே னுகர்ந்து மழலை
நெடிதே மொழிந்து மதிபோல் வளர்ந்து
நிலமா ளநின்ற மகனே!
கடிதே சினந்து வடவோ னெறிந்த
கணையா லிறந்த தறமோ?
கொலைவா ணர்விட்ட கணைமார் புதொட்ட
குறியா லேபட்ட மகனே
மலைவா ணரிட்ட குலைவா ழைபட்ட
வடிதே னைவிட்ட மலர்போல்
கலைவா ணரட்ட விழிமீ துப்பட்ட
களமீ துசொட்ட கலுழி
அலைவா ணர்விட்ட கலமீ துப்பட்ட
வலையோய் வுபட்ட தடடா!
ஆகா! இந்தப் பாடல்களைப் பயிலும்போது நாமே வண்டார் குழலியாகிக் கண்ணீ ர் விடுகிறோமே! ஆம்! புலவர் குழந்தையின் இந்தப் பாடல்கள் நம்மையே அழவைத்து விடுகின்றன.
இப்படி எத்தனை எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். பாடல்கள் அத்தனையும் ஒளிமுத்துக்கள்.
நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால் இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம். வையகத்திற்கு வாழ்நெறி யுணர்த்த வந்த ‘வள்ளுவம்’ வாழ்விலக்கணம் என்றால், அவ்வாழ்விலக்கணத்தின் முழுநிறை வாழ்விலக்கியம் புலவர் குழந்தையவர்களின் இராவண காவியம்.
இந்த நூலுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரும்பெரும் ஆராய்ச்சி முன்னுரை வழங்கியுள்ளார்கள். அதில் அவர்கள் இந்நூல் பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச்சீட்டு; தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள்; காவிய மறியாத வர்கள், கலையுணர்வில்லாதவர்கள் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்; தமிழரின் புது வாழ்வுக்கான போர்முரசு காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்தி விட்டோம்; எனவே, இது அழிந்து படாது என்று இறுமாந்திருப் போருக்கு ஓர் அறைகூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்’ என்று பாராட்டுகிறார்கள்.
https://tamilebooks.org/ebooks/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-ebook/
இராவண காவியம் – தமிழக அரசு தடை
முன்னைச் “சென்னை ராஜ்ய” ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்தோர், தமிழரசுக்குக் கால்கோள் செய்யும் இந்த விடுதலைக் சிதத்திற்குத் தடைவிதித்து நூல்களைப் பறிமுதல் செய்தனர்.
இப்போது ஏறத்தாழ 23 ஆண்டுகட்குப் பிறகு, நாலரைக் கோடி தமிழர்களின் இதய தெய்வமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா அமைத்துத் தந்த இன்றைய “தமிழ்நாடு” அரசு, ‘சென்னை ராஜ்ய’ அரசு விதித்த தடையுத்தரவை நீக்கியுள்ளது. ஆம்! தடை நீங்கி, ‘முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி’ போல, இப்போது ‘இராவண காவியம்’ – இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது.
விடுதலைக் கீதம்
நூலாசிரியர்க்குத் தமிழினம் கடப்பாடுடையது. தமிழ்மக்கள், இந்த விடுதலைக் கீதத்தை ஏற்றுப் போற்றி இன்பமும் பயனும் எய்தி மகிழ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு “வாழ்க செந்தமிழ்ப் பெரும்புலவர் குழந்தை” எனச் சிந்தை மகிழ்ந்து வாழ்த்துகிறேன். வணக்கம்.
சென்னை
14-9-71
மு. கருணாநிதி